திருமுறை 2 · 2.090 · 11

திருநெல்வாயில் திருஅரத்துறை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
நெல்வாயில் அரத்துறை
நாடு
நடுநாடு

1

எந்தை ஈசனெம் பெருமான் ஏறமர் கடவுளென் றேத்திச்சிந்தை செய்பவர்க் கல்லால் சென்றுகை கூடுவ தன்றால்கந்த மாமல ருந்திக் கடும்புனல் நிவாமல்கு கரைமேல்அந்தண் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்று ஏத்திச்சிந்தை செய்பவர்க்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்கந்த மா மலர் உந்திக் கடும்புனல் நிவா மல்கு கரைமேல்அம்தண்சோலைநெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே.
உரை

இத்திருப்பதிகம் முத்துச் சிவிகையில் ஏறுவதன் முன்னர், திருவருட் சிறப்புணர்த்தப் பாடியருளியது. அப்பொழுது ஆங்கு இருந்த அன்பர் அனைவருக்கும் ஆண்டவன் திருவருளைப் பெறுவதற்கு வேண்டும் வழிபாட்டை வற்புறுத்துவதை ஒவ்வொரு பாடலிலும் உணரலாம். எட்டாவது திருப்பாட்டில் அருளைச் செயப்படுபொருளாக கொள்ளல் வேண்டும். ஏனைய ஒன்பது பாக்களிலும் அருள் எழுவாயாக நிற்றலறிக. ஈற்றுப்பாட்டில் அருளைச் சொன்ன பாடல் என்றதுணர்க. எந்தை, ஈசன் எம்பெருமான், ஏறமர்கடவுள் (தி.2 ப. 92 பா. 5) என்று எடுத்து வாக்கால் ஓதி மனத்தால் சிந்தித்து(காயத்தால் வழிபாடு) செய்பவர்க்கே அடிகள் திருவருள் கைகூடுவது, சென்று- மலவழி மலநடைகொள்ளாது நீக்கி அருள்வழியில் அருணடை கொண்டு. நிவா-ஆற்றின் பெயர். அரத்துறை-அறுத்துறை என்பதன் மரூஉ. அரன் துறை என்பது சிறவாது. றகரம் ரகரமாக ஒலித்தல் பல சொற்களிற் காணலாம்.

2

ஈர வார்சடை தன்மேல் இளம்பிறை யணிந்த எம்பெருமான்சீருஞ் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச்செல்வ தன்றால்வாரி மாமல ருந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்ஆருஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
ஈரவார் சடைதன் மேல் இளம்பிறை அணிந்த எம்பெருமான்சீரும் செல்வமும் ஏத்தாச் சிதடர்கள் தொழச் செல்வது அன்றால்வாரி மா மலர் உந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்ஆரும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

ஈரம் - குளிர்ச்சி. குளிருஞ்சடை (தி. 2 ப. 62 பா. 6). குளிர்ந்தார் சடையன் (தி. 1 ப. 134 பா. 3). சிதடர் - குருடர், பேதையர்.

3

பிணிக லந்தபுன் சடைமேற் பிறையணி சிவனெனப் பேணிப்பணிக லந்துசெய் யாத பாவிகள் தொழச்செல் வதன்றால்மணிக லந்துபொன் னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்அணிக லந்தநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
பிணி கலந்த புன்சடை மேற் பிறை அணி சிவன் எனப்பேணிப்பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வதன்றால்மணி கலந்து பொன் உந்தி வருபுனல் நிவா மல்கு கரைமேல்அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

பிணி - பிணிப்பு. சடையாதற்குப் பிணிப்பு இன்றியமையாதது. கலந்து - திரிகரணங்களும் ஒற்றுமையுற்று. பணி செய்யாத பாவிகள். மணிகளையும் பொன்னையும் உந்தி (த் தள்ளி)க் கொண்டு வரும் நீர்.

4

துன்ன ஆடையொன் றுடுத்துத் தூயவெண் ணீற்றி னராகிஉன்னி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றாற்பொன்னும் மாமணி யுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்அன்ன மாருநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
துன்ன ஆடை ஒன்று உடுத்துத் தூய வெண்ணீற்றினர் ஆகிஉன்னி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்பொன்னும் மா மணி உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரைமேல்அன்னம் ஆரு நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

துன்ன ஆடை- தைத்தலையுடைய ஆடை. அன்னம்-பறவை. திருஞானசம்பந்தர் காலத்தில் அன்னப்புள் இருந்த உண்மை இதனாலும் புலனாயிற்று.

