திருமுறை 2 · 2.078 · 11

திருவிளநகர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
விளநகர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

ஒளிரிளம்பிறை சென்னிமேல் உடையர் கோவணஆடையர்குளிரிளம்மழை தவழ்பொழிற் கோலநீர்மல்கு காவிரிநளிரிளம்புனல் வார்துறை நங்கைகங்கையை நண்ணினார்மிளிரிளம்பொறி அரவினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண ஆடையர்,குளிர் இள(ம்)மழை தவழ் பொழில் கோல நீர் மல்கு காவிரிநளிர் இளம்புனல் வார் துறை - நங்கைகங்கையை நண்ணினார்,மிளிர் இளம் பொறிஅரவினார், மேயது - விளநகர் அதே.
உரை

பிரகாசிக்கின்ற சிரசின்மீது பிறையை உடையவர்; கோவணம் ஆகிய ஆடையை உடுத்தவர்; குளிர்ந்த நீர்த்துறைகளை உடைய கங்கை நங்கையைப் பொருந்தினவர்; மெல்லிய புள்ளிகளோடு புரள்கின்ற பாம்பினை அணிகலனாக உடையவராகிய இறைவர் மேவியது, கூதன்மாரி தவழும் பொழில்களூடே வளமான, பெருக்கெடுத்து தெளிந்த நீரோடும் காவிரி பாயும் திருவிளநகரதே.

2

அக்கரவ்வணி கலனென அதனொடார்த்ததொர் ஆமைபூண்டுக்கவர்சுடு நீறணிந் தொளிமல்குபுனற் காவிரிப்புக்கவர்துயர் கெடுகெனப் பூசுவெண்பொடி மேவியமிக்கவர்வழி பாடுசெய் விளநகரவர் மேயதே.
சொற்பிரிப்பு
அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு ஆர்த்தது ஓர் ஆமை பூண்டு,உக்கவர் சுடுநீறு அணிந்து, ஒளி மல்கு புனல் காவிரிப்புக்கவர்-"துயர் கெடுக!" எனப் பூசு வெண்பொடி மேவியமிக்கவர் வழிபாடு செய் - விளநகர், அவர் மேயதே.
உரை

எலும்புடன் பாம்பினையும் அவற்றுடன் ஆமையோட்டினையும் சேர்த்து அணிகலன் என அணிந்து, இறந்தவரைச் சுட்ட சாம்பலைப் பூசி, இறையவர் மேவியது. தெளிந்த நீர்ப்பரப்புள்ள காவிரியாற்றில் புக்கு நீராடி 'துயர் கெடுக' எனத் திருநீற்றுப் பொடி தரித்த மேலோர் வழிபாடு செய்யும் திருவிளநகரதே.

3

வாளிசேரடங் கார்மதில் தொலையநூறிய வம்பின்வேய்த்தோளிபாகம் அமர்ந்தவர் உயர்ந்ததொல்கடல் நஞ்சுடன்காளமல்கிய கண்டத்தர் கதிர்விரிசுடர் முடியினர்மீளியேறுகந் தேறினார் மேயது விளநகரதே.
சொற்பிரிப்பு
வாளிசேர் அடங்கார் மதில் தொலைய நூறிய வம்பின் வேய்த்தோளி பாகம் அமர்ந்தவர், உயர்ந்த தொல்கடல்நஞ்சு உண்டகாளம் மல்கிய கண்டத்தர், கதிர் விரி சுடர் முடியினர்,மீளி ஏறு உகந்து ஏறினார், மேயது - விளநகர் அதே.
உரை

படைக்கலன் வலிமை கொண்ட பகைவர்களின் மதில் சாம்பலாகுமாறு அழித்தவர்; புதிய மூங்கிலை ஒக்கும் தோளினை உடைய இறைவியைத் தன் மேனியின் ஒரு பாகமாக விரும்பியவர்; உயர்ந்ததும் பழமையானதுமாகிய பாற்கடலில் தோன்றிய நஞ்சுடன் கருமை நிறம் கொண்ட கண்டத்தர்; செவ்வொளி வீசுகின்ற முடியினை உடையவர்; வலிமை வாய்ந்த எருதினை வாகனமாக ஊர்ந்தவர் ஆகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.

4

கால்விளங்கெரி கழலினார் கையிலங்கிய வேலினார்நூல்விளங்கிய மார்பினார் நோயிலார்பிறப் பும்மிலார்மால்விளங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்மேல்விளங்குவெண் பிறையினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
கால் விளங்கு எரி கழலினார், கை இலங்கிய வேலினார்,நூல் விளங்கிய மார்பினார், நோய் இலார், பிறப்பும்(ம்) இலார்,மால் விளங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்மேல் விளங்கு வெண்பிறையினார், மேயது - விளநகர் அதே.
உரை

காலில் வீரம் தோன்றும் கழலினை உடையவர்; கையில் விளங்கும் வேலினை உடையவர்; முப்புரி நூல் விளங்கும் மார்பினர்; நோகும் துன்பமிலார்; பிறப்பும் இலார். கருமை நிறம் மல்கிய, குற்றமற்ற நீலமணி போலும் மிடறினை உடையவர்; சென்னியின்மேல் விளங்கும் பிறையினை உடையவர்; ஆகிய இறையவர் மேவியது திருவிளநகரதே.

