திருமுறை 2 · 2.096 · 11

சீகாழி (சீர்காழி)

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பன்எம் பெருமான்செங்கண் ஆடர வாட்டுஞ் செல்வனெம் சிவனுறை கோயில்பங்க மில்பல மறைகள் வல்லவர் பத்தர்கள் பரவுந்தங்கு வெண்திரைக் கானல் தண்வயற் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
பொங்கு வெண்புரி வளரும் பொற்புடை மார்பன் எம்பெருமான்செங்கணால் அரவாட்டும் செல்வன் எம் சிவன் உறைகோயில்பங்கமில் பலமறைகள் வல்லவர் பத்தர்கள் பரவும்தங்கு வெண்டிரைக் கானல் தண்வயல் காழி நன் நகரே.
உரை

வெண்புரி- வெண்ணிறத்தை உடைய நூலாலாகிய முப்புரி. பங்கம்- தோல்வி. மறைப்பொருள்கள் வேறு எந்நூற் பொருள்களுக்கும் தோல்வி அடையாமையைக் குறிக்க. பங்கம் இல்மறைகள். அழியாமையினைக் குறித்தது ஆகும். வேதம் நித்தியம், வல்லவர்களும் பத்தர்களும்பரவும் காழி நன்னகர் என்க.

2

தேவர் தானவர் பரந்து திண்வரை மால்கடல் நிறுவிநாவ தாலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டுஆவ வென்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்காவ லார்மதில் சூழ்ந்த கடிபொழிற் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
தேவர் தானவர் பரந்து திண்வரை மால் கடல் நிறுவிநாவது ஆலமிர் துண்ண நயந்தவர் இரிந்திடக் கண்டு       ஆவ என்றரு நஞ்சம் உண்டவன் அமர்தரு மூதூர்காவலார் மதில் சூழ்ந்த கடிபொழில் காழி நன் நகரே.
உரை

நிறுவி - மத்தாக நிறுத்தி. நாவதால் - நாக்கால். அது பகுதிப் பொருள் விகுதி. இரிந்திட - சாய. ஆவ என்று- ஆஆ என்று இரங்கி. இத்தொடர் திருமுறைகளில் பயின்றுள்ளதை ஆங்காங்கு நோக்குக. காவல் ஆர் மதில் சூழ்ந்த நகர். பொழிலை உடைய காழி நகர்.

3

கரியின் மாமுக முடைய கணபதி தாதைபல் பூதந்திரிய இல்பலிக் கேகுஞ் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்சரியின் முன்கைநன் மாதர் சதிபட மாநட மாடிஉரிய நாமங்கள் ஏத்தும் ஒலிபுனற் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
கரியின் மாமுகம் உடைய கணபதி தாதை பல்பூதம்திரிய இல்பலிக்கு ஏகும் செழுஞ்சுடர் சேர்தரு மூதூர்சரியின் முன்கை நன்மாதர் சதிபட மாநடமாடிஉரிய நாமங்கள் ஏத்தும் ஒலிபுனல் காழி நன் நகரே.
உரை

கரத்தை உடையது கரி எனப்பட்டது. பூதகணங்களோடு பலிக்கு ஏகினார் எனல் அறிக. செழுஞ்சுடர்- அழியாததும் அறியும் ஆன்மாக்களிடத்தில் வளர்வதுமாகிய ஒளி- 'செழுஞ்சுடரேசெழுஞ்சுடர் நற்சோதி மிக்கவுருவே' அப்பர் 'ஒளிவளர் விளக்கே' (திருவிசைப்பா). சரி - வளையல். சதிபட மாநடம் ஆடல் தண்ணுமை விளங்கலுறு தாளம் இசையெல்லாம் வண்ணமலர் மெல்லடி வழிச்சதியில் நிற்பக் கண்ணினை கொள்பல் வளைய கைவழி நடப்ப. (பிரபுலிங்க. மாயை பூசைகதி 52) . நடித்தல்,செப்பமைந்த தண்ணுமையிசை தாளம் மென்சிறுதாட் டுப்பமைந்த வொண்சதிதழீ இச்சுவைய பல்காய முப்பமைந்தலின் கறியென நடித்தல். (பிரவு கைலாச 31). உரிய நாமங்கள் ஓதி என்றதால், அக்காலத்து மகளிர்க்குச் சிவநாமம் ஓதும் உரிமையை ஆசிரியர் உணர்ந்து மகிழ்ந்து பாட்டிலும் நாட்டிய உண்மை புலப்படும். இக்கால மகளிர் பலர், இறைவனை ஏத்த உரிய நாமங்களை உணராமைக்குக் காரணத்தை ஆராய்ந்து கண்டு, போக்குதல், சமய வளர்ச்சிக்கு வழி கோலுவதாம். மகளிரே சமயம் வளர்க்கத் தக்கார்.

