திருமுறை 3 · 3.083 · 11

திருநல்லூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சாதாரி
தலம்
நல்லூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வண்டிரிய விண்டமலர் மல்குசடை தாழவிடை யேறிப்பண்டெரிகை கொண்டபர மன்பதிய தென்பரத னயலேநண்டிரிய நாரையிரை தேரவரை மேலருவி முத்தந்தெண்டிரைகள் மோதவிரி போதுகம ழுந்திருந லூரே.
சொற்பிரிப்பு
வண்டு இரிய விண்ட மலர் மல்கு சடை தாழ, விடை ஏறி,பண்டு எரி கை கொண்ட பரமன் பதி அது என்பர் அதன் அயலேநண்டு இரிய, நாரை இரை தேர, வரைமேல் அருவி முத்தம்தெண்திரைகள் மோத, விரி போது கமழும் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

பல்வளரு நாகமரை யார்த்துவரை மங்கையொரு பாகம்மல்வளர் புயத்திலணை வித்துமகி ழும்பரம னிடமாஞ்சொல்வளரி சைக்கிளவி பாடிமட வார்நடம தாடச்செல்வமறை யோர்கள்முறை யேத்தவள ருந்திருந லூரே.
சொற்பிரிப்பு
பல் வளரும் நாகம் அரை யாத்து, வரைமங்கை ஒருபாகம்மல் வளர் புயத்தில் அணைவித்து, மகிழும் பரமன் இடம் ஆம்சொல் வளர் இசைக்கிளவி பாடி மடவார் நடம் அது ஆட,செல்வ மறையோர்கள் முறை ஏத்த, வளரும் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நீடுவரை மேருவில தாகநிகழ் நாகம்அழ லம்பாற்கூடலர்கள் மூவெயி லெரித்தகுழ கன்குலவு சடைமேல்ஏடுலவு கொன்றைபுனல் நின்றுதிக ழுந்நிமல னிடமாஞ்சேடுலவு தாமரைகள் நீடுவய லார்திருந லூரே.
சொற்பிரிப்பு
நீடு வரை மேரு வில் அது ஆக, நிகழ் நாகம், அழல் அம்பால்கூடலர்கள் மூ எயில் எரித்த குழகன்; குலவு சடைமேல்ஏடு உலவு கொன்றை புனல் நின்று திகழும் நிமலன்; இடம் ஆம்சேடு உலவு தாமரைகள் நீடு வயல் ஆர் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கருகுபுரி மிடறர்கரி காடரெரி கைஅதனி லேந்திஅருகுவரு கரியினுரி யதளர்பட அரவரிடம் வினவில்முருகுவிரி பொழிலின்மணம் நாறமயி லாலமர மேறித்திருகுசின மந்திகனி சிந்தமது வார்திருந லூரே.
சொற்பிரிப்பு
கருகு புரி மிடறர், கரிகாடர், எரி கை அதனில் ஏந்தி,அருகு வரு கரியின் உரி—அதளர், பட அரவர், இடம் வினவில்முருகு விரி பொழிலின் மணம் நாற, மயில் ஆல, மரம் ஏறித்திருகு சின மந்தி கனி சிந்த, மது வார் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பொடிகொள்திரு மார்பர்புரி நூலர்புனல் பொங்கரவு தங்கும்முடிகொள்சடை தாழவிடை யேறுமுத லாளரவ ரிடமாம்இடிகொள்முழ வோசையெழி லார்செய்தொழி லாளர்விழ மல்கச்செடிகொள்வினை யகலமனம் இனியவர்கள் சேர்திருந லூரே.
சொற்பிரிப்பு
பொடி கொள் திரு மார்பர்; புரி நூலர்; புனல் பொங்கு அரவு தங்கும்முடி கொள் சடை தாழ, விடை ஏறு முதலாளர் அவர்; இடம்ஆம்இடி கொள் முழவு ஓசை எழில் ஆர் செய்தொழிலாளர் விழ மல்க,செடி கொள் வினை அகல, மனம் இனியவர்கள் சேர் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

