திருமுறை 2 · 2.099 · 11

திருக்கோடிகா

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
கோடிகா
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருவிராகம்

1

இன்றுநன்று நாளைநன் றென்றுநின்ற இச்சையால்பொன்றுகின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்கொன்றைதுன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
இன்று நன்று நாளை நன்று என்று நின்ற இச்சையால்பொன்று கின்ற வாழ்க்கையைப் போகவிட்டுப் போதுமின்மின்தயங்கு சோதியான் வெண்மதி விரிபுனல்கொன்றை துன்று சென்னியான் கோடிகாவு சேர்மினே.
உரை

இத்திருப்பதிகம் முழுதும் உள்ள உபதேசத்தை உணர்ந்தொழுகுக. பொய் வாழ்க்கையைப் போக்கி, மெய் வாழ்க்கையைப் பெறும் அன்புற்று வம்மின் உலகீர், சிவபெருமான் எழுந்தருளிய திருக்கோடிகாவைச் சேர்மின் (தி. 5 ப. 78 பா. 2, 6) (ஐயடிகள் க்ஷேத்திர வெண்பா 6).

2

அல்லல்மிக்க வாழ்க்கையை ஆதரித் திராதுநீர்நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோவில்லையன்ன வாணுதல் வெள்வளையொர் பாகமாம்கொல்லைவெள்ளை யேற்றினான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
அல்லல் மிக்க வாழ்க்கையை ஆதரித்து இராது நீர்நல்லதோர் நெறியினை நாடுதும் நடம்மினோவில்லை அன்னவாண் நுதல் வெள்வளை ஓர் பாகமாம்கொல்லை வெள்ளை ஏற்றினான் கோடிகாவு சேர்மினே.
உரை

துன்பம் மிக்க வாழ்க்கையை விரும்பியிராமல், நல்லதொரு கதியை நாடுவோம். வம்மின், வெள்ளேற்றண்ணலது திருக்கோடிகாவைச் சேர்மின்.

3

துக்கமிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்துநீர்தக்கதோர் நெறியினைச் சார்தல்செய்யப் போதுமின்அக்கணிந் தரைமிசை யாறணிந்த சென்னிமேல்கொக்கிற கணிந்தவன் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
துக்கம் மிக்க வாழ்க்கையின் சோர்வினைத் துறந்து நீர்தக்கதோர் நெறியினைச் சார்தல் செய்யப் போதுமின்அக்கணிந்து அரைமிசையார் அணிந்த சென்னிமேல்கொக்கிறகு அணிந்தவன் கோடிகாவு சேர்மினே.
உரை

துக்கம் மிக்க வாழ்க்கையினால் வரும் இளைப்பை ஒழித்து தக்கதொரு கதியை அடையத் திருக்கோடிகாவைச் சேர்மின்.

4

பண்டுசெய்த வல்வினை பற்றறக் கெடும்வகைஉண்டுமக் குரைப்பன்நான் ஒல்லைநீர் எழுமினோமண்டுகங்கை செஞ்சடை வைத்துமாதொர் பாகமாக்கொண்டுகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
பண்டு செய்த வல்வினை பற்றறக் கெடும்வகைஉண்டும் அக்குரைப்பன் நான் ஒல்லை நீர் எழுமினோமண்டு கங்கை செஞ்சடை வைத்து மாது ஓர்பாகமாக்கொண்டு உகந்த மார்பினான் கோடிகாவு சேர்மினே.
உரை

முற்பிறவியில் செய்த வினை பசையறக் கெடும்படி திருக்கோடிகாவைச் சேர்மின்.

5

முன்னைநீர்செய் பாவத்தான் மூர்த்திபாதஞ் சிந்தியாதின்னநீரி டும்பையின் வீழ்கிறீர் எழும்மினோபொன்னைவென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
முன்னை நீர் செய் பாவத்தால் மூர்த்தி பாதம் சிந்தியாதுஇன்ன நீர் இடும்பையில் வீழ்கிறீர் எழும்மினோபொன்னை வென்ற கொன்றையான் பூதம்பாட ஆடலான்கொன்னவிலும் வேலினான் கோடிகாவு சேர்மினே.
உரை

முற்பிறவியில் செய்த பாவத்தால், சிவமூர்த்தியின் திருவடியைச் சிந்தை செய்யாமல்துன்பத்தில் முழுகுகின்றீர். எழுமின், சிவபிரானது திருக்கோடிகாவைச் சேர்மின்.

6

ஏவமிக்க சிந்தையோ டின்பமெய்த லாமெனப்பாவமெத் தனையும்நீர் செய்தொரு பயனிலைக்காவல்மிக்க மாநகர் காய்ந்துவெங் கனல்படக்கோவமிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
ஏவமிக்க சிந்தையோடு இன்பம் எய்தலாம் எனப்பாவம் எத்தனையும் நீர் செய்து ஒருபயனிலைக்காவல் மிக்க மாநகர் காய்ந்து வெங்கனல்படக்கோவம் மிக்க நெற்றியான் கோடிகாவு சேர்மினே.
உரை

ஏவம் - இகழ்ச்சி, குற்றம். காவல் மிக்க மாநகர் - திரிபுரம்.