4

சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னிஅங்கம் பூணென வுடைய அப்பனுக் கழகிய வூராந்துங்க மாளிகை யுயர்ந்த தொகுகொடி வானிடை மிடைந்துவங்க வாண்மதி தடவு மணிபொழிற் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
சங்க வெண்குழைச் செவியன் தண்மதி சூடிய சென்னிஅங்கம் பூண் எனவுடைய அப்பனுக்கு அழகிய ஊராம்துங்க மாளிகை உயர்ந்த தொகு கொடி வானிடை மிடைந்துவங்க வாண்மதி தடவு மணி பொழில் காழி நன் நகரே.
உரை

அங்கம் -எலும்பு. துங்கம்- உயர்ச்சி. தொகு கொடி- தொக்க கொடிகள். வினைத்தொகை, மிடைந்து - நெருங்கி. வங்கமதி - வெள்ளியைப் போன்ற திங்கள்.

5

மங்கை கூறமர் மெய்யான் மான்மறி யேந்திய கையான்எங்க ளீசனென் றெழுவார் இடர்வினை கெடுப்பவற் கூராஞ்சங்கை யின்றிநல் நியமந் தாஞ்செய்து தகுதியின் மிக்ககங்கை நாடுவர் கீர்த்தி மறையவர் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
மங்கை கூறமர் மெய்யான் மான்மறி ஏந்திய கையான்எங்களீசன் என்று எழுவாரிடர் வினை கெடுப்பவர் கூராம்சங்கையின்றி நன்னிய மந் தாஞ் செய்து தகுதியின் மிக்ககங்கை நாடுயர் கீர்த்தி மறையவர் காழி நன் நகரே.
உரை

உண்மை வடிவானவன் என்பது பொருந்துமேல் கொள்க. எழுவார் -விழித்து எழுதல். மூலாதாரத்திலிருந்து சுழுமுனை நாடி வழியாகத் தியானித்து எழுதல். இடர்வினை. இரண்டன் உருபும்பயனும் உடன் தொக்க தொகையாயும் உம்மைத் தொகையாயும் கொள்ளலாம். வினை கெடுப்பவன்-வினைகளைப் போக்கிப் பிறவியை ஒழித்துப் பேரின்பம் அருளும் சிவபெருமான். சங்கை - ஐயம் .தகுதி- ஒழுக்கத்தால் உயர்தல் மிக்க மறையவர். கீர்த்தியை உடைய மறையவர். உயர்கீர்த்தி வினைத் தொகை. கங்கை நாடு - கங்காநதி பாயும் நாட்டினின்றும் வந்த மறையவர் என்றேனும் அந்நாடு வரையிலும் பரவிய கீர்த்தியை உடைய மறையவர் என்றேனும் கொள்க.

6

நாறு கூவிள மத்தம் நாகமுஞ் சூடிய நம்பன்ஏறும் ஏறிய ஈசன் இருந்தினி தமர்தரு மூதூர்நீறு பூசிய வுருவர் நெஞ்சினுள் வஞ்சமொன் றின்றித்தேறு வார்கள்சென் றேத்துஞ் சீர்திகழ் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
நாறு கூவிளம் அத்த நாகமும் சூடிய நம்பன்ஏறும் ஏறிய ஈசன் இருந்து இனிது அமர் தரு மூதூர்நீறு பூசிய உருவர் நெஞ்சினுள் வஞ்சம் ஒன்றின்றித்தேறுவார்கள் சென்று ஏத்தும் சீர்திகழ் காழி நன் நகரே.
உரை

ஏறும் ஏறிய ஈசன் - என்பதிலுள்ள உம்மை ஏற்றின் அடங்காமையையும் அதை அடக்கிய ஈசன் ஆற்றலையும் குறித்தது. பசுக்களுக்கு எல்லாம் பதியாதலை உணர்த்துவதே அதன் உண்மைக் கருத்து. இருந்து அமர்தரும் ஊர் என்றதால் நிலைத்திருக்கையும் மிக்க விருப்பமும் புலப்படும்.

7

நடம தாடிய நாதன் நந்திதன் முழவிடைக் காட்டில்விடம மர்ந்தொரு காலம் விரித்தறம் உரைத்தவற் கூராம்இடம தாமறை பயில்வார் இருந்தவர் திருந்திய போதிற்குடம தார்மணி மாடங் குலாவிய காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
நடமதாடிய நாதன்நந்தி தன் முழவிடைக் காட்டில்விடம் அமர்ந்து ஒருகாலம் விரித்தற முரைத்தவற்கூராம்இடம் அதாமறை பயில்வார் இருந்தவர் திருந்தியம் போதிற்குடம் அதார் மணி மாடம் குலாவிய காழி நன் நகரே.
உரை

நடமது - திருக்கூத்து, நடனமாகியமது எனக் கொண்டுரைத்தலுமாம். ஆனந்த நடனம் என்பதை நடமது எனப் பொருந்தும் மதுவை உண்டு அடையும் இன்பத்தை மது எனலாம். ஆனந்தத்தைக் குறிக்க அச்சொல்லை ஆள்வது பொருந்தும். நந்தி மத்தளம் வாசிக்க நடமாடினார் என்னும் வரலாறு இதில் குறிக்கப்பட்டது. ஒருகாலம் அறம் விரித்து உரைத்தவற்கு என்பதில் சநகாதியர்க்குக் கல்லாலின் கீழ் இருந்து உபதேசித்த உண்மை குறிக்கப்பட்டது. இடம் - பரப்பு. வேதப்பொருளின் விரிவைக் குறித்தது . இருந்தவர்-பெருந்தவத்தோர்.

