திருமுறை 2 · 2.087 · 11

திருநறையூர்ச்சித்தீச்சரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
நறையூர்ச்சித்தீச்சரம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

நேரிய னாகுமல்ல னொருபாலு மேனி யரியான்மு னாய வொளியான்நீரியல் காலுமாகி நிறைவானு மாகி யுறுதீயு மாய நிமலன்1ஊரியல் பிச்சைபேணி யுலகங்க ளேத்த நல்குண்டு2 பண்டு சுடலைநாரியொர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்ப னவனே.பாடம் : 1தீயுமானவிமலன், தீயுமாயவொருவன். 2நலகண்டு
சொற்பிரிப்பு
நேரியன் ஆகும் அல்லன் ஒருபாலும் மேனி அரியான் முன் ஆய ஒளியான்நீர் இயல் காலும் ஆகி நிறைவானும் ஆகி உறு தீயும் ஆய நிமலன்ஊர் இயல் பிச்சை பேணி உலகங்கள் ஏத்த நல்குண்டு பண்டு சுடலைநாரி ஓர் பாகமாக நடமாட வல்ல நறையூரின் நம்பன் அவனே.
உரை

நேரியன் - நுண்ணியன், தோன்றுபவன் (சித்தி. 280). முன் ஆய ஒளியான் - அநாதியாகிய சிவப்பிரகாசன். திருமால் முன் சோதிப் பிழம்பு ஆனவன் எனலும் ஆம். அல்லன் -நேரியனல்லாத பரியன். நீரியல் ... நிமலன் - நீர், காற்று, விண், தீ ஆகிய விமலன். நல்குண்டு. அகரம்.

2

இடமயி லன்னசாயல் மடமங்கை தன்கை யெதிர்நாணி பூண வரையில்கடும்அயி லம்புகோத்து எயில்3 செற்றுகந்து அமரர்க் களித்த தலைவன்மடமயில் ஊர்திதாதை எனநின்று தொண்டர் மனநின்ற மைந்தன் மருவும்நடமயி லாலநீடு குயில்கூவு சோலை நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
இடம் மயில் அன்ன சாயல் மட மங்கை தன் கை எதிர் நாணி பூண வரையில்கடும் அயில் அம்பு கோத்து எயில் செற்று உகந்து அமரர்க்கு அளித்த தலைவன்மடமயில் ஊர்தி தாதை என நின்று தொண்டர் மன நின்ற மைந்தன் மருவும்நடம் மயில் ஆல நீடு குயில் கூவு சோலை நறையூரின் நம்பன் அவனே.
உரை

நாணி- வில்லின்நாண்.வரை- மேருவாகிய வில். கடும் அயில் அம்பு - கடிய    கூரிய கணை. மயிலூர்தி - முருகப் பெருமான் நின்று நின்றமைந்தன் எனக் காட்டுக.

3

சூடக முன்கைமங்கை யொருபாக மாக அருள்கார ணங்கள் வருவான்ஈடக மானநோக்கி யிடுபிச்சை கொண்டு படுபிச்ச னென்று பரவத்தோடக மாயொர்காதும் ஒருகா திலங்கு குழைதாழ வேழ வுரியன்நாடக மாகவாடி மடவார்கள் பாடும் நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
சூடக முன்கை மங்கை ஒருபாகமாக அருள் காரணங்கள் வருவான்ஈடக மான நோக்கி இடு பிச்சை கொண்டு படுபிச்சன் என்று பரவத்தோடக மாயொர் காதும் ஒருகாதிலங்கு குழைதாய வேழ உரியன்நாடகம் ஆக வாடி மடவார்கள் பாடு நறையூரின் நம்பன் அவனே.
உரை

சூடகம் -வளையல். ஈடு அகம் ஆன - பெரிய வீடுகள் ஆனவற்றை நோக்கி. தோடும் குழையும் இருவேறு திருச்செவியிலும் அணிந்தது முன்னும் குறிக்கப்பட்டது (தி. 2 ப. 84 பா.5)

4

சாயல்நன் மாதொர்பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்ஆயக மென்னுள்வந்த அருளாய செல்வன் இருளாய கண்டன் அவனித்தாயென நின்றுகந்த தலைவன் விரும்பு மலையின்கண் வந்து தொழுவார்நாயக னென்றிறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
சாயல்நன் மாதொர் பாகன் விதியாய சோதி கதியாக நின்ற கடவுள்ஆயகம் என்னுள் வந்த அருளாய செல்வன்இருளாய கண்டன் அவனித்தாய் என நின்று உகந்த தலைவன் விரும்பும் மலையின்கண் வந்து தொழுவார்நாயகன் என்று இறைஞ்சி மறையோர்கள் பேணும் நறையூரின் நம்பன் அவனே.
உரை

கதியாக நின்ற கடவுள்- சிவகதியாக நிற்கும் பரமேச்சுவரன். அவனித்தாய்- தாயவன்காண் உலகிற்கு (தி.6 ப.64 பா.4). மலையின்கண் வந்து தொழுவார் நாயகன்- மலையினிருந்துவந்து வழிபடுகின்ற சித்தர்க்கு ஈசுவரன் என்று மறையோர்கள் இறைஞ்சிப் பேணும் நறையூர் என்க. பா. 'சித்தர் பேண’.

