திருமுறை 2 · 2.080 · 11

திருக்கடவூர்மயானம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
கடவூர் மயானம்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

வரிய மறையார் பிறையார் மலையோர் சிலையா வணக்கிஎரிய மதில்கள் எய்தார் எறியு முசலம் உடையார்கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்பெரிய விடைமேல் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கிஎரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார்,கரிய மிடறும் உடையார் - கடவூர் மயானம் அமர்ந்தார்;பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

சிரேட்டமான மறைகளையுடைய வேதியர்; பிறை சூடியவர்; மேருமலையை ஒரு வில்லாக வளைத்து சாம்பலாகுமாறு மும்மதில்களை எய்து எரித்தவர்; வீசும் உலக்கையை உடையவர்; நீலகண்டர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பித் தங்கினார்; பெரிய எருதின்மேல் வருவார்; அவர் எம்பெருமான் அடிகளாவார்.

2

மங்கைமணந்த மார்பர் மழுவாள் வலனொன்றேந்திக்கங்கைசடையிற் கரந்தார் கடவூர்மயானம் அமர்ந்தார்செங்கண்வெள்ளே றேறிச் செல்வஞ்செய்யா வருவார்அங்கையேறிய மறியார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன் ஒன்று ஏந்திக்கங்கை சடையில் கரந்தார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;செங்கண் வெள்ஏறு ஏறிச் செல்வம் செய்யா வருவார்,அம் கை ஏறிய மறியார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

உமையம்மையை இடப்பாகத்தில் உடையவர்; மழுவாயுதத்தை வலக்கையில் ஏந்தியவர்; கங்கையாற்றின் பெருவெள்ளத்தைச் சடையில் மறைத்தவர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பித் தங்கினார்; சிவந்த கண்ணையுடைய வெள்ளேறு ஏறி அடியார்களுக்குத் திருவருட்காட்சி அளித்து வருவார்; அங்கையில் தங்கிய மான்மறியை உடையவர்; அவர் எம் பெருமான்; அடிகளாவார்.

3

ஈடல்இடபம் இசைய ஏறிமழுவொன் றேந்திக்காடதிடமா வுடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்பாடலிசைகொள் கருவி படுதம்பலவும் பயில்வார்ஆடல்அரவம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
ஈடு அல் இடபம் இசைய ஏறி, மழு ஒன்று ஏந்தி,காடு அது இடமா உடையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்:பாடல் இசை கொள் கருவி படுதம்பலவும் பயில்வார்ஆடல் அரவம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

தனக்கு நிகர் வேறு இல்லாத இடபத்தின் மேலேறி, மழுவாயுதம் ஒன்றேந்தி, இடுகாட்டினைத் தன் இடமாகக் கொண்டவர்; திருக்கடவூர் மயானத்தில் விரும்பி அமர்ந்தார்; இசைகொளப் பாடுவார்; கருவிகள் இசைப்பார்; கூத்துப்பலவும் ஆடுவார்; ஆடுகின்ற அரவத்தை உடையவர்; அவர் எம் பெருமான்; அடிகளாவர்.

4

இறைநின்றிலங்கு வளையாள் இளையாளொருபா லுடையார்மறைநின்றிலங்கு மொழியார் மலையார்மனத்தின் மிசையார்கறைநின்றிலங்கு பொழில்சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்பிறைநின்றிலங்கு சடையார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
இறை நின்று இலங்கு வளையாள் இளையாள் ஒருபால் உடையார்,மறை நின்று இலங்கு மொழியார், மலையார், மனத்தின்மிசையார் -கறை நின்று இலங்கு பொழில் சூழ் கடவூர்மயானம் அமர்ந்தார்;பிறை நின்று இலங்கு சடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

முன்கையில் வளையல்கள் உடையவளாகிய இளமங்கை உமையை ஒருபாகமாக உடையவர்; வேத மொழிக்குப் பொருளாயிருப்பவர்; மயக்கம் இல்லாத அடியவருடைய மனத்தில் இருப்பவர்; கரிய நிறம் தங்கிய பொழில்கள் சூழ்ந்த திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தவர்; பிறை தங்கி விளங்கும் சடையை உடையவர். அவர் எம் பெருமான் அடிகளே.

