திருமுறை 2 · 2.077 · 11

திருஅறையணிநல்லூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
அறையணிநல்லூர்
நாடு
நடுநாடு

1

பீடினாற்பெரி யோர்களும் பேதைமைகெடத் தீதிலாவீடினாலுயர்ந் தார்களும் வீடிலாரிள வெண்மதிசூடினார்மறை பாடினார் சுடலைநீறணிந் தாரழல்ஆடினார் அறையணி நல்லூர் அங்கையால்தொழுவார்களே.
சொற்பிரிப்பு
பீடினால் பெரியோர்களும், பேதைமை கெடத் தீது இலாவீடினால் உயர்ந்தார்களும் - வீடு இலார், இளவெண்மதிசூடினார், மறை பாடினார், சுடலை நீறு அணிந்தார், அழல்ஆடினார், அறையணி நல்லூர் அம் கையால் - தொழுவார்களே.
உரை

அழிவில்லாதவரும், இளமையான வெண்ணிற பிறையைச் சூடியவரும், வேதங்களை இசைத்தவரும், சுடுநீறாகிய சாம்பலைப் பூசியவரும், தீயாடினாரும் ஆகிய சிவபெருமானை அறையணிநல்லூரில் தொழுமவர்கள் பெருமையினால் பெரியோர்களாவர்; தங்களறியாமை கெட முத்திக்குரிய முற்றிய பற்றற்ற உயர்ந்தவர்களுமாவர்.

2

இலையினார்சூலம் ஏறுகந் தேறியேயிமை யோர்தொழநிலையினாலொரு காலுறச் சிலையினால்மதி லெய்தவன்அலையினார்புனல்சூடிய அண்ணலார்அறை யணிநல்லூர்தலையினால்தொழு தோங்குவார் நீங்குவார்தடு மாற்றமே.
சொற்பிரிப்பு
இலையின் ஆர் சூலம், ஏறு உகந்து ஏறியே, இமையோர் தொழ,நிலையினால் ஒரு கால் உறச் சிலையினால் மதில் எய்தவன்,அலையின் ஆர் புனல் சூடிய அண்ணலார், அறை யணிநல்லூர்தலையினால்-தொழுது ஓங்குவார் நீங்குவார், தடுமாற்றமே.
உரை

மூவிலைத் தோற்றம் கொண்ட சூலம் ஏந்தியவர்; எருதினை வாகனமாக விரும்பி ஏறுவர்; தேவர்கள் தொழும் நிலையில், ஒரு காலால் மலையை வில்லாக வளைத்து பகைவரது மும்மதில்களை அழித்தவர்; அலைகள் கொண்ட கங்கையாற்றைத் தலையில் சூடிய தலைவர் ஆகிய சிவபிரானின் அறையணிநல்லூரைத் தலையினால் தொழுதெழுவார் பிறவியில் விழும் தடுமாற்றத்திலிருந்து நீங்குவார்கள்.

3

என்பினார்கனல் சூலத்தார் இலங்குமாமதி யுச்சியான்பின்பினாற்பிறங் குஞ்சடைப் பிஞ்ஞகன்பிறப் பிலியென்றுமுன்பினார்மூவர் தாந்தொழு முக்கண்மூர்த்திதன் தாள்களுக்கன்பினார்அறை யணிநல்லூர் அங்கையால்தொழு வார்களே.
சொற்பிரிப்பு
"என்பினார், கனல் சூலத்தார், இலங்கும் மா மதி உச்சியான்,பின்பினால் பிறங்கும் சடைப் பிஞ்ஞகன் பிறப்புஇலி” என்றுமுன்பினார் மூவர்தாம் தொழு முக்கண் மூர்த்திதன் தாள்களுக்குஅன்பினார்-அறையணிநல்லூர் அம் கையால் தொழுவார்களே.
உரை

அறையணி நல்லூர் இறைவர் எலும்பணிந்தவர், சூலம் கையேந்தியவர், விளங்கும் பிறை தரித்த உச்சியார், பின்புறத்தில் தாழ்ந்த சடையுடையவர், தலைக்கோலம் அணிந்தவர், பிறப்பில்லாதவர், ஆதிமூர்த்தி என்று கையால் தொழுவாரே மூவரும் வணங்கும்முக்கண்மூர்த்தி திருவடிக்கு அன்பராவர்.

4

விரவுநீறுபொன் மார்பினில் விளங்கப்பூசிய வேதியன்உரவுநஞ்சமு தாகவுண் டுறுதிபேணுவ தன்றியும்அரவுநீள்சடைக் கண்ணியார் அண்ணலாரறை யணிநல்லூர்பரவுவார்பழி நீங்கிடப் பறையுந்தாஞ்செய்த பாவமே.
சொற்பிரிப்பு
விரவு நீறு பொன்மார்பினில் விளங்கப் பூசிய வேதியன்,உரவு நஞ்சு அமுதுஆகஉண்டு உறுதி பேணுவது அன்றியும்,அரவு நீள்சடைக் கண்ணியார், அண்ணலார், அறையணிநல்லூர்பரவுவார் பழி நீங்கிட, பறையும், தாம் செய்த பாவமே.
உரை

திருநீற்றினை மார்பில் பூசிய மறையவன், கடல் நஞ்சினை அமுதமாக உண்டு உயிர்களுக்கு உய்தி அளித்தவன். அஃதல்லாமலும், அரவினை நீண்ட சடையில் தலைமாலையாகக் கொண்டவரும் தலைவருமாகிய அறையணிநல்லூர் சிவபிரானைப் பரவுவார் தம்மேல் வரும் பழிநீங்கப் பாவம் ஓடும்.