5

வெருகு ரிஞ்சுவெங் காட்டி லாடிய விமலனென் றுள்கிஉருகி நைபவர்க் கல்லால் ஒன்றுங்கை கூடுவ தன்றால்முருகு ரிஞ்சுபூஞ் சோலை மொய்ம்மலர் சுமந்திழி நிவாவந்தருகு ரிஞ்சுநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கிஉருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழிநிவாவந்தருகு உரிஞ்சு நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

வெருகு -காட்டுப்பூனை. உரிஞ்சு- தேய்க்கின்ற. உருகி நைபவர் - உள்ளம் உருகி இதுகாறும் இறைவனை வழிபட மறந்தமைக்கு வருந்துவோர். இழி - இறங்குகின்ற.

6

உரவு நீர்சடைக் கரந்த வொருவனென் றுள்குளிர்ந் தேத்திப்பரவி நைபவர்க் கல்லாற் பரிந்துகை கூடுவ தன்றால்குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்அரவ மாருநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
உரவுநீர்ச் சடைக்கரந்த ஒருவன் என்று உள்குளிர்ந்து ஏத்திப்பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கைகூடுவது அன்றால்குரவ நீடுயர் சோலைக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்அரவம் ஆரு நெல்வாயிலரத்துறை அடிகள் தம் அருளே.
உரை

உரவுநீர்- பரந்த கங்கை. ஊரங்கணநீர் உரவுநீர் சேர்ந்தக்கால் பேரும் பிறிதாகித் தீர்த்தமாம் (நாலடி. 175) என்பதில் பரந்த கடல்நீரைக் குறித்தல் அறிக. பரவி- வணங்கி வாழ்த்தி. பரவுவார் பிணிகளைவாய் என்பதில் வணக்கமும், வாழ்த்துவதும் ... யானும் உன்னைப் பரவுவனே. (திருவாசகம் 20) என்பதில் வாழ்த்தும் உணர்த்துவது உணர்க.

7

நீல மாமணி மிடற்று நீறணி சிவனெனப் பேணுஞ்சீல மாந்தர்கட் கல்லாற் சென்றுகை கூடுவ தன்றால்கோல மாமல ருந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்ஆலுஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
நீல மாமணி மிடற்று நீறு அணி சிவன் எனப்பேணும்சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்கோல மா மலர் உந்திக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்ஆலும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

சீலமாந்தர்- ஞானியர். அவரே சிவனெனப் பேணும் உண்மை நிலை உணர்ந்தவர். திருநீலகண்டா! நீறணி முதல்வா! சிவபெருமானே! எனப் போற்றும் மனிதரும் ஆம்.

8

செழுந்தண் மால்வரை யெடுத்த செருவலி இராவணன் அலறஅழுந்த ஊன்றிய விரலான் போற்றியென் பார்க்கல்ல தருளான்கொழுங் கனிசுமந் துந்திக் குளிர்புனல் நிவாமல்கு கரைமேல்அழுந்துஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
செழுந்தண் மால்வரை எடுத்த செருவலி இராவணன் அலறஅழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான்கொழுங்கனி சுமந்து உந்திக் குளிர்புனல் நிவா மல்கு கரைமேல்அழுந்தும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

விரலான்- அண்மை விளி. அருளான் - அருள் செய்யான். அருள் அருளான் என்று இயைக்க. அடிகள் தம் அருளை. போற்றி என்பார்க்கு அல்லது அருளான்.