5

வெள்ளையெருத்தின் மிசையார் விரிதோடொருகா திலங்கத்துள்ளும்இளமான் மறியார் சுடர்பொற்சடைகள் துளங்கக்கள்ளநகுவெண் டலையார் கடவூர்மயானம் அமர்ந்தார்பிள்ளைமதியம் உடையார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
வெள்ளை எருத்தின்மிசையார், விரி தோடு ஒரு காது இலங்கத்துள்ளும் இளமான்மறியார், சுடர் பொன்சடைகள் துலங்கக்கள்ளம் நகுவெண்தலையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;பிள்ளைமதியம் உடையார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

வெள்ளை எருதின் மேல் வருவார். ஒளிவிரியும் தோடு ஒரு காதில் விளங்க, துள்ளுகின்ற மான்மறியினை ஒருகரத்தில் உடையவர்; பொன்னொளி சுடர்விடுகின்ற சடைகள் அசைய அதன்மீது நகைசெய்யும் வெள்ளைத் தலையை உடையவர்; திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தவர்; இளம் பிறையை உடையவர்; அவர் எம் பெருமான் அடிகளே.

6

பொன்றாதுதிரு மணங்கொள் புனைபூங்கொன்றை புனைந்தார்ஒன்றாவெள்ளே றுயர்த்த துடையாரதுவே யூர்வார்கன்றாவினஞ்சூழ் புறவிற் கடவூர் மயானம் அமர்ந்தார்பின்தாழ் சடையார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
பொன்தாது உதிரும் மணம் கொள் புனை பூங்கொன்றை புனைந்தார்,ஒன்றா வெள்ஏறு உயர்த்தது உடையார், அதுவே ஊர்வார் -கன்று ஆஇனம் சூழ் புறவின் கடவூர்மயானம் அமர்ந்தார்;பின் தாழ்சடையார், ஒருவர் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

பொன்னிறமான தாதுக்கள் உதிரும் மணம் வீசி அழகு செய்யும் கொன்றை மலரைப் புனைந்தார்; சிறப்புடைய வெள்ளை ஏற்றுக் கொடியினை உயர்த்தார்; அந்த வெள்ளையேற்றினையே வாகனமாக ஊர்வார்; கன்றுகளை உடைய ஆவினஞ் சூழ்ந்த முல்லைக் காடுடைய திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; பின்னால் தாழ்ந்த சடையை உடைய ஒப்பற்றவர்; அவர் எம்பெருமான் அடிகளே.

7

பாசமான களைவார் பரிவார்க்கமுதம் அனையார்ஆசைதீரக் கொடுப்பார் அலங்கல்விடைமேல் வருவார்காசைமலர்போல் மிடற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்பேசவருவார் ஒருவர் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
பாசம்ஆன களைவார், பரிவார்க்கு அமுதம் அனையார்,ஆசை தீரக் கொடுப்பார், அலங்கல் விடைமேல் வருவார்,காசைமலர் போல் மிடற்றார்- கடவூர்மயானம் அமர்ந்தார்;பேச வருவார் ஒருவர் அவர்எம்பெருமான் அடிகளே.
உரை

மும்மலங்களையும் அவற்றின் காரியங்களையும் போக்குவார்; அன்பர்களுக்கு அமுதம் போன்று இன்பமளிப்பார்; மூவாசைகளும் தீரச் செய்வார்; மாலையணிந்த விடைமீது வருவார்; காயாம்பூ மலர் போன்ற நிறத்த கண்டத்தர்; திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; அனைவரும் புகழுமாறு வருவார்; அவர் எம்பெருமான் அடிகளே.