7

ஏணழிந்த வாழ்க்கையை இன்பமென் றிருந்துநீர்மாணழிந்த மூப்பினால் வருந்தன்முன்னம் வம்மினோபூணல்வெள் ளெலும்பினான் பொன்திகழ் சடைமுடிக்கோணல்வெண் பிறையினான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
ஏணம் அழிந்த வாழ்க்கையை இன்பம் என்று இருந்துநீர்மாண் அழிந்த மூப்பினால் வருந்தன் முன்னம் வம்மினோபூணல் வெள்எலும்பினான் பொன் திகழ் சடைமுடிக்கோணல் வெண்பிறையினான் கோடிகாவு சேர்மினே.
உரை

மூப்படைந்து, அதனால் தளர்ச்சி எய்தி வருந்துவதன் முன்னரே, வம்மின்; திருக்கோடிகாவைச் சேர்மின். ஏண் - பெருமை. பொன்போலும் சடையில் வெண்பிறையைச் சூடியவன்.

8

மற்றிவாழ்க்கை மெய்யெனும் மனத்தினைத் தவிர்ந்துநீர்பற்றிவாழ்மின் சேவடி பணிந்துவந் தெழுமினோவெற்றிகொள் தசமுகன் விறல்கெட இருந்ததோர்குற்றமில் வரையினான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
மற்றி வாழ்க்கை மெய் எனும் மனத்தினைத் தவிர்ந்து நீர்பற்றி வாழ்மின் சேவடி பணிந்து வந்து எழுமினோவெற்றி கொள் தசமுகன் விறல் கெட இருந்ததோர்குற்றம் இல் வரையினான் கோடிகாவு சேர்மினே.
உரை

இது மெய் வாழ்க்கை அன்று என்று நீக்கித் திருக்கோடிகாவைச் சேர்மின்.

9

மங்குநோய் உறும்பிணி மாயும்வண்ணஞ் சொல்லுவன்செங்கண்மால் திசைமுகன் சென்றளந்துங் காண்கிலாவெங்கண்மால் விடையுடை வேதியன் விரும்புமூர்கொங்குலாம் வளம்பொழிற் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
மங்கு நோய் உறும்பிணி மாயும் வண்ணம் சொல்லுவன்செங்கண் மால் திசைமுகன் சென்று அளந்தும் காண்கிலாவெங்கண் மால் விடை உடை வேதியன் விரும்பும் ஊர்கொங்குலாம் வளம்பொழில் கோடிகாவு சேர்மினே.
உரை

நோய் அடைதற்கு ஏதுவாகிய கட்டு, உடலையும் அதைச் சார்ந்து உயிரையும் பிணித்தலால் பிணி எனப்பட்டது. பிறவிப் பிணி அழியும் வகை சொல்வேன். திருமாலும் நான்முகனும் சென்று அளந்தும் காணமாட்டாத பெருமையவன்.

10

தட்டொடு தழைமயிற் பீலிகொள் சமணரும்பட்டுடை விரிதுகிலி னார்கள்சொற் பயனிலைவிட்டபுன் சடையினான் மேதகும் முழவொடும்கொட்டமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.
சொற்பிரிப்பு
தட்டொடு தழை மயிற் பீலி கொள் சமணரும்பட்டு உடைவிரி துகிலி னார்கள் சொல் பயனிலைவிட்ட புன்சடையினான் மேதகும் முழவொடும்கொட்டு அமைந்த ஆடலான் கோடிகாவு சேர்மினே.
உரை

சொல்லுஞ் சொல் பயனில்லை. தொங்கவிட்ட பொன்னார் செஞ்சடை.

11

கொந்தணி குளிர்பொழிற் கோடிகாவு மேவியசெந்தழ லுருவனைச் சீர்மிகு திறலுடைஅந்தணர் புகலியு ளாயகேள்வி ஞானசம்பந்தன தமிழ்வல்லார் பாவமான பாறுமே.
சொற்பிரிப்பு
கொந்தணி குளிர்பொழில் கோடிகாவு மேவியசெந்தழல் உருவனைச் சீர்மிகு திறலுடைஅந்தணர் புகலி உளாய கேள்வி ஞானசம்பந்தன தமிழ்வல்லார் பாவம் ஆன பாறுமே.
உரை

திருக்கோடிகாவை மேவிய அந்தணர் வாழும், திருப்புகலியுள் ஆய்ந்த மறையாகிய வேள்வியை உடைய திருஞானசம்பந்தருடைய இத்தமிழ் மாலை பாட வல்லவர் பாவம் போக்குவர். கொந்து - பூங்கொத்து. கேள்வி - கருதி. அந்தணர் புகலி என்றதால் அங்கு அக்காலத்தில் சிவபத்தியிற் சிறந்த அந்தணர் பலர் இருந்தமையும், அதிற் சிறவாதாரைக் கூறார் என்பதும், கூறியது கொண்டு அவரை நாமும் இப்பொழுது நினைந்து பணிந்து நலம் பெறலாயிற்று என்பதும் உணர்க.