திருமுறை 2 · 2.097 · 11

சீர்காழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
நட்டராகம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நம்பொருள்நம் மக்களென்று நச்சிஇச்சை செய்துநீர்அம்பரம்அ டைந்துசால அல்லலுய்ப்ப தன்முனம்உம்பர்நாதன் உத்தமன் ஒளிமிகுத்த செஞ்சடைநம்பன்மேவு நன்னகர் நலங்கொள்காழி சேர்மினே.
சொற்பிரிப்பு
நம் பொருள் நம்மக்கள் என்று நச்சி இச்சை செய்துநீர்அம்பரம் அடைந்து சால அல்லல் உய்ப்பதன் முனம்உம்பர் நாதன் உத்தமன் ஒளி மிகுத்த செஞ்சடைநம்பன் மேவு நன்னகர் நலம் கொள் காழி சேர்மினே.
உரை

பொருட்பற்றாலும் மக்கட்பற்றாலும், லோகந்தரம் சேர்ந்து, துன்பம் அடைதற்கு முன்னமே சீகாழியைச் சேருங்கள் நீங்கள் என்று உபதேசம் புரிந்தருள்வதை உணர்க. அம்பரம் அடைதல் – நாதனார் ஆனை உய்க்க நரகொடு சுவர்க்கம் போய்ச் சேர்தல்.

2

பாவமேவும் உள்ளமோடு பத்தியின்றி நித்தலும்ஏவமான செய்துசாவ தன்முனம்மி சைந்துநீர்தீபமாலை தூபமுஞ் செறிந்தகைய ராகிநம்தேவதேவன் மன்னுமூர் திருந்துகாழி சேர்மினே.
சொற்பிரிப்பு
பாவம் ஏவும் உள்ளம் ஓடு பத்தியின்றி நித்தலும்ஏவம் ஆன செய்து சாவ தன் முனம் இசைந்துநீர்தீப மாலை தூபமும் செறிந்த கையராகிநம்தேவ தேவன் மன்னும் ஊர் திருந்து காழி சேர்மினே.
உரை

நல்வினை தீவினை என்பன கன்மங்கள். அவை ஆகாமியவினை. அவ்விரண்டும் அறமும் மறமும் ஆகும் நிலைமையில் சஞ்சிதம் எனப்படும். அறம் - புண்ணியம். மறம்- பாபம். அப்புண்ணிய பாவம் இரண்டும் அநுபவத்திற்கு வந்து சுக துக்கங்கள் ஆக்கும். அப்போது அவ்விரண்டும் பிராரப்தம் எனப்படும். புண்ணியம் பசு புண்ணியம், சிவ புண்ணியம் என இருவகைப்படும். அவற்றுள் ஈண்டுச் சிவபுண்ணியத்துள் அடங்கும் சிவபூஜையைக் கருத வேண்டும். 'புண்ணியஞ் செய்வார்க்குப் பூவுண்டு நீருண்டு' என்பது திருமந்திரம். அப்புண்ணியத்தைச் செய்க என விதிப்பாராய், 'நீர், தீபம், மாலை, தூபம் என்பவை செறிதல் வேண்டும்' என்றருளினார். நீர் என்பது முன்னிலைப் பெயராயினும் பொருத்தமாயிருத்தலின் வழிபாட்டிற்குரிய பொருள்களுள் ஒன்றாகவும் கருதப்பட்டது.

3

சோறுகூறை யின்றியே துவண்டு தூர மாய்நுமக்கேறுசுற்றம் எள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்ஆறுமோர் சடையினான் ஆதியானை செற்றவன்நாறுதேன் மலர்ப்பொழில் நலங்கொள்காழி சேர்மினே.
சொற்பிரிப்பு
சோறு கூறை இன்றியே துவண்டு தூரமாய் நுமக்குஏறு சுற்றம் எள்கவே இடுக்கண் உய்ப்பதன் முனம்ஆறும் ஓர்சடையினான் ஆதியானை செற்றவன்நாறு தேன்மலர்ப் பொழில் நலம் கொள் காழி சேர்மினே.
உரை

