திருமுறை 2 · 2.074 · 12

திருப்பிரமபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
சீர்காழி - பல்பெயர்ப்பத்து
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருக்கோமூத்திரி

1

பூமகனூர் புத்தேளுக் கிறைவனூர் குறைவிலாப் புகலி பூமேல்மாமகளூர் வெங்குருநல் தோணிபுரம் பூந்தராய் வாய்ந்த இஞ்சிச்சேமமிகு சிரபுரஞ்சீர்ப் புறவநிறை புகழ்ச்சண்பை காழி கொச்சைகாமனைமுன் காய்ந்தநுதற் கண்ணவனூர் கழுமலம்நாங் கருது மூரே.
சொற்பிரிப்பு
பூமகன்ஊர், புத்தேளுக்கு இறைவன்ஊர், குறைவு இலாப் புகலி, பூமேல்மாமகள்ஊர், வெங்குரு, நல்-தோணிபுரம், பூந்தராய், வாய்ந்த இஞ்சிச்சேமம் மிகு சிரபுரம், சீர்ப் புறவம், நிறை புகழ்ச் சண்பை, காழி, கொச்சை,காமனை முன் காய்ந்த நுதல்கண்ணவன் ஊர் கழுமலம் - நாம் கருதும் ஊரே.
உரை

பூமகன்- பிரமன். பூமகனூர்- பிரமனூர். புத்தேளுக் கிறைவன்- இந்திரன்; புத்தேளுக் கிறைவனூர்-சிரபுரம். பூமேல் மாமகளூர்; பூமேல் மாமகள் - இலக்குமி. பூமேல் மாமகளூர் - திருமகள் பரவும் ஊராகிய திருவெங்குரு. அவள் வாழும் ஊர் எனலுமாம். இஞ்சி-மதில். இஞ்சிச் சேமமிகும் சிரபுரம் -மதிற்காவலுடைய சிரபுரம். காமன் - மன்மதன். இவ்வூர்கள் இறைவன் விரும்பும் ஊர்களாகும்.

2

கருத்துடைய மறையவர்சேர் கழுமலம்மெய்த் தோணிபுரம் கனக மாடஉருத்திகழ்வெங் குருப்புகலி யோங்குதரா யுலகாருங் கொச்சை காழிதிருத்திகழுஞ் சிரபுரந்தே வேந்திரனூர் செங்கமலத் தயனூர் தெய்வத்தருத்திகழும் பொழிற்புறவஞ் சண்பைசடை முடியண்ணல் தங்கு மூரே.
சொற்பிரிப்பு
கருத்து உடைய மறையவர் சேர் கழுமலம், மெய்த் தோணிபுரம், கனக மாடஉருத் திகழ் வெங்குரு, புகலி, ஓங்கு தராய், உலகு ஆரும் கொச்சை, காழி,திருத் திகழும் சிரபுரம், தேவேந்திரன்ஊர், செங்கமலத்து அயன்ஊர், தெய்வத்தருத் திகழும் பொழில் புறவம், சண்பை - சடைமுடி அண்ணல் தங்கும் ஊரே.
உரை

கருத்துடை மறையவர்- சிவஞானமுடைய மறையவர். கனகமாடம் - பொன் மாடம். உருத்திகழ் வெங்குரு - அழகாகத் திகழும் வெங்குரு. ஓங்குதராய் - மேலும் மேலும் உயரும் பூந்தராய். உலகாரும் கொச்சை-உலகமக்கள் சேரும் கொச்சைவயம். திருத்திகழும் சிரபுரம் தேவேந்திரனூர் - செல்வமிக்க சிரபுரம் தேவேந்திரனூர் (புகலி). செங்கமலத்தயனூர்- பிரமனூர். தருத்திகழும் பொழிற் புறவம் - தரு - மரம். மரங்கள் நிறைந்த சோலைகளால் ' அழகுடன் திகழும் புறவம். இவை இறைவன் தங்கும் ஊர்களாகும்.

