திருமுறை 3 · 3.009 · 11

திருவீழிமிழலை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரபஞ்சமம்
தலம்
வீழிமிழலை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கேள்வியர் நாடொறும் ஓதும்நல் வேதத்தர் கேடிலாவேள்விசெய் அந்தணர் வேதியர் வீழிமி ழலையார்வாழியர் தோற்றமுங் கேடும்வைப் பாருயிர் கட்கெலாம்ஆழியர் தம்மடி போற்றியென் பார்கட்க ணியரே.
சொற்பிரிப்பு
கேள்வியர், நாள்தொறும் ஓது நல்வேதத்தர் கேடு இலாவேள்வி செய் அந்தணர் வேதியர் வீழிமிழலையார்,வாழியர்; தோற்றமும் கேடும் வைப்பார், உயிர்கட்கு எலாம்;ஆழியர்; தம் அடி “போற்றி!” என்பார்கட்கு அணியரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

2

கல்லின்நற் பாவையோர் பாகத்தர் காதலித் தேத்தியமெல்லினத் தார்பக்கல் மேவினர் வீழிமி ழலையார்நல்லினத் தார்செய்த வேள்விசெ குத்தெழு ஞாயிற்றின்பல்லனைத் துந்தகர்த் தாரடி யார்பாவ நாசரே.
சொற்பிரிப்பு
கல்லின் நன்பாவை ஓர் பாகத்தார், காதலித்து ஏத்தியமெல் இனத்தார் பக்கல் மேவினர் வீழிமிழலையார்;நல் இனத்தார் செய்த வேள்வி செகுத்து, எழு ஞாயிற்றின்பல் அனைத்தும் தகர்த்தார், அடியார் பாவநாசரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

3

நஞ்சினை யுண்டிருள் கண்டர்பண் டந்தக னைச்செற்றவெஞ்சின மூவிலைச் சூலத்தர் வீழிமி ழலையார்அஞ்சனக் கண்ணுமை பங்கினர் கங்கையங் காடியமஞ்சனச் செஞ்சடை யாரென வல்வினை மாயுமே.
சொற்பிரிப்பு
“நஞ்சினை உண்டு இருள் கண்டர், பண்டு அந்தகனைச் செற்றவெஞ்சின மூஇலைச்சூலத்தர் வீழிமிழலையார்;அஞ்சனக் கண் உமை பங்கினர், கங்கை அங்கு ஆடியமஞ்சனச் செஞ்சடையார்” என, வல்வினை மாயுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

4

கலையிலங் கும்மழு கட்டங்கம் கண்டிகை குண்டலம்விலையிலங் கும்மணி மாடத்தர் வீழிமி ழலையார்தலையிலங் கும்பிறை தாழ்வடஞ் சூலந் தமருகம்அலையிலங் கும்புன லேற்றவர்க் கும்மடி யார்க்குமே.
சொற்பிரிப்பு
கலை, இலங்கும் மழு, கட்டங்கம், கண்டிகை, குண்டலம்,விலை இலங்கும் மணி மாடத்தர் வீழிமிழலையார்தலை இலங்கும் பிறை; தாழ்வடம், சூலம், தமருகம்,அலை இலங்கும் புனல், ஏற்றவர்க்கும்(ம்) அடியார்க்குமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

5

பிறையுறு செஞ்சடை யார்விடை யார்பிச்சை நச்சியேவெறியுறு நாட்பலி தேர்ந்துழல் வீழிமி ழலையார்முறைமுறை யாலிசை பாடுவா ராடிமுன் தொண்டர்கள்இறையுறை வாஞ்சியம் அல்லதெப் போதுமென் உள்ளமே.
சொற்பிரிப்பு
பிறை உறு செஞ்சடையார், விடையார் பிச்சை நச்சியேவெறி உறு நாள்பலி தேர்ந்து உழல் வீழிமிழலையார்;முறைமுறையால் இசை பாடுவார், ஆடி, முன்; தொண்டர்கள்-இறை; உறை வாஞ்சியம் அல்லது, எப்போதும் என் உள்ளமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

