திருமுறை 2 · 2.091 · 11

திருமறைக்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பொங்கு வெண்மணற் கானற் பொருகடல் திரைதவழ் முத்தம்கங்கு லாரிருள் போழுங் கலிமறைக் காடமர்ந் தார்தாம்திங்கள் சூடினரேனுந் திரிபுரம் எரித்தன ரேனும்எங்கும் எங்கள் பிரானார் புகழல திகழ்பழி யிலரே.
சொற்பிரிப்பு
பொங்கு வெண் மணல் கானல் பொருகடல் திரை தவழ் முத்தம்கங்குலார் இருள்போழும் கலி மறைக்காடு அமர்ந்தார்தாம்திங்கள் சூடினர் ஏனும் திரிபுரம் எரித்தனரேனும்எங்கும் எங்கள் பிரானார் புகழ் அலது இகழ்பழி இலரே.
உரை

போழும் - பிளக்கும். கலி - ஒலி. மறைக்கு அடை. காட்டிற்கு அன்று திங்களைச் சூடியதும் திரிபுரத்தை எரித்ததும் புகழே அன்றிப் பழியாகாது. இகழ்பழி - வினைத்தொகை. இகழாகிய பழி எனலும் பொருந்தும்.

2

கூனி ளம்பிறை சூடிக் கொடுவரித் தோலுடை யாடைஆனி லங்கிள ரைந்தும் ஆடுவர் பூண்பதும் அரவம்கான லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பத்தேன லங்கமழ் சோலைத் திருமறைக் காடமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
கூன் இளம்பிறை சூடிக் கொடு வரித்தோல் உடை ஆடைஆனில் அம்கிளர் ஐந்தும் ஆடுவர் பூண்பதும் அரவம்கானல் அம்கழி ஓதம் கரையோடு கதிர் மணி ததும்பத்தேன் அலம் கமழ் சோலைத் திருமறைக்காடு அமர்ந்தாரே.
உரை

ஆனில் அம் கிளர் ஐந்து (தி. 2 ப. 10 பா. 5) 'நாயன்மார் ஆனைந்தில் இரண்டுபேர் உரையார் நவையெனமற்று இரண்டொன்று நயந்துள்ளது. ஆன்முலைக்கண்' என்னும் ஞானபூசாவிதி 14ன் உரைக்கண். கோமயம் கோசலம் இரண்டும் ஆகா என்று இவையிற்றில்பேர் ஐந்து என்ற திருப்பாட்டுக்களில் அருளிச் செய்யாமல் அடக்கியருளிச் செய்தார்கள். நின்ற நெய் பால் தயிருமாக அஞ்சையும் ஒரு பாத்திரத்திலே கூட்டி உண்டாக்கி வைத்து என்று எழுதியிருத்தலை உணர்க. (தி. 2 ப.60 . பா. 3 . தி. 5 ப. 49 பா. 10; தி. 7 ப. 5 பா. 1).

3

நுண்ணி தாய்வெளி தாகி நூல்கிடந் திலங்கு பொன்மார்பில்பண்ணி யாழென முரலும் பணிமொழி1 யுமையொரு பாகன்தண்ணி தாயவெள் ளருவி சலசல நுரைமணி ததும்பக்கண்ணி தானுமொர் பிறையார் கலிமறைக் காடமர்ந் தாரே.பாடம் : 1பனிமொழி
சொற்பிரிப்பு
நுண்ணிதாய் வெளிதாகி நூல்கிடந்து இலங்கு பொன் மார்பில்பண்ணியாழ் என முரலும் பணிமொழி உமை ஒருபாகன்தண்ணிதாய வெள்ளருவி சலசல நுரை மணி ததும்பக்கண்ணி தானும் ஒர்பிறையார் கலி மறைக்காடு அமர்ந்தாரே.
உரை

மார்பில் அணியும் நூல் நுண்மையும் வெண்மையும் உடையதாயிருத்தல் வேண்டும். அதுகொண்டு முதுகின் அழுக்காற்றுவார்க்கு இது தெரியுமே? பண்+யாழ் = பண்ணியாழ். மாதர்பிறைக் கண்ணியான் (தி. 4 ப. 3 பா. 1).

4

ஏழை வெண்குரு கயலே யிளம்பெடை தனதெனக் கருதித்தாழை வெண்மடற் புல்குந் தண்மறைக் காடமர்ந் தார்தாம்மாழை யங்கய லொண்கண் மலைமகள் கணவன தடியின்நீழ லேசர ணாக நினைபவர் வினைநலி விலரே.
சொற்பிரிப்பு
ஏழை வெண்குருகயலே இளம் பெடை தனது எனக்கருதித்தாழை வெண் மடல் புல்குந் தண் மறைக்காடு அமர்ந்தார்தாம்மாழை அங்கயல் ஒண்கண் மலைமகள் கணவனது அடியின்நீழலே சரணாக நினைபவர் வினை நலிவிலரே.
உரை

