1
சொற்பிரிப்பு
உரை
துளி - விஷத்துளி. நிறம் - ஈண்டுக் கருமை. தெளி - தெளிவு, தேறல். ஊர் - எழுவாய் (திருமுல்லைவாயிலாகிய). இது பயனிலை. இதுவே அரனூர் எனலுமாம்.
துளி - விஷத்துளி. நிறம் - ஈண்டுக் கருமை. தெளி - தெளிவு, தேறல். ஊர் - எழுவாய் (திருமுல்லைவாயிலாகிய). இது பயனிலை. இதுவே அரனூர் எனலுமாம்.
பருவத்தில் வந்து பயன் உற்ற பண்பன் என்பது இரு வினையொப்பும் மலபரிபாகமும் சத்திநிபாதமும் நிகழப்பெற்று, குருவருளால் சிவஞானம் வளரலுற்று, பழமலம் பற்றறுத்து, சிற்றறிவு தீர்ந்து திருவடி அடையும் பருவத்தில் எழுந்தருளி வந்து, பயனாகப் பொருந்திய எண்குணத்தன். அரவிக்க- ஒலிக்க. தெருவம் -தெரு. முத்து + அலை + கொள் எனப் பிரிக்க. அலை - அலைதல். சங்கும் இப்பியும் முத்துக்களை ஈன்ற குறிப்புணர்த்தப்பட்டது.
வாராத நாடன் - மீண்டு வாராத பேரின்ப நாடுடையவன். வில்லின்உரு - வானவில்லைப் போலத் தோன்றி விரைந்து மறையும் உடம்பு. வாங்குசிலைபுரையும் உடல் நால்வர் நான்மணிமாலை. வில்லைப்போலக் கூனிக் கெடும் உடம்பெனலுமாம். நாளும் உருகில் ஆராத இன்பன் - நாள்தோறும் பக்தியால் உருகித் தற்போதம் அற்றுச் சிவபோதம் உற்றால், அமையாத பேரின்பமாக விளங்குபவன். 'உள்ளம் உருகில் உடனாவார்' (தி.2 ப.111 பா.3). கௌத்துவ மணி நீங்காத திருமால் மார்பின்கண் வீற்றிருக்கும் திருமகள், மலர்மகள் பிரியாது, நீங்காத காதலுடன் செல்வம் தோன்ற நீடுகின்ற திருமுல்லைவாயில் என்னும் பொருளும் உரியதாகும்.
ஒன்று.... ஏழும் உடனாய் - இருபத்தைந்தும் உடனாகி. தத்துவம் இருபத்தைந்தும் இவ்வாறு (1+1+1+4+5+6+7) தொகுத்து உரைக்கப்பட்டன. 1. மூலப்பகுதி (குணதத்துவ காரணம்), 2 . புத்தி 3. அகங்காரம், 4. மனம், 5. செவி, 6. மெய் (துவக்கு), 7. கண் (நோக்கு), 8. வாய் (நாக்கு), 9. மூக்கு 10.வாக்கு, 11. பாதம், 12. பானி, 13. பாயு, 14. உபத்தம், 15. சத்தம், 16. பரிசம், 17. உருவம், 18. இரதம், 19.கந்தம் 20. ஆகாயம், 21.வாயு, 22. தேயு, 23. அப்பு, 24. பிருதிவி என்னும் இருபத்து நான்கும் ஆன்மத்தத்துவங்களாகும். அவற்றுள், பிருதிவியை முதலாகக் கொண்டு எண்ணின், எண்ணப்பட்ட இருபத்து நான்கின் வேறாய் எண்ணுகின்ற கர்த்தா ஒன்று உண்டு. அதுவே ஆன்மா. அவ்வான்மாவே கடவுள் என மயங்கி, அம்மயக்கத்தை தெளிவெனக் கொண்டவர்க்கு பரமான்மா வேறொன்று உண்டு எனப் புலப்படாது. அவர், ஆன்மாக்களின் வேறாய், அவற்றிற்கு உயிராய், உடனாய் இருக்கின்ற மெய்ப்பொருள் வேறு. இருபத்து நான்கு தத்துவங்களையும் கொண்டு நிற்கும் ஆன்மாக்கள் வேறு; அவ்வுண்மையை அறியாதார் பசுவைப் பதியாக் கொள்ளும் மயக்கம் மயக்கமே; தெளிவன்று; அது பாதகம் என்று உண்மையுணர்த்துவது சமயக் குரவர்க்குக் கடனாதலின், இத்திருப்பாட்டின் முன்னீரடியிலும் தமது கடமையாற்றினார் நமது சமயத்தின் ஆசிரியர். புருட தத்துவம் இருபத்தைந்தாவது. அதையே முடிவான பொருள் எனக் கொள்ளும் சமயமும் உண்டு. சிவதருமோத்தருத்துள், 10வது சிவஞானயோகவியலின் 32ஆவது செய்யுளுரைக்கீழ் பௌராணிகர் மதத்தின்படி கூறியுள்ளதும் அதன் உரையில், ஐயஞ்சின் அப்புறத்தாலும் ஆரூரமர்ந்த அம்மானே (தி. 4 ப. 4 பா. 10) என்று மேற்கோள் காட்டியதும் உணர்க.
