திருமுறை 2 · 2.082 · 11

திருத்தேவூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
தேவூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

பண்ணி லாவிய மொழியுமை பங்கனெம் பெருமான்விண்ணில் வானவர் கோன்விம லன்விடை யூர்திதெண்ணி லாமதி தவழ்தரு மாளிகைத் தேவூர்அண்ணல் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
பண்ணில் ஆவிய மொழியுமை பங்கனெம் பெருமான்விண்ணில் வானவர் கோன் விமலன் விடை ஊர்திதெண்ணில் ஆமதி தவழ் தரு மாளிகைத் தேவூர்அண்ணல் சேவடி அடைந்தனம் அல்லலொன்று இலமே.
உரை

பண் நிலாவிய மொழி உமை'யைத் தன் பாகத்தில் கொண்டவன்; எங்களுடையபெருமான்; விண்ணில் வாழும் வானவர்களின் தலைவன்; மலம் அற்றவன்; எருதினை ஊர்பவன் ஆகிய தெளிந்த நிலவொளியுடைய சந்திரன் தவழும் உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருத்தேவூர் அண்ணலின் சேவடியை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

2

ஓதி மண்டலத் தோர்முழு துய்யவெற் பேறுசோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர்ஆதி சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
ஓதிமண்டலத்தோர் முழுதுய்ய வெற்பேறுசோதி வானவன் துதிசெய மகிழ்ந்தவன் தூநீர்த்தீதில் பங்கயந் தெரிவையர் முகமலர் தேவூர் ஆதிசேவடி அடைந்தனம் அல்லலொன்று இலமே..
உரை

மண்ணுலகத்தவர் தன்னுடைய புகழ்களை ஓதி முழுதும் உய்ய, உதயகிரியில் ஏறி சூரியன் துதி செய்ய மகிழ்ந்தவன், தூய்மையான நீரில் குற்றமற்ற தாமரை மலர்போல் மலர்ந்த முகமுடைய மகளிர் வாழும் திருத்தேவூர் முதல்வனுடைய சேவடியை அடைந்தனம். அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

3

மறைக ளான்மிக வழிபடு மாணியைக் கொல்வான்கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்தவெங் கடவுள்செறுவில் வாளைகள் சேலவை பொருவயல் தேவூர்அறவன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
மறைகளால் மிகவழிபடு மாணியைக் கொல்வான்கறுவு கொண்டவக் காலனைக் காய்ந்த வெங்கடவுள்செறுவில் வாளைகள் சேல் அவை பொரு வயல் தேவூர்அறவன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

வேதங்கள் ஓதி மிகவும் வழிபாடு செய்யும் பிரமசாரியாகிய மார்க்கண்டேயனைக் கொல்லும் பொருட்டுக் கோபித்து வந்த எமனைக் கொன்ற எம் கடவுள்; சேற்றில் வாளைமீன்கள், சேல்மீன்கள் ஆகியன பொரும் வயல்கள் கொண்ட திருத்தேவூரில் அறவன் சேவடியை அடைந்தனம். அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

4

முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறைமுறை திரியும்பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன்னடி யார்கள்சித்தன் மாளிகை செழுமதி தவழ்பொழில் தேவூர்அத்தன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
முத்தன் சில்பலிக் கூர்தொறும் முறை முறை திரியும்பித்தன் செஞ்சடைப் பிஞ்ஞகன் தன் அடியார்கள்சித்தன் மாளிகை செழுமதி தவழ் பொழில் தேவூர்அத்தன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

அநாதி முத்தன்; சிறு பிச்சைக்கென ஊர்தோறும் முறைமுறையாகத் திரியும் பித்தன்; சிவந்த சடைமுடியினன்; தன்னுடைய அடியார்களின் சித்தத்தில் வாழ்பவன்; செழுமையான மதி தவழும் உயரமுள்ள மாளிகைகள், பொழில்கள் கொண்ட தேவூர்த் தந்தை அடைந்தனம். அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

5

பாடு வாரிசை பல்பொருட் பயன்உகந் தன்பால்கூடு வார்துணைக் கொண்டதம் பற்றறப் பற்றித்தேடு வார்பொரு ளானவன் செறிபொழில் தேவூர்ஆடு வானடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
பாடுவார் இசை பல்பொருள் பயன் உகந்தன்பால்கூடுவார் துணைக் கொண்ட தம்பற்றறப் பற்றித்தேடுவார் பொருள் ஆனவன் செறிபொழில் தேவூர்ஆடுவான் அடியடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

அடியவர்களுக்குப் பேறாகவுள்ள பல்பொருள்களின் பயனைவிரும்பிப் பாடுவாருக்கு அவர்கள் விரும்பிய பொருளானவன்; தன்பால் கூடுமவருக்குக் கொண்ட துணையானவன்; பிற பற்றுக்கள் எல்லாம் அற்றொழியத் தன்னைப் பற்றித் தேடுவாருக்கு அவர்கள் தேடும் பொருளானவன்; செறிந்த பொழில்கள் உள்ளத் திருத்தேவூரில் கூத்தாடுவான் ஆகிய சிவபிரான், அவனுடைய அடியைப் புகலாக அடைந்தனம், அடைந்த காரணத்தால் துன்பம் ஏதும் இலோம்.

6

பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்மங்கை பங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்திங்கள் சூடிய தீநிறக் கடவுள்தென் தேவூர்அங்க ணன்றனை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
பொங்கு பூண்முலைப் புரிகுழல் வரிவளைப் பொருப்பின்மங்கைபங்கினன் கங்கையை வளர்சடை வைத்தான்திங்கள் சூடிய தீநிறக் கடவுள் தென் தேவூர்அங்கணன் தனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

ஆபரணம் அணிந்தவளும் சுழன்ற குழலை உடையவளும் வரிவளைக் கையினளும் ஆகிய மலையரையன் மங்கை பார்வதியைப் பங்கில் உடையவன்; கங்கையை நீண்ட சடையில்   வைத்தவன்; பிறையைச் சூடிய செந்தீ நிறக் கடவுள்; தென் திருத்தேவூரில் கருணையாளனாகிய சிவபிரானை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.