8

செற்றஅரக்கன் அலறத் திகழ்சேவடிமெல் விரலாற்கற்குன்றடர்த்த பெருமான் கடவூர் மயானம் அமர்ந்தார்மற்றொன்றிணையில் வலிய மாசில்வெள்ளி மலைபோல்பெற்றொன்றேறி வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி மெல்விரலால்கல்குன்று அடர்த்த பெருமான் - கடவூர்மயானம் அமர்ந்தார்;மற்று ஒன்று இணை இல் வலிய மாசு இல் வெள்ளிமலை போல்பெற்றொன்று ஏறி வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

சினங்கொண்டு மாறுபட்ட அரக்கன் இராவணன் அலற தன் திருவடியின் திருவிரலால் அவனைக் கயிலை மலையின்கீழ் நசுக்கிய பெருமான், திருக்கடவூர் மயானத்தில் அமர்ந்தார்; பிறிதொன்று இணையில்லாத, வலிய குற்றம் இல்லாத வெள்ளிமலை போலும் எருது ஒன்று ஏறி வருவார்; அவர் எம் பெருமான் அடிகளே.

9

வருமாகரியின் உரியார் வளர்புன்சடையார் விடையார்கருமான்உரிதோல் உடையார் கடவூர்மயானம் அமர்ந்தார்திருமாலொடுநான் முகனுந் தேர்ந்துங்காணமுன் ணொண்ணாப்பெருமானெனவும் வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
வரு மா கரியின் உரியார், வளர்புன்சடையார், விடையார்,கருமான் உரி-தோல் உடையார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;திருமாலொடு நான்முகனும் தேர்ந்தும் காண முன் ஒண்ணாப்பெருமான் எனவும் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

தன்மேல் அடர்த்து வந்த பெரிய களிற்றின் உரியை உடையவர்; நீண்ட பொன்னிறமான சடையுடையார்; மானின் உரியாகிய தோல் உடையார்; திருமாலோடு நான்முகனும் ஆராய்ந்தும் காண ஒண்ணாத பெருமான் என வருவார். அவர் எம் பெருமான்அடிகளே.

10

தூயவிடைமேல் வருவார் துன்னாருடைய மதில்கள்காயவேவச் செற்றார் கடவூர்மயானம் அமர்ந்தார்தீயகருமஞ் சொல்லுஞ் சிறுபுன்தேரர் அமணர்பேய்பேயென்ன வருவார் அவரெம் பெருமான் அடிகளே.
சொற்பிரிப்பு
தூய விடைமேல் வருவார், துன்னார் உடைய மதில்கள்காய வேவச் செற்றார் - கடவூர்மயானம் அமர்ந்தார்;தீய கருமம் சொல்லும் சிறு புன் தேரர்,அமணர், "பேய், பேய்!" என்ன வருவார் அவர் எம்பெருமான் அடிகளே.
உரை

புனிதமான விடையின்மேல் வருவார். பகைவருடைய மதில்கள் எரிந்து வேகச் சினந்தார்; திருக்கடவூர் மயானம் அமர்ந்தார். தீய செயல்களைச் செய்யச் சொல்லும்சிறுமையுடைய புல்லியதோர் அமணர் இறையைப் பேய் பேய் என்ன வருவார் அவர் எம் பெருமான் அடிகளே.

11

மரவம் பொழில்சூழ் கடவூர் மன்னுமயானம் அமர்ந்தஅரவம் அசைத்த பெருமான் அகலம்அறிய லாகப்பரவுமுறையே பயிலும் பந்தன்செஞ்சொல் மாலைஇரவும்பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.
சொற்பிரிப்பு
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த,அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல்ஆகப்பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல்மாலை,இரவும் பகலும் பரவி நினைவார் வினைகள் இலரே.
உரை

குங்கும மரங்கள் கொண்ட பொழில்கள் சூழ்ந்த கடவூரில் மன்னிய மயானத்தில் அமர்ந்த, அரவத்தைக் கச்சாக அரையில் கட்டிய பெருமானின் வியாபகத்தை அறிய இயலாது, அறிந்தபடி பாடிய சம்பந்தனின் செஞ்சொல் மாலையை இரவும் பகலும் நினைவார் வினைகள் இலராவர்.