திருமுறை 2 · 2.098 · 11

திருத்துருத்தி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
துருத்தி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை
குறிப்பு
திருவிராகம்

1

வரைத்தலைப் பசும்பொனோ டருங்கலன்கள் உந்திவந்திரைத்தலைச் சுமந்துகொண் டெறிந்திலங்கு காவிரிக்கரைத்தலைத் துருத்திபுக் கிருப்பதே கருத்தினாய்உரைத்தலைப் பொலிந்துனக் குணர்த்துமாறு வல்லமே.
சொற்பிரிப்பு
வரைத்தலைப் பசும்பொன் ஓடு அருங்கலன்கள் உந்திவந்திரைத்தலைச் சுமந்துகொண்டு எறிந்து இலங்கு காவிரிக்கரைத்தலைத் துருத்தி புக் கிருப்பதே கருத்தினாய்உரைத்தலைப் பொலிந்து உனக்கு உணர்த்துமாறு வல்லமே.
உரை

காவிரியிலிருந்து கிளைத்த விக்ரமம் என்னும் ஆறு செல்ல அவற்றைச் சார்ந்திருத்தலின் துருத்தி எனப்பட்ட இத்தலத்தின் இறைவன் திருப்பெயர் சொன்னவாறறிவார் என்பது . அது கருதி உரைத்தலைப் பொலிந்த - சொன்ன வாறறறிதலில் விளங்கிய உனக்கு உணர்த்துமாறு வல்லோமோ? வல்லோம் அல்லோம். அறிவார்க்கு அறிவிப்பது எப்படி என்றவாறு. பொலிந்த உனக்கு என்பதில் பெயரெச்சத்து அகரம் தொக்கது. சொன்னவாறு அறியவல்ல உனக்கு உரைத்தலைப் பொலிந்து உணர்த்துமாறு வல்லமோயாம்? வெளிப்படச் சொல்லாத முன்பே அன்பர் நினைத்தவற்றைச் சொன்னவாறு அறியும் உனக்கு யாம் உணர்த்தும் வன்மையுடையோமோ? இல்லை, எனலுமாம்.

2

அடுத்தடுத்த கத்தியோடு வன்னிகொன்றை கூவிளம்தொடுத்துடன் சடைப்பெய்தாய் துருத்தியாயோர் காலனைக்கடுத்தடிப் புறத்தினா னிறத்துதைத்த காரணம்எடுத்தெடுத் துரைக்குமாறு வல்லமாகின் நல்லமே.
சொற்பிரிப்பு
அடுத்து அடுத்து அகத்தியோடு வன்னி கொன்றை கூவிளம்தொடுத்து உடன் சடைப் பெய்தாய் துருத்தியாய் ஓர்காலனைக்கடுத்து அடிப்புறத்தினான் இறத்து உதைத்த காரணம்எடுத்து எடுத்து உரைக்குமாறு வல்லம் ஆகில் நல்லமே.
உரை

சிவபிரான் சடையில், அகத்திப்பூ, வன்னியிலை, கொன்றை மலர், வில்வம் என்பவற்றை அடுத்தடுத்து வைத்துத் தொடுத்த மாலையை அணிந்துளான் என்னும் உண்மை வேறு யாண்டும் காண்டல் அரிது.

3

கங்குல்கொண்ட திங்களோடு கங்கைதங்கு செஞ்சடைச்சங்கிலங்கு வெண்குழை சரிந்திலங்கு காதினாய்பொங்கிலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்கெங்குநின் இடங்களா அடங்கிவாழ்வ தென்கொலோ.
சொற்பிரிப்பு
கங்குல் கொண்ட திங்களோடு கங்கை தங்கு செஞ்சடைச்சங்கு இலங்கு வெண்குழை சரிந்து இலங்கு காதினாய்பொங்கு இலங்கு பூணநூல் உருத்திரா துருத்திபுக்குஎங்கு நின்னிடம் களா அடங்கி வாழ்வது என் கொலோ.
உரை

