திருமுறை 4 · 4.002 · 10

திருக்கெடிலவடவீரட்டானம்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
காந்தாரம்
தலம்
அதிகை வீரட்டானம்
நாடு
நடுநாடு

1

சுண்ணவெண் சந்தனச் சாந்துஞ் சுடர்த் திங்கட் சூளாமணியும்வண்ண உரிவை யுடையும் வளரும் பவள நிறமும்அண்ணல் அரண்முர ணேறும் அகலம் வளாய அரவும்திண்ணன் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லை அஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
சுண்ண வெண் சந்தனச் சாந்தும், சுடர்த் திங்கள் சூளாமணியும்,வண்ண உரிவை உடையும், வளரும் பவள நிறமும்,அண்ணல் அரண் முரண் ஏறும், அகலம் வளாய அரவும்,திண் நன் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர் நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பூண்டதொர் கேழல் எயிறும் பொன்றிகழ் ஆமை புரளநீண்டதிண் டோ ள்வலஞ் சூழ்ந்து நிலாக்கதிர் போலவெண் ணூலுங்காண்டகு புள்ளின் சிறகுங் கலந்தகட் டங்கக் கொடியும்ஈண்டு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
பூண்டது ஓர் கேழல் எயிறும், பொன் திகழ் ஆமை புரள,நீண்ட திண் தோள் வலம் சூழ்ந்து நிலாக்கதிர் போல வெண் நூலும்,காண் தகு புள்ளின் சிறகும், கலந்த கட்டங்கக் கொடியும்,ஈண்டு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

ஒத்த வடத்திள நாகம் உருத்திர பட்ட மிரண்டும்முத்து வடக்கண் டிகையும் முளைத்தெழு மூவிலை வேலுஞ்*சித்த வடமும் அதிகைச் சேணுயர் வீரட்டஞ் சூழ்ந்துதத்துங் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.(*) சித்தவடம் என்பது இத்தலத்துக்குச் சமீபத்திலிருப்பது.
சொற்பிரிப்பு
ஒத்த வடத்து இள நாகம் உருத்திர பட்டம் இரண்டும்,முத்து வடக் கண்டிகையும், முளைத்து, எழு மூஇலை வேலும்,சித்த வடமும், அதிகைச் சேண் உயர் வீரட்டம் சூழ்ந்துதத்தும் கெடிலப் புனலும்,உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

மடமான் மறிபொற் கலையும் மழுப்பாம் பொருகையில் வீணைகுடமால் வரைய திண்டோ ளுங் குனிசிலைக் கூத்தின் பயில்வும்இடமால் தழுவிய பாகம் இருநில னேற்ற சுவடுந்தடமார் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
மடமான் மறி, பொன் கலையும், மழுப், பாம்பு, ஒரு கையில் வீணை,குடமால் வரைய திண் தோளும், குனிசிலைக் கூத்தின் பயில்வும்,இடம் மால் தழுவிய பாகம், இருநிலன் ஏற்ற சுவடும்,தடம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பலபல காமத்த ராகிப் பதைத்தெழு வார்மனத் துள்ளேகலமலக் கிட்டுத் திரியுங் கணபதி யென்னுங் களிறும்வலமேந் திரண்டு சுடரும் வான்கயி லாய மலையும்நலமார் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதென்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
பலபல காமத்தர் ஆகிப் பதைத்து எழுவார் மனத்து உள்ளேகல மலக்கிட்டுத் திரியும் கணபதி என்னும் களிறும்,வலம் ஏந்து இரண்டு சுடரும், வான் கயிலாய மலையும்,நலம் ஆர் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

கரந்தன கொள்ளி விளக்குங் கறங்கு துடியின் முழக்கும்பரந்த பதினெண் கணமும் பயின்றறி யாதன பாட்டும்அரங்கிடை நூலறி வாளர் அறியப் படாததொர் கூத்தும்நிரந்த கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
கரந்தன கொள்ளி விளக்கும், கறங்கு துடியின் முழக்கும்,பரந்த பதினெண் கணமும், பயின்று அறியாதன பாட்டும்,அரங்கு இடை நூல் அறிவாளர் அறியப் படாதது ஓர் கூத்தும்,நிரந்த கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

கொலைவரி வேங்கை அதளுங் குலவோ டிலங்குபொற் றோடும்விலைபெறு சங்கக் குழையும் விலையில் கபாலக் கலனும்மலைமகள் கைக்கொண்ட மார்பும் மணியார்ந் திலங்கு மிடறும்உலவு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
கொலை வரி வேங்கை அதளும், குவவோடு இலங்கு பொன் தோடும்,விலைபெறு சங்கக் குழையும், விலை இல் கபாலக் கலனும்,மலைமகள் கைக்கொண்ட மார்பும், மணி ஆர்ந்து இலங்கு மிடறும்,உலவு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஆடல் புரிந்த நிலையும் அரையில் அசைத்த அரவும்பாடல் பயின்ற பல்பூதம் பல்லா யிரங்கொள் கருவிநாடற் கரியதொர் கூத்தும் நன்குயர் வீரட்டஞ் சூழ்ந்துஓடுங் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
ஆடல் புரிந்த நிலையும், அரையில் அசைத்த அரவும்,பாடல் பயின்ற பல் பூதம், பல் ஆயிரங்கொள் கருவிநாடற்கு அரியது ஓர் கூத்தும், நன்கு உயர் வீரட்டம் சூழ்ந்துஓடும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

சூழு மரவத் துகிலுந் துகில்கிழி கோவணக் கீளும்யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சா தருவரை போன்றவேழ முரித்த நிலையும் விரிபொழில் வீரட்டஞ் சூழ்ந்துதாழுங் கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.
சொற்பிரிப்பு
சூழும் அரவத் துகிலும், துகில் கிழி கோவணக் கீளும்,யாழின் மொழியவள் அஞ்ச அஞ்சாது அருவரை போன்றவேழம் உரித்த நிலையும், விரிபொழில் வீரட்டம் சூழ்ந்துதாழும் கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

நரம்பெழு கைகள் பிடித்து நங்கை நடுங்க மலையைஉரங்களெல் லாங்கொண் டெடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலறவரங்கள் கொடுத்தருள் செய்வான் வளர்பொழில் வீரட்டஞ் சூழ்ந்துநிரம்பு கெடிலப் புனலும் உடையா ரொருவர் தமர்நாம்அஞ்சுவ தியாதொன்று மில்லைஅஞ்ச வருவது மில்லை.இப்பதிகம் சமணர்களேவிய யானை அஞ்சும்படி ஓதி அருளியது.
சொற்பிரிப்பு
நரம்பு எழு கைகள் பிடித்து, நங்கை நடுங்க, மலையைஉரங்கள் எல்லாம் கொண்டு எடுத்தான் ஒன்பதும் ஒன்றும் அலற,வரங்கள் கொடுத்து அருள் செய்வான், வளர்பொழில் வீரட்டம் சூழ்ந்துநிரம்பு கெடிலப் புனலும், உடையார் ஒருவர் தமர், நாம்!-அஞ்சுவது யாது ஒன்றும் இல்லை; அஞ்ச வருவதும் இல்லை.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.