7

வன்பு யத்தவத் தானவர் புரங்களை யெரியத்தன்பு யத்துறத் தடவரை வளைத்தவன் தக்கதென்ற மிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்அன்பன் சேவடி யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
வன் புயத்தவத்தான் அவர் புரங்களை எரியத்தன் புயத்துறத்தட வரை வளைத்தவன் தக்கதென் தமிழ்க்கலை தெரிந்தவர் பொருந்திய தேவூர்அன்பன் சேவடி அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

வலிய புயங்களை உடைய அந்த அசுரர்களின் புரங்களை எரியத் தன் புய வலியால் பெரிய மேருமலையை வில்லாக வளைத்தவன்; பெருமையுடைய செந்தமிழ்களை ஆராய்ந்தவர் வாழும் திருத்தேவூரின் அன்பனின் சேவடியை அடைந்தனம்; அடைந்த காரணத்தால்      துன்பமொன்றும் இலோம்.

8

தருவு யர்ந்தவெற் பெடுத்தஅத் தசமுகன் நெரிந்துவெருவ வூன்றிய திருவிரல் நெகிழ்த்துவாள் பணித்தான்தெருவு தோறும்நல் தென்றல்வந் துலவிய தேவூர்அரவு சூடியை அடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
தரு உயர்ந்த வெற்பெடுத்த அத்தசமுகன் நெரிந்துவெருவ ஊன்றிய திருவிரல் நெகிழ்த்து வாள்பணித்தான்தெருவு தோறும் நல்தென்றல் வந்து உலவிய தேவூர்அரவு சூடியை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

கற்பக மரங்கள் உயர்ந்த கயிலை வெற்பினை எடுக்க முயன்ற அந்த பத்துத்தலை இராவணன் அஞ்சி நசுங்க விரலைச் சற்று ஊன்றி, பின் அருள் கொண்டு ஊன்றிய விரலை நெகிழ்த்து வாள், வாழ்நாள் ஆகியன பணித்தருளினான். தெருக்கள்தோறும் நல்ல தென்றல் வந்து உலவும் திருத்தேவூரில் பாம்பினைச் சூடிய சிவபிரானாகிய அவனை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.

9

முந்திக் கண்ணனும் நான்முக னும்மவர் காணாஎந்தை திண்டிறல் இருங்களி றுரித்தஎம் பெருமான்செந்தி னத்திசை யறுபத முரல்திருத் தேவூர்அந்தி வண்ணனை யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
முந்திக் கண்ணனும் நான்முகனும் அவர்காணாஎந்தை திண்டு இறலிரும் களிறுரித்த எம்பெருமான்செந்தினத் திசை அறுபதம் முரல் திருத்தேவூர்அந்தி வண்ணனை அடைந்தனம் அல்லல் ஒன்று இலமே.
உரை

கண்ணனும் நான்முகனும் அடிமுடிகளைக் காண முந்திக் கொண்டு சென்றும் காணாத எம்முடைய தந்தை, திண்மையும் திறலும் உடைய பெரிய களிற்றின் தோலை உரித்த எம் பெருமான்; செந்து என்னும் பண்ணின் இனத்து இசையைத் தேன் வண்டு முரலும் திருத்தேவூர் அந்திவண்ணனை அடைந்தனம்; அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.

10

பாறு புத்தருந் தவமணி சமணரும் பலநாள்கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டுதேறி மிக்கநஞ் செஞ்சடைக் கடவுள்தென் தேவூர்ஆறு சூடியை யடைந்தனம் அல்லலொன் றிலமே.
சொற்பிரிப்பு
பாறு புத்தரும் தவமணி சமணரும் பலநாள்கூறி வைத்ததோர் குறியினைப் பிழையெனக் கொண்டுதேறி மிக்க நம் செஞ்சடைக் கடவுள் தென் தேவூர்ஆறுசூடியை அடைந்தனம்அல்லல் ஒன்று இலமே.
உரை

அழிவாராகிய பவுத்தர்களும் தவ வேடம் பூண்ட சமணரும் பலநாட்களாகக் கூறிவந்த கொள்கையினைப் பிழையெனத் தெளிந்து தேறி நம்முடைய செஞ்சடைக் கடவுளான சிவபிரானின் தென்தேவூர் கங்கை சூடியை அடைந்தனம். அடைந்த காரணத்தால் துன்பமொன்றும் இலோம்.

11

அல்ல லின்றிவிண் ணாள்வர்கள் காழியர்க் கதிபன்நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம் பந்தன்எல்லை யில்புகழ் மல்கிய எழில்வளர் தேவூர்த்தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
சொற்பிரிப்பு
அல்லல் இன்றி விண்ணாள்வர்கள் காழியர்க்கு அதிபன்நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன்எல்லையில் புகழ்மல்கிய எழில்வளர் தேவூர்த்தொல்லை நம்பனைச் சொல்லிய பத்தும் வல்லாரே.
உரை

சீகாழி மக்களுக்குத் தலைவன்; நல்ல செந்தமிழ் வல்லவன் ஞானசம்பந்தன், அளவற்ற புகழ் நிறைந்த பழமையான அழகிய திருத்தேவூரில் நம் விருப்பத்திற்கு உரியவனாகிய சிவபிரானைப் பாடிய திருப்பாடல்கள் பத்தினையும் வல்லவர் அல்லல் இன்றி விண் ஆள்வர்.