6

வசையறு மாதவங் கண்டுவ ரிசிலை வேடனாய்விசையனுக் கன்றருள் செய்தவர் வீழிமி ழலையார்இசைவர விட்டியல் கேட்பித்துக் கல்லவ டமிட்டுத்திசைதொழு தாடியும் பாடுவார் சிந்தையுட் சேர்வரே.
சொற்பிரிப்பு
வசை அறு மா தவம் கண்டு, வரிசிலை வேடனாய்,விசையனுக்கு அன்று அருள்செய்தவர் வீழிமிழலையார்;இசை வரவிட்டு, இயல் கேட்பித்து, கல்லவடம் இட்டு,திசை தொழுது ஆடியும் பாடுவார் சிந்தையுள் சேர்வரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

7

சேடர்விண் ணோர்கட்குத் தேவர்நல் மூவிரு தொன்னூலர்வீடர்முத் தீயர்நால் வேதத்தர் வீழிமி ழலையார்காடரங் காவுமை காணஅண் டத்திமை யோர்தொழநாடக மாடியை யேத்தவல் லார்வினை நாசமே.
சொற்பிரிப்பு
சேடர் விண்ணோர்கட்கு, தேவர், நல் மூஇருதொல்—நூலர்,வீடர், முத்தீயர், நால்வேதத்தர் வீழிமிழலையார்;காடு அரங்கா, உமை காண, அண்டத்து இமையோர் தொழ,நாடகம் ஆடியை ஏத்த வல்லார் வினை நாசமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

8

எடுத்தவன் மாமலைக் கீழவி ராவணன் வீழ்தரவிடுத்தருள் செய்திசை கேட்டவர் வீழிமி ழலையார்படுத்துவெங் காலனைப் பால்வழி பாடுசெய் பாலற்குக்கொடுத்தனர் இன்பங் கொடுப்பர் தொழக்குறை வில்லையே.
சொற்பிரிப்பு
எடுத்த வல் மாமலைக்கீழ் இராவணன் வீழ்தர,விடுத்து அருள்செய்து, இசை கேட்டவர் வீழிமிழலையார்;படுத்து வெங்காலனை, பால் வழிபாடு செய் பாலற்குக்கொடுத்தனர், இன்பம், கொடுப்பர், தொழ; குறைவு இல்லையே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

9

திக்கமர் நான்முகன் மாலண்டம் மண்டலந் தேடிடமிக்கமர் தீத்திர ளாயவர் வீழிமி ழலையார்சொக்கம தாடியும் பாடியும் பாரிடஞ் சூழ்தரும்நக்கர்தந் நாமந மச்சிவா யவ்வென்பார் நல்லரே.
சொற்பிரிப்பு
திக்கு அமர் நான்முகன், மால், அண்டம் மண்தலம் தேடிட,மிக்கு அமர் தீத்திரள் ஆயவர் வீழிமிழலையார்;சொக்கம் அது ஆடியும், பாடியும், பாரிடம் சூழ்தரும்நக்கர்தம் நாமம் நமச்சிவாய என்பார் நல்லரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

10

துற்றரை யார்துவ ராடையர் துப்புர வொன்றிலாவெற்றரை யார்அறி யாநெறி வீழிமி ழலையார்சொற்றெரி யாப்பொருள் சோதிக்கப் பால்நின்ற சோதிதான்மற்றறி யாவடி யார்கள்தஞ் சிந்தையுள் மன்னுமே.
சொற்பிரிப்பு
துற்று அரை ஆர் துவர் ஆடையர், துப்புரவு ஒன்று இலாவெற்று அரையார், அறியா நெறி வீழிமிழலையார்-சொல்—தெரியாப் பொருள், சோதிக்கு அப்பால் நின்றசோதிதான்-மற்று அறியா அடியார்கள் தம் சிந்தையுள் மன்னுமே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.

11

வேதியர் கைதொழு வீழிமி ழலைவி ரும்பியஆதியை வாழ்பொழில் காழியுள் ஞானசம் பந்தனாய்ந்தோதிய ஒண்டமிழ் பத்திவை யுற்றுரை செய்பவர்மாதியல் பங்கன் மலரடி சேரவும் வல்லரே.
சொற்பிரிப்பு
வேதியர் கைதொழு வீழிமிழலை விரும்பியஆதியை, வாழ் பொழில் காழியுள் ஞானசம்பந்தன் ஆய்ந்து,ஓதிய ஒண்தமிழ் பத்து இவை உற்று உரைசெய்பவர்,மாது இயல் பங்கன் மலர் அடி சேரவும் வல்லரே.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.