5

நெதிபடு மெய்யெம்ஐயன்4 நிறைசோலை சுற்றி நிகழம் பலத்தின் நடுவேஅதிர்பட ஆடவல்ல அமரர்க் கொருத்தன் எமர்சுற்ற மாய இறைவன்மதிபடு சென்னிமன்னு சடைதாழ வந்து விடையேறி இல்பலி கொள்வான்நதிபட வுந்திவந்து வயல்வாளை பாயும் நறையூரின் நம்ப னவனே.பாடம் : 4மெய்யமைய
சொற்பிரிப்பு
நெதி படு மெய் எம் ஐயன் இறை சோலை சுற்றி நிகழ் அம்பலத்தின் நடுவேஅதிர் பட ஆடவல்ல அமரர்க்கு ஒருத்தன் எமர் சுற்றம் ஆய இறைவன்மதி படு சென்னி மன்னு சடை தாழ வந்து விடையேறி இல் பலி கொள்வான்நதி பட உந்தி வந்து வயல் வாளை பாயும் நறையூரின் நம்பன் அவனே.
உரை

நெதிபடுமெய்- நிதியாகப் படுகின்ற மெய்(ப்பொருள்) அமரர்க்கு ஒருத்தன்- தேவாதி தேவர்க்கெல்லாம் தலைவன். அமரரால் அமரப்படுவான் (தி. 7 பா. 384). எமர் சுற்றம் ஆய இறைவன் - எம்மவராகிய அடியார்களுக்கு உறவாய கடவுள். இல் - வீடுதோறும்.

6

கணிகையொர் சென்னிமன்னு மதுவன்னி கொன்றை மலர்துன்று செஞ்ச டையினான்பணிகையின் முன்னிலங்க வருவேட மன்னு பலவாகி நின்ற பரமன்அணுகிய வேதவோசை யகலங்கம் ஆறின் பொருளான ஆதி யருளான்நணுகிய தொண்டர்கூடி மலர்தூவி யேத்து நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
கணிகை ஒர்சென்னி மன்னும் மது வன்னி கொன்றை மலர் துன்று செஞ்சடையினான்பணிகையின் முன் இலங்க வரு வேடம் மன்னு பலவாகி நின்ற பரமன்அணுகிய வேத ஓசை அகல் அங்கம் ஆறின் பொருளான ஆதி அருளான்நணுகிய தொண்டர் கூடி மலர் தூவி ஏத்து நறையூரின் நம்பன் அவனே.
உரை

கணிகை - கங்கை. கணிகையொர் சென்னி - தியானிப்போர், பிரமரந்திரன் எனல் பொருந்தாது. சென்னியில் வன்னியும் கொன்றை மலரும் துன்றிய செஞ்சடை உடையவன், பணிகையின் முன் - வணங்குதற்கு முன்னரே பணிகின்ற கை என்ன வினைத்தொகையாகக் கொள்ளலும் பொருந்தும். அணுகிய வேத ஓசை - தன்னை அடைய வேண்டும் என்று தேடிக்கிட்டிய வேத முழக்கம். அகல் அங்கம் ஆறின் பொருள் - விரிந்த ஆறங்கங்களின் பொருள்.

7

ஒளிர்தரு கின்றமேனி யுருவெங்கு மங்க மவையார ஆட லரவம்மிளிர்தரு கையிலங்க அனலேந்தி யாடும் விகிர்தன் விடங்கொள் மிடறன்துளிதரு சோலையாலை தொழில்மேவ வேதம் எழிலார வென்றி யருளும்நளிர்மதி சேருமாடம் மடவார்க ளாரும் நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
ஒளிர் தருகின்ற மேனி உரு எங்கும் அங்கம் அவை ஆர ஆடல் அரவம்மிளிர் தரு கை இலங்க அனல் ஏந்தி ஆடும் விகிர்தன் விடங்கொள் மிடறன்துளி தரு சோலை ஆலை தொழில் மேவ வேதம் எழில் ஆர வென்றி அருளும்நளிர் மதி சேரு மாட மடவார்கள் ஆரு நறையூரின் நம்பன் அவனே.
உரை

மேனி - நிறம். துளிதரல் - தேன்துளித்தல். வேதம் எழில் ஆர - வேத முழக்கத்தின் எழுச்சி நிறைய. மதிசேரும் மாடம் - வண்கொண்டல் விட்டு மதிமுட்டுவன மாடம் (கம்பர்).

