திருமுறை 2 · 2.072 · 11

திருநணா (பவானி)

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
நணா (பவானி)
நாடு
கொங்குநாடு

1

பந்தார் விரல்மடவாள் பாகமா நாகம்பூண் டேறதேறிஅந்தார் அரவணிந்த அம்மானிடம் போலும் அந்தண்சாரல்வந்தார் மடமந்தி கூத்தாட வார்பொழிலில் வண்டுபாடச்செந்தேன் தெளியொளிரத் தேமாக்கனி யுதிர்க்குந் திருநணாவே.
சொற்பிரிப்பு
பந்து ஆர் விரல் மடவாள் பாகமா, நாகம் பூண்டு, ஏறு அதுஏறி,அம் தார் அரவு அணிந்த அம்மான் இடம் போலும் - அம் தண்சாரல்வந்து ஆர் மடமந்தி கூத்துஆட, வார்பொழிலில் வண்டு பாட,செந்தேன் தெளி ஒளிர, தேமாக்கனி உதிர்க்கும் திரு நணாவே.
உரை

பந்தினைப் போன்ற மெல்விரல்களையுடைய உமையம்மையைத் தன் இடப்பாகத்தில் கொண்டு, நாகப்பாம்பினை அணியாகப் பூண்டு, இடப வாகனத்தில் ஏறி, அழகிய மாலைகளாகப் பாம்புகளை அணிந்த அருமகனின் இடம், (யாதெனில்) அழகிய குளிர்ந்த சாரல் உடையதும், காற்று வீச, இளமந்தி கூத்தாட, நீண்ட பொழிலில் வண்டுகள் பாட, செந்நிறத்தேனின் தெளிவு சொட்டத் தேமா கனியை உதிர்க்கும் திருநணாவே.

2

நாட்டம் பொலிந்திலங்கு நெற்றியினான் மற்றொருகை வீணை யேந்திஈட்டுந் துயரறுக்கும் எம்மா னிடம்போலு மிலைசூழ் கானில்ஓட்டந் தருமருவி வீழும் விசைகாட்ட முந்தூ ழோசைச்சேட்டார் மணிகள் அணியுந் திரைசேர்க்குந் திருநணாவே.
சொற்பிரிப்பு
நாட்டம் பொலிந்து இலங்கு நெற்றியினான், மற்றொரு கை வீணை ஏந்தி,ஈட்டும் துயர் அறுக்கும் எம்மான், இடம்போலும் - இலை சூழ் கானில்ஓட்டம் தரும் அருவி வீழும் விசை காட்ட, முந்தூழ் ஓசைச்சேட்டார் மணிகள் அணியும் திரை சேர்க்கும் திரு நணாவே.
உரை

கண் அழகாக விளங்கும் நெற்றியை உடையவன், ஒருகையில் வீணையைத் தழுவி, (மற்றொரு கையில் வீணையை மீட்டி) ஈட்டும் துயர் அனைத்தும் நீக்கும் எம் தலைவன் இடம் (யாதெனில்), இலைகள் நெருங்கிய காட்டகத்தில் மூங்கில் அசையும் ஓசை, சலசலவென்று ஓடும் அருவி வீழும் ஓசையைக் காட்ட, மலையின் உயரத்தில் இருக்கும் மணிகளை அருவியின் அலைகள் கொண்டு வந்து கரை சேர்க்கும் திருநணாவே.

3

நன்றாங் கிசைமொழிந்து நன்னுதலாள் பாகமாய் ஞாலமேத்தமின்தாங்கு செஞ்சடையெம் விகிதர்க்கிடம்போலும் விரைசூழ்வெற்பில்குன்றோங்கி வன்திரைகள் மோத மயிலாலுஞ் சாரற்செவ்விசென்றோங்கி வானவர்க ளேத்தி யடிபணியுந் திருநணாவே.
சொற்பிரிப்பு
நன்று ஆங்கு இசை மொழிந்து, நன்நுதலாள் பாகம்ஆய், ஞாலம் ஏத்தமின் தாங்கு செஞ்சடை எம் விகிர்தர்க்கு இடம்போலும் - விரை சூழ் வெற்பில்,குன்று ஓங்கி வன் திரைகள் மோத, மயில் ஆலும் சாரல், செவ்விசென்று ஓங்கி வானவர்கள் ஏத்தி அடி பணியும் திரு நணாவே.
உரை

இசையுடைய மறைகளை நன்றாகப் பாடியருளி, அழகிய நெற்றியுடைய உமையை இடப்பாகத்தில் கொண்டு, உலக மக்கள் வழிபட மின்னொளி வீசும் சடையைத் தாங்கிய எம்முடை விகிர்தற்கு இடம் (யாதெனில்) நறுமணம் சூழ்ந்த மலைமேல் ஒலியுடன் அருவி அலைகள் மோத அவ்வொலிக்கு ஏற்ப மயில்கள் நடமாடும் சாரல்களின் அழகினை மிக உடையதும் தேவர்கள் சென்று ஏத்தி அடிவணங்குவதுமாகிய திருநணாவே.

4

கையில் மழுவேந்திக் காலிற் சிலம்பணிந்து கரித்தோல் கொண்டுமெய்யில் முழுதணிந்த விகிர்தர்க் கிடம்போலு மிடைந்து வானோர்ஐயஅரனே பெருமான் அருளென்றென் றாதரிக்கச்செய்ய கமலம் பொழில்தே னளித்தியலுந் திருநணாவே.
சொற்பிரிப்பு
கையில் மழு ஏந்தி, காலில் சிலம்பு அணிந்து, கரித்தோல் கொண்டு,மெய்யில் முழுது அணிந்த விகிர்தர்க்கு இடம்போலும் - மிடைந்து வானோர்,''ஐய! அரனே! பெருமான்! அருள்!" என்று என்று ஆதரிக்க,செய்யகமலம் பொழில் தேன் அளித்து இயலும் திரு நணாவே.
உரை

கையில் மழுவாயுதத்தை உயர்த்தி, காலில் சிலம்பினை அணிந்து திருமேனியின்மேல் யானைத்தோல் முழுதுமாக அணிந்த விகிர்தர்க்கு இடம் (யாதெனில்) வானவர்கள் நெருங்கி, 'ஐய! அரனே! பெருமானே! அருள் செய்வீராக' என்று விரும்பிப் போற்ற, செந்தாமரை மலர்கள் சோலைகள் தேன்பொழியும் திருநணாவே.

5

முத்தேர் நகையா ளிடமாகத் தம்மார்பில் வெண்ணூல்பூண்டுதொத்தேர் மலர்சடையில் வைத்தாரிடம்போலுஞ் சோலைசூழ்ந்தஅத்தேன் அளியுண் களியா லிசைமுரல ஆலத்தும்பிதெத்தே யெனமுரலக் கேட்டார் வினைகெடுக்குந் திருநணாவே.
சொற்பிரிப்பு
முத்து ஏர் நகையாள் இடம்ஆக, தம் மார்பில் வெண்நூல் பூண்டுதொத்து ஏர் மலர் சடையில் வைத்தார் இடம்போலும் - சோலை சூழ்ந்தஅத்தேன் அளி உண் களியால் இசை முரல; ஆலத் தும்பி,தெத்தே என; முரலக் கேட்டார் வினை கெடுக்கும் திரு நணாவே.
உரை

முத்துப் போன்ற பற்களையுடைய உமாதேவியாரை இடப்பாகத்தில் கொண்டு, வெண்ணிறமான முப்புரிநூல் பூண்டு, அழகிய பூங்கொத்தைச் சடையில் வைத்த சிவபிரானின் இடம் (யாதெனில்), சோலைகளாற் சூழப் பெற்று, தேனுண்ட மகிழ்ச்சியினால் சடையில் வண்டுகள் இசை முரல, தும்பிகள் 'தெத்தே' என முரல, தன்பெயரைக் கேட்ட மாத்திரத்தே செவிமடுத்த நல்வினையாளரது தீவினையைப் போக்கும் திருநணாவே.

6

வில்லார் வரையாக மாநாகம் நாணாக வேடங்கொண்டுபுல்லார் புரமூன் றெரித்தார்க் கிடம்போலும் புலியுமானும்அல்லாத சாதிகளு மங்கழல்மேற் கைகூப்ப அடியார்கூடிச்செல்லா வருநெறிக்கே செல்ல அருள்புரியுந் திருநணாவே.
சொற்பிரிப்பு