திருமுறை 2 · 2.100 · 11

திருக்கோவலூர் வீரட்டம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
கோவலூர் வீரட்டம்
நாடு
நடுநாடு
குறிப்பு
திருவிராகம்; வீரட்டம்.

1

படைகொள் கூற்றம் வந்துமெய்ப் பாசம்விட்ட போதின்கண்இடைகொள்வா ரெமக்கிலை யெழுகபோது நெஞ்சமேகுடைகொள்வேந்தன் மூதாதை குழகன்கோவ லூர்தனுள்விடையதேறுங் கொடியினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
படைகொள் கூற்றம் வந்து மெய்ப் பாசம் விட்ட போதின்கண்இடை கொள்வார் எமக்கு இலை எழுக போது நெஞ்சமேகுடை கொள் வேந்தன் மூதாதை குழகன் கோவலூர்தனுள்விடையது ஏறும் கொடியினான் வீரட்டானம் சேர்துமே.
உரை

பாசம் - கயிறு; எமபாசம். நெஞ்சமே எழுக, போதுக. வெண்கொற்றக் குடையைக் கொண்ட மலையமான் முதுதாதையாகிய குழகன் சிவபிரான். குழகன் இத்தலத்தின் இறைவன் திருப்பெயர்; (பா. 3, 6,9) விடையது - அது பகுதிப் பொருள் விகுதி. வீரட்டானம், வீரஸ்தாநம்.

2

கரவலாளர் தம்மனைக் கடைகள் தோறுங் கால்நிமிர்த்திரவலாழி நெஞ்சமே இனியதெய்த வேண்டில் நீகுரவமேறி வண்டினங் குழலொடியாழ்செய் கோவலூர்விரவிநாறு கொன்றையான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
கரவல் ஆளர் தம்மனைக் கடைகள் தோறும் கால்நிமிர்த்திரவல் ஆழிநெஞ்சமே இனியது எய்த வேண்டில் நீகுரவம் ஏறிவண்டினம் குழலொடுயாழ் செய் கோவலூர்விரவி நாறு கொன்றையான் வீரட்டானம் சேர்துமே.
உரை

கரப்பவர் வீடுகளின் கடைவாயில் தோறும், கால் நிமிர்த்து (நடந்து) இரப்பதைச் செய்யாதே; நெஞ்சமே! ஆழி நெஞ்சம்- கடலாழத்தினும் காண்டற்கரிய ஆழமுடைய நெஞ்சமே! நினைப்பென்னும் நெடுங்கிணறு. இனியதை எய்த வேண்டினால், சிவபெருமான் வீரட்டானத்தைச் சேர்வோம்.

3

உள்ளத்தீரே போதுமின் னுறுதியாவ தறிதிரேல்அள்ளற்சேற்றிற் காலிட்டிங் கவலத்துள் அழுந்தாதேகொள்ளப்பாடு கீதத்தான் குழகன்கோவ லூர்தனுள்வெள்ளந்தாங்கு சடையினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
உள்ளத்தீரே போதுமின் உறுதியாவது அறிதிரேல்அள்ளற் சேற்றிற் காலிட்டு இங்கவலத்து உள் அழுந்தாதேகொள்ளப் பாடு கீதத்தான் குழகன் கோவலூர் தனுள்வெள்ளம் தாங்கு சடையினான் வீரட்டானம் சேர்துமே.
உரை

நல்ல உள்ளத்தை உடையவரே உயிர்க்கு உறுதியாவதை அறிதிர் என்னில் திருக்கோவலூர் வீரட்டானம் சேர்வோம். அள்ளற்சேறு-நரகம்.

