திருமுறை 2 · 2.075 · 11

சீர்காழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

விண்ணி யங்குமதிக் கண்ணியான்விரி யுஞ்சடைப்பெண்ண யங்கொள்திரு மேனியான்பெரு மானனற்கண்ண யங்கொள்திரு நெற்றியான்கலிக் காழியுள்மண்ண யங்கொள்மறை யாளரேத்துமலர்ப் பாதனே.
சொற்பிரிப்பு
விண் இயங்கும் மதிக் கண்ணியான், விரியும் சடைப்பெண் நயம் கொள் திரு மேனியான், பெருமான், அனல்கண் நயம் கொள் திரு நெற்றியான் - கலிக் காழியுள்மண் நயம் கொள் மறை யாளர் ஏத்து மலர்ப்பாதனே.
உரை

ஆகாயத்தில் சஞ்சரிக்கும் பிறைமதித் தலைக்கண்ணியை அணிந்தவன்.. பெண்ணைப் பாகத்தில் பொருத்தமாகக் கொண்ட திருமேனியன்; பெருமகன்; அனல் பொருந்திய கண்ணை நெற்றியில் உடையவன். மகிழ்ச்சி நிறைந்த காழியில், உலகத்தவரின் நன்மையைக் கருதுகின்ற தாமரை மலர் போன்ற திருப்பாதங்கள் உடையவனாகிய சிவபெருமானே.

2

வலிய காலனுயிர் வீட்டினான்மட வாளொடும்பலிவி ரும்பியதொர் கையினான்பர மேட்டியான்கலியை வென்றமறை யாளர்தங்கலிக் காழியுள்நலிய வந்தவினை தீர்த்துகந்தஎம் நம்பனே.
சொற்பிரிப்பு
வலியகாலனுயிர் வீட்டினான்மடவாளொடும்பலி விரும்பியது ஒர் கையினான், பரமேட்டியான் -கலியை வென்ற மறை யாளர்தம் கலிக் காழியுள்நலிய வந்த வினை தீர்த்து உகந்த எம் நம்பனே.
உரை

ஆற்றல் மிகுந்த எமனுடைய கையை உயிரை வாங்கினான்; உமாதேவியாரை உடன்கொண்டு பிச்சையேற்ற கையை உடையவன். யாவர்க்கும் மேலான இடத்திலிருப்பவன். உயிர்களின் துன்பங்களை விரட்டும் மறையாளர்கள் வாழும் மகிழ்ச்சி நிறைந்த காழியுள் உயிர்களை வருத்துவதற்கு வந்த வினைகளை ஒழித்து உயர்ந்தவன்; எம் விருப்பாயுள்ள சிவபெருமானே.

3

சுற்ற லாநற்புலித் தோலசைத்தயன் வெண்டலைத்துற்ற லாயதொரு கொள்கையான்சுடு நீற்றினான்கற்றல் கேட்டலுடை யார்கள்வாழ்கலிக் காழியுள்மற்ற யங்குதிரள் தோளெம்மைந்தனவன் நல்லனே.
சொற்பிரிப்பு
சுற்றல் ஆம் நல் புலித் தோல் அசைத்து, அயன் வெண்தலைத்துற்றல் ஆயது ஒரு கொள்கையான், சுடுநீற்றினான்கற்றல் கேட்டல் உடை யார்கள் வாழ் கலிக் காழியுள்,மல்-தயங்கு திரள் தோள் எம் மைந்தன் அவன் அல்லனே!
உரை

அழகிய புலித்தோலை இடுப்பைச் சுற்றி உடுத்து, பிரமனின் கபாலத்தில் பிச்சை ஏற்று உண்ணுதலாகிய கொள்கையை உடையவன். சுட்ட சாம்பலாகிய திருநீற்றுப் பூச்சினான்; நூல்களைக் கற்ற ஞானமும் செவியால் கேட்ட ஞானமும் வாய்ந்த பெரியோர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் காழியுள், வலிமையும் திரட்சியும் கொண்ட தோள்களை உடைய எம் வீரன்; உயிர்கள்பால் கருணை கொண்ட சிவபெருமானே.

