திருமுறை 6 · 6.016 · 10

திருவிடைமருதூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருத்தாண்டகம்
தலம்
இடைமருதூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

சூலப் படையுடையார் தாமே போலுஞ் சுடர்த்திங்கட் கண்ணி யுடையார் போலும்மாலை மகிழ்ந்தொருபால் வைத்தார் போலும் மந்திரமுந் தந்திரமு மானார் போலும்வேலைக் கடல்நஞ்ச முண்டார் போலும் மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
சூலப் படைஉடையார் தாமே போலும்; சுடர்த்திங்கள் கண்ணி உடையார் போலும்;மாலை மகிழ்ந்துஒருபால் வைத்தார் போலும்; மந்திரமும் தந்திரமும் ஆனார் போலும்;வேலைக் - கடல்நஞ்சம் உண்டார் போலும்; மேல்வினைகள் தீர்க்கும் விகிர்தர் போலும்;ஏலக் கமழ்குழலாள் பாகர் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

காரார் கமழ்கொன்றைக் கண்ணி போலுங் காரானை ஈருரிவை போர்த்தார் போலும்பாரார் பரவப் படுவார் போலும் பத்துப் பல்லூழி பரந்தார் போலுஞ்சீரால் வணங்கப் படுவார் போலுந் திசையனைத்து மாய்மற்று மானார் போலும்ஏரார் கமழ்குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
கார்ஆர் கமழ்கொன்றைக் கண்ணி போலும்; கார்ஆனை ஈர்உரிவை போர்த்தார் போலும்;பாரார் பரவப் படுவார் போலும்; பத்துப் பல்ஊழி பரந்தார் போலும்;சீரால் வணங்கப் படுவார் போலும்; திசைஅனைத்தும் ஆய்,மற்றும் ஆனார் போலும்;ஏர்ஆர் கமழ்குழலாள் பாகர் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

வேதங்கள் வேள்வி பயந்தார் போலும் விண்ணுலகு மண்ணுலகு மானார் போலும்பூதங்க ளாய புராணர் போலும் புகழ வளரொளியாய் நின்றார் போலும்பாதம் பரவப் படுவார் போலும் பத்தர் களுக்கின்பம் பயந்தார் போலும்ஏதங்க ளான கடிவார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
வேதங்கள் வேள்வி பயந்தார் போலும்; விண்உலகும் மண்உலகும் ஆனார் போலும்;பூதங்கள் ஆய புராணர் போலும்; புகழ வளர்ஒளிஆய் நின்றார் போலும்;பாதம் பரவப் படுவார் போலும்; பத்தர்களுக்கு இன்பம் பயந்தார் போலும்;ஏதங்கள் ஆன கடிவார் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

திண்குணத்தார் தேவர் கணங்க ளேத்தித் திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன்கொண்டல் மேற்செல் விகிர்தர் போலும்பண்குணத்தார் பாடலோ டாட லோவாப் பரங்குன்ற மேய பரமர் போலும்எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
திண்குணத்தார் தேவர் கணங்கள் ஏத்தித் திசைவணங்கச் சேவடியை வைத்தார் போலும்;விண்குணத்தார் வேள்வி சிதைய நூறி வியன்கொண்டல் மேல்செல் விகிர்தர் போலும்;பண்குணத்தார் பாடலோடு ஆடல் ஓவாப் பரங்குன்றம் மேய பரமர் போலும்;எண்குணத்தார் எண்ணா யிரவர் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

ஊக முகிலுரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்பொழி லண்ணாவி லுறைகின் றாரும்பாகம் பணிமொழியாள் பாங்க ராகிப் படுவெண் டலையிற் பலிகொள் வாரும்மாகமடை மும்மதிலு மெய்தார் தாமு மணிபொழில் சூழாரூர் உறைகின் றாரும்ஏகம்ப மேயாரு மெல்லா மாவார் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
ஊகம் முகில்உரிஞ்சு சோலை சூழ்ந்த உயர்பொழில் அண்ணாவில் உறைகின் றாரும்,பாகம் பணிமொழியாள் பாங்கர் ஆகிப், படுவெண் தலையில் பலிகொள் வாரும்,மாகம்அடை மும்மதிலும் எய்தார் தாமும், மணிபொழில்சூழ் ஆரூர் உறைகின் றாரும்,ஏகம்பம் மேயாரும், எல்லாம் ஆவார்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