4

கனைகொள் இருமல் சூலைநோய் கம்பதாளி குன்மமும்இனையபலவும் மூப்பினோ டெய்திவந்து நலியாமுன்பனைகளுலவு பைம்பொழிற் பழனஞ்சூழ்ந்த கோவலூர்வினையை வென்ற வேடத்தான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
கனைகொள் இருமல் சூலை நோய் கம்பதாளி குன்மமும்இனைய பலவும் மூப்பினோடு எய்தி வந்து நலியாமுன்பனைகள் உலவு பைம்பொழில் பழனம் சூழ்ந்த கோவலூர்வினையை வென்ற வேடத்தான் வீரட்டானம் சேர்துமே.
உரை

கம்பதாளி- தாள்நடுங்கும் ஒருவகை நோய். கம்பம் - நடுக்கம். தாளி -கால்களைப் பற்றுவது. 'பெண்ணை' என்றதற்கேற்ப பனந்தோப்பு மிக்கிருக்கும் நாடு. இருவினையையும் போக்கிய சிவவேடத்தை உடையவன்.

5

உளங்கொள் போகம் உய்த்திடார் உடம்பிழந்த போதின்கண்துளங்கிநின்று நாடொறுந் துயரலாழி நெஞ்சமேவளங்கொள்பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்விளங்குகோவ ணத்தினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
உளம் கொள் போகம் உய்த்திடார் உடம்பு இழந்த போதின்கண்துளங்கி நின்று நாள்தொறும் துயரல் ஆழி நெஞ்சமேவளம் கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்விளங்கு கோவணத்தினான் வீரட்டானம் சேர்துமே.
உரை

ஆழி நெஞ்சமே! -ஆழ்தலை உடைய மனமே! மனத்தில் விரும்பப்பட்ட போகங்களை அநுபவிக்கச் செய்யும் புண்ணியம் இல்லாதவர்கள் கட்டையை விட்டகன்ற சமயத்தில், தளர்ந்து நின்று நாள்தோறும் துயரம் அடையாதே.

6

கேடுமூப்புச் சாக்காடு கெழுமிவந்து நாடொறும்ஆடுபோல நரைகளாய் யாக்கைபோக்க தன்றியும்கூடிநின்று பைம்பொழிற் குழகன்கோவ லூர்தனுள்வீடுகாட்டு நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
கேடு மூப்புச் சாக்காடு கெழுமி வந்து நாள்தொறும்ஆடு போல நரைகளாய் யாக்கை போக்கதன்றியும்கூடி நின்று பைம்பொழில் குழகன் கோவலூர் தனுள்வீடு காட்டு நெறியினான் வீரட்டானம் சேர்துமே.
உரை

கேடும் முதுமையும் இறப்பும் பொருந்தி வந்து நாள்தொறும் ஆடுகளைப் போல நரைகளாகி உடம்பு அழிதலுடையது. பேரின்ப வீட்டைக் காட்டும் திருநெறி. நெறியினான் - திருநெறியில் சென்று அடையப்பெறும் சிவபிரான்.

7

உரையும் பாட்டுந் தளர்வெய்திஉ டம்புமூத்த போதின்கண்நரையுந் திரையுங் கண்டெள்கி நகுவர்நமர்கள் ஆதலால்வரைகொள் பெண்ணை வந்துலா வயல்கள்சூழ்ந்த கோவலூர்விரைகொள்சீர்வெண் ணீற்றினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
உரையும் பாட்டும் தளர்வு எய்தி உடம்பு மூத்த போதின்கண்நரையும் திரையும் கண்டு எள்கி நகுவர் நமர்கள் ஆதலால்வரை கொள் பெண்ணை வந்து உலா வயல்கள் சூழ்ந்த கோவலூர்விரை கொள் சீர்வெண்ணீற்றினான் வீரட்டானம் சேர்துமே.
உரை

உரையும் பாட்டும் - பேச்சும் பாடலும். ' பாட்டும் உரையும் பயிலாதன இரண்டோட்டைச் செவியும் உள'.