இடுக்கண் என்பது மரூஉ. அலக்கண், தறுகண், வன்கண், புன்கண் முதலியவை உள்ளேயுற்ற நிலையை வெளியே தோற்றும் கண்ணென்னும் உறுப்பைப் பற்றித் தோன்றிய பெயர்களாதல் அறிக. ஆறும்- சுவதந்திரம் முதலிய அறுகுணங்களும் எனக் கொண்டு, அவற்றால் ஓர்தற்குரிய சடையுடையான் எனல் சிறக்கும். சடைஞானமயமாகும். 'நுண்சிகை ஞானமாம்' (திருமந்திரம்).

4

நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும்உச்சிவம் மெனும்முரை யுணர்ந்துகேட்ப தன்முனம்பிச்சர்நச் சரவரைப் பெரியசோதி பேணுவார்இச்சைசெய்யும் எம்பிரான் எழில்கொள்காழி சேர்மினே.
சொற்பிரிப்பு
நச்சி நீர்பிறன் கடை நடந்து செல்ல நாளையும்உச்சிவம் எனும் உரை யுணர்ந்து கேட்பதன் முனம்பிச்சர் நச்சரவரைப் பெரிய சோதி பேணுவார்இச்சை செய்யும் எம்பிரான் எழில் கொள் காழி சேர்மினே.
உரை

இரப்பவர் பிறர் கடைவாயில் நின்று 'இடுக' என்று இரக்க. அவர் 'நாளை நண்பகலில் வருக' என்று சொல்லும் சொல்லைக் கேட்டுணர்ந்து வருந்தும் நிலையெய்தும் முன்னரே சிவபிரான் திருக்காழியைச் சேருங்கள்.

5

கண்கள்காண் பொழிந்துமேனி கன்றியொன் றலாதநோய்உண்கிலாமை செய்துநும்மை யுய்த்தழிப்ப தன்முனம்விண்குலாவு தேவருய்ய வேலைநஞ் சமுதுசெய்கண்கள்மூன் றுடையவெம் கருத்தர்காழி சேர்மினே.
சொற்பிரிப்பு
கண்கள் காண்பொழிந்து மேனி கன்றியொன்றலாத நோய்உண்கிலா மைசெய்து நும்மை உய்த்தழிப் பதன்முனம்விண்குலாவு தேவர் உய்ய வேலை நஞ்சமுது செய்கண்கள் மூன்று உடைய வெங் கருத்தர் காழி சேர்மினே.
உரை

காண்பு- காட்சி. 'காண்பரிதாய பரசுடர்' 'காம்பினொடு நேத்திரங்கள் பணித்தருள வேண்டும்' 'காண்பினிய மணிமாடம்' (தி. 7 ப. 46 பா. 2, 3) 'கண்கள் காண்பொழிந்து'

6

அல்லல்வாழ்க்கை யுய்ப்பதற் கவத்தமே பிறந்துநீர்எல்லையில் பிணக்கினிற் கிடந்திடா தெழும்மினோபல்லில்வெண் டலையினிற் பலிக்கியங்கு பான்மையான்கொல்லையேற தேறுவான் கோலக்காழி சேர்மினே.
சொற்பிரிப்பு
அல்லல் வாழ்க்கை உய்ப்பதற்கு அவத்தமே பிறந்துநீர்எல்லையில் பிணக்கு இனிற் கிடந்திடாது எழும்மினோபல்லில் வெண்தலை இனிற் பலிக்கியங்கு பான்மையான்கொல்லை ஏறதேறுவான் கோலக் காழி சேர்மினே.
உரை

அவத்தம் - (அபத்தம்) தவறு. பொய். பலிக்கு இயங்குபான்மையான், இயங்குதல் - நடத்தல்.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
உரை

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.