8

அடலெரு தேறுகந்த அதிருங் கழற்கள் எதிருஞ் சிலம்பொ டிசையக்கடலிடை நஞ்சமுண்டு கனிவுற்ற கண்டன் முனிவுற் றிலங்கை யரையன்உடலொடு தோளனைத்து முடிபத் திறுத்தும் இசைகேட் டிரங்கி யொருவாள்நடலைகள் தீர்த்துநல்கி நமையாள வல்ல நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
அடல் எருது ஏறு உகந்த அதிரும் கழல்கள் எதிரும் சிலம்பொடு இசையக்கடல் இடை நஞ்சம் உண்டு கனிவுற்ற கண்டன் முனிவு உற்று இலங்கை அரையன்உடல் ஒடு தோள் அனைத்து முடி பத்து இறுத்தும் இசை கேட்டு இரங்கி ஒரு வாள்நடலைகள் தீர்த்து நல்கி நமை ஆள வல்ல நறையூரின் நம்பன் அவனே.
உரை

கழல்கள் எனற்பாலது கழற்கள் எனத் திரிந்தது. அரையன் - அரசன், இராவணன்.  உடல் தோள் முடி அனைத்தும் இறுத்தும் கேட்டு. இரங்கி, தீர்த்து (வாள்) நல்கி என்க. நல்கி ஆளவல்ல நம்பன்.

9

குலமலர் மேவினானும் மிகுமாய னாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றிலபல எய்தொணாமை எரியா யுயர்ந்த பெரியா னிலங்கு சடையன்சிலபல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச வருமைத் திகழ்ந்த பொழிலின்நலமலர் சிந்தவாச மணநாறு வீதி நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
குலமலர் மேவினானும் மிகு மாயனாலும் எதிர்கூடி நேடி நினைவுற்றுஇலபல எய்த ஒணாமை எரியாய் உயர்ந்த பெரியான் இலங்கு சடையன்சிலபல தொண்டர் நின்று பெருமைக்கள் பேச அருமைத் திகழ்ந்த பொழிலின்நலமலர் சிந்த வாச மணம் நாறு வீதி நறையூரின் நம்பன் அவனே.
உரை

மேவினான்; பிரமன், மிகுமாயன்- மாயம் மிக்கவன். நேடி - தேடி நினைவுற்றில. பல- நினைப்பில் உற்றில்லாதன பலவாய். பெருமைகள் - பொருள் சேர்புகழ்கள். பெருமைக்கள் என்பதில் கவ்வொற்று இசைப்பொருட்டு விரித்தலாயிற்று. அருமை - அரிய மேகம். வரும்மை, அருமை எனலுமாம். பொழில் இனிய நல்ல மலர்களைச் சிந்த. வாசமணம். ஒருபொருளிரு சொல்.

10

துவருறு கின்றஆடை யுடல்போர்த் துழன்ற வவர் தாமும் அல்ல சமணும்கவருறு சிந்தையாள ருரைநீத்து கந்த பெருமான் பிறங்கு சடையன்தவமலி பத்தர்சித்தர் மறையாளர் பேண முறைமாதர் பாடி மருவும்நவமணி துன்றுகோயில் ஒளிபொன்செய் மாட நறையூரின் நம்ப னவனே.
சொற்பிரிப்பு
துவர் உறுகின்ற ஆடை உடல் போர்த்து உழன்ற அவர் தாமும் அல்ல சமணும்கவர் உறுசிந்தையாளர் உரை நீத்து உகந்த பெருமான் பிறங்கு சடையன்தவம் மலிபத்தர் சித்தர் மறையாளர் பேண முறை மாதர் பாடி மருவும்நவமணி துன்று கோயில் ஒளி பொன் செய் மாட நறையூரின் நம்பன் அவனே.
உரை

துவர் உறுகின்ற ஆடை - துவர் (காவி) ஊட்டிய துணி. அல்ல - (தேரர்) அல்லாத கவர் உறு சிந்தையாளர்- பல தலையாய் உற்ற மணம் உடையவர். பலதலை - ஐயம். தவம்மலி பத்தர் சித்தர் மறையாளர் பேண - தவத்தின் மிகுந்த அன்பரும் சித்துவல்லாரும் வேதியரும் விரும்பிவழிபட (பா. 4) இல் ‘மலையின் கண் வந்து தொழுவார்' என்றது இதிற்குறித்த சித்தரையே.

11

கானலு லாவியோதம் எதிர்மல்கு காழி மிகுபந்தன் முந்தி யுணரஞானமு லாவுசிந்தை யடிவைத் துகந்த நறையூரின் நம்ப னவனைஈனமி லாதவண்ணம் இசையா லுரைத்த தமிழ்மாலை பத்தும் நினைவார்வானநி லாவவல்லர் நிலமெங்கு நின்று வழிபாடு செய்யு மிகவே.
சொற்பிரிப்பு
கானல் உலாவி ஓதம் எதிர் மல்கு காழி மிகு பந்தன் முந்தி உணரஞானம் உலாவு சிந்தை அடிவைத்து உகந்த நறையூரின் நம்பன் அவனைஈனம் இலாத வண்ணம் இசையால் உரைத்த தமிழ் மாலை பத்து நினைவார்வான நிலாவ வல்லர் நிலம் எங்கும் நின்று வழிபாடு செய்யும் மிகவே.
உரை

ஞானம் உலாவு சிந்தை - திருப்பெருகு சிவஞானம் உலாவுகின்ற திருவுள்ளத்தில் சிந்திக்கும் வண்ணம்.