பூணூல் உருத்திரா - முப்புரி நூலைப் பூண்ட உருத்திர மூர்த்தியே. துருத்திபுக்கு எங்கும் நின் இடங்களா அடங்கி வாழ்தல் என்கொல்- புக்கது துருத்தியாயினும் எல்லா இடங்களும்சிவப்பிரகாசத்தால் உன் நிறைவையே உணர்த்துகின்றன. அவ்வாறு ஓரிடத்திருந்து பலவிடத்தும் காட்சி தரும் ஆற்றல் இருந்தவாறென்னே! என்றபடி, துருத்தியில் இன்றும் அத்திருக்கோயில் பொலிவு அத்தலம் முழுதும் விளங்கக் காணலாம்.

4

கருத்தினாலோர் காணியில் விருத்தியில்லை தொண்டர்தம்அருத்தியால்தம் மல்லல்சொல்லி ஐயமேற்ப தன்றியும்ஒருத்திபால் பொருத்திவைத் துடம்புவிட்டி யோகியாய்இருத்திநீ துருத்திபுக் கிதென்னமாயம் என்பதே.
சொற்பிரிப்பு
கருத்தினால் ஓர்காணியில் விருத்தி இல்லை தொண்டர்தம்அருத்தி ஆற்றம் அல்லல் சொல்லி ஐயம் ஏற்பது அன்றியும்ஒருத்தி பால் பொருத்தி வைத்து உடம்பு விட்டு யோகியாய்இருத்தி நீதுருத்தி புக் கிதென்ன மாயம் என்பதே.
உரை

யோகியாயிருந்த உண்மை உணர்த்தியவாறு. ஒரு காணி நிலம் உடையவனாகி அதிற்பயிரிட்டு ஜீவனம் புரிதல் இல்லை. தம் வறுமைத் துன்பம் உரைத்துப் பிச்சை எடுப்பது. 'பகலிடம் புகலிடம்,...துருத்தியார், இரவிடத் துறைவர் வேள்விக் குடியே' என்று முதலிற் கூறியதுமன்றிப் பாடல்தொறும் அதனைத் தெரிவித்திருப்பதாலும் (தி. 3 ப. 90 பா.1). 'ஒருத்திபால் பொருத்தி வைத்து உடம்பு விட்டுத் துருத்திபுக்கு இருத்தி, இது என்ன மாயம் என்பதோ?' என்று இங்கு வினாவியதாலும் 'காப்பது வேள்விக்குடி தண் துருத்தி யெங்கோன் அரைமேல் ஆர்ப்பது நாகம்' என்றதாலும் ஆளுடைய பிள்ளையார் காலத்துக்கும் முன்பே, பகலில் துருத்திவாசமும் இரவில் வேள்விக்குடி வாசமும் உண்டு என்ற வரலாறு வழங்கப்பட்டமை விளங்கும். இவை இல்லையேல் இரண்டு தலங்களையும் ஒருங்கு பாடார் என்க. 'வட்டக் குண்டத்தில் எரிவளர்த் தோம்பி மறைபயில்வார், அட்டக்கொண் டுண்பதறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோம்' என்றதில் 'வேள்விக்குடி' என்னும் பெயர்க் காரணம் உள்ளதறிக. மான்தோல் ஒன்றை உடுத்துப் புலித்தோல் பியற்கும் இட்டு யானைத்தோல் போர்ப்பதறிந்தோமெனில் நாம் இவர்க்கு ஆட்படோம் என்பதில் துருத்தி யோகியை நினைவூட்டினாரென்பர்.

5

துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடிமறக்குமா றிலாதஎன்னை மையல்செய்திம் மண்ணின்மேல்பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டிறக்குமாறு காட்டினாய்க் கிழுக்குகின்ற தென்னையே.
சொற்பிரிப்பு
துறக்குமா சொலப்படாய் துருத்தியாய் திருந்தடிமறக்கு மாறிலாத என்னை மையல் செய்திம் மண்ணின்மேல்பிறக்குமாறு காட்டினாய் பிணிப்படும் உடம்புவிட்டுஇறக்குமாறு காட்டினாய்க்கு இழுக்குகின்ற தென்னையே.
உரை

