திருமுறை 3 · 3.086 · 11

திருச்சேறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
சேறை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

முறியுறு நிறமல்கு முகிழ்முலை மலைமகள் வெருவமுன்வெறியுறு மதகரி யதள்பட வுரிசெய்த விறலினர்நறியுறும் இதழியின் மலரொடு நதிமதி நகுதலைசெறியுறு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
சொற்பிரிப்பு
முறி உறு நிறம் மல்கு முகிழ்முலை மலைமகள் வெருவ, முன்,வெறி உறு மதகரி அதள் பட உரிசெய்த விறலினர்;நறி உறும் இதழியின் மலரொடு, நதி, மதி, நகுதலை,செறி உறு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

புனமுடை நறுமலர் பலகொடு தொழுவதொர் புரிவினர்மனமுடை அடியவர் படுதுயர் களைவதொர் வாய்மையர்இனமுடை மணியினோ டரைசிலை யொளிபெற மிளிர்வதோர்சினமுதிர் விடையுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
சொற்பிரிப்பு
புனம் உடை நறுமலர் பலகொடு தொழுவது ஒர் புரிவினர்மனம் உடை அடியவர் படு துயர் களைவது ஒர் வாய்மையர்,இனம் உடை மணியினொடு அரசு இலை ஒளிபெற மிளிர்வது ஒர்சினம் முதிர் விடை உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

புரிதரு சடையினர் புலியதள் அரையினர் பொடிபுல்கும்எரிதரும் உருவினர் இடபம தேறுவ ரீடுலாவரிதரு வளையின ரவரவர் மகிழ்தர மனைதொறுந்திரிதரு சரிதையர் உறைதரு வளநகர் சேறையே.
சொற்பிரிப்பு
புரிதரு சடையினர்; புலி அதள் அரையினர்; பொடி புல்கும்எரி தரும் உருவினர்; இடபம் அது ஏறுவர்; ஈடு உலாவரி தரு வளையினர் அவர் அவர் மகிழ்தர, மனைதொறும்திரிதரு சரிதையர்; உறைதரு வள நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

துடிபடும் இடையுடை மடவர லுடனொரு பாகமாஇடிபடு குரலுடை விடையினர் படமுடை யரவினர்பொடிபடும் உருவினர் புலியுரி பொலிதரும் அரையினர்செடிபடு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
சொற்பிரிப்பு
துடி படும் இடை உடை மடவரல் உடன் ஒரு பாகமா,இடிபடு குரல் உடை விடையினர்; படம் உடை அரவினர்;பொடி படும் உருவினர்; புலி உரி பொலிதரும் அரையினர்செடி படு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

அந்தர முழிதரு திரிபுர மொருநொடி யளவினில்மந்தர வரிசிலை யதனிடை யரவரி வாளியால்வெந்தழி தரவெய்த விடலையர் விடமணி மிடறினர்செந்தழல் நிறமுடை யடிகள்தம் வளநகர் சேறையே.
சொற்பிரிப்பு
அந்தரம் உழிதரு திரிபுரம், ஒரு நொடி அளவினில்மந்தர வரிசிலை அதன் இடை அரவு அரிவாளியால்,வெந்து அழிதர எய்த விடலையர்; விடம் அணி மிடறினர்செந்தழல் நிறம் உடை அடிகள் தம் வள நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

மத்தர முறுதிறன் மறவர்தம் வடிவுகொ டுருவுடைப்பத்தொரு பெயருடை விசயனை அசைவுசெய் பரிசினால்அத்திரம் அருளும்நம் அடிகள தணிகிளர் மணியணிசித்திர வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
சொற்பிரிப்பு
மத்தரம் உறு திறல் மறவர் தம் வடிவுகொடு, உருவு உடைப்பத்து ஒரு பெயர் உடை விசயனை அசைவு செய் பரிசினால்,அத்திரம் அருளும் நம் அடிகளது அணி கிளர் மணி அணிசித்திர வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பாடினர் அருமறை முறைமுறை பொருளென அருநடம்ஆடினர் உலகிடை அலர்கொடும் அடியவர் துதிசெயவாடினர் படுதலை யிடுபலி யதுகொடு மகிழ்தருஞ்சேடர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
சொற்பிரிப்பு
பாடினர், அருமறை முறைமுறை; பொருள் என அரு நடம்-ஆடினர்; உலகு இடை அலர்கொடும் அடியவர் துதிசெய,வாடின படுதலை இடு பலி அதுகொடு மகிழ்தரும்சேடர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

கட்டுர மதுகொடு கயிலைநல் மலைநலி கரமுடைநிட்டுரன் உடலொடு நெடுமுடி யொருபதும் நெரிசெய்தார்மட்டுர மலரடி யடியவர் தொழுதெழ அருள்செயுஞ்சிட்டர்தம் வளநகர் செறிபொழில் தழுவிய சேறையே.
சொற்பிரிப்பு
கட்டு உரம் அதுகொடு கயிலை நல் மலை நலி கரம் உடைநிட்டுரன் உடலொடு நெடு முடி ஒருபதும் நெரிசெய்தார்மட்டு உரம் மலர் அடி அடியவர் தொழுது எழ அருள் செயும்சிட்டர் தம் வள நகர் செறி பொழில் தழுவிய சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு படர்தரஅன்றிய அவரவர் அடியொடு முடியவை யறிகிலார்நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயொர் நிகழ்தரச்சென்றுயர் வெளிபட அருளிய அவர்நகர் சேறையே.
சொற்பிரிப்பு
பன்றியர், பறவையர், பரிசு உடை வடிவொடு படர்தர,அன்றிய அவர் அவர், அடியொடு முடி அவை அறிகிலார்நின்று இரு புடை பட, நெடு எரி நடுவே ஒர் நிகழ் தரச்சென்று, உயர் வெளி பட அருளிய அவர் நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துகடுறு விரிதுகில் உடையவர் அமணெனும் வடிவினர்விகடம துறுசிறு மொழியவை நலமில வினவிடல்முகிழ்தரும் இளமதி யரவொடும் அழகுற முதுநதிதிகழ்தரு சடைமுடி யடிகள்தம் வளநகர் சேறையே.
சொற்பிரிப்பு
துகள் துறு விரி துகில் உடையவர், அமண் எனும் வடிவினர்விகடம் அது உறு சிறுமொழி அவை நலம் இல; வினவிடல்!முகிழ்தரும் இளமதி அரவொடும் அழகு உற, முது நதிதிகழ்தரு சடைமுடி அடிகள் தம் வள நகர் சேறையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

கற்றநன் மறைபயில் அடியவர் அடிதொழு கவினுறுசிற்றிடை யவளொடு மிடமென வுறைவதொர் சேறைமேற்குற்றமில் புகலியுள் இகலறு ஞானசம் பந்தனசொற்றக வுறமொழி பவரழி விலர்துயர் தீருமே.
சொற்பிரிப்பு
கற்ற நல்மறை பயில் அடியவர் அடி தொழு கவின் உறுசிற்றிடையவளொடும் இடம் என உறைவது ஒர் சேறைமேல்,குற்றம் இல் புகலியுள் இகல் அறு ஞானசம்பந்தனசொல்,—தகவு உற மொழிபவர் அழிவு இலர்; துயர் தீருமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.