8

ஏதமிக்க மூப்பினோ டிருமல்ஈளை யென்றிவைஊதலாக்கை ஓம்புவீர் உறுதியாவ தறிதிரேல்போதில்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்வேதமோது நெறியினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
ஏதம் மிக்க மூப்பினோடு இருமல் ஈளை என்று இவைஊதல் ஆக்கையோம்புவீர் உறுதியாவது அறிதிரேல்போதில் வண்டு பண்செயும் பூந்தண் கோவலூர் தனுள்வேதம் ஓதுநெறியினான் வீரட்டானம் சேர்துமே.
உரை

ஈளை -சிலேட்டும தோடத்தால் வரும் நோய் வகையுள் ஒன்று. ஊதல் ஆக்கை - பருத்தலை உடைய உடம்பு. உறுதி - ஆன்ம லாபம். அறிதிர் ஏல் - அறிவீர் எனில். வேதம் ஓதும் நெறியினான்-   வேதநெறியை அருளியவன்.

9

ஆறுபட்ட புன்சடை அழகன்ஆயி ழைக்கொருகூறுபட்ட மேனியான் குழகன்கோவ லூர்தனுள்நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்வேறுபட்ட சிந்தையான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
ஆறு பட்டபுன் சடை அழகனாய் இழைக்கு ஒருகூறுபட்ட மேனியான் குழகன் கோவலூர் தனுள்நீறுபட்ட கோலத்தான் நீலகண்டன் இருவர்க்கும்வேறுபட்ட சிந்தையான் வீரட்டானம் சேர்துமே.
உரை

ஆயிழை - உமாதேவியார். திருவெண்ணீறு சண்ணித்த மேனியழகினன். இருவர் - மாலும் அயனும். வேறுபட்ட சிந்தைக்கு ஏதுவாயிருந்தவன். 'அந்தணர் தம் சிந்தையானை', 'வாயானை, மனத்தானை, மனத்துள் நின்ற கருத்தானை'.

10

குறிகொளாழி நெஞ்சமே கூறை துவரிட் டார்களும்அறிவிலாத அமணர்சொல் லவத்தமாவ தறிதியேல்பொறிகொள்வண்டு பண்செயும் பூந்தண்கோவ லூர்தனுள்வெறிகொள்கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
குறிகொள் ஆழிநெஞ்சமே கூறை துவர் இட்டார்களும்அறிவிலாத அமணர் சொல் லவத்தமாவது அறிதியேல்பொறி கொள் வண்டுபண் செயும் பூந்தண் கோவலூர் தனுள்வெறி கொள் கங்கை தாங்கினான் வீரட்டானஞ் சேர்துமே.
உரை

ஆழி நெஞ்சமே', நீராழங்கண்டாலும் நெஞ்சாழம் காண முடியாது. அவத்தம் - பொய்.   பொறி - வரி. வெறி - மணம்.

11

கழியொடுலவு கானல்சூழ் காழி ஞான சம்பந்தன்பழிகள்தீரச் சொன்னசொல் பாவநாச மாதலால்அழிவிலீர்கொண் டேத்துமின் அந்தண்கோவ லூர்தனுள்விழிகொள்பூதப் படையினான் வீரட்டானஞ் சேர்துமே.
சொற்பிரிப்பு
கழியொடு உலவு கானல்சூழ் காழி ஞான சம்பந்தன்பழிகள் தீரச் சொன்ன சொற் பாவநாசம் ஆதலால்அழிவிலீர் கொண்டு ஏத்துமின் அந்தண் கோவலூர் தனுள்விழிகொள் பூதப்படையினான் வீரட்டானம் சேர்துமே.சுவாமி : வீரட்டேஸ்வரர்;அம்பாள் : சிவானந்தவல்லி.
உரை

பழிகள் தீரச்சொன்ன சொல். பாவநாசம் - பழிகள் ஒழியப் பாடியருளிய இத்திருப்பதிகத்தினை ஓதுவார்க்குப் பாவங்கள் அழியும். கொண்டு - இத்திருப்பதிகப் பொருளை உள்ளத்திற்கொண்டு.