துருத்தியில் எழுந்தருளிய முதல்வனே, பகலில் துறவிபோல வேடங்கொண்டு இரவில் வேள்விக்குடியில் மணவாளக் கோலம்பூண்டு, தழும்பும் உற இணை விழைச்சுடையாய்; துறக்கும் ஆறு சொல்லப்படாய், உன் திருந்திய திருவடிகளை மறக்கும் மாறுபாடு சிறிதும் இல்லாத என்னை மையல்செய்து, இம்மண்ணுலகில் பிறக்குமாறு காட்டியருளினை, நோய்களுக்கு இடமாகும் உடம்பைத் தவிர்த்து, இறக்குமாறு காட்டியருளினை; இவ்வாறு பிறப்பும் இறப்பும் நீ காட்ட நான் உனக்குச் செய்த இழுக்கு யாது? மறக்கும் ஆறு எனலும் உண்டு. நான்கடியிலும் ஆறு என்றே கொள்ளல் ஏலாததன்று. 'பிணிப்படும் உடம்பு' - 'இடும்பைக் கிடும்பை’ (மூதுரை) என்றதுணர்க.

6

வெயிற்கெதிர்ந் திடங்கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்துயிற்கெதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்மயிற்கெதிர்ந் தணங்குசாயல் மாதொர்பாக மாகமூஎயிற்கெதிர்ந் தொரம்பினால் எரித்தவில்லி யல்லையே.
சொற்பிரிப்பு
வெயிற்கு எதிர்ந்து இடம் கொடா தகங்குளிர்ந்த பைம்பொழில்துயிற்கு எதிர்ந்த புள்ளினங்கள் மல்குதண் துருத்தியாய்மயிற்கு எதிர்ந்தணங்கு சாயல் மாதொர் பாகமாகமூஎயிற்கு எதிர்ந்து ஓரம்பினாய் எரித்த வில்லி அல்லையே.
உரை

துருத்தியில் உள்ள சோலைவளம் கூறியவாறு. வெயிலுக்கு எதிர்த்து இடம் கொடாது குளிர்ந்த சோலை இப்பொழுதும் உண்டு. அணங்கு -அழகு.

7

கணிச்சியம்ப டைச்செல்வா கழிந்தவர்க் கொழிந்தசீர்துணிச்சிரக் கிரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்அணிப்படுந் தனிப்பிறைப் பனிக்கதிர்க் கவாவுநல்மணிப்படும்பை நாகம்நீ மகிழ்ந்தஅண்ணல் அல்லையே.
சொற்பிரிப்பு
கணிச்சியம் படைச்செல்வா கழிந்தவர்க்கு ஒழிந்தசீர்துணிச்சிரக்கு இரந்தையாய் கரந்தையாய் துருத்தியாய்அணிப்படும் தனிப்பிறைப் பனிக்கதிர்க்க வாவுநல்மணிப்படும்பை நாகநீ மகிழ்ந்த அண்ணலல்லையே.
உரை

கணிச்சி படை- கணச்சியம்படை, மழுப்படை. கழிந்தவர்- நூறு கோடி பிரமர்கள் நொந்தினார், ஆறு கோடி நாராயணர் அங்கனே, ஏறுகங்கை மணல் எண்ணில் இந்திரர், "ஈறிலாதவன் ஈசன் ஒருவனே' (தி. 5 ப. 100 பா. 3) என்றதிற் குறித்தவர்கள். துணி சிரம் கிரந்தை - துணிந்த தலை முடிச்சு; தலை மாலையை அணிந்தவனே, கரந்தையாய் - சிவகரந்தையைச் சூடியவனே.