5

பன்னினார்மறை பாடினார் பாயசீர்ப்பழங் காவிரித்துன்னு தண்டுறை முன்னினார் தூநெறிபெறு வாரெனச்சென்னி திங்களைப் பொங்கராக் கங்கையோடுடன் சேர்த்தினார்மின்னுபொன்புரி நூலினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
பன்னினார்,மறை, - பாடினார்; பாய சீர்ப் பழங்காவிரித்துன்னு தண்துறை முன்னினார், தூ நெறி பெறுவார் என;சென்னி திங்களைப் பொங்கு அரா, கங்கையோடு, உடன்சேர்த்தினார்;மின்னு பொன் புரிநூலினார்; மேயது - விளநகர் அதே.
உரை

வேதங்களை ஆராய்ந்தவர்; வேதங்களைப் பாடினவர்; பரவிய பழமையான புண்ணிய காவிரி நதியின் குளிர்ந்த துறையை அணுகினவர்; தூநெறியாகிய சிவகதியைப் பெறுவாரென்று அறிவித்து, சென்னியில் பிறையையும் சினமிக்க அரவினையும் கங்கையுடன் சேர்த்தினவர்; பொன்னால் ஆன பூணூல் அணிந்தவராகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.

6

தேவரும்மம ரர்களுந் திசைகள்மேலுள தெய்வமும்யாவரும்மறி யாததோர் அமைதியால்தழ லுருவினார்மூவரும்மிவ ரென்னவும் முதல்வரும்மிவ ரென்னவும்மேவரும்பொரு ளாயினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
தேவரும்(ம்),அமரர்களும், திசைகள்மேல் உள தெய்வமும்,யாவரும்(ம்) அறியாதது ஓர் அமைதியால்-தழல் உருவினார்;மூவரும்(ம்) இவர் என்னவும், முதல்வரும்(ம்) இவர் என்னவும்,மேவ(அ)ரும் பொருள் ஆயினார்; மேயது - விளநகர் அதே.
உரை

தேவர்கள், அமரர்கள், திசைகளின் மேலுள்ள பிற தெய்வங்கள் யாவராலும் அறிய ஒண்ணாதவர். அவர்கள் அறிய முடியாதபடி தழற்பிழம்பானவர்; முத்தொழிற்கும் கர்த்தராகிய மூவரும் இவரே என்னவும், மூவருக்கும் மேலாகிய முதல்வர் இவரே என்னவும் இம்மூவரும் அடைதற்கு அரிய பொருளாயினாரும் ஆகிய இறைவர் மேயது விளநகரதே.

7

சொற்றரும்மறை பாடினார் சுடர்விடுஞ் சடைமுடியினார்கற்றருவ்வடங் கையினார் காவிரித்துறை காட்டினார்மற்றருந்திரள் தோளினார் மாசில்வெண்பொடிப் பூசினார்விற்றரும்மணி மிடறினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
சொல் - தரும் மறை பாடினார், சுடர்விடும் சடைமுடியினார்,கல்-தரு(வ்) வடம் கையினார், காவிரித் துறை காட்டினார்மல்-தரும் திரள்தோளினார், மாசு இல் வெண்பொடிப் பூசினார்வில்-தரும் மணிமிடறினார், மேயது - விளநகர் அதே.
உரை

எழுதாக் கிளவியாகிய மறையைப் பாடினார்; செஞ்சுடர் வீசும் சடைமுடியினார்; செபமாலையைக் கொண்ட கையினார்; காவிரித் துறையைக் காட்டினார்; வலிய திரண்ட தோளினார்; தூய வெண் பொடியான திருநீறினைப் பூசினார்; ஒளி வீசும் நீல மணி மிடற்றினார் ஆகிய இறைவர் மேயது திருவிளநகரதே.

8

படர்தருஞ்சடை முடியினார் பைங்கழல்லடி பரவுவார்அடர்தரும்பிணி கெடுகென அருளுவார்அர வரையினார்விடர்தரும்மணி மிடறினார் மின்னுபொன்புரி நூலினார்மிடல்தரும்படை மழுவினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
படர்தரும் சடைமுடியினார், பைங்கழல்அடி பரவுவார்அடர்தரும் பிணி கெடுக என அருளுவார், அரவு அரையினார்,விடர் தரும் மணி மிடறினார், மின்னு பொன் புரிநூலினார்,மிடல் தரும் படைமழுவினார், மேயது -விளநகர் அதே.
உரை

படரும் சடை முடியினார்; பசிய கழலை அணிந்த கழலடியைப் பணிவார்களுடைய வருத்தும் பிணிநோய்கள் கெடுக என அருளுவார்; பாம்பைக் கச்சாகக் கட்டிய அரையினார். விடம் தங்கிய கண்டத்தினர்; மின்னுகின்ற பொன்னால் ஆன முப்புரி நூலினர்; வெற்றியைத் தரும் மழுப்படையினர் ஆகிய இறைவர் மேவியது திருவிளநகரதே.

