திருமுறை 2 · 2.086 · 11

திருநாரையூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
நாரையூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உரையினில் வந்தபாவம் உணர்நோய்க ளும்ம செயல்தீங்கு குற்ற முலகில்வரையினி லாமைசெய்த அவைதீரும் வண்ணம் மிகவேத்தி நித்தம் நினைமின்வரைசிலை யாகஅன்று மதில்மூன் றெரித்து வளர்கங்குல் நங்கை வெருவத்திரையொலி நஞ்சமுண்ட சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
உரையினில் வந்த பாவம் உணர் நோய்கள் உம்ம செயல் தீங்கு குற்றம் உலகில்வரையினில் ஆமைசெய்தஅவைதீரும்வண்ணம்மிகவேத்தி நித்த நினைமின்வரைசிலையாக அன்று மதில் மூன்று எரித்து வளர் கங்குல் நங்கை வெருவத்திரையொலி நஞ்சமுண்ட சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

மேருமலையை வில்லாகக் கொண்டு அன்று திரிபுரங்களாகிய மூன்று மதில்களையும் எரித்தவர்; வளரும் இருட்போதில் உமை நங்கை அச்சம் கொள அலை ஒலிக்கின்ற பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்டவர்; ஆகிய சிவன் மேவிய திருநாரையூரைத் தொழுதால், வாக்கால் வந்த பாவம், மனத்தால் நினைப்பதில் வரும் தீங்குகள், உடலால் செயலில் வரும் தீங்குகள் மற்றும் உலகில் அளவிலாமல் செய்த பிழைகளாவன அவைகள் அனைத்தும் தீரும். அவை தீரும் வண்ணம் சிவன் மேய செல்வத் திருநாரையூரை நித்தமும் நினைமின்.

2

ஊனடை கின்றகுற்ற முதலாகி யுற்ற பிணிநோ யொருங்கும் உயரும்வானடை கின்றவெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்கானிடை யாடிப்பூதப் படையான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல்தேனடை வண்டுபாடு சடையண்ணல் நண்ணு திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
ஊன் அடைகின்ற குற்றம் முதலாகி உற்ற பிணி நோய் ஒருங்கும் உயரும்வான் அடைகின்ற வெள்ளை மதிசூடு சென்னி விதியான வேத விகிர்தன்கான் இடையாடி பூதப்படை யான் இயங்கு விடையான் இலங்கு முடிமேல்தேன் அடைவண்டு பாடு சடையண்ணல் நண்ணு திருநாரையூர் கைதொழவே.
உரை

உயரும் வானில் இருக்கும் வெண்ணிறப் பிறைமதியைச் சூடும் சென்னியன்; வேதங்களில் விதிக்கப்பட்ட அறங்களின் பயன்களை அளிக்கும் விகிர்தன்; சுடுகாட்டில் ஆடுபவன்; பூதகணங்களாகிய படையை உடையவன்; சஞ்சரிக்கின்ற விடையை வாகனமாக உடையவன்; முடிமேல் விளங்குகின்ற மலர்களின்மேல் தேன்வண்டு பாடும் சடையர் ஆகிய அண்ணல் இருக்கும் திருநாரையூரைக் கைதொழுதால் ஊன் பொதிந்த உடலில் பிறப்பினால் வரும் குற்றங்கள், உற்ற நோயாகிய பிணிகள் ஒரு சேரக் கெடும்.

3

ஊரிடை நின்றுவாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப்பாரிடை மெள்ளவந்து பழியுற்ற வார்த்தை யொழிவுற்ற வண்ண மகலும்போரிடை யன்றுமூன்று மதிலெய்த ஞான்று புகழ்வானு ளோர்கள் புணரும்தேரிடை நின்றஎந்தை பெருமா னிருந்த திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
ஊர் இடைநின்று வாழும் உயிர்செற்ற காலன் துயருற்ற தீங்கு விரவிப்பார் இடை மெள்ள வந்து பழியுற்ற வார்த்தை ஒழிவுற்றவண்ணம் அகலும்போர் இடையன்று மூன்று மதில் எய்த ஞான்று புகழ் வான் உளோர்கள் புணரும்தேர் இடைநின்ற எந்தை பெருமான் இருந்த திருநாரையூர் கைதொழவே.
உரை

போரில் அன்று திரிபுரங்களை எரித்த அப்பொழுது புகழுடைய வானோர்கள் கூடித் தேராக நிற்க, என்னுடைய தந்தை பெருமானாகிய சிவன் இருக்கும் திருநாரையூரைக் கைதொழுதால் உலகில் நின்று வாழும் உயிர்களை அழிக்கும் இயமன் வருத்தத் துயருற்ற தீங்குகள், உலகினில் மெள்ள வந்த பழியுற்ற வார்த்தைகள் ஒழிந்த வண்ணம், (பாவம்) அகலும்.