பூங்கொம்பு உமாதேவியார்க்கும் மின் இடுப்பிற்கும் கொள்ளலாம். குழகன் - இளைஞன், அழகன். கணவர்- கண்ணுடை மகளிர். பொன்ன- பொன்னினுடைய.
கண்ணி - உமாதேவியார். அழகு ஏறும் நீறன் - சுந்தரமாவது நீறு, கவினைத் தருவது நீறு, அழகு ஏறுதலால் கண்திகைப்பது நீறு. கொல்லையில் மானும், சோலையில் மயிலும் குயிலும் ஏறுதல் இயல்பு. மா- வண்டு. தேன்- மலர்கள். முல்லை மாவின் வளத்தில் ஏறியாடும் என்றால் மா - மரத்தையும், மாவின் வளம் முல்லையில் ஏறியாடும் என்றால் மா வண்டினையும் குறித்ததாகக் கொள்க.
நெஞ்சார நீடு நினைவாரை மூடுவினை- உள்ளத்தாமரையில் சிவபெருமான் திருவடியே அன்றி மற்று எதையும் எண்ணாமல், இடைவிடாது கருதிப் பணிகின்ற மெய்யடியாரைச் சூழும் இருவினையும் தேய அவரைப் பற்றாது முற்றும் தேய்ந்தொழிய. நின்ற நிமலன் - அவர் உள்ளத்தாமரையில் நிலைத்தருளிய பரசிவன். ஈயப்படும் பொருளின் உயர்வு விளங்கச் செஞ்சாலி நெல்லின் வளர்சோறு எனக் குறிக்கப்பட்டது.
உரை வந்த பொன்னின் உருவந்தமேனி உமை - கட்டளைக் கல்லில் மாற்று உரைக்கப்பெற்ற சிறந்த பொன்னிறம் பொருந்திய திருமேனியை உடைய உமாதேவியார். தேறல் - தெளிதேன்.
மேலோடி..... நூலன்- திருமார்பில் அணிந்த முப்புரி நூல் அவனது திருமேனியில் திருத்தோள்மேல் ஓடி நீடும் விளையாடுதல் மேவுதலை உணர்த்திற்று. விரிநூலன் என்பது சிவபிரான் என்னும் பொருட்டாய் நின்றதென்றும், அவன் விளையாடல் மேவியவன் என்றும் கொள்ளலும் பொருந்தும்.
பனை கை – பனைக்கை மும்மதவேழம் பரமன் நம் நம்பன். நம்பன் அடியே நினைவு அன்ன சிந்தை- சிவபெருமான் திருவடியே நினைக்கும் அத்தகைய சித்தத்தை. வகுளங்கள் - மகிழ மரங்கள். முகுளங்கள் - மொட்டுக்கள்.
அணி கொண்ட கோதையவள் என்பது இத்தலத்து அம்பிகையின் திருப்பெயர். தணி கொண்ட சிந்தையவர் - விருப்பு வெறுப்புக்களால் உண்டாகும் வெப்பம் தணிதலை உடைய உள்ளத்தவர் (தி.1 ப. 57 பா. 4), (தி.7 ப. 8 பா. 7), சித்தியார் 181 என்பவற்றில் குறிக்கப்பட்ட மனமே தணி கொண்டதாகும்.