9

நுணங்கு நூலயன் மாலும் இருவரும் நோக்கரி யானைவணங்கி நைபவர்க் கல்லால் வந்துகை கூடுவ தன்றால்மணங்க மழ்ந்துபொன் னுந்தி வருபுனல் நிவாமல்கு கரைமேல்அணங்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
நுணங்கு நூல் அயன்மாலும் இருவரும் நோக்கு அரியானைவணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால்மணம் கமழ்ந்து பொன் உந்தி வருபுனல் நிவா மல்கு கரைமேல்அணங்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள்தம் அருளே.
உரை

நுணங்கும் நூல் - நூற்பொருளின் நுண்மை நூலின் மேல் ஏற்றிக் கூறப்பட்டது. நுணங்கிய கேள்வியர் (குறள் 419) என்பதற்கு. கேட்கப்படுகின்ற பொருளினது நுண்மை. கேள்வி மேலேற்றப்பட்டது என்ற பரிமேலழகர் உரையால் அறியலாம். அவன் வேதம் நுணங்கிய நூல். நோக்க அரியான்- நோக்கரியான். நான்கன்றொகையாக்கலும் ஆம். கமழ்ந்து -தோற்றி. கமழ்ந்து உந்தி வருபுனல் என்றியைத்துக் கொள்க. அணங்கும் - அழகு செய்யும்.

10

சாக்கி யப்படு வாருஞ் சமண்படு வார்களும் மற்றும்பாக்கி யப்பட கில்லாப் பாவிகள் தொழச்செல்வ தன்றால்பூக்க மழ்ந்துபொன் னுந்திப் பொருபுனல் நிவாமல்கு கரைமேல்ஆர்க்குஞ் சோலைநெல் வாயில் அரத்துறை யடிகள்தம் அருளே.
சொற்பிரிப்பு
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்          பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்பூக் கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரைமேல்ஆர்க்கும் சோலை நெல்வாயிலரத்துறை அடிகள் தம் மருளே.
உரை

சாக்கியப்படுவார் - சாக்கிய மதத்தில் விழுபவர். சமணப்படுவார்- சமண மதத்தில் விழுபவர். மற்றும் பாக்கியப் படகில்லாப் பாவிகள் - சாக்கியரும் சமணரும் அல்லாத வேறு மதங்களில் விழுந்து, சைவ சமயம் புகும் பாக்கியத்தை அடையமாட்டாத தீய வினையின் பயனை நுகர்பவர்கள். ஆர்க்கும்- ஒலிக்கும்.

11

கறையி னார்பொழில் சூழ்ந்த காழியுள் ஞான சம்பந்தன்அறையும் பூம்புனல் பரந்த அரத்துறை யடிகள்தம் அருளைமுறைமை யாற்சொன்ன பாடல் மொழியும் மாந்தர்தம் வினைபோய்ப்பறையும் ஐயுற வில்லைப் பாட்டிவை பத்தும் வல்லார்க்கே.
சொற்பிரிப்பு
கறையினார் பொழில் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்அறையும் பூம்புனல் பரந்த அரத்துறையடிகள் தம்அருளைமுறைமையால் சொன்ன பாடல் மொழியும் மாந்தர் வினை போய்ப்பறையும் ஐயுறவில்லைப் பாட்டு இவை பத்தும் வல்லர்க்கே.
உரை

பொழில் (சோலை) மரச்செறிவால் கதிரொளி புகப்பெறாது, இருண்டு கிடக்கும் நிலை பற்றிக் கறுப்பு நிறம் உரித்தாயிற்று. நிழல் என்பதற்கு ஒளி என்பது பொருளாதலின், பொழிலின் நிழல் காரொளியுடையதாதல் வேண்டும். அவ்வாறன்றி, உட்புக இயலாமல் தாவரச் செறிவு கறுத்த நிழலைச் செய்திருக்கின்றது என்றவாறு. மாந்தராகிய வல்லார்க்கு அவர் தம் வினைபோய்ப் பறையும். அதற்கு ஐயம் இல்லை. பறைதல் - அழிதல். வினை பறைவதில் வல்லார்க்கு ஐயம் இல்லை எனலுமாம். மொழிவதும் வன்மையுறுவதும் ஒன்றாகா. இத்திருப்பதிகத்துள், திருவருளைக்கூட வேண்டின் சிவநாமங்களை எடுத்தோதியும் அவன் சீரும் செல்வமும் சொல்லிப் போற்றியும், உருகிப் பரவி நைந்தும், பேணிப் பணிகள் செய்தும் வழிபடுவது இன்றியமையாதது என்பது உணர்த்தப்பட்டது.