வேதாரணியத்தில் ஏழை வெண்ணாரையானது தாழை மடலைத் தனது நற்றுணைப் பேடை என்று கருதித் தழுவுமென்க. (நாரை) இது தாழை இதுபேடை எனப் பகுத்தறியும் அறிவு இல்லாமையால்ஏழை நாரை என்றார். புல்குதல் - கூடுதல். மாழை - அழகு, இளமை, அடியின் நீழலே சரணா நினைபவர் என்றதால். சிவனடியார்கள் சிந்தனைக்குரியது சிவனடியே அன்றிப் பிறிதும் யாதும் இல்லை என்றுணரலாம். 'காதலால் ... அவை இரண்டுமே செய்கருத்து உடையார்' (திருநீலநக்கர் 5) என்புழி அருச்சித்தல் பணிதல் என்று தொழிலால் இரண்டாயினும் சிந்தனையால் ஒன்றே ஆதல் உணர்க.

5

அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்பரவ நாஞ்செய்த பாவம் பறைதர அருள்பவர் பதிதான்மரவ நீடுயர் சோலை மழலைவண் டியாழ்செயும் மறைக்காட்டிரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணமெ னலாமே.
சொற்பிரிப்பு
அரவம் வீக்கிய அரையும் அதிர்கழல் தழுவிய அடியும்பரவ நாம் செய்த பாவம் பறைதர அருள்பவர் பதிதான்மரவ நீடுயர் சோலை மழலை வண்டு யாழ்செயும் மறைக்காட்டுஇரவும் எல்லியும் பகலும் ஏத்துதல் குணம் எனலாமே.
உரை

வீக்கிய - கட்டிய. அரை - திருவரை (இடுப்பு). கழலடி. அரையையும் அடியையும் பரவினால் பாவம் அழியும் வண்ணம் அருள் செய்யும் பரசிவன். மரவம்-குங்குமமரம். இரவும் எல்லியும் பகலும் - 'இரவும் எல்லியும் ஏத்தித் தொழுமினே' (தி. 5 ப. 74 பா. 9), 'எல்லியும் பகலும்இசைவானவர் சொல்லிடீர்' (தி.5 ப.75 பா. 6), 'எல்லியும் பகலும் உள்ளே ஏகாந்தமாக ஏத்தும்' (தி. 4 ப. 41 பா. 3), 'எல்லியும் பகலும் பணியது செய்வேன்' (தி. 7 ப. 69 பா. 7), 'இரவும் எல்லியும் பகலும் ஏத்துவார், எம்மையும் ஆளுடையாரே' (தி.7 ப. 75 பா. 8) என்பவற்றை ஆராய்ந்தால் இரவுக்கும் பகலுக்கும் வேறாயது எல்லி என்று புலனாகும். ஆயின், அவ்விரண்டினும் வேறாய் நிற்பது அவ்விரண்டன் சந்தியேயன்றி வேறில்லை. இரவோடு பகலும், பகலோடு இரவும் சந்திக்கும் இரண்டிலும் எல் (ஒளி) இருப்பதால் 'எல்லி' என்ற பெயர் பெற்றது. எல்- ஒளி, சூரியன், பகல், எல்லியை இரவென்னும் பொருளில் வழங்குதல் பயின்றுளது. எல்லியம் பகல் - ஒளி வீசும் பகற்பொழுது. எல்லியம் பகல் - என்பது நல்ல பாடம்.

6

பல்லி லோடுகை யேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்அல்லல் வாழ்க்கைய ரேனும் அழகிய தறிவரெம் மடிகள்புல்லம் ஏறுவர் பூதம் புடைசெல வுழிதர்வர்க் கிடமாம்மல்கு வெண்திரை2 யோத மாமறைக் காடது தானே.பாடம் : 2தெண்டிரை
சொற்பிரிப்பு
பல்லில் ஓடு கையேந்திப் பாடியும் ஆடியும் பலிதேர்அல்லல் வாழ்க்கையர் ஏனும் அழகியது அறிவர் எம்மடிகள்புல்லம் ஏறுவர் பூதம் புடை செலவு உழிதர்வர்க்கு இடமாம்மல்கு வெண் திரை ஓத மா மறைக்காடு அதுதானே.
உரை

பல் இல் (லாத) ஓடு. பலிதேரும் வாழ்க்கை அல்லலை ஆக்குவதேனும் அடிகளுக்கு அழகியது. அதனையும் அவரே அறிவார். புல்லம் - (புல்லைமேயும்) எருது. 'புல்வாய்' என மானைக் குறித்தல் காண்க. உழிதர்வர் - உழிதருவர் (பா. 10). திரிவர். 'உழிதருகால்' (திருவாசகம்) திரிதருவர் - திரிதர்வர், திரிதவர். 'தேவர் என்றே இறுமாந்து என்னபாவம் திரிதவரே ' (மேற்படி).