4

தீயுற வாயஆக்கை யதுபற்றி வாழும் வினைசெற்ற வுற்ற உலகின்தாயுறு தன்மையாய தலைவன்றன் நாமம் நிலையாக நின்று மருவும்பேயுற வாயகானில் நடமாடி கோல விடமுண்ட கண்டன் முடிமேல்தேய்பிறை வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
தீ உறவாய ஆக்கையதுபற்றி வாழும் வினை செற்றவுற்ற உலகின்தாய் உறுதன்மையாய தலைவன் தன்நாமம் நிலையாக நின்று மருவும்பேய் உறவாய கானில் நடமாடி கோல விடம் உண்ட கண்டன் முடிமேல்தேய் பிறைவைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

பேய்களுடன் கூடிநின்று சுடுகாட்டினில் கூத்தாடுவோன்; விடத்தை அழகாக நிறுத்திய கண்டன்; சென்னிமேல் தேய்ந்த பிறையைச் சூடி உகந்த சிவனுடைய திருநாரையூரைக் கைதொழுதால், நம் உயிர் தீமைகளுக்கு உறவாகிய உடலைப்பற்றி வாழும் வினைகள் ஒழிந்து உலகில் தாய்போற் கருணையாளனாய தலைவனின் நிறைவினில் மருவி நிலையாக நிற்றலைப் பொருந்தும்.

5

வசையப ராதமாய வுவரோதம் நீங்கும் தவமாய தன்மை வரும்வான்மிசையவ ராதியாய திருமார்பி லங்கு விரிநூலர் விண்ணும் நிலனும்இசையவ ராசிசொல்ல இமையோர்க ளேத்தி யமையாத காத லொடுசேர்திசையவர் போற்றநின்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
வசை அபராதம் ஆய உவரோதம் நீங்கும்தவமாய தன்மை வரும் வான்மிசையவர் ஆதியாய திருமார்பு இலங்கு விரிநூலர் விண்ணும் நிலனும்இசையவர் ஆசிசொல்ல இமையோர்கள் ஏத்தி அமையாத காதலொடு சேர்திசையவர் போற்ற நின்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

மேலுலகத்தவராகிய வானவர்களுக்கும் தலைவர்; அழகிய மார்பில் விரிந்த பூணூலை உடையவர்; விண்ணுளோர்களும் மண்ணுளோர்களும் புகழ்ந்து வாழ்த்துவர்; இமையோர்கள் வணங்கும் பொருட்டு நிறையாத அன்புடன் வந்து சேர்வர்; இவ்வாறு எட்டுத் திசையிலும் வாழ்பவர் போற்ற நின்ற சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைதொழுதால், கடல் அளவாய பழிகள், குற்றங்களானவை நீங்கும்; தவமாய தன்மை வரும்.

6

உறைவள ரூன்நிலாய வுயிர்நிற்கும் வண்ணம் உணர்வாக்கும் உண்மை உலகில்குறைவுள வாகிநின்ற குறைதீர்க்கு நெஞ்சில் நிறைவாற்று நேசம் வளரும்மறைவளர் நாவன்மாவின் உரிபோர்த்த மெய்யன் அரவார்த்த அண்ணல் கழலேதிறைவளர் தேவர்தொண்டின் அருள்பேண நின்ற திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
உறை வளர் ஊன் நிலாய உயிர்நிற்கும் வண்ணம் உணர்வு ஆக்கும் உண்மை உலகில்குறைவு உள ஆகிநின்ற குறைதீர்க்கும் நெஞ்சில் நிறைவு ஆற்றும் நேசம் வளரும்மறை வளர் நாவன் மாவின் உரி போர்த்த மெய்யன் அரவு ஆர்த்த அண்ணல் கழலேதிறை வளர் தேவர் தொண்டின் அருள்பேண நின்ற திருநாரையூர் கைதொழவே.
உரை

வேதம் வளரும் திருநாவினன்; யானையின் உரியைப் போர்த்த திருமேனியன்; பாம்பினைக் கச்சாகக் கட்டிய தலைவன்; ஆகிய சிவபெருமானின் கழலணிந்த திருவடிகளுக்குத் தேவர்கள் திருத்தொண்டு செய்து, அதன் வழித் திருவருளை அடைய விரும்புவர்; அவ்வாறு தேவர்கள் பணி செய்து திருவருளை அடைய விரும்பும் திருநாரையூரைக் கைதொழுதால், உறைபோல வளர்கின்ற உடம்பில் நிலவுகின்ற உயிர் சிவனடியில் நிற்கும் வண்ணம் ஞானம் அளிக்கும். உலக வாழ்வில், மெய்யுணர்வு இன்றி, உழலும் குறையைத் தீர்க்கும்; உள்ளத்தில் நிறைவளிக்கும் சிவபத்தி வளரும்.

7

தனம்வரும் நன்மையாகுந் தகுதிக் குழந்து வருதிக் குழன்ற உடலின்இனம்வள ரைவர்செய்யும் வினையங்கள் செற்று நினைவொன்று சிந்தை பெருகும்முனமொரு காலம்மூன்று புரம்வெந்து மங்கச் சரமுன்றெரிந்த அவுணர்சினமொரு காலழித்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
தனம் வரும் நன்மை ஆகும் தகுதிக்கு உழந்து வரு திக்கு உழன்ற உடலின்இனம் வளர் ஐவர் செய்யும் வினயங்கள் செற்று நினைவு ஒன்று சிந்தை பெருகும்முனம் ஒருகாலம் மூன்று புரம் வெந்து மங்கச் சரம் மூன்று எரிந்த அவுணர்சினம் ஒருகால் அழித்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

முன்னொரு காலத்தில் திரிபுரங்கள் மூன்றும் நெருப்பில் எரிந்து ஒழிந்து மங்குமாறு அம்பினை எய்தவர்; அவுணர்களின் சினத்தை அழித்தவர் ஆகிய சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைதொழுதால், செல்வம் வரும்; நலங்கள் உளவாகும்; மேன்மை பெறுதற்கு வருந்திய திசையெல்லாம் அலைந்து திரிந்து, உழலுகின்ற உடம்பில் வளர்கின்ற ஐம்புலன்களாகிய கள்வர் செய்கின்ற வஞ்சகங்களை அழித்து சிவபெருமான் திருவடிக்கே பதித்த சிந்தை வளரும்.

8

உருவரை கின்றநாளில் உயிர்கொள்ளுங் கூற்றம் நனியஞ்சு மாத லுறநீர்மருமலர் தூவியென்றும் வழிபாடு செய்ம்மின் அழிபா டிலாத கடலின்அருவரை சூழிலங்கை யரையன்றன் வீரம் அழியத் தடக்கை முடிகள்திருவிரல் வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
உரு வரைகின்ற நாளில் உயிர் கொள்ளும் கூற்ற நனியஞ்சும் ஆதல் உற நீர்மருமலர் தூவி என்றும் வழிபாடு செய்ம்மின் அழிபாடு இலாத கடலின்அருவரை சூழ் இலங்கை அரையன்றன் வீரம் அழியத் தடக்கை முடிகள்திருவிரல் வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

அழிதலிலாத கடலின் நடுவில் மலைகளால் சூழப்பெற்றது இலங்கை. அதற்கு அரசனாகிய இராவணனுடைய வீரம் அழிய, அவனுடைய பெரியனவும் வலிமை உடையனவுமாகிய இருபது கைகள் பத்து முடிகள் நசுங்கத் திருவிரல் வைத்து உயர்ந்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைதொழுதால், உடம்பை விட்டு உயிர் நீங்குங்காலத்தில் உயிரைப் பற்ற வரும் கூற்றுவன் 'இவன் சிவனடியான்' என மிக அஞ்சுவான்; ஆதலின், அத்தகைய சிறப்பினை உற நீர் மணமுள்ள மலர்களைத் தூவி என்றும் சிவவழிபாடு செய்ம்மின்.

9

வேறுயர் வாழ்வுதன்மை வினைதுக்கம் மிக்க பகைதீர்க்கு மேய வுடலில்தேறிய சிந்தைவாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்சேறுயர் பூவின்மேய பெருமானு மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்சீறிய செம்மையாகுஞ் சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
வேறு உயர்வாழ்வு தன்மை வினை துக்கம் மிக்க பகை தீர்க்கும் மேய உடலில்தேறிய சிந்தை வாய்மை தெளிவிக்க நின்ற கரவைக் கரந்து திகழும்சேறு உயர்பூவின் மேய பெருமானும் மற்றைத் திருமாலும் நேட எரியாய்ச்சீறிய செம்மை ஆகும் சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

சேற்றில் உயரும் தாமரை மலரில் பொருந்தியிருக்கும் பிரமனும் திருமாலும் தேடநெருப்புப் பிழம்பாகக் கனன்ற செம்மையாகும் சிவபெருமான் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைதொழுதால், பிறப்பிறப்பிற்பட்டுச் சுழலும் உலக வாழ்க்கைக்கு வேறாய் நிலையான பேரின்ப வாழ்க்கை திகழும்; வினையும் அதனால் வரும் துக்கமும் மிக்க பகையும் தீர்க்கும். பொருந்திய உடலில் தெளிந்த சிந்தையும் மெய்யுணர்வும் தெளியச் செய்யும்; திருவருள் தனது மறைவை ஒழித்து விளங்கும்.

10

மிடைபடு துன்பம் இன்பம் உளதாக்கும் உள்ளம் வெளியாக்கு முன்னி யுணரும்படையொரு கையிலேந்திப் பலிகொள்ளும் வண்ணம் ஒலிபாடி யாடி பெருமைஉடையினை விட்டுளோரும் உடல்போர்த்து ளோரும் உரைமாயும் வண்ணம் அழியச்செடிபட வைத்துகந்த சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழவே.
சொற்பிரிப்பு
மிடை படு துன்பம் இன்பம் உளது ஆக்கும் உள்ளம் வெளி ஆக்கும் உன்னி உணரும்படை ஒரு கையில் ஏந்திப் பலி கொள்ளும் வண்ணம் ஒலி பாடி ஆடி பெருமைஉடையினை விட்டு உளோரும் உடல் போர்த்து உளோரும் உரை மாயும் வண்ணம் அழியச்செடி பட வைத்து உகந்த சிவன் மேய செல்வத் திருநாரையூர் கைதொழவே.
உரை

உடை உடுத்தாத சமணரும் உடையால் உடலைப் போர்த்திக் கொள்ளும் பவுத்தரும் பேச்சற்றுக் கொள்கை அழியக் குற்றப்படச் செய்த சிவன் மேவிய செல்வத் திருநாரையூரைக் கைதொழுதால் துன்பஞ் செறிந்த வாழ்க்கையை இன்பமுளதாக்கும்.  மருள் கொண்ட உள்ளம் ஒளியுடையதாக்கும். அதனால் மழுப்படையை ஒருகையில் ஏந்திக்கொண்டு பிச்சை ஏற்கும் வண்ணம் இசையுடன் பாடி ஆடுகின்ற சிவனின் பெருமையைத் தியானித்து உணர்மின்.

11

எரியொரு வண்ணமாய உருவானை எந்தை பெருமானை யுள்கி நினையார்திரிபுர மன்றுசெற்ற சிவன்மேய செல்வத் திருநாரை யூர்கை தொழுவான்பொருபுனல் சூழ்ந்தகாழி மறைஞான பந்தன் உரைமாலை பத்தும் மொழிவார்திருவளர் செம்மையாகி யருள்பேறு மிக்க துளதென்பர் செம்மை யினரே.
சொற்பிரிப்பு
எரி ஒரு வண்ணம் ஆய உருவானை எந்தை பெருமானை உள்கி நினையார்திரிபுரம் அன்று செற்ற சிவன் மேய செல்வத் திருநாரையூர் கை தொழுவான்பொரு புனல் சூழ்ந்த காழி மறை ஞான சம்பந்தன் உரை மாலை பத்தும் மொழிவார்திரு வளர் செம்மை ஆகி அருள் பேறு மிக்கது உளது என்பர் செம்மையினரே.
உரை

தீயைப் போன்ற செஞ்சுடர் வண்ணமாய நிறத்தை உடையவன்; எம்முடைய தந்தை; இப்பெருமகனைத் தியானித்து நினையாத முப்புராரிகளை அழித்த சிவன் மேவிய திருநாரையூரைக் கைதொழுவானும், மோதுகின்ற நீர்வளம் சூழ்ந்த காழியினனும் ஆகிய மறைஞானசம்பந்தன் உரைத்த மாலையாகிய இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தினையும் மொழிவார் திருவளர் செம்மையராகி திருவருட் பேறு உடையவராம்படிக்குச் செம்மையினராவர்.