திருமுறை 3 · 3.011 · 11

திருப்புனவாயில்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
புனவாயில்
நாடு
பாண்டியநாடு

1

மின்னியல் செஞ்சடை வெண்பிறை யன்விரி நூலினன்பன்னிய நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்அன்னம்அன் னந்நடை யாளொ டும்மம ரும்மிடம்புன்னைநன் மாமலர் பொன்னுதிர்க் கும்புன வாயிலே.
சொற்பிரிப்பு
மின் இயல் செஞ்சடை வெண்பிறையன், விரி நூலினன்,பன்னிய நால்மறை பாடி ஆடி, பல ஊர்கள் போய்,அன்னம் அன்ன(ந்) நடையாளொடும்(ம்) அமரும்(ம்) இடம்புன்னை நல் மா மலர் பொன் உதிர்க்கும் புனவாயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

விண்டவர் தம்புரம் மூன்றெரித் துவிடை யேறிப்போய்வண்டம ருங்குழல் மங்கையொ டும்மகிழ்ந் தானிடங்கண்டலும் ஞாழலும் நின்றுபெ ருங்கடற் கானல்வாய்ப்புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுன வாயிலே.
சொற்பிரிப்பு
விண்டவர்தம் புரம் மூன்று எரித்து, விடை ஏறிப் போய்,வண்டு அமரும் குழல் மங்கையொடும் மகிழ்ந்தான் இடம்கண்டலும் ஞாழலும் நின்று, பெருங்கடல் கானல்வாய்ப்புண்டரீகம் மலர்ப் பொய்கை சூழ்ந்த புனவாயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

விடையுடை வெல்கொடி யேந்தினா னும்விறற் பாரிடம்புடைபட வாடிய வேடத்தா னும்புன வாயிலிற்தொடைநவில் கொன்றையந் தாரினா னுஞ்சுடர் வெண்மழுப்படைவலன் ஏந்திய பால்நெய்யா டும்பர மனன்றே.
சொற்பிரிப்பு
விடை உடை வெல் கொடி ஏந்தினானும், விறல் பாரிடம்புடை பட ஆடிய வேடத்தானும், புனவாயிலில்தொடை நவில் கொன்றை அம் தாரினானும், சுடர் வெண்மழுப்படை வலன் ஏந்திய, பால் நெய் ஆடும், பரமன் அன்றே!
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

சங்கவெண் தோடணி காதினா னுஞ்சடை தாழவேஅங்கையி லங்கழ லேந்தினா னும்மழ காகவேபொங்கர வம்மணி மார்பினா னும்புன வாயிலிற்பைங்கண்வெள் ளேற்றண்ண லாகிநின் றபர மேட்டியே.
சொற்பிரிப்பு
சங்க வெண்தோடு அணி காதினானும், சடை தாழவேஅங்கை இலங்கு அழல் ஏந்தினானும்(ம்), அழகு ஆகவேபொங்கு அரவம்(ம்) அணி மார்பினானும் புனவாயிலில்,பைங்கண் வெள் ஏற்று அண்ணல் ஆகி நின்ற பரமேட்டியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

கலிபடு தண்கடல் நஞ்சமுண் டகறைக் கண்டனும்புலியதள் பாம்பரைச் சுற்றினா னும்புன வாயிலில்ஒலிதரு தண்புன லோடெருக் கும்மத மத்தமும்மெலிதரு வெண்பிறை சூடிநின் றவிடை யூர்தியே.
சொற்பிரிப்பு
கலி படு தண் கடல் நஞ்சம் உண்ட கறைக்கண்டனும்,புலி அதள் பாம்பு அரைச் சுற்றினானும் புனவாயிலில்,ஒலிதரு தண்புனலோடு, எருக்கும், மதமத்தமும்,மெலிதரு வெண்பிறை, சூடி நின்ற விடை ஊர்தியே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வாருறு மென்முலை மங்கைபா டநட மாடிப்போய்க்காருறு கொன்றைவெண் திங்களா னுங்கனல் வாயதோர்போருறு வெண்மழு வேந்தினா னும்புன வாயிலிற்சீருறு செல்வமல் கவ்விருந் தசிவ லோகனே.
சொற்பிரிப்பு
வார் உறு மென்முலை மங்கை பாட நடம் ஆடிப் போய்,கார் உறு கொன்றை வெண்திங்களானும், கனல் வாயது ஓர்போர் உறு வெண்மழு ஏந்தினானும் புனவாயிலில்,சீர் உறு செல்வம் மல்க(வ்) இருந்த சிவலோகனே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

