திருமுறை 2 · 2.084 · 11

திருநனிபள்ளி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
பியந்தைக்காந்தாரம்
தலம்
நனிபள்ளி
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

காரைகள் கூகைமுல்லை களவாகை யீகை படர்தொடரி கள்ளி கவினிச்சூரைகள் பம்மிவிம்மு சுடுகாட மர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்தேரைக ளாரைசாய மிதிகொள்ள வாளை குதிகொள்ள வள்ளை துவளநாரைக ளாரல்வாரி வயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
காரைகள் கூகை முல்லை களவாகை ஈகை படர்தொடர் இகள்ளி கவினிச்சூரைகள் பம்மி விம்முசுடு காடமர்ந்த சிவன்மேய சோலை நகர்தான்தேரைகள் ஆரைசாய மிதிகொள்ள வாளை குதி கொள்ள வள்ளை துவளநாரைகள் ஆரல் வாரிவயன்மேதி வைகும் நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

காரைச் செடிகள், கூகைமுல்லைகள், கனவாகைகள், படர்கின்ற முட்கொடிகள், கள்ளிச்செடிகள் முதலிய தாவரங்கள் அழகு செய்ய, சூரைகள் செறிந்துள்ள சுடுகாட்டில் தங்கும் சிவன் பொருந்திய சோலைநகர்தான் எதுவெனில், தேரைகள் ஆரைப்புற்கள் சாயுமாறு மிதிக்க, வாளைமீன்கள் குதிக்க,வள்ளைக் கொடிகள் துவள, நாரைகள் ஆரல்மீன்களை வாரியுண்ண, வயல்களில் எருமைகள் தங்கும் நனிபள்ளியாம், நம்மவர்களே!

2

சடையிடை புக்கொடுங்கி யுளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணி அயலேஇடையிடை வைத்ததொக்கும் மலர்தொத்து மாலை யிறைவன் னிடங்கொள் பதிதான்மடையிடை வாளைபாய முகிழ்வாய் நெரிந்து மணநாறு நீலம் மலரும்நடையுடை யன்னம்வைகு புனலம்ப டப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
சடை இடைபுக்கு ஒடுங்கி உளதங்கு வெள்ளம் வளர்திங்கள் கண்ணியயலேஇடை இடை வைத்தது ஒக்குமலர் தொத்து மாலை இறைவன் இடங்கொள் பதிதான்மடை இடை வாளை பாய முகில்வாய் நெரிந்து மண நாறு நீலமலரும்நடை உடை அன்னம் வைகுபுனலம் படப்பை நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

சடையின் இடையே புகுந்து அங்கே ஒடுங்கித் தங்கும் கங்கைவெள்ளம் வளருகின்ற பிறைச்சந்திரனெனும் தலைமாலை அதற்குப் பக்கத்தில் வைத்தது போன்ற பல மலர்க்கொத்து மாலைகளை அணிந்த இறைவன் இடங்கொண்டிருக்கின்ற பதிதான் எதுவெனில், நீர்மடையிடையே வாளைமீன்கள் பாய நீலமலர் மொட்டு வாய் நெகிழ்ந்து மணம் பரக்க நாற மலருவதும், அழகாக நடக்கும் அன்னப் பறவைகள் தங்கியிருப்பதுமாகிய வயற் படப்பைகள் உடைய நனிபள்ளியாம்! நம்மவர்களே!

3

பெறுமலர் கொண்டுதொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடி லாத பெருமான்கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை யிடமாய காதல் நகர்தான்வெறுமலர் தொட்டுவிட்ட விசைபோன கொம்பின் விடுபோ தலர்ந்த விரைசூழ்நறுமல ரல்லிபுல்லி யொலிவண் டுறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்
சொற்பிரிப்பு
பெறுமலர் கொண்டு தொண்டர் வழிபாடு செய்யல் ஒழிபாடிலாத பெருமான்கறுமலர் கண்டமாக விடமுண்ட காளை இடமாய காதல் நகர்தான்வெறுமலர் தொட்டு விட்ட விசைபோன கொம்பின் விடுபோது அலர்ந்த விரைசூழ்நறுமலர் அல்லிபுல்லி ஒலிவண்டு உறங்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

நெருங்கிய மலர்கள் கொண்டு தொண்டர்கள் வழிபாடு செய்தலாகிய தொண்டினை ஒழியாது கொள்ளும் பெருமான்; கருங்குவளை மலரினைக் காட்டும் மிடறாக விடத்தினை உண்ட காளை ஆகிய சிவனின் காதல் நகர்தான் ஏதோவெனில், தேனை விரும்பிய வண்டுகள் முன்னரே பூத்து மணம் நீங்கிய வெறும் பூக்களைத் தொட்டுத் தங்கியதால் தாழ்ந்து (அவ்வண்டுகள் தேனின்மை கண்டு எழுந்துவிட்டதால்) ஓங்கி எழுந்து விசையுடன் சென்ற மலர்க்கொம்புகளில், அவ்வண்டுகள் தொடாது விடுபோதுகள் பூத்தமையால் மணம் சூழும். பரவும் அந்த மணத்தினால் பூத்த அம்மலர்களின் அகவிதழ்களைப் பொருந்தி ஒலிக்கின்ற வண்டுகள் தேனை உண்டு உறங்கும் நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

4

குளிர்தரு கங்கைதங்கு சடைமா டிலங்கு தலைமாலை யோடு குலவிஒளிர்தரு திங்கள்சூடி உமைபாக மாக வுடையா னுகந்த நகர்தான்குளிர்தரு கொம்மலோடு குயில்பாடல் கேட்ட பெடைவண்டு தானும் முரலநளிர்தரு சோலைமாலை நரைகுருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
குளிர் தரு கங்கைதங்கு சடைமாடு இலங்கு தலைமாலையோடு குலவிஒளிர் தரு திங்கள் சூடி உமைபாகமாக உடையான் உகந்த நகர்தான்குளிர்தரு கொம்மலோடு குயில் பாடல் கேட்ட பெடை வண்டுதானும் முரலநளிர் தரு சோலை மாலை நரை குருகு வைகு நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

குளிர்ந்த கங்கை தங்கும் சடையின் அருகில் விளங்கும் தலைமாலையோடு கலந்து ஒளிர்கின்ற பிறையை அணிந்து உமையைப் பாகமாக உடையவன் ஆகிய இறைவன் உகந்த நகர்தான் யாதெனில், குளிர்ச்சியைத்தரும் கொம்பின்மீது குயிலின் பாடலைக் கேட்ட வண்டு தானும் முரல, குளிர்ச்சி தருகின்ற சோலையில் மாலையில் வெளுத்த குருகு தங்கும் நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

5

தோடொரு காதனாகி யொருகா திலங்கு சுரிசங்கு நின்று புரளக்காடிட மாகநின்று கனலாடும் எந்தை யிடமாய காதல் நகர்தான்வீடுடன் எய்துவார்கள் விதியென்று சென்று வெறிநீர் தெளிப்ப விரலால்நாடுடனாடு செம்மை யொலிவெள்ள மாரு நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
தோடு ஒரு காதனாகி ஒருகாது இலங்கு சுரிசங்கு நின்று புரளக்காடு இடமாக நின்று கனலாடும் எந்தை இடம் ஆய காதல் நகர்தான்வீடு உடன் எய்துவார்கள் விதி என்று சென்று வெறி நீர் தெளிப்ப விரலால்நாடு உடனாடு செம்மை ஒலி வெள்ளம் ஆரு நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

ஒருகாதில் தோடும் மற்றொருகாதில் சுரிந்த சங்கு புரளும் காதினனாகி,   சுடுகாடு இடமாக நின்று நெருப்பில் ஆடும் எந்தையின் காதல் நகர்தான் யாதொவெனில், பேரின்ப வீட்டினை விரைந்து எய்தும் சுத்தாத்துவித சைவர்கள் நீராடும் விதிமுறைப்படி சென்று நீரினை விரலால் தெளிப்ப, நாட்டு மக்கள் திரளாக நீராடும் வெள்ளம் நிறையும் நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

6

மேகமொ டோடுதிங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்ஊகமொ டாடுமந்தி யுகளுஞ் சிலம்ப அகிலுந்தி யொண்பொன் இடறிநாகமொ டாரம்வாரு புனல்வந்த லைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
மேகமொடு ஓடுதிங்கள் மலரா அணிந்து மலையான் மடந்தை மணிபொன்ஆகம் ஓர் பாகமாக அனலாடும் எந்தை பெருமான் அமர்ந்த நகர்தான்ஊகமொடு ஆடுமந்தியுகளும் சிலம்ப அகில் உந்தி ஒண்பொன் இடறிநாகமொடு ஆரம் வாருபுனல் வந்தலைக்கு நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

விண்ணில் மேகத்துடன் செல்லும் பிறைமதியைச் சடையில் மலரினைப் போல அணிந்து இமயராசனின் திருமகளின் அழகிய பொன்னுடலைத் தன் ஒருபாகமாகக் கொண்டு அனலாடும் எந்தை பெருமான் விரும்பி அமர்ந்த நகர்தான் யாதோவெனில், ஆண்குரங்குடன் மந்தி மகிழ்ந்து குதிக்கும் மலையில் விளையும் அகிலினை உந்தி ஒளிரும் பொன்னினைத் தள்ளிக் கொண்டு நாகம், சந்தனம் ஆகிய மரங்களை வாரிக் கொணர்ந்து காவிரி வெள்ளம் வந்து பாயும் நனிபள்ளியாகும்! நம்மவர்களே!

7

தகைமலி தண்டுசூலம் அனலுமிழு நாகங் கொடுகொட்டி வீணை முரலவகைமலி வன்னிகொன்றை மதமத்தம் வைத்த பெருமான் உகந்த நகர்தான்புகைமலி கந்தமாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல் பெருகிநகைமலி முத்திலங்கு மணல் சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
தகை மலி தண்டு சூலம் அனல் உமிழும் நாகம் கொடுகொட்டி வீணை முரலவகை மலி வன்னி கொன்றை மதமத்த வைத்த பெருமான் உகந்த நகர்தான்புகை மலி கந்தம் மாலை புனைவார்கள் பூசல் பணிவார்கள் பாடல்பெருகிநகை மலி முத்து இலங்கு மணல்சூழ் கிடக்கை நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

பெருமைமிக்க தண்டாயுதம், திரிசூலம், நெருப்பைக் கக்கும் பாம்பு ஆகியவற்றை ஏந்தி, வீணை முதலிய வாத்தியங்கள் முழங்க கொடுகொட்டிக் கூத்தாடுவார்; வகை வகையாக நிறைந்த வன்னி, கொன்றை, ஊமத்தை மலர் ஆகியவற்றை அணிந்த பெருமானார்; அவர் விரும்பும் நகர்தான் யாதோவெனில், வாசனைப் புகை படிந்த மணமாலை புனைவார்களின் பூசல் ஓசையும், வழிபாடு செய்வார்களின் பாடலோசையும்பெருகி, ஒளிமிக்க முத்துக்கள் விளங்கும் மணல்சூழ் வெளிகளை உடைய திருநனிபள்ளியேயாகும்! நம்மவர்களே!

8

வலமிகு வாளன்வேலன் வளைவா ளெயிற்று மதியா அரக்கன் வலியோடுலமிகு தோள்கள்ஒல்க விரலால டர்த்த பெருமான் உகந்த நகர்தான்நிலமிகு கீழுமேலும் நிகராது மில்லை யெனநின்ற நீதி யதனைநலமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
வலம் மிகு வாளன் வேலன் வளை வாள் எயிற்று மதியா அரக்கன் வலியோடுஉலமிகு தோள்கள் ஒல்க விரலால் அடர்த்த பெருமான் உகந்த நகர்தான்நிலமிகு கீழும் மேலும் நிகர் ஆதும் இல்லை என நின்ற நீதி அதனைநலமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

வெற்றி மிக்க வாளினையும் வேலினையும் வளைந்த கூரிய பற்களையும் உடைய (இறைவன் இருக்கும் கயிலைமலையை) மதியாத அரக்கன் இராவணனின் ஆற்றலோடு கற்றூண் போன்ற திண்ணிய தோள்கள் வாடத் தன் திருவிரலால் வென்ற பெருமான் விரும்பும் நகர்தான் யாதோவெனில், கீழேலுலகம் மேலே ஏழுலகம் ஆகிய நிலங்களில் இதற்கு நிகரானது ஒன்றும் இல்லை என நின்ற நீதியாகிய இறைவனை அன்புடைய தொண்டர்கள் நாள்தோறும் திருவடி வழிபாடு செய்யும் திருநனிபள்ளியேயாகும்! நம்மவர்களே!

9

நிறவுரு வொன்றுதோன்றி யெரியொன்றி நின்ற தொருநீர்மை சீர்மை நினையார்அறவுரு வேதநாவன் அயனோடு மாலும் அறியாத அண்ணல் நகர்தான்புறவிரி முல்லைமௌவல் குளிர்பிண்டி புன்னை புனைகொன்றை துன்று பொதுளிநறவிரி போதுதாது புதுவாசம் நாறும் நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
நிறவுரு ஒன்று தோன்றி எரிஒன்றி நின்றதொரு நீர்மை சீர்மை நினையார்அறவுரு வேத நாவன் அயனோடு மாலுமறியாத அண்ணல் நகர்தான்புறவிரி முல்லை மௌவல் குளிர்பிண்டி புன்னை புனை கொன்றை துன்று பொதுளிநறவிரி போது தாது புதுவாச நாறு நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

செந்நிறப் பிழம்பு ஒன்று தோன்றி நெருப்பு என நின்ற அதன் இயல்பையும் பெருமையையும் நினையாதவராய், அறங்கூறும் வேத நாவனாகிய அயனும் மாலும் அறியவியலாத அண்ணலுடைய நகர்தான் யாதோவெனில், புறவில் விரிகின்ற முல்லை , மௌவல் குளிர்ந்த அசோகு, புன்னை, புனையப்பட்டது போன்ற கொன்றை ஆகிய மலர்கள் நெருங்கித் தழைத்து தேன்கமழும் போதுக்களின் வாசமும் மகரந்தப் பொடியின் வாசமும் நாறும் திருநனிபள்ளியாகும்! நம்மவர்களே!

10

அனமிகு செல்குசோறு கொணர்கென்று கையில் இடவுண்டு பட்ட அமணும்மனமிகு கஞ்சிமண்டை யதிலுண்டு தொண்டர் குணமின்றி நின்ற வடிவும்வினைமிகு வேதநான்கும் விரிவித்த நாவின் விடையா னுகந்த நகர்தான்நனமிகு தொண்டர்நாளும் அடிபரவல் செய்யும் நனிபள்ளி போலும் நமர்காள்.
சொற்பிரிப்பு
அனமிகு செல்கு சோறு கொணர் கென்று கையிலிட உண்டுபட்ட அமணும்மனமிகு கஞ்சி மண்டையதில் உண்டு தொண்டர் குணமின்றி நின்றவடிவும்வினைமிகு வேதநான்கு விரிவித்த நாவின் விடையான் உகந்த நகர்தான்நனமிகு தொண்டர் நாளும் அடிபரவல் செய்யு நனிபள்ளி போலும் நமர்காள்.
உரை

செல்க' 'சோறு கொணர்க' என்று கேட்டு அன்னத்தை மிகுதியாகக் கையில் இட உண்டு பழக்கப்பட்ட அமணர்களும் விருப்பத்துடன் கஞ்சியை மண்டை வட்டிலில் உண்டு அடியவர்களுக்குரிய குணம் இல்லாத வடிவினராகிய தேரரும் வினை மிகுவோராவர். வேதங்கள் நான்கினையும் விரித்த நாவினனாகிய எருது வாகனன் விரும்பும் நகர்தான் யாதோவெனில் திருநனிபள்ளியே! நம்மவர்களே!

11

கடல்வரை யோதம்மல்கு கழிகானல் பானல் கமழ்காழி யென்று கருதப்படுபொரு ளாறுநாலும் உளதாக வைத்த பதியான ஞான முனிவன்இடுபறை யொன்றஅத்தர் பியன்மே லிருந்தி னிசையா லுரைத்த பனுவல்நடுவிரு ளாடுமெந்தை நனிபள்ளி யுள்க வினைகெடுதல் ஆணை நமதே.
சொற்பிரிப்பு
கடல் வரைஓதமல்கு கழிகானல் பானல் கமழ்காழி என்று கருதப்படு பொருளாறு நாலுமுளதாக வைத்த பதியான ஞானமுனிவன்இடு பறையொன்ற அத்தர் பியன்மேல் இருந்து இனிசையால் உரைத்த பனுவல்நடு இருளாடும் எந்தை நனிபள்ளி உள்க வினைகெடுதல் ஆணை நமதே.
உரை

கடல்நீரின் ஓதம் மலிந்து கழியும் கானலும் பானலும் மணங்கமழ்கின்ற காழி என்று தியானிக்கப்படு பெயர்; ஆறங்கம் நால்வேதங்கள் என்றும் உளதாக வைத்த பதி; அதிலான ஞான முனிவன் (ஞானசம்பந்தன்) பறை ஒலிக்கத் தந்தையின் தோள்மீது அமர்ந்து இசையால் உரைத்த இத்திருப்பனுவல் வழியே நடுயாமத்தில் கூத்தாடும் என் தந்தையின் நனிபள்ளியைத் தியானிப்பவர் வினை கெடுக! இஃது நமது ஆணை!