3

ஊர்மதியைக் கதுவவுயர் மதிற்சண்பை யொளிமருவு காழி கொச்சைகார்மலியும் பொழில்புடைசூழ் கழுமலமெய்த் தோணிபுரங் கற்றோ ரேத்துஞ்சீர்மருவு பூந்தராய் சிரபுரம்மெய்ப் புறவம்அய னூர்பூங் கற்பத்தார்மருவும் இந்திரனூர் புகலிவெங் குருக்கங்கை தரித்தோ னூரே.
சொற்பிரிப்பு
ஊர் மதியைக் கதுவ உயர் மதில் சண்பை, ஒளி மருவு காழி, கொச்சை,கார் மலியும் பொழில் புடை சூழ் கழுமலம், மெய்த் தோணிபுரம், கற்றோர் ஏத்தும்சீர் மருவு பூந்தராய், சிரபுரம், மெய்ப் புறவம், அயன் ஊர், பூங் கற்பத்தார் மருவும் இந்திரன்ஊர், புகலி, வெங்குரு - கங்கை தரித்தோன் ஊரே.
உரை

ஊர் மதியைக் கதுவ உயர் மதிற் சண்பை - ஊர் மதி - விண்ணில் ஊர்ந்து செல்லும் சந்திரன். கதுவ -பொருந்த,பற்ற. விண்ணில் ஊர்ந்து செல்லும் மதியைப் பொருந்துமளவு உயர்ந்த மதில்களை உடைய சண்பை. ஒளி மருவும் காழி -பிரகாசமான காழிநகர். கார் மலியும் பொழில் புடைசூழ் கழுமலம்- கார்மேகங்கள் தங்கும் உயர்ச்சியும் குளிர்ச்சியும் கொண்ட சோலைகள் சூழ்ந்த கழுமலம். மெய்த்தோணிபுரம் - என்றும் உள்ள தோணிபுரம், பிரளய காலத்திலும் நின்று நிலவுதலைக் குறித்தது. கற்றவர்கள் போற்றும் பூந்தராய். என்றுமுள்ள புறவம். அயனூர் - பிரமபுரம். கற்பகத்தார் - தார் - மாலை, கற்பகப்பூ மாலை கற்பகத்தார் மருவும் இந்திரன் ஊர் புகலி - கற்பக மாலையை அணிந்த இந்திரன் அசுரனுக்கு அஞ்சிப் புகலாக அடைந்த ஊராதலின் புகலி, வெங்குரு இவை கங்கையைச் சடையில் தரித்தோன் ஊர்களே.

4

தரித்தமறை யாளர்மிகு வெங்குருச்சீர்த் தோணிபுரந் தரியா ரிஞ்சிஎரித்தவன்சேர் கழுமலமே கொச்சைபூந் தராய்புகலி யிமையோர் கோனூர்தெரித்தபுகழ்ச் சிரபுரஞ்சீர் திகழ்காழி சண்பைசெழு மறைக ளெல்லாம்விரித்தபுகழ்ப் புறவம்விரைக் கமலத்தோ னூருலகில் விளங்கு மூரே.
சொற்பிரிப்பு
தரித்த மறையாளர் மிகு வெங்குரு,சீர்த் தோணிபுரம், தரியார் இஞ்சிஎரித்தவன் சேர் கழுமலமே, கொச்சை, பூந்தராய், புகலி, இமையோர்கோன்ஊர்,தெரித்த புகழ்ச் சிரபுரம், சீர் திகழ் காழி, சண்பை, செழு மறைகள் எல்லாம்விரித்த புகழ்ப் புறவம், விரைக்கமலத்தோன் ஊர் - உலகில் விளங்கும் ஊரே.
உரை

(சிவனை சிரசிலும் சிந்தையிலும்) தரித்த மறையவர்கள் மிகுதியாக வாழும் வெங்குரு, புகழுடைத் தோணிபுரம், தன்னைத் தரியாத பகைவர்களாகிய முப்புராதிகளின் மும்மதில்களை எரித்தவன் சேரும் கழுமலம். கொச்சைவயம். பூந்தராய். புகலியாகிய தேவர்களின் தலைவன் ஊர். ஆராய்ந்த புகழுடைய சிரபுரம். பெருமையுடன் விளங்கும் காழி சண்பை. பொருள் வளமுள்ள மறைகளையெல்லாம் விரித்த பெருமையை உடைய புறவம். மணமுடைய தாமரை மலரில் இருப்பவனூர் - பிரமபுரம். இவை உலகில் நின்று விளங்கும் ஊரே.

5

விளங்கயனூர் பூந்தராய் மிகுசண்பை வேணுபுரம் மேக மேய்க்கும்இளங்கமுகம் பொழில்தோணி புரங்காழி யெழிற்புகலி புறவம் ஏரார்வளங்கவரும் வயற்கொச்சை வெங்குருமாச் சிரபுரம்வன் னஞ்ச முண்டுகளங்கமலி களத்தவன்சீர்க் கழுமலங்கா மன்னுடலங் காய்ந்தோ னூரே.
சொற்பிரிப்பு
விளங்கு அயன்ஊர், பூந்தராய், மிகு சண்பை, வேணுபுரம், மேகம் ஏய்க்கும்இளங் கமுகம், பொழில் - தோணிபுரம், காழி, எழில் புகலி, புறவம், ஏர் ஆர்வளம் கவரும் வயல் கொச்சை, வெங்குரு, மாச் சிரபுரம், வன் நஞ்சம் உண்டுகளங்கம் மலி களத்தவன் சீர்க் கழுமலம் - காமன்(ன்) உடலம் காய்ந்தோன் ஊரே.
உரை

விளங்கு அயன் ஊர் - நிலவுகின்ற பிரமபுரம். பூந்தராய். ஏற்றம் மிகு சண்பை. வேணுபுரம். மேகமண்டலத்தைப் பொருந்த உயர்ந்த கமுகஞ் சோலைகளை உடைய தோணிபுரம் -காழி. அழகிய புகலி. புறவம். அழகு நிறைந்த வளமையுடைய வயல்கள் நிறைந்த கொச்சைவயம். வெங்குரு. பெரிய சிரபுரம். வலிய நஞ்சத்தை உண்டு கறை மலிந்த கண்டத்தனாகிய திருநீலகண்டனின் பெருமைமிகு கழுமலம். இவை மன்மதன் உடலை எரித்தவனின் ஊரே.

6

காய்ந்துவரு காலனையன் றுதைத்தவனூர் கழுமலமாத் தோணிபுரஞ் சீர்ஏய்ந்தவெங் குருபுகலி யிந்திரனூர் இருங்கமலத் தயனூர் இன்பம்வாய்ந்தபுற வந்திகழுஞ் சிரபுரம்பூந் தராய்கொச்சை காழி சண்பைசேந்தனைமுன் பயந்துலகில் தேவர்கள்தம் பகைகெடுத்தோன் திகழு மூரே.
சொற்பிரிப்பு
காய்ந்து வரு காலனை அன்று உதைத்தவன் ஊர் கழுமலம், மாத் தோணிபுரம், சீர்ஏய்ந்த வெங்குரு, புகலி, இந்திரன்ஊர், இருங் கமலத்து அயன்ஊர், இன்பம்வாய்ந்த புறவம், திகழும், சிரபுரம், பூந்தராய், கொச்சை, காழி, சண்பை,சேந்தனை முன் பயந்து உலகில் - தேவர்கள் தம் பகை கெடுத்தோன் திகழும் ஊரே.
உரை

சினந்து வருகின்ற எமனை அன்று (மார்க்கண்டேயருக்காக) உதைத்தவன் ஊர் கழுமலம். பெரிய தோணிபுரம். புகலி பொருந்திய வெங்குரு. புகலி இந்திரனூர். இருங்கமலத்து அயனூர் - பிரமபுரம். இன்பம் பொருந்திய திருப்புறவம். சிரபுரம். பூந்தராய் கொச்சை,காழி, சண்பை முருகனை முன் பெற்று உலகில் தேவர்களின் பகைவர்களாகிய அசுரர்களை அழித்தவன் திகழ்கின்ற ஊரே.

7

திகழ்மாட மலிசண்பை பூந்தராய் பிரமனூர் காழி தேசார்மிகுதோணி புரந்திகழும் வேணுபுரம் வயங்கொச்சை புறவம் விண்ணோர்புகழ்புகலி கழுமலஞ்சீர்ச் சிரபுரம்வெங் குருவெம்போர் மகிடற் செற்றுநிகழ்நீலி நின்மலன்றன் அடியிணைகள் பணிந்துலகில் நின்ற வூரே.
சொற்பிரிப்பு
திகழ் மாடம் மலி சண்பை, பூந்தராய், பிரமன்ஊர், காழி,தேசு ஆர்மிகு தோணிபுரம், திகழும் வேணுபுரம், வயம்கொச்சை, புறவம், விண்ணோர்புகழ் புகலி, கழுமலம், சீர்ச் சிரபுரம், வெங்குரு - வெம்போர் மகிடற் செற்று,நிகழ் நீலி,நின்மலன்தன் அடிஇணைகள் பணிந்து உலகில் நின்ற ஊரே.
உரை

விளங்கும் மாட மாளிகைகள் மிக்க சண்பை. பூந்தராய். பிரமனூர், காழி. ஒளிமிகு தோணிபுரம். திகழும் வேணுபுரம். கொச்சைவயம். புறவம். தேவர்கள் புகழும் புகலி. கழுமலம். புகழுடைய சிரபுரம். வெங்குரு. கொடிய போரினைச் செய்யும் மகிஷாசுரனைக் கொன்றழித்து புகழுடன் விளங்குகின்ற நீலி (கொற்றவை) மலமற்றவனாகிய சிவனின் அடியிணைகளைப் பணிந்து உலகில் நின்ற ஊரே.

8

நின்றமதில் சூழ்தருவெங் குருத்தோணி புரநிகழும் வேணு மன்றில்ஒன்றுகழு மலங்கொச்சை உயர்காழி சண்பைவளர் புறவ மோடிசென்றுபுறங் காக்குமூர் சிரபுரம்பூந் தராய்புகலி தேவர் கோனூர்வென்றிமலி பிரமபுரம் பூதங்கள் தாங்காக்க மிக்க வூரே.
சொற்பிரிப்பு
நின்ற மதில் சூழ் தரு வெங்குரு, தோணிபுரம், நிகழும் வேணு, மன்றில்ஒன்று கழுமலம், கொச்சை, உயர் காழி, சண்பை, வளர் புறவம், மோடிசென்று புறங்காக்கும் ஊர், சிரபுரம், பூந்தராய், புகலி, தேவர்கோன்ஊர்,வென்றி மலி பிரமபுரம் - பூதங்கள்தாம் காக்க மிக்க ஊரே
உரை

உயர்ந்த மதிலால் சூழப்பெற்ற வெங்குரு, தோணிபுரம், நின்று நிலவும் தோணிபுரம், கழுமலம், கொச்சைவயம், காழி, சண்பை, வளர்கின்ற திருப்புறவம், மோடி (கொற்றவை) காக்கும் ஊர் சிரபுரம், பூந்தராய், புகலி, இந்திரனூர் (வேணுபுரம்) வெற்றி மிக்க பிரமபுரம், பூதங்கள் தாங்கும் ஆக்கம் மிக்க ஊர்.

9

மிக்ககம லத்தயனூர் விளங்குபுற வஞ்சண்பை காழி கொச்சைதொக்கபொழிற் கழுமலந்தூத் தோணிபுரம் பூந்தராய் சிலம்பன் சேரூர்மைக்கொள்பொழில் வேணுபுரம் மதிற்புகலி வெங்குருவல் அரக்கன் திண்டோ ள்ஒக்கஇரு பதுமுடிகள் ஒருபதுமீ டழித்துகந்த எம்மா னூரே.
சொற்பிரிப்பு
மிக்க கமலத்து அயன்ஊர், விளங்கு புறவம், சண்பை, காழி, கொச்சை,தொக்க பொழில் கழுமலம், தூத் தோணிபுரம், பூந்தராய், சிலம்பன்சேர் ஊர்,மைக் கொள் பொழில் வேணுபுரம், மதில் புகலி, வெங்குரு, வல் அரக்கன் திண்தோள்ஒக்க இருபது முடிகள் ஒருபதும் ஈடு அழித்து உகந்த எம்மான் ஊரே.
உரை

தாமரை மலரின் மேலிருப்பவனாகிய அயனுடைய ஊர், பிரமபுரம். விளங்குகின்ற திருப்புறவம். சண்பை. காழி. கொச்சைவயம். சோலைகள் நெருங்கிய கழுமலம். தூய தோணிபுரம். திருப்பூந்தராய். சிலம்பன் சேரூர். சிரபுரம். கரிய மேகம்போல் நிழல்தங்கும் பொழில்கள் உடைய வேணுபுரம். மதில் உடைய புகலி. வெங்குரு. அரக்கனின் திண்ணிய தோள்கள் இருபதினையும் முடிகள் ஒரு பத்தினையும் ஒருசேர வலி அழித்த எம்மானுடைய ஊர்.

10

எம்மான்சேர் வெங்குருச்சீர்ச் சிலம்பனூர் கழுமலநற் புகலி யென்றும்பொய்ம்மாண்பி லோர்புறவங் கொச்சைபுரந் தரனூர்நற் றோணிபுரம் போர்க்கைம்மாவை யுரிசெய்தோன் காழியய னூர்தராய் சண்பை காரின்மெய்ம்மால்பூ மகனுணரா வகைதழலாய் விளங்கியஎம் இறைவ னூரே.
சொற்பிரிப்பு
எம்மான் சேர் வெங்குரு, சீர்ச் சிலம்பன்ஊர், கழுமலம், நல் புகலி, என்றும்பொய்ம்மாண்பு இலோர் புறவம், கொச்சை, புரந்தரன்ஊர், நல்- தோணிபுரம், போர்க்கைம்மாவை உரி செய்தோன் காழி, அயன்ஊர்,தராய், சண்பை - காரின்மெய்ம் மால், பூ மகன், உணரா வகை தழல்ஆய் விளங்கிய எம் இறைவன் ஊரே.
உரை

எம் தலைவன் சேர்ந்திருக்கும் வெங்குரு. பெருமை உடைய சிலம்பனூர் கழுமலம். நல்ல திருப்புகலி. என்றும் மெய்ப்புகழுடையோர் சேரும் திருப்புறவம், கொச்சைவயம், வேணுபுரம், நல்ல தோணிபுரம், போர் செய்யும் துதிக்கையுடைய களிற்றை உரித்தவனின் காழி,பிரமனூர், சண்பை, கார்மேகம் போலும் மேனியனாகிய திருமால், பிரமன் அறியவியலா வகை தழற்பிழம்பாய் நின்ற எம் இறைவன் ஊரே.

11

இறைவனமர் சண்பையெழிற் புறவம்அய னூர்இமையோர்க் கதிபன் சேரூர்குறைவில்புகழ்ப் புகலிவெங் குருத்தோணி புரங்குணமார் பூந்தராய் நீர்ச்சிறைமலிநற் சிரபுரஞ்சீர்க் காழிவளர் கொச்சைகழு மலந்தே சின்றிப்பறிதலையோ டமண்கையர் சாக்கியர்கள் பரிசறியா அம்மா னூரே.
சொற்பிரிப்பு
இறைவன் அமர் சண்பை, எழில் புறவம், அயன்ஊர், இமையோர்க்கு அதிபன் சேர் ஊர்குறைவு இல் புகழ்ப் புகலி, வெங்குரு, தோணிபுரம், குணம் ஆர் பூந்தராய், நீர்ச்சிறை மலி நல் சிரபுரம், சீர்க் காழி, வளர் கொச்சை, கழு மலம் - தேசு இன்றிப்பறி தலையோடு அமண்கையர், சாக்கியர்கள், பரிசு அறியா அம்மான் ஊரே.
உரை

இறைவனாகிய சிவபிரான் விரும்பி அமர்கின்ற சண்பை. எழிலுடைய புறவம். தேவர்களுக்கு அதிபனாகிய இந்திரன் சேரும் ஊர். குறைவில்லாத புகழுடைய திருப்புகலி. வெங்குரு. தோணிபுரம். நற்பண்புகள் உடைய பூந்தராய். நீர் அணைகள் மலிந்த நல்ல சிரபுரம். அழகிய காழி. கொச்சைவயம். கழுமலம். ஒளியின்றி மயிர் பறித்த தலையோடு சமணராகிய கீழ்மக்கள் சாக்கியர்களால் அறியமுடியாத இயல்புடைய அம்மானுடைய ஊரே.

12

அம்மான்சேர் கழுமலமாச் சிரபுரம்வெங் குருக்கொச்சை புறவ மஞ்சீர்மெய்ம்மானத் தொண்புகலி மிகுகாழி தோணிபுரந் தேவர் கோனூர்அம்மான்மன் னுயர்சண்பை தராய்அயனூர் வழிமுடக்கு மாவின் பாச்சல்தம்மானொன் றியஞான சம்பந்தன் தமிழ்கற்போர் தக்கோர் தாமே.
சொற்பிரிப்பு
அம்மான் சேர் கழுமலம், மாச் சிரபுரம், வெங்குரு, கொச்சை, புறவம்,அம் சீர்மெய்ம் மானத்து ஒண் புகலி, மிகு காழி, தோணிபுரம், தேவர்கோன்ஊர்,அம் மால் மன் உயர் சண்பை, தராய், அயன்ஊர், வழி முடக்கும் ஆவின் பாச்சல்தம்மான் ஒன்றிய ஞானசம்பந்தன் தமிழ் கற்போர், தக்கோர் தாமே.
உரை

இறைவன் சேர் கழுமலம்; பெருமையுடைய சிரபுரம். வெங்குரு. கொச்சைவயம். திருப்புறவம். அழகிய மெய்ம்மையான புகழ் ஒளியுடைய புகலி. காழி. தோணிபுரம். இந்திரனூர். உயர் சண்பை. பூந்தராய். பிரமனூர் வழி முடக்கும் ஆவின் பாச்சலின் இயல்பில் தம்பிரானை ஒன்றிய,   ஞானசம்பந்தன் பாடிய தமிழைக் கற்போர் பெருமை உடையவராவர்.