8

கார்கொள் மேனியவ் வரக்கன் றன்கடுந் திறலினைக் கருதிஏர்கொள் மங்கையும் அஞ்ச எழில்மலை யெடுத்தவன் நெரியச்சீர்கொள் பாதத்தொர் விரலாற் செறுத்தவெஞ் சிவனுறை கோயில்தார்கொள் வண்டினஞ் சூழ்ந்த தண்வயற் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
கார் கொள் மேனி அவ்வரக்கன் தன் கடுந்திற வினைக்கருதிஏர் கொள் மங்கையும் அஞ்ச எழில் மலை எடுத்தவன் நெரியச்சீர் கொள் பாதத்தோர் விரலால் செறுத்த வெஞ்சிவன் உறைகோயில்தார் கொள் வண்டினம் சூழ்ந்த தண் வயல் காழி நன் நகரே.
உரை

ஏர் கொள் மங்கை- அழகுடைய உமாதேவியார். எழில் மலை - அழகிய கயிலை. உயர்ச்சியைக் குறித்த எழுச்சியுமாம். தார்-பூ.

9

மாலும் மாமல ரானும் மருவிநின் றிகலிய மனத்தாற்பாலுங் காண்பரி தாய பரஞ்சுடர் தன்பதி யாகுஞ்சேலும் வாளையுங் கயலுஞ் செறிந்துதன் கிளையொடு மேயஆலுஞ் சாலிநற் கதிர்கள் அணிவயற் காழிநன் னகரே
சொற்பிரிப்பு
மாலும் மாமலரானும் மருவி நின்று இகலிய மனத்தால்பாலும் காண்பரிதாய பரஞ்சுடர் தன் பதியாகும்சேலும் வாளையும் கயலும் செறிந்து தன்கிளையொடு மேயஆலும் சாலி நற்கதிர் களணி வயல் காழி நன் நகரே.
உரை

பாலும் காண்பு அரிதாய பரஞ்சுடர்- தனது பக்கத்தையும் காண்பதற்கு எளிதல்லாத மெய்யொளி. சேல்,வாளை, கயல் என்பன வெவ்வேறு வகை மீன்களாதலை அறியாமல் எழுதியுள்ள இடம்பல உள. ஆலும் சாலி - ஆடுகின்ற நெல்.

10

புத்தர் பொய்மிகு சமணர் பொலிகழல் அடியிணை காணுஞ்சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்தநற் செழுஞ்சுடர்க் கூராஞ்சித்த ரோடுநல் லமரர் செறிந்தநன் மாமலர் கொண்டுமுத்த னேயரு ளென்று முறைமைசெய் காழிநன் னகரே.
சொற்பிரிப்பு
புத்தர் பொய் மிகு சமணர் பொலி கழலடி இணை காணும்சித்த மற்றவர்க் கிலாமைத் திகழ்ந்த நற்செழுஞ்சுடர்க் கூராம்சித்தரோடு நல்லமரர் செறிந்த நன்மாமலர் கொண்டுமுத்தனே அருள் என்று முறைமை செய் காழி நன் நகரே.
உரை

பொய்மிகு' என்பது இடைநிலை விளக்கு. பொலிகழல் இணைகாணும் சித்தம் அற்றவர்க்கு- பொன்போல் ஒளி செய்யும் கழல் அணிந்த இரண்டு திருவடிகளையும் உணரும் உள்ளம் ஒழிந்த அப்புத்தர்க்கும் சமணர்க்கும். இல்லாமை- பெறுதல் இல்லாதபடி. திகழ்ந்த நல்செழுஞ்சுடர்க்கு - சிவனடியார்க்கு விளங்கிய நல்ல செழித்த ஒளியாகிய சிவபிரானுக்கு. சித்தரோடு அமரர் மலர் கொண்டு வழிபாடு செய்யும்போது 'முத்தனே அருள்' என்று முறையிட்டுக் கொண்டனர் என்றபடி. குறையிரந்து, முறைமை செய்தல். அரசர் முதலியவர்பால் குடிகள் முதலியார்க்கு உள்ளது.

11 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

ஊழி யானவை பலவும் ஒழித்திடுங் காலத்தி லோங்கு…---- ---- ---- -------- ---- ---- -------- ---- ---- ----இப்பதிகத்தில் 11-ம்செய்யுளின் பின் மூன்றடிகள் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
ஊழி ஆனவை பலவும் ஒழித்திடும் காலத்தில் ஓங்கு....................................................................................................................................................................