பெருங்கடல் நஞ்சமு துண்டுகந் துபெருங் காட்டிடைத்திருந்திள மென்முலைத் தேவிபா டந்நட மாடிப்போய்ப்பொருந்தலர் தம்புரம் மூன்றுமெய் துபுன வாயிலில்இருந்தவன் தன்கழ லேத்துவார் கட்கிட ரில்லையே.
சொற்பிரிப்பு
பெருங்கடல் நஞ்சு அமுது உண்டு, உகந்து பெருங்காட்டு இடைத்திருந்து இளமென் முலைத் தேவி பாட(ந்) நடம் ஆடிப் போய்,பொருந்தலர்தம் புரம் மூன்றும் எய்து, புனவாயிலில்இருந்தவன் தன் கழல் ஏத்துவார்கட்கு இடர் இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

மனமிகு வேலனவ் வாளரக் கன்வலி யொல்கிடவனமிகு மால்வரை யாலடர்த் தானிட மன்னியஇனமிகு தொல்புகழ் பாடலா டல்லெழின் மல்கியபுனமிகு கொன்றையந் தென்றலார்ந் தபுன வாயிலே.
சொற்பிரிப்பு
மனம் மிகு வேலன் அவ் வாள் அரக்கன் வலி ஒல்கிட,வனம் மிகு மால்வரையால் அடர்த்தான் இடம் மன்னியஇனம் மிகு தொல்புகழ் பாடல் ஆடல் எழில் மல்கிய,புனம் மிகு கொன்றை அம் தென்றல் ஆர்ந்த, புனவாயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திருவளர் தாமரை மேவினா னுந்திகழ் பாற்கடற்கருநிற வண்ணனுங் காண்பரி யகட வுள்ளிடம்நரல்சுரி சங்கொடும் இப்பியுந் திந்நலம் மல்கியபொருகடல் வெண்டிரை வந்தெறி யும்புன வாயிலே.
சொற்பிரிப்பு
திரு வளர் தாமரை மேவினானும், திகழ் பாற்கடல்கரு நிற வண்ணனும், காண்பு அரிய கடவுள்(ள்) இடம்-நரல் சுரிசங்கொடும் இப்பி உந்தி(ந்), நலம் மல்கியபொருகடல் வெண்திரை வந்து எறியும் புனவாயிலே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

போதியெ னப்பெய ராயினா ரும்பொறி யில்சமண்சாதியு ரைப்பன கொண்டயர்ந் துதளர் வெய்தன்மின்போதவிழ் தண்பொழில் மல்குமந் தண்புன வாயிலில்வேதனை நாடொறும் ஏத்துவார் மேல்வினை வீடுமே.
சொற்பிரிப்பு
போதி எனப் பெயர் ஆயினாரும், பொறி இல் சமண்-சாதி, உரைப்பன கொண்டு, அயர்ந்து, தளர்வு எய்தன்மின்!போது அவிழ் தண்பொழில் மல்கும் அம் தண் புனவாயிலில்வேதனை நாள்தொறும் ஏத்துவார்மேல் வினை வீடுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

பொற்றொடி யாளுமை பங்கன்மே வும்புன வாயிலைக்கற்றவர் தாந்தொழு தேத்தநின் றகடற் காழியான்நற்றமிழ் ஞானசம் பந்தன்சொன் னதமிழ் நன்மையால்அற்றமில் பாடல்பத் தேத்தவல் லாரருள் சேர்வரே.
சொற்பிரிப்பு
பொன்தொடியாள் உமை பங்கன் மேவும் புனவாயிலை,கற்றவர்தாம் தொழுது ஏத்த நின்ற கடல் காழியான்-நல்—தமிழ் ஞானசம்பந்தன்—சொன்ன தமிழ், நன்மையால்அற்றம் இல் பாடல்பத்து, ஏத்த வல்லார் அருள்சேர்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.