9

கையிலங்கிய வேலினார் தோலினார்கரி காலினார்பையிலங்கர வல்குலாள் பாகமாகிய பரமனார்மையிலங்கொளி மல்கிய மாசிலாமணி மிடறினார்மெய்யிலங்குவெண் ணீற்றினார் மேயதுவிள நகரதே.
சொற்பிரிப்பு
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி காலினார்,பை இலங்கு அரவு அல்குலாள் பாகம் ஆகிய பரமனார்,மை இலங்கு ஒளி மல்கிய மாசு இலா மணிமிடறினார்மெய் இலங்கு வெண்நீற்றினார், மேயது - விளநகர் அதே.
உரை

கையில் விளங்கும் வேலினை உடையவர்; யானைத் தோலும் புலித்தோலும் தரித்தவர்; சர்வசங்கார காலத்தில் எல்லாம் எரிந்து கரியான பின்னும் தாம் ஒருவராக அழியாது நிற்பவர்; பாம்பின் படம் போன்ற அல்குலை உடைய உமையைப் பாகமாக உடையவர்; கரிய ஒளி நிறைந்த குற்றமிலாத நீலமணி போன்ற கண்டத்தை உடையவர்; திருமேனிமேல் விளங்கும் வெண்ணீற்றினர்; அவ்விறைவர் மேவியது திருவிளநகரதே.

10

உள்ளதன்றனைக் காண்பன்கீ ழென்றமாமணி வண்ணனும்உள்ளதன்றனைக் காண்பன்மே லென்றமாமலர் அண்ணலும்உள்ளதன்றனைக் கண்டிலார் ஒளியார்தருஞ்சடை முடியின்மேல்உள்ளதன்றனைக் கண்டிலா வொளியார்விளநகர் மேயதே.
சொற்பிரிப்பு
"உள்ள தன்தனைக் காண்பன், கீழ்” என்ற மா மணிவண்ணனும்,"உள்ளதன்தனைக் காண்பன் மேல்" என்ற மா மலர் அண்ணலும்,உள்ளதன்தனைக் கண்டிலார்; ஒளி ஆர்தரும் சடைமுடியின்மேல்உள்ளதன்தனைக் கண்டிலா ஒளியார், விளநகர், மேயதே.
உரை

(பாதாளம் ஏழினும்) கீழ் உள்ள பாதத்தைக் காண்பன் என்ற நீலமணி வண்ணனும் (எல்லாவற்றிற்கும்) மேலுள்ள முடியைக் காண்பன் என்ற தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் எங்கும் உள்ள தன்தனை (சிவபிரானை)க் கண்டிலர்; ஒளிதரும் சடைமுடியைச் சிரசின் மேல் உள்ள தன்தனை (எங்கும் ஒளிவிட்டுக் கொண்டிருக்கும் சிவபெருமானை ) கீழே காண்பன் என்றும், மேலே காண்பன் என்றும் திருமாலும் பிரமனும் உழன்றும் கண்டிலாத ஒளியராகிய சிவபிரான் மேயது திருவிளநகரே

11

மென்சிறைவண் டியாழ்முரல் விளநகர்த்துறை மேவியநன்பிறைநுதல் அண்ணலைச் சண்பைஞானசம் பந்தன்சீர்இன்புறுந்தமிழாற்சொன்ன ஏத்துவார்வினை நீங்கிப்போய்த்துன்புறுந்துய ரம்மிலாத் தூநெறிபெறு வார்களே.
சொற்பிரிப்பு
மென்சிறைவண்டு யாழ்முரல் விளநகர்த் துறை மேவியநன் பிறை நுதல் அண்ணலைச் சண்பை ஞானசம்பந்தன், சீர்இன்புஉறும் தமிழால் சொன்ன ஏத்துவார், வினை நீங்கிப் போய்,துன்புஉறும் துயரம்(ம்) இலாத் தூநெறி பெறுவார்களே.
உரை

மெல்லிய சிறகுகளை உடைய வண்டுகள் யாழ்போல முரலும் திருவிளநகர்த் துறையில் இருக்கும் அழகிய பிறை அணிந்த நெற்றியை உடைய அண்ணலைச் சண்பை(சீகாழி) ஞானசம்பந்தன் சீரும் இன்பமும் உடைய தமிழால் சொன்ன திருப்பாடல்களைப் பாடி வணங்குவார் தம்முடைய வினைகள் நீங்கி அகன்றுபோய், துன்புறுத்தும் துயரம் இலராய் தூநெறி பெறுவார்கள்.