திருமுறை 2 · 2.094 · 11

திருவாழ்கொளிபுத்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
வாழ்கொளிபுத்தூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

சாகை ஆயிர முடையார் சாமமும் ஓதுவ துடையார்ஈகை யார்கடை நோக்கி யிரப்பதும் பலபல வுடையார்தோகை மாமயி லனைய துடியிடை பாகமும் உடையார்வாகை நுண்துளி வீசும் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
சாகை ஆயிரமுடையார் சாமமும் ஓதுவது உடையார்ஈகையார் கடைநோக்கி இரப்பதும் பலபல உடையார்தோகை மாமயிலனைய துடியிடை பாகமும் உடையார்வாகை நுண்டுழி வீசும் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

சாகை- வேதநூற்பிரிவு. சாமம்- சாமவேதம். ஈகை - வினைத்தொகை. வார்ந்த நஞ்சு அயின்று வானோர்க்கு அமுதம் ஈ வள்ளல் போற்றி (திருவாசகம் 73) இட்டும் வட்டியும் ஈ தொழில் பேணில் என்? (தி. 5 ப. 99 பா. 3) என்பவற்றில் உள்ள வினைத் தொகையை நோக்குக.

2

எண்ணில் ஈரமும் உடையார் எத்தனை யோரிவர் அறங்கள்கண்ணும் ஆயிரம் உடையார் கையுமொ ராயிரம் உடையார்பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமையொ ராயிரம் உடையார்வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
எண்ணில் ஈரமும் உடையார் எத்தனையோர் இவர் அறங்கள்கண்ணும் ஆயிரம் உடையார் கையுமொர் ஆயிரமுடையார்பெண்ணும் ஆயிரம் உடையார் பெருமையோர் ஆயிரம் உடையார்வண்ணம் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

எண் இல் ஈரம் - 'அளவுபடாததோர் அன்பு' (தி. 4 ப. 3 பா. 10). எண்ணில் - ஆராய்ந்தால் எனலுமாம். இவர் அறங்கள் எத்தனையோர் என்று கொள்க. அறங்கள் எத்தனை? எத்தனை (யுடை)யோர்? இவர் எத்தனையோர்? தனை - அளவு ஆயிரங்கண்ணர். ஆயிரங்கையர். பெண்ணும் ஆயிரம் உடையார் - சிவசக்தியை உடையது சிவம். சிவமும் சத்தியும் உருவம் முதலியவை இல்லாத உயர்வின. அவற்றில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை. ஆற்றலைப் பெண்மையாயும் ஆற்றலுடையதை ஆண்மையாயும் உருவகித்தமையால், உண்மையிற் பெண் என்றும் அஃது ஆயிரம் என்றும் கொண்டு ,நினைப்பென்னும் நெடுங்கிணற்றில் விழுதல் பெரும்பாவமாகும். சிவசக்தியும் சிவமும், அவ்வச்சத்திகட்கு இடமாய விந்துவும் முறையே பலவேறு வகையான விருத்திப்பட்டும் நிற்கும். சிவஞான மாபாடியத்தில் சூ.2 அதி. 2ஆல் அறியலாம்.

3

நொடியொ ராயிரம் உடையார் நுண்ணிய ராமவர் நோக்கும்வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்முடியும் ஆயிரம் உடையார் மொய்குழ லாளையும் உடையார்வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
நொடியோர் ஆயிரம் உடையார் நுண்ணியர் ஆமவர் நோக்கும்வடிவும் ஆயிரம் உடையார் வண்ணமும் ஆயிரம் உடையார்முடியும் ஆயிரம் உடையார் மொய் குழலாளையும் உடையார்வடிவும் ஆயிரம் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

நுண்ணியர் - 'நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே' திருவா. 1 அடி 76.