புற்றரவர் நெற்றியொர்கண் ஒற்றைவிடை யூர்வரடை யாளஞ்சுற்றமிருள் பற்றியபல் பூதம்இசை பாடநசை யாலேகற்றமறை யுற்றுணர்வர் பற்றலர்கள் முற்றும்எயில் மாளச்செற்றவர் இருப்பிடம் நெருக்குபுன லார்திருந லூரே.
சொற்பிரிப்பு
புற்று அரவர்; நெற்றி ஒர் கண்; ஒற்றை விடை ஊர்வர்; அடையாளம்சுற்றம் இருள் பற்றிய பல்பூதம் இசை பாட, நசையாலேகற்ற மறை உற்று உணர்வர்; பற்றலர்கள் முற்றும் எயில் மாளச்செற்றவர்; இருப்பு இடம் நெருக்கு புனல் ஆர் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பொங்கரவர் அங்கமுடன் மேலணிவர் ஞாலமிடு பிச்சைதங்கரவ மாகவுழி தந்துமெய் துலங்கியவெண் ணீற்றர்கங்கையர வம்விரவு திங்கள்சடை யடிகளிடம் வினவிற்செங்கயல் வதிக்குதிகொ ளும்புனல தார்திருந லூரே.
சொற்பிரிப்பு
பொங்கு அரவர், அங்கம் உடல்மேல் அணிவர்; ஞாலம் இடு பிச்சை,தம் கரவம் ஆக உழிதந்து, மெய் துலங்கிய வெண் நீற்றர்;கங்கை, அரவம், விரவு திங்கள், சடை அடிகள்; இடம்வினவில்செங்கயல் வதிக் குதிகொளும் புனல் அது ஆர் திருநலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

ஏறுபுகழ் பெற்றதென் இலங்கையவர் கோனையரு வரையிற்சீறியவ னுக்கருளும் எங்கள்சிவ லோகனிட மாகுங்கூறும்அடி யார்களிசை பாடிவலம் வந்தயரும் அருவிச்சேறுகம ரானவழி யத்திகழ்த ருந்திருந லூரே.
சொற்பிரிப்பு
ஏறு புகழ் பெற்ற தென் இலங்கையவர் கோனை அரு வரையில்சீறி, அவனுக்கு அருளும் எங்கள் சிவலோகன் இடம் ஆகும்கூறும் அடியார்கள் இசை பாடி, வலம் வந்து, அயரும் அருவிச்சேறு கமர் ஆன அழியத் திகழ் தரும் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

மாலுமலர் மேலயனும் நேடியறி யாமையெரி யாயகோலமுடை யானுணர்வு கோதில்புக ழானிடம தாகும்நாலுமறை யங்கமுத லாறுமெரி மூன்றுதழ லோம்புஞ்சீலமுடை யார்கள்நெடு மாடம்வள ருந்திருந லூரே.
சொற்பிரிப்பு
மாலும் மலர்மேல் அயனும் நேடி அறியாமை எரி ஆயகோலம் உடையான், உணர்வு கோது இல் புகழான், இடம் அது ஆகும்நாலுமறை, அங்கம் முதல் ஆறும், எரி மூன்றுதழல் ஓம்பும்சீலம் உடையார்கள் நெடுமாடம் வளரும் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

கீறுமுடை கோவணமி லாமையிலொ லோவியத வத்தர்பாறுமுடன் மூடுதுவ ராடையர்கள் வேடமவை பாரேல்ஏறுமட வாளொடினி தேறிமுனி ருந்தவிட மென்பர்தேறுமன வாரமுடை யார்குடிசெ யுந்திருந லூரே.
சொற்பிரிப்பு
கீறும் உடை கோவணம் இலாமையில் உலோவிய தவத்தர்பாறும் உடல் மூடு துவர் ஆடையர்கள், வேடம் அவை பாரேல்!ஏறு மடவாளொடு இனிது ஏறி, முன் இருந்த இடம் என்பர்தேறும் மன வாரம் உடையார் குடி செயும் திரு நலூரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

திரைகளிரு கரையும்வரு பொன்னிநில வுந்திருந லூர்மேல்பரசுதரு பாணியை நலந்திகழ்செய் தோணிபுர நாதன்உரைசெய்தமிழ் ஞானசம் பந்தனிசை மாலைமொழி வார்போய்விரைசெய்மலர் தூவவிதி பேணுகதி பேறுபெறு வாரே.
சொற்பிரிப்பு
திரைகள் இருகரையும் வரு பொன்னி நிலவும் திரு நலூர்மேல்பரசு தரு பாணியை, நலம் திகழ் செய் தோணிபுர நாதன்-உரைசெய் தமிழ் ஞானசம்பந்தன்— இசை மாலை மொழிவார், போய்,விரை செய் மலர் தூவ, விதி பேணு கதிபேறு பெறுவாரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.