5

தீயினார்திகழ் மேனியாய் தேவர்தாந்தொழும் தேவன்நீஆயினாய் கொன்றை யாய்அன லங்கையாய் அறை யணிநல்லூர்மேயினார்தம தொல்வினை வீட்டினாய்வெய்ய காலனைப்பாயினாயதிர் கழலினாய் பரமனேயடி பணிவனே.
சொற்பிரிப்பு
தீயின் ஆர் திகழ் மேனியாய்! தேவர் தாம் தொழும் தேவன் நீஆயினாய்! கொன்றையாய்! அனல் அங்கையாய்! அறையணிநல்லூர்,மேயினார்தம தொல்வினை வீட்டினாய்! வெய்ய காலனைப்பாயினாய்! அதிர் கழலினாய்: பரமனே! அடி பணிவனே.
உரை

தீயைப் போல ஒளிரும் திருமேனியை உடையாய்! தேவர்கள் எல்லோரும் தொழும் மகாதேவன் நீ ஆயினாய்! கொன்றையினாய்! அங்கையில் அனலேந்தினாய்! அறையணி நல்லூரை அடைந்தவர்களின் தொன்று தொட்டு வருகின்ற வினைகளை ஒழித்தாய்! காலன் அழியப் பாய்ந்தாய்! ஒலிக்கும் கழலினாய்! பரமனே! அடி பணிந்தேன்.

6

விரையினார் கொன்றை சூடியும் வேகநாகமும் வீக்கியஅரையினார் அறை யணிநல்லூர் அண்ணலார் அழகாயதோர்நரையினார்விடை யூர்தியார் நக்கனார் நறும்போதுசேர்உரையினாலுயர்ந் தார்களும் உரையினாலுயர்ந் தார்களே.
சொற்பிரிப்பு
விரையின் ஆர் கொன்றை சூடியும், வேக நாகமும் வீக்கியஅரையினார், அறையணிநல்லூர் அண்ணலார், அழகுஆயது ஓர்நரையின் ஆர் விடை ஊர்தியார், நக்கனார், கூறும்போது சேர்உரையினால் உயர்ந்தார்களும் உரையினால் உயர்ந்தார்களே.
உரை

மணமுள்ள கொன்றையைச் சூடி, விடவேகமுள்ள நாகத்தை அரையில் கட்டி,அழகாயதொரு வெள்விடை ஊர்தியை உடையவர்; ஆடையற்றவர்; ஆகிய அறையணிநல்லூரில் அண்ணலாரை நறிய பூவால் அருச்சித்து தோத்தரித்து உயர்பவர் புகழலால் உயர்வினை அடைவார்.

7

வீரமாகிய வேதியர் வேகமாகளி யானையின்ஈரமாகிய வுரிவைபோர்த் தரிவைமேற்சென்ற எம்மிறைஆரமாகிய பாம்பினார் அண்ணலாரறை யணிநல்லூர்வாரமாய்நினைப் பார்கள்தம் வல்வினையவை மாயுமே.
சொற்பிரிப்பு
வீரம் ஆகிய வேதியர் வேக மா களியானையின்ஈரம் ஆகிய உரிவை போர்த்து, அரிவைமேல் சென்ற எம் இறை;ஆரம் ஆகிய பாம்பினார்; அண்ணலார்; அறையணிநல்லூர்வாரம்ஆய் நினைப்பார்கள்தம் வல்வினை அவை மாயுமே.
உரை

ஞானமுடைய வேதியர், வேகமாக மதத்துடன் வந்த பெரிய யானையின் குருதி ஈரமுடைய தோலினை உரித்துப் போர்த்து உமாதேவி அஞ்ச அவர்பாற் சென்ற எம்முடைய இறைவர், மாலையாகப் பாம்பினை உடையவர்; தலைவர். அவருடைய அறையணிநல்லூரை அன்புடன் நினைப்பவர்கள்தம் வல்வினை ஆயவை மாயும்.

8

தக்கனார்பெரு வேள்வியைத் தகர்த்துகந்தவன் தாழ்சடைமுக்கணான்மறை பாடிய முறைமையான்முனி வர்தொழஅக்கினோடெழில் ஆமைபூண் அண்ணலாரறை யணிநல்லூர்நக்கனாரவர் சார்வலால் நல்குசார்விலோம் நாங்களே.
சொற்பிரிப்பு
தக்கனார் பெருவேள்வியைத் தகர்த்து உகந்தவன் தாழ்சடைமுக்கணான், மறை பாடிய முறைமையான், முனிவர் தொழஅக்கினோடு எழில் ஆமை பூண் அண்ணலார், அறையணிநல்லூர்நக்கனார் அவர் சார்வுஅலால் நல்கு சார்வு இலோம் நாங்களே.
உரை

தக்கனுடைய பெரிய வேள்வியைத் தகர்த்து மகிழ்ந்தவர்; தாழ்ந்த சடை உடையவர்; முக்கண்களை உடையவர்; முனிவர்கள் முறைமையால் வழிபட எலும்பினோடு ஆமையோட்டையும் அழகாகப் பூண்டவர். தலைவர். அறையணி நல்லூர் நக்கனார், யாம் அவருடைய திருவடிச் சார்பினை அல்லாது பேரின்பம் பயக்கும் வேறுசார்பு இலோம்.

9

வெய்யநோயிலர் தீதிலர் வெறியராய்ப்பிறர் பின்செலார்செய்வதேயலங் காரமாம் இவையிவை தேறி யின்புறில்ஐயமேற்றுணுந் தொழிலராம் அண்ணலார் அறையணிநல்லூர்ச்சைவனாரவர் சார்வலால்யா துஞ்சார்விலோம் நாங்களே.
சொற்பிரிப்பு
வெய்ய நோய் இலர்; தீது இலர்; வெறியராய்ப் பிறர் பின் செலார்;செய்வதே அலங்காரம் ஆம்; இவைஇவை தேறி இன்புஉறில்,ஐயம் ஏற்று உணும் தொழிலர்ஆம் அண்ணலார், அறையணிநல்லூர்சைவனார் அவர், சார்வுஅலால், யா தும் சார்வுஇலோம், நாங்களே.
உரை

பிறப்பிறப்பாகிய கொடிய நோயிலர்; வெறி பிடித்தவர் போலப் பிறர்பின் செல்லார். (தற்சுதந்திரம் உடையவர்); அவர் செய்து கொள்வதே அலங்காரம் (தூய உடம்பினர்.) இவ்வியல்புகளை ஆராய்ந்து தெளிந்தால், பிச்சையேற்று உண்ணும் தொழிலராகிய தலைவர் அறையணி நல்லூர்ச் சைவனார் (சிவபிரான்) அவருடைய திருவடிச் சார்பினை அல்லாது பேரின்பம் பயக்கும் சார்பு வேறு நாம் இலோம்.

10

வாக்கியஞ்சொல்லி யாரொடும் வகையலாவகை செய்யன்மின்சாக்கியஞ்சம ணென்றிவை சாரேலும்மர ணம்பொடிஆக்கியம்மழு வாட்படை அண்ணலாரறை யணிநல்லூர்ப்பாக்கியங்குறை யுடையீரேற் பறையுமாஞ்செய்த பாவமே.
சொற்பிரிப்பு
வாக்கியம் சொல்லி, யாரொடும் வகை அலா வகை செய்யன்மின்!சாக்கியம் சமண் என்று இவை சாரேலும்(ம்) அரணம் பொடிஆக்கிய(ம்) மழுவாள்படை அண்ணலார் அறையணிநல்லூர்ப்பாக்கியம் குறை உடையீரேல், பறையும்ஆம், செய்த பாவமே.
உரை

பழகத் தகுதி அற்றோர் யாவரோடும் பேச்சுக் கொடுத்து செய்யத் தகாதனவற்றைச் செய்யாதீர்; சாக்கியர், சமணர் என்னும் இவர்களுடன் சாராதீர்; மதில்களைச் சாம்பலாக்கியவர் ஆகிய அந்த மழுவாள் படைத் தலைவர் அறையணி நல்லூரினை இன்றியமையாப் பொருளாக அடைவீரேல் செய்த பாவம் பறந்து போகும்.

11

கழியுலாங்கடற் கானல்சூழ் கழுமலம்அமர் தொல்பதிப்பழியிலாமறை ஞானசம் பந்தன்நல்லதோர் பண்பினார்மொழியினால் அறை யணிநல்லூர் முக்கண்மூர்த்திகள் தாள்தொழக்கெழுவினாரவர் தம்மொடுங் கேடில்வாழ்பதி பெறுவரே.
சொற்பிரிப்பு
கழி உலாம் கடல் கானல் சூழ் கழுமலம் அமர் தொல் பதிப்பழி இலா மறை ஞானசம் பந்தன், நல்லது ஓர் பண்பின் ஆர்மொழியினால் அறையணிநல்லூர் முக்கண்மூர்த்திதன் தாள் தொழக்கெழுவினார் அவர், தம்மொடும் கேடு இல் வாழ் பதி பெறுவரே.
உரை

கழிகள் உலாவுகின்ற கடற்கானல் சூழப் பெற்ற சீகாழியாகிய பழைமையானபதியில், பழியிலாத மறைகள் வல்ல ஞானசம்பந்தன் நன்மை பயக்கும் இயல்பினதாக மொழிந்த இத்திருப்பதிகத்தைக்கூறி அறையணி நல்லூர் முக்கண் மூர்த்தியினுடைய திருத்தாள்களைத் தொழப் பொருந்தினர் தம்மையும் பெறுவர்; சிவலோகத்தையும் பெறுவர்.