4

பஞ்சி நுண்துகி லன்ன பைங்கழற் சேவடி யுடையார்குஞ்சி மேகலை யுடையார் கொந்தணி வேல்வல னுடையார்அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரி யுடையார்வஞ்சி நுண்ணிடை யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
பஞ்சி நுண்துகில் அன்ன பைங்கழல் சேவடி உடையார்குஞ்சி மேகலை உடையார் கொந்தணி வேல்வலன் உடையார்அஞ்சும் வென்றவர்க் கணியார் ஆனையின் ஈருரியுடையார்வஞ்சி நுண்ணிடை உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

சேவடியின் மென்மை உணர்த்தப்பட்டது. குஞ்சி மேகலையுடையார்- சைவத் துறவியர் சடைமுடி மறைக்கும் கல்லாடையைக் குறித்தது போலும். குஞ்சிமேற் கலையுடையார் என்றிருந்ததோ? மகளிர் இடையில் அணிவது மேகலை. இங்குக் குஞ்சி (தலைமயிர்) மேல் உடையது மேகலை என்று குறிக்கின்றது. கொந்து - கோபம் (ஞானாமிர்தம்). அஞ்சும் வென்றவர் - பொறிவாயில் ஐந்தவித்தார். இடைக்கு உவமை வஞ்சிக்கொடி.

5

பரவு வாரையும் உடையார் பழித்திகழ் வாரையும் உடையார்விரவு வாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வ துடையார்அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம் பேர்மிக வுடையார்வரமும் ஆயிரம் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
பரவுவாரையும் உடையார் பழித்து இகழ்வாரையும் உடையார்விரவுவாரையும் உடையார் வெண்டலைப் பலிகொள்வதும் உடையார்அரவம் பூண்பதும் உடையார் ஆயிரம்பேர் மிகவுடையார்வரமும் ஆயிரமுடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

விரவுவார் - மெய்யன்புடைய அடியார். 'பரவுவார் இமையோர்கள் ... விரவுவார் மெய்யன்பின் அடியார்கள்' திருவா. 21-விரவுதல். 'கலந்து நின் அடியாரோடு அன்று வாளா களித்திருந்தேன்' (திருவா 485).'எனைக் கலந்து' (திருவா.84). கருணையினால் கலந்து ஆண்டு கொண்ட விடையவனே (திருவா 105)

6

தண்டுந் தாளமுங் குழலுந் தண்ணுமைக் கருவியும் புறவில்கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபல வுடையார்கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தைவண்டு வாழ்பதி யுடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக் கருவியும் புறவில்கொண்ட பூதமும் உடையார் கோலமும் பலபலவுடையார்கண்டு கோடலும் அரியார் காட்சியும் அரியதோர் கரந்தைவண்டு வாழ்பதி உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

தண்டு, தாளம், குழல், தண்ணுமைக்கருவி, பூதம், பல பல கோலம். காட்சியருமை. கண்டு கொள்ளலருமை ஆகியவற்றை இறைவன் உடையவன். தண்டு- வீணை. சிவிகை என்றும் பொருள் உண்டு. அஃது இங்குப் பொருந்தாது. தாளம் முதலிய இன்னிசைக் கருவிகளாகிய இனம்பற்றி வீணை என்பதே. 'வேயுறு தோளிபங்கன் ... மிக நல்ல வீணை தடவி' (தி. 2 ப. 85 பா. 1). கரந்தைப் பூவில் வண்டு வாழ்கின்ற வளமுடையபதி, 'செஞ்சடைசேர் கரந்தையான்' (தி. 1 ப. 61 பா. 3). அவர் காட்சி கொடுப்பதும் அரிது. அவரைக் கண்டு கொள்வதும் அரிது என்பதன் உண்மை. அத்துவிதமாய் நின்றுணர்வோர்க்கே விளங்கும்.

7

மான வாழ்க்கைய துடையார் மலைந்தவர் மதிற்பரி சறுத்தார்தான வாழ்க்கைய துடையார் தவத்தொடு நாம்புகழ்ந் தேத்தஞான வாழ்க்கைய துடையார் நள்ளிருள் மகளிர்நின் றேத்தவான வாழ்க்கைய துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
மான வாழ்க்கையது உடையார் மலைந்தவர் மதிற்பரிசு அறுத்தார்தான வாழ்க்கையது உடையார் தவத்தொடு நாம் புகழ்ந்து ஏத்தஞான வாழ்க்கையது உடையார் நள்ளிருள் மகளிர் நின்று ஏத்தவான வாழ்க்கையது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

மலைந்தவர் - மாறுபட்ட (பகை)வர். தவத்தொடு ஞானவாழ்க்கை உடையவர். புகழ்ந்து ஏத்தற்குரியது ஞான வாழ்வு ஒன்றே. மற்றைய வாழ்வெல்லாம் இகழ்ந்து ஒதுக்கற் பாலன. நள்ளிருள் மகளிர் நின்று ஏத்த வானவாழ்க்கையை துடையார் அல்லிய... குழலார்.....பரவ....வல்லார்என்பதொடு பொருத்திக் காண்க.