4

பல்ல யங்குதலை யேந்தினான்படு கானிடைமல்ல யங்குதிரள் தோள்களாரநட மாடியுங்கல்ல யங்குதிரை சூழநீள்கலிக் காழியுள்தொல்ல யங்குபுகழ் பேணநின்றசுடர் வண்ணனே.
சொற்பிரிப்பு
பல் அயங்கு தலை ஏந்தினான், படுகான் இடைமல் அயங்கு திரள் தோள்கள் ஆர நடம் ஆடியும்கல் அயங்கு திரை சூழ நீள் கலிக் காழியுள்,தொல் அயங்கு புகழ் பேண நின்ற சுடர்வண்ணனே.
உரை

பற்கள் நிலைகுலைந்த மண்டையோட்டினைக் கையில் ஏந்தியவன்; பிணங்கள் நிறைந்த காட்டினிடையில் வலிமை திரண்ட தோள்கள் அசையக் கூத்தாடுபவனும், சகரரால் கல்லித் தோண்டப் பட்ட கடல் சூழ் கலிக்காழியுள், தொன்று தொட்டு எங்கும் பரவிய புகழை அடியவர்கள் விரும்பிப் போற்ற நின்ற ஒளி சுடரும் நிறத்தினனாகிய சிவபெருமானே.

5

தூந யங்கொள்திரு மேனியிற்பொடிப் பூசிப்போய்நாந யங்கொள்மறை யோதிமாதொரு பாகமாக்கான யங்கொள்புனல் வாசமார்கலிக் காழியுள்தேன யங்கொள்முடி ஆனைந்தாடிய செல்வனே.
சொற்பிரிப்பு
தூ நயம் கொள் திரு மேனியில் பொடிப் பூசிப் போய்,நா நயம் கொள் மறை ஓதி மாது ஒருபாகமாக்கான் நயம் கொள் புனல் வாசம் ஆர் கலிக் காழியுள்,தேன் நயம் கொள் முடி ஆன்ஐந்துஆடிய செல்வனே.
உரை

தூய்மையான திருமேனிமேல் திருநீற்றுப் பொடி பூசி, நாவின் நற்பயனைக் கொண்ட வேதத்தினை ஓதி, உமையைத் தன் உடலில் ஒருபாகமாகக் கொண்டு, வாய்க்கால் வழியோடும் நீர் மணம் நிறைந்த கலிக்காழியுள் தேன்கொண்டு ஆட்டப்படும் முடியுடையான், ஆனைந்து ஆடும் செல்வன் சிவபெருமானே.

6

சுழியி லங்கும்புனற் கங்கையாள்சடை யாகவேமொழியி லங்கும்மட மங்கைபாகம் உகந்தவன்கழியி லங்குங்கடல் சூழுந்தண்கலிக் காழியுள்பழியி லங்குந்துய ரொன்றிலாப்பர மேட்டியே.
சொற்பிரிப்பு
சுழி இலங்கும் புனல் கங்கையாள் சடை ஆகவே,மொழி இலங்கும் மட மங்கை பாகம் உகந்தவன் -கழி இலங்கும் கடல் சூழும் தண் கலிக் காழியுள்,பழி இலங்கும் துயர் ஒன்று இலாப் பரமேட்டியே.
உரை

நீர்ச்சுழி விளங்கும் ஆறாகிய கங்கையான் சடையனாகவும், புகழ் விளங்கும் உமையாளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகவும் உகந்தவன், (யாரெனில்) கழி விளங்கும் கடல் சூழும் கலிக்காழியுள் நிந்தையாகிய பழியால் வரும் துயரம் ஒன்றும் இல்லாத பரமேட்டியாகிய சிவபெருமானே.

7

முடியி லங்கும்உயர் சிந்தையான்முனி வர்தொழஅடியி லங்குங்கழ லார்க்கவேயன லேந்தியுங்கடியி லங்கும்பொழில் சூழுந்தண்கலிக் காழியுள்கொடியி லங்கும்மிடை யாளொடுங்குடி கொண்டதே.
சொற்பிரிப்பு
முடி இலங்கும்(ம்) உயர் சிந்தையால் முனிவர் தொழ,அடி இலங்கும் கழல் ஆர்க்கவே, அனல் ஏந்தியும்,கடி இலங்கும் பொழில் சூழும் தண் கலிக் காழியுள்,கொடி இலங்கும்(ம்) இடை யாளொடும் குடிகொண்டதே!
உரை

முனிவர்கள் தங்கள் தியானத்தில் துவாதசாந்தப் பெருவெளியில் வைத்துத் தொழ விளங்கும் திருவடிகளில் கழல்கள் ஆர்ப்பரிக்க, அனலேந்தி (ஆடும் இறைவன்), மணம் கமழும் பொழில்சூழும் குளிர்ந்த கலிக்காழியுள் கொடிபோன்ற இடையை உடைய உமையுடன் குடிகொண்டதோ?