ஐயிரண்டும் ஆறொன்று மானார் போலும் அறுமூன்றும் நான்மூன்று மானார் போலுஞ்செய்வினைகள் நல்வினைக ளானார் போலுந் திசையனைத்து மாய்நிறைந்த செல்வர் போலுங்கொய்மலரங் கொன்றைச் சடையார் போலுங் கூத்தாட வல்ல குழகர் போலும்எய்யவந்த காமனையுங் காய்ந்தார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
ஐ-இரண்டும், ஆறுஒன்றும், ஆனார் போலும்; அறு-மூன்றும், நால்-மூன்றும், ஆனார் போலும்;செய்வினைகள் நல்வினைகள் ஆனார் போலும்; திசைஅனைத்தும் ஆய்நிறைந்த செல்வர் போலும்;கொய்மலர்அம் கொன்றைச் சடையார் போலும்; கூத்துஆட வல்ல குழகர் போலும்;எய்யவந்த காமனையும் காய்ந்தார் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பிரியாத குணமுயிர்கட் கஞ்சோ டஞ்சாய்ப் பிரிவுடைய குணம்பேசிற் பத்தோ டொன்றாய்விரியாத குணமொருகால் நான்கே யென்பர் விரிவிலாக் குணநாட்டத் தாறே யென்பர்தெரிவாய குணமஞ்சுஞ் சமிதை யஞ்சும் பதமஞ்சுங் கதியஞ்சுஞ் செப்பி னாரும்எரியாய தாமரைமே லியங்கி னாரும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
பிரியாத குணம்உயிர்கட்கு அஞ்சோடு அஞ்சுஆய்ப், பிரிவுஉடைய குணம்பேசில் பத்தோடு ஒன்றுஆய்,விரியாத குணம்ஒருகால் நான்கே என்பர்; விரிவுஇலாக் குணம்நாட்டத்து ஆறே என்பர்;தெரிவுஆய குணம்அஞ்சும் சமிதை அஞ்சும் பதம்அஞ்சும் கதிஅஞ்சும் செப்பி னாரும்,எரிஆய தாமரைமேல் இயங்கி னாரும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

தோலிற் பொலிந்த வுடையார் போலுஞ் சுடர்வா யரவசைத்த சோதி போலும்ஆல மமுதாக வுண்டார் போலும் அடியார்கட் காரமுத மானார் போலுங்காலனையுங் காய்ந்த கழலார் போலுங் கயிலாயந் தம்மிடமாகக் கொண்டார் போலும்ஏலங் கமழ்குழலாள் பாகர் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
தோலில் பொலிந்த உடையார் போலும்; சுடர்வாய் அரவுஅசைத்த சோதி போலும்;ஆலம் அமுதுஆக உண்டார் போலும்; அடியார்கட்கு ஆர்அமுதம் ஆனார் போலும்;காலனையும் காய்ந்த கழலார் போலும்; கயிலாயம் தம்இடமாகக் கொண்டார் போலும்;ஏலம் கமழ்குழலாள் பாகர் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பைந்தளிர்க் கொன்றையந் தாரார் போலும் படைக்கணாள் பாக முடையார் போலும்அந்திவாய் வண்ணத் தழகர் போலும் மணிநீல கண்ட முடையார் போலும்வந்த வரவுஞ் செலவு மாகி மாறாதென் னுள்ளத் திருந்தார் போலும்எந்த மிடர்தீர்க்க வல்லார் போலும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
பைந்தளிர்க் கொன்றைஅம் தாரார் போலும்; படைக்கணாள் பாகம் உடையார் போலும்;அந்திவாய் வண்ணத்து அழகர் போலும்; அணிநீல கண்டம் உடையார் போலும்;வந்த வரவும் செலவும் ஆகி, மாறாதுஎன் உள்ளத்து இருந்தார் போலும்;எந்தம் இடர்தீர்க்க வல்லார் போலும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கொன்றையங் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்துகந்த கொள்கை யாரும்நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்புருவ மாய்நின்ற நிமல னாரும்அன்றவ் வரக்கன் அலறி வீழ அருவரையைக் காலா லழுத்தி னாரும்என்று மிடுபிச்சை ஏற்றுண் பாரும் இடைமருது மேவிய ஈச னாரே.
சொற்பிரிப்பு
கொன்றைஅம் கூவிள மாலை தன்னைக் குளிர்சடைமேல் வைத்துஉகந்த கொள்கை யாரும்,நின்ற அனங்கனை நீறா நோக்கி நெருப்புஉருவம் ஆய்நின்ற நிமல னாரும்,அன்றுஅவ் அரக்கன் அலறி வீழ அருவரையைக் காலால் அழுத்தி னாரும்,என்றும் இடுபிச்சை ஏற்றுஉண் பாரும்- இடைமருது மேவிய ஈச னாரே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.