8

ஏழு மூன்றுமோர் தலைகள் உடையவன் இடர்பட அடர்த்துவேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல வுடையார்கேழல் வெண்பிறை யன்னகெழுமணி மிடறுநின் றிலங்கவாழி சாந்தமும் உடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
ஏழு மூன்றும் ஓர்தலைகள் உடையவன் இடர்பட அடர்த்துவேழ்வி செற்றதும் விரும்பி விருப்பவர் பலபல உடையார்கேழல் வெண்பிறை அன்னகெழுமணி மிடறு நின்று இலங்கவாழி சாந்தமும் உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

பத்துத் தலையுடையவன், வேழ்வி - வேள்வி. தக்கன் செய்த யாகம். எதுகை நோக்கி ளகரம் ழகரமாயிற்று. விரும்பிச் செற்றதும் உடையார் என்றும் அவர் பலபல விருப்புடையார் என்றும் இயைக்க. கேழல்- பன்றிக் கொம்பு. 'ஏனக்கொம்பு' (தி. 2 ப. 102 பா. 2). அன்ன - அவைபோல்வன. (ஆமை, நாகம், தலையோடு முதலியன). மிடறு - திருக்கழுத்து. சாந்தம் - சந்தனம். பொறுமையுமாம். அட்டபுட்பத்துள் ஒன்று.

9

வென்றி மாமல ரோனும் விரிகடல் துயின்றவன் தானும்என்றும் ஏத்துகை யுடையார் இமையவர் துதிசெய விரும்பிமுன்றில் மாமலர் வாசம் முதுமதி தவழ்பொழில் தில்லைமன்றி லாடல துடையார் வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
வென்றி மாமலரோனும் விரிகடல் துயின்றவன் தானும்என்றும் ஏத்துகை உடையார் இமையவர் துதிசெய விரும்பிமுன்றின் மாமலர் வாச முதுமதி தவழ் பொழில் தில்லைமன்றில் ஆடல் அது உடையார் வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

ஏத்துகை - துதிக்கை. வினைத்தொகையும் ஆம். பா.1. ஈகை. பார்க்க. துதி - (தோத்திரம்) புகழ்ச்சி மலர்வாசம் பொழில். மதி தவழ் பொழில். ஆடலது - திருக்கூத்தாடுதலை.

10

மண்டை கொண்டுழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழொளி நல்லதுண்ட வெண்பிறை சூடிச் சுண்ணவெண் பொடியணிந் தெங்கும்வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளி புத்தூ ருளாரே.
சொற்பிரிப்பு
மண்டை கொண்டு உழல் தேரர் மாசுடை மேனிவன் சமணர்குண்டர் பேசிய பேச்சுக் கொள்ளன்மின் திகழ் ஒளி நல்லதுண்ட வெண்பிறை சூடிச் சுண்ண வெண்பொடி அணிந்து எங்கும்வண்டு வாழ்பொழில் சூழ்ந்த வாழ்கொளிபுத்தூர் உளாரே.
உரை

பிறைக்கு அடை திகழொளியும் நன்மையும் துண்டமும், வெண்மையும், சுண்ணப் பொடி    என்பதிலும் சுண்ணமும் பொடியும் எனல் சிறந்தது. சுண்ணம் - திருப்பொற் சுண்ணம்.

11

நலங்கொள் பூம்பொழிற் காழி நற்றமிழ் ஞான சம்பந்தன்வலங்கொள் வெண்மழு வாளன் வாழ்கொளி புத்தூரு ளானைஇலங்கு வெண்பிறை யானை யேத்திய தமிழிவை வல்லார்நலங்கொள் சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
சொற்பிரிப்பு
நலம் கொள் பூம்பொழில் காழி நற்றமிழ் ஞானசம்பந்தன்வலம் கொள் வெண் மழுவாளன் வாழ்கொளிபுத்தூர் உளானைஇலங்கு வெண் பிறையானை ஏத்திய தமிழ் இவை வல்லார்நலம் கொள் சிந்தையராகி நன்னெறி எய்துவர் தாமே.
உரை

நலம் - குறைவிலாமங்கலம். நன்னெறி - சரியையாதியின் பயனாகிய ஞானம்.