7

நாகந் தான்கயி றாக நளிர்வரை யதற்குமத் தாகப்பாகந்தேவரொ டசுரர் படுகடல் அளறெழக் கடையவேக நஞ்செழ ஆங்கே வெருவொடும் இரிந்தெங்கும் ஓடஆகந் தன்னில்வைத் தமிர்தம் ஆக்குவித் தான்மறைக் காடே.
சொற்பிரிப்பு
நாகம் தான்கயிறாக நளிர் வரை அதற்கு மத்தாகப்பாகம் தேவரொடு அசுரர் படுகடலளறு எழக் கடையவேக நஞ்சுஎழ ஆங்கே வெருவொடு இரிந்து எங்கும் ஓடஆகம் தன்னில் வைத்த அமிர்தம் ஆக்குவித்தான் மறைக்காடே.
உரை

வரை - மந்தரமலை. தேவாசுரர் பாற்கடல் கடைந்த வரலாறு. வெருவ - வாய்பிதற்றல். ஆகம் - மார்பு, உடம்பு, உடம்பாயின், உடம்பினுள் என்றும், மார்பாயின் அதன்மேல் ஆதேயமான கழுத்தில் என்றும் கருதுக.

8

தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனதொரு பெருமையை ஓரான்மிக்கு மேற்சென்று மலையை யெடுத்தலும் மலைமகள் நடுங்கநக்குத் தன்திரு விரலால் ஊன்றலும் நடுநடுத் தரக்கன்பக்க வாயும்விட் டலறப் பரிந்தவன் பதிமறைக் காடே.
சொற்பிரிப்பு
தக்கன் வேள்வியைத் தகர்த்தோன் தனது ஒருபெருமையை ஓரான்மிக்கு மேல் சென்று மலையை எடுத்தலும் மலைமகள் நடுங்கநக்குத் தன் திருவிரலால் ஊன்றலும் நடுநடுத்தரக்கன்பக்க வாயும் விட்டலறப் பரிந்தவன் பதி மறைக்காடே.
உரை

தனது பெருமையை ஓரான் - தன்பெருமைதான் அறியாத் தன்மையன் (திருவாசகம்). ஓரான்- உணரான் என்பதன் மரூஉவாகும். நக்கு- சிரித்து. நடுநடுத்து - நடுநடுங்கி. பரிந்தவன்-இரங்கியவன்.

9

விண்ட மாமல ரோனும் விளங்கொளி யரவணை யானும்பண்டுங் காண்பரி தாய பரிசினன் அவனுறை பதிதான்கண்ட லங்கழி யோதங் கரையொடு கதிர்மணி ததும்பவண்ட லங்கமழ் சோலை மாமறைக் காடது தானே.
சொற்பிரிப்பு
விண்ட மா மலரோனும் விளங்கு ஒளி அரவணையானும்பண்டும் காண்பரிதாய பரிசினன் அவனுறை பதிதான்கண்டலம் கழிஓதம் கரையொடு கதிர்மணி ததும்பவண்டலம் கமழ் சோலை மா மறைக்காடு அதுதானே.
உரை

விண்ட - (பூத்த) இதழ்கள் விள்ளலுற்ற. அரவு - அணை- சர்ப்ப சயனம். பண்டும்  என்றதால் இன்றும் காணாமை எனப்படும். கண்டல் - தாழை. நீர்முள்ளியும் ஆம்.

10

பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயிற் கரவாக்கரிய மண்டைகை யேந்திக் கல்லென வுழிதருங் கழுக்கள்அரிய வாகவுண் டோதும் அவர்திறம் ஒழிந்துநம் மடிகள்பெரிய சீர்மறைக் காடே பேணுமின் மனமுடை யீரே.
சொற்பிரிப்பு
பெரிய வாகிய குடையும் பீலியும் அவைவெயில் கரவாக்கரிய மண்டை கையேந்திக் கல்லென உழிதரும் கழுக்கள்அரிய வாக உண்டோதும் அவர்திற மொழிந்து நம்மடிகள்பெரிய சீர்மறைக்காடே பேணுமின் மனமுடையீரே.
உரை

பெருங்குடையும் மயிற்பீலியும் உடைய அப்புறப்புறச் சமயத்தவர். மண்டை- உள்கலம்.உண்டு - உணவு கொண்டு. 'உண்டாம் இல்லையாம்' என்பன முதலியவை.

11

மையு லாம் பொழில் சூழ்ந்த மாமறைக் காடமர்ந் தாரைக்கையி னால் றொழு தெழுவான் காழியுள் ஞானசம் பந்தன்செய்த செந்தமிழ் பத்துஞ் சிந்தையுட் சேர்க்க வல்லார்போய்ப்பொய்யில் வானவ ரோடும் புகவலர் கொளவலர் புகழே
சொற்பிரிப்பு
மையுலாம் பொழில் சூழ்ந்த மாமறைக்காடு அமர்ந்தாரைக்கையினால் தொழுதெழுவான் காழியுள் ஞானசம்பந்தன்செய்த செந்தமிழ் பத்தும் சிந்தையுள் சேர்க்க வல்லார் போய்ப்பொய்யில் வானவரோடும் புகவலர் கொளவலர் புகழே.
உரை

மை - மேகம். பொய்யில்வானவர் - அழியாத வீட்டுலகினர்.