8

சுடப்பொடிந் துடம்பிழந் தநங்கனாய மன்மதன்இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்கடற்படை யுடையஅக் கடல்இலங்கை மன்னனைஅடற்பட அடுக்கலில் அடர்த்தஅண்ணல் அல்லையே.
சொற்பிரிப்பு
சுடப்பொடிந்து உடம்பு இழந்த நங்கனாய மன்மதன்இடர்ப்படக் கடந்திடந் துருத்தியாக எண்ணினாய்கடற்படை உடையவக் கடல் இலங்கை மன்னனைஅடற்பட அடுக்கலில் அடர்த்த அண்ணல் அல்லையே.
உரை

நெற்றிக்கண்ணால் சுட்டொழிக்க, சாம்பலாகி மெய்யிழந்த உருவிலியாகிய மன்மதன். இடர்ப்படும்படி வென்று துருத்தி இடம் ஆகத் திருவுள்ளம் கொண்டருளினை. கடல் போலும் பெரும் படையை உடைய அப்பிரசித்தி பெற்ற கடலின் நடுவே உள்ள இலங்கைக்கு வேந்தனை, கொலை உறத் திருக்கயிலை மலையை அழுத்தி அடர்த்த இறைவன் அல்லையோ?

9

களங்குளிர்ந் திலங்குபோது காதலானும் மாலுமாய்வளங்கிளம்பொ னங்கழல் வணங்கிவந்து காண்கிலார்துளங்கிளம்பி றைச்செனித் துருத்தியாய் திருந்தடிஉளங்குளிர்ந்த போதெலாம் உகந்துகந் துரைப்பனே.
சொற்பிரிப்பு
களம் குளிர்ந்து இலங்கு போது காதலானும் மாலுமாய்வளங் கிளம்பொனங் கழல் வணங்கி வந்து காண்கிலார்துளங் கிளம்பிறைச் செனித் துருத்தியாய் திருந்தடிஉளங் குளிர்ந்த போதெலாம் உகந்து உகந்துரைப்பனே.
உரை

கள் அம் குளிர்ந்து, இலங்கும்போது காதலான் - தேனுடைய அழகிய குளிர்வுற்று விளங்கும் தாமரைப்பூவை விரும்புமவன். களம் இடமுமாம். போது ஆகிய களம், களமாகிய போது களம்போது ஆகக் காதலிப்பவன்.

10

புத்தர்தத் துவமிலாச் சமணுரைத்த பொய்தனைஉத்தமமெனக்கொளா துகந்தெழுந்து வண்டினம்துத்தநின்று பண்செயுஞ் சூழ்பொழில் துருத்தியெம்பித்தர்பித்த னைத்தொழப் பிறப்பறுதல் பெற்றியே.
சொற்பிரிப்பு
புத்தர் தத்துவமிலாச் சமண் உரைத்த பொய்தனைஉத்தமம் எனக்கொளாது உகந்தெழுந்து வண்டினம்துத்தநின்று பண்செயும் சூழ்பொழில் துருத்தியெம்பித்தர் பித்தனைத் தொழப் பிறப்பறுத்தல் பெற்றியே.
உரை

உத்தமம் எனக் கொள்ளாது மேகம் துத்தம்- ஏழிசையுள் ஒன்றானது. பித்தர் பித்தன்-பித்தர்க்கெல்லாம் பித்தனாயிருப்பவனைத் தொழுதலால் பிறவிப் பெருங்கடலைத் தீர்த்தலே பெற்றிமையாகும்.

11

கற்றுமுற்றி னார்தொழுங் கழுமலத் தருந்தமிழ்சுற்றுமுற்று மாயினான் அவன்பகர்ந்த சொற்களால்பெற்றமொன் றுயர்த்தவன் பெருந்துருத்தி பேணவேகுற்றமுற்று மின்மையிற் குணங்கள்வந்து கூடுமே.
சொற்பிரிப்பு
கற்று முற்றினார் தொழுங் கழுமலத் தருந்தமிழ்சுற்று முற்றுமாயினா னவன் பகர்ந்த சொற்களால்பெற்ற மொன்று உயர்த்தவன் பெருந்துருத்தி பேணவேகுற்ற முற்றுமின்மையிற் குணங்கள் வந்து கூடுமே.
உரை

சுற்றும் முற்றும் ஆயினன் - சுற்றிலும் முற்றிலும் ஆகிய சிவபிரான். பெற்றம் - எருது எழுதிய கொடிக்கு ஆகு பெயர்.