8

வல்ல ரக்கன்வரை பேர்க்கவந்தவன் தோள்முடிகல்ல ரக்கிவ்விறல் வாட்டினான்கலிக் காழியுள்நல்லொ ருக்கியதொர் சிந்தையார்மலர் தூவவேதொல்லி ருக்கும்மறை யேத்துகந்துடன் வாழுமே.
சொற்பிரிப்பு
வல் அரக்கன், வரை பேர்க்க வந்தவன், தோள்முடிகல் அரக்க(வ்) விறல் வாட்டினான் கலிக் காழியுள்நல் ஒருக்கியது ஒர் சிந்தையார் மலர் தூவவே,தொல்இருக்கும் மறை ஏத்து உகந்து உடன் வாழுமே.
உரை

வலிய அரக்கன் இராவணன், கயிலை மலையைப் பெயர்க்க வந்தவனின் கல்போலும் தோள்களையும் முடியையும் வருத்தி, அவனுடைய வலிமையை வாட்டிய சிவபெருமான், கலிக்காழியுள் ஒருமையுடன் (அத்துவிதமாக) நல்ல சிந்தையுடையோர் மலர் தூவி வழிபட பழைய இருக்கு வேதமாகிய மறை துதி செய்ய, உமையுடன் விரும்பி உறைகிறான்.

9

மருவு நான்மறை யோனுமாமணி வண்ணனும்இருவர் கூடியிசைந் தேத்தவேயெரி யான்றனூர்வெருவ நின்றதிரை யோதம்வார்வியன் முத்தவைகருவை யார்வயற் சங்குசேர்கலிக் காழியே.
சொற்பிரிப்பு
மருவு நால்மறை யோனும் மா மணிவண்ணனும்இருவர் கூடி இசைந்து ஏத்தவே, எரியான்தன் ஊர் -வெருவ நின்ற திரை ஓதம் வார வியல் முத்து அவைகருவை ஆர் வயல் சங்கு சேர் கலிக் காழியே.
உரை

பொருந்திய நான்மறையவனாகிய பிரமனும் நீலமணி வண்ணனாகிய திருமாலும் ஆகிய இருவரும் கூடி ஒற்றுமைப்பட்டு வழிபடவே, தீப்பிழம்பாக நின்றவனது ஊர், அச்சம் தோன்ற உயர்ந்த கடலலைகள் கொண்டு வந்த அகன்று பரவிய முத்துக்கள், கரிய வைக்கோல் கொண்ட வயல்கள், சங்குகள் ஆகியவை சேர்ந்த கலிக்காழியே.

10

நன்றி யொன்றுமுண ராதவன்சமண் சாக்கியர்அன்றி யங்கவர் சொன்னசொல்லவை கொள்கிலான்கன்று மேதியிளங் கானல்வாழ்கலிக் காழியுள்வென்றி சேர்வியன் கோயில்கொண்டவிடை யாளனே.
சொற்பிரிப்பு
நன்றி ஒன்றும் உண ராத, வன்சமண், சாக்கியர்,அன்றி அங்கு அவர் சொன்ன சொல்அவை கொள்கிலான் கன்று மேதி இளங் கானல் வாழ் கலிக் காழியுள்,வென்றி சேர் வியன் கோயில் கொண்ட விடையாளனே.
உரை

நன்மையானதொன்றும் அறிகிலராகிய வலிய சமணர்களும் சாக்கியர்களும் பகைத்து அவர்கள் கூறிய புறமொழிகளைப் பொருட்டாகக் கொள்ளாதவன். அவன் இளங்கன்றுடன் எருமைகள் வாழும் நெய்தலங் கானல்களையுடைய கலிக்காழியுள் வெற்றியுடைய பெரிய கோயிலைக் கொண்ட எருது வாகனனே (சிவபெருமானே).

11

கண்ணும் மூன்றுமுடை யாதிவாழ்கலிக் காழியுள்அண்ண லந்தண்ணருள் பேணிஞானசம் பந்தன்சொல்வண்ணம் மூன்றுந்தமி ழில்தெரிந்திசை பாடுவார்விண்ணும் மண்ணும்விரி கின்றதொல்புக ழாளரே.
சொற்பிரிப்பு
கண்ணுமூன்றும் உடை ஆதி வாழ் கலிக் காழியுள்அண்ணல் அம் தண் அருள் பேணி ஞானசம்பந்தன் சொல்,வண்ணம் மூன்றும் தமி ழில்-தெரிந்து இசை பாடுவார்விண்ணும் மண்ணும் விரி கின்ற தொல்புகழாளரே.
உரை

மூன்று கண்களை உடைய முதல்வன் வாழும் கலிக்காழியுள் தலைவனான      சிவபெருமானின் குளிர்ந்த அருளைப் போற்றி ஞானசம்பந்தன் தமிழிற் சொன்ன சொல்லை(பதிகத்தை) வண்ணம் மூன்றினையும் தெரிந்து இசையாகப் பாடுவார் விண்ணுலகிலும்மண்ணுலகிலும் புகழ் உடையோராவர்.