8

பொய்மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு சொல்லுநீர்ஐமிகுத்த கண்டரா யடுத்துரைப்ப தன்முனம்மைமிகுத்த மேனிவாள் அரக்கனைநெ ரித்தவன்பைமிகுத்த பாம்பரைப் பரமர்காழி சேர்மினே.
சொற்பிரிப்பு
பொய் மிகுத்த வாயராய்ப் பொறாமையோடு செல்லுநீர்ஐமிகுத்த கண்டராய் அடுத்திரைப்ப தன்முனம்மைமிகுத்த மேனி வாளரக்கனை நெரித்தவன்பைமிகுத்த பாம்பரைப் பரமர் காழி சேர்மினே.
உரை

ஐமிகுத்த கண்டர் - கோழை பெருகிய கழுத்தினர். இரைப்பது என்பது கோழை கட்டியபின் பேசமுடியாமல் மூச்சுடன் வரும் ஒலி.

9

காலினோடு கைகளுந் தளர்ந்துகாம நோய்தனால்ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலாநீலமேவு கண்டனார் நிகழ்ந்தகாழி சேர்மினே.
சொற்பிரிப்பு
காலினோடு கைகளும் தளர்ந்து காம நோய்தனால்ஏலவார் குழலினார் இகழ்ந்துரைப்ப தன்முனம்மாலினோடு நான்முகன் மதித்தவர்கள் காண்கிலாநீலமேவு கண்டனார் நிகழ்ந்த காழி சேர்மினே.
உரை

காலுங் கையுந்தளர்ந்து, நோய்மிகப் பெற்றமையால் அன்பொடு உபசாரங்கள் செய்து போற்றிவந்த மனைவியரும் இகழ்ந்துரைக்கும் இழிவை அடையும் முன்னரே காழி சேர்மின் என்க. ஏலம் - மயிர்ச்சாந்து.

10

நிலைவெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்முலைவெறுத்த பேர்தொடங்கி யேமுனிவ தன்முனம்தலைபறித்த கையர்தேரர் தாந்தரிப் பரியவன்சிலைபிடித் தெயிலெய்தான் திருந்துகாழி சேர்மினே.
சொற்பிரிப்பு
நிலை வெறுத்த நெஞ்சமோடு நேசமில் புதல்வர்கள்முலை வெறுத்த பேர் தொடங்கி யே முனிவ தன்முனந்தலை பறித்த கையர் தேரர் தாம் தரிப்பரியவன்சிலை பிடித்து எயிலெய்தான் திருந்து காழி சேர்மினே.
உரை

பெற்றவரை வழிபட்ட மக்களும் பலநாள் படுக்கையிற் கிடந்தும் வருந்தும் அப்பெற்றோர்க்கு அவ்வப்போது வேண்டுவன செய்து சலித்து, வெறுத்து, இவ்வாறு கிடந்து தாமும் துன்புற்று நம்மையும் துன்புறுத்தும் இவர்கள் இருப்பதினும் இறப்பதே நன்று, என முன்னைய நிலையை வெறுப்பர். அதனை 'நிலைவெறுத்த நெஞ்சம்' என்றார். வெறுத்தல் செறிதல், நெருங்கல்.

11

தக்கனார் தலையரிந்த சங்கரன் றனதரைஅக்கினோ டரவசைத்த அந்திவண்ணர் காழியைஒக்கஞான சம்பந்தன் உரைத்தபாடல் வல்லவர்மிக்கஇன்ப மெய்திவீற் றிருந்துவாழ்தல் மெய்ம்மையே.
சொற்பிரிப்பு
தக்கனார் தலை அரிந்த சங்கரன் தனதரைஅக்கினோடு அரவசைத்த அந்திவண்ணர் காழியைஒக்க ஞானசம்பந்தன் உரைத்த பாடல் வல்லவர்மிக்க இன்பம் எய்தி வீற் றிருந்து வாழ்தல் மெய்ம்மையே.
உரை

தலையரிந்த சங்கரன் என்றதால், தலை அரிந்த கொடுமை செய்தல் கடவுட்குத் தகுமோ? என்பார்க்குச் சுகத்தைச் செய்பவன் அசுகத்தை விளைக்குமளவு மிக்க அபராதங்களைத் தக்கன் செய்தான் என்றும், ஆண்டும் சிவபிரான் மறக்கருணையால் ஆண்டு சுகத்தையே பின்விளைவாகச் செய்தான் என்றும் உணர்க.