திருமுறை 2 · 2.089 · 11

திருக்கொச்சைவயம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
சீர்காழி - 11-கொச்சைவயம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அறையும் பூம்புன லோடும் ஆடர வச்சடை தன்மேற்பிறையுஞ் சூடுவர் மார்பிற் பெண்ணொரு பாகம் அமர்ந்தார்மறையின் ஓல்லொலி யோவா மந்திர வேள்வி யறாதகுறைவில் அந்தணர் வாழுங் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
அறையும் பூம்புனலோடும் ஆடரவச் சடை தன்மேற்பிறையும் சூடுவர் மார்பில் பெண் ஒருபாகம் அமர்ந்தார்மறையின் ஒல்லொலி ஓவா மந்திர வேள்வியறாதகுறைவில் அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

அறையும்- - ஒலிக்கும். மறையின் ஒல்ஒலி - வேதங்களை ஓதுவதால் உண்டாகும் ஒல்லென்னும் ஒலி. குறைவு இல் அந்தணர் - வேதாத்தியயனத்திலும், வைதிகாசாரத்திலும், யாககிருத்தியங்களிலும் குறைபாடில்லாத அழகும் குளிர்ச்சியும் உடையவர். வேதாந்தத்தை அணவுவார் அந்தணர் என்றார் நச்சினார்க்கினியர்.

2

சுண்ணத்தர் தோலொடு நூல்சேர் மார்பினர் துன்னிய பூதக்கண்ணத்தர் வெங்கன லேந்திக் கங்குல்நின் றாடுவர் கேடில்எண்ணத்தர் கேள்விநல் வேள்வி யறாதவர் மாலெரி யோம்பும்வண்ணத்த அந்தணர் வாழுங் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
சுண்ணத்தர் தோலொடு நூல் சேர் மார்பினர் துன்னிய பூதக்கண்ணத்தர் வெங்கனல் ஏந்திக் கங்குல் நின்றாடுவர் கேடில்எண்ணத்தர் கேள்வி நல்வேள்வி அறாதவர் மால் எரி ஓம்பும்வண்ணத்த அந்தணர் வாழும் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

சுண்ணத்தர் (திருநீற்றுப்) பொடியர். பூதகண்ணத்தர் என்பதில், ணகரமெய் எதுகை நோக்கி விரிந்தது. பூதகணத்தையுடையவர் என்பது பொருள். கேள்வி - கருதி.

3

பாலை யன்னவெண் ணீறு பூசுவர் பல்சடை தாழமாலை யாடுவர் கீதம் மாமறை பாடுதல் மகிழ்வர்வேலை மால்கடல் ஓதம் வெண்திரை கரைமிசை விளங்குங்கோல மாமணி சிந்துங் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
பாலை அன்ன வெண்ணீறு பூசுவர் பல்சடை தாழமாலை ஆடுவர் கீதம் மாமறை பாடுதல் மகிழ்வர்வேலை மால்கடல் ஓதம் வெண் திரைகரை மிசை விளங்குங்கோல மாமணி சிந்தும் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

பாலை அன்னவெண் நீறு - 'பவளம் போல் மேனியிற் பால் வெண்ணீறு'. மாலை - இரவு. கீதம்... பாதல் மகிழ்வர் (தி. 4 ப. 77 பா.3; தி. 6 ப. 34 பா. 8; தி. 2 ப. 43 பா. 5). மாமணி - உத்தமரத்நம். அழகிய முத்தும் நீலமணியும் ஆம்.

4

கடிகொள் கூவிள மத்தங் கமழ்சடை நெடுமுடிக் கணிவர்பொடிகள் பூசிய மார்பிற் புனைவர்நன் மங்கையோர் பங்கர்கடிகொள் நீடொலி சங்கின் ஒலியொடு கலையொலி துதைந்துகொடிகள் ஓங்கிய மாடக் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
கடிகொள் கூவிளம் மத்தங் கமழ் சடைநெடு முடிக்கு அணிவர்    பொடிகள் பூசிய மார்பில் புனைவர் நன்மங்கை ஓர்பங்கர்கடிகொள் நீடொலி சங்கினொலி ஒடுகலை ஒலி துதைந்துகொடிகள் ஓங்கிய மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

மத்தம் கமழ்சடை மார்பில் புனைதல்- முதற்பாட்டின் குறிப்பிற் காண்க. கடி - மணம் (விவாகம்). கலை - வேதம் முதலிய கலை. துதைந்து - நெருங்கி.

5

ஆடன் மாமதி யுடையா ராயின பாரிடஞ் சூழவாடல் வெண்டலை யேந்தி வையகம் இடுபலிக் குழல்வார்ஆடல் மாமட மஞ்ஞை அணிதிகழ் பேடையொ டாடிக்கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
ஆடன் மாமதி உடையார் ஆயின பாரிடம் சூழவாடல் வெண் தலை ஏந்தி வையகம் இடுபலிக்கு உழல்வார்ஆடல் மாமட மஞ்ஞை அணி திகழ் பேடையோடு ஆடிக்கூடு தண்பொழில் சூழ்ந்த கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

பாரிடம்- பூதம். வையகம்- பூமியோர். இடவாகு பெயர். உழல்வார் - கழல்வார். தடுமாறுவார். இடுபலிக்கு வையகத்தில் திரிவார் எனலுமாம்.

6

மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேல்துண்ட வெண்பிறை யணிவர் தொல்வரை வில்லது வாகவிண்ட தானவர் அரணம் வெவ்வழல் எரிகொள விடைமேல்கொண்ட கோலம துடையார் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
மண்டு கங்கையும் அரவும் மல்கிய வளர்சடை தன்மேல்துண்ட வெண்பிறை அணிவர் தொல்வரை வில்லதுவாகவிண்ட தானவர் ஆணம் வெவ்வழல் எரிகொள விடைமேல்கொண்ட கோலம் அது உடையார் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

மண்டு - மிக்குச்செல்லும். கங்கையும் பாம்பும் மல்கிய சடை. வளர்சடை. துண்டப்பிறை- வெண்பிறை. தானவர் - அசுரர்.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
உரை

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.

8

அன்றவ் ஆல்நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க் கருளிப்பொன்றி னார்தலை யோட்டில் உண்பது பொருகடல் இலங்கைவென்றி வேந்தனை யொல்க வூன்றிய விரலினர் வான்தோய்குன்ற மன்னபொன் மாடக் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
அன்று அவ்ஆல் நிழல் அமர்ந்து அறவுரை நால்வர்க்கு அருளிப்பொன்றினார் தலை ஓட்டில் உண்பது பொரு கடல் இலங்கைவென்றி வேந்தனை ஒல்க ஊன்றிய விரலினர் வான் தோய்குன்றம் அன்ன பொன் மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

அன்று அ ஆல் நிழல் என்று பிரிக்க. பொன்றினார் தலை - இறந்த அயனார் தலை. வான்நோய் குன்றம் அன்னமாடம். பொன்மாடம். சீகாழியின் செல்வநெடுமாடம் சென்று சேணோங்கிய சிறப்புணர்த்திற்று.

9

சீர்கொள் மாமல ரானுஞ் செங்கண்மால் என்றிவ ரேத்தஏர்கொள் வெவ்வழ லாகியெங்கும் உறநிமிர்ந் தாரும்பார்கொள் விண்ணழல் கால்நீர்ப் பண்பினர் பால்மொழியோடுங்கூர்கொள் வேல்வலன் ஏந்திக் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
சீர்கொள் மாமலரானும் செங்கண் மால் என்று இவர் ஏத்தஏர்கொள் வெவ்வழல் ஆகி எங்கும் உற நிமிர்ந்தாரும்பார்கொள் விண்ணழல் கால் நீர்ப் பண்பினர் பால் மொழியோடும்கூர்கொள் வேல் வலன் ஏந்திக் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

பார்கொள்விண் அழல்கால் நீர்ப்பண்பினர் - நிலம். வான், தீ, வளி, புனல் என்னும் ஐம்பெரும் பூதத்தின் இயல்பை உடையவர். 'மண்ணிற்றிண்மை’, நீரில் இன்சுவை, தீயின் வெம்மை, காலின் ஊக்கம், வானிற்கலப்பு இவற்றினைத் தோற்றியவன் இறைவனாதலின், அப்பண்புகள் அவனுடைமையல்லவோ? எல்லாம் உன் உடைமையே (தாயுமானவர் பாடல்). பால்மொழி -உமாதேவியார்.

10

குண்டர் வண்துவ ராடை போர்த்ததொர் கொள்கையி னார்கள்மிண்டர் பேசிய பேச்சு மெய்யல மையணி கண்டன்பண்டை நம்வினை தீர்க்கும் பண்பின ரொண்கொடி யோடுங்கொண்டல் சேர்மணி மாடக் கொச்சை வயம்அமர்ந் தாரே.
சொற்பிரிப்பு
குண்டர் வண்துவராடை போர்த்ததொர் கொள்கையினார்கள்மிண்டர் பேசிய பேச்சு மெய் அல மையணி கண்டன்பண்டை நம்வினை தீர்க்கும் பண்பினர் ஒண் கொடியோடும்கொண்டல் சேர்மணி மாடக் கொச்சைவயம் அமர்ந்தாரே.
உரை

துவர்க்கு வண்மை அடையாதலின் அதனது துவர் நிறத்தின் மிகுதி புலப்படும். பார்ப்பவர் கண்ணுக்கும் கருத்திற்கும் முறையே தோற்றத்தாலும் நினைப்பாலும் வெறுப்பை விளைக்கும் வண்டுவர் ஆடையில் ஊட்டப்பட்டது என்க. பேசிய பேச்சு மெய்யல்லாதவை. பொய்ப்பேச்சு.

11

கொந்த ணிபொழில் சூழ்ந்த கொச்சை வயநகர் மேயஅந்த ணன்னடி யேத்தும் அருமறை ஞான சம்பந்தன்சந்த மார்ந்தழ காய தண்தமிழ் மாலைவல் லோர்போய்முந்தி வானவ ரோடும் புகவலர் முனைகெட வினையே.
சொற்பிரிப்பு
கொந்தணி பொழில் சூழ்ந்த கொச்சைவய நகர் மேயஅந்தணன் அடியேத்தும் அருமறை ஞானசம்பந்தன்சந்தம் ஆர்ந்து அழகாய தண்டமிழ் மாலை வல்லார் போய்முந்தி வானவரோடும் புகவலர் முனை கெட வினையே.
உரை

அந்தணன் - தோணியப்பர். 'அறவாழி அந்தணன்', 'அந்தணர் என்போர் அறவோர்' 'அந்தணர் நூல்' என்பவற்றால் திருவள்ளுவர் குறிக்கும் பொருளைக் காண்க. அருமறை ஞானசம்பந்தன்- மறையின் அருமையும், அம்மறையால் எய்தும் ஞானமும், அந்த ஞானத்தோடு தமக்குள்ள சம்பந்தமும் உணர்த்திப் பெயர்க்காரணம் புலப்படுத்தியவாறு. இத்திருப்பதிகம் சந்தம் நிறைந்தும் அழகுடையதாயும் உள்ள தமிழ் மாலை. அழகு - சொல்லழகு, பொருளழகு, தொடையழகு, திருவருட்பொலிவு வினைகெடமுனை (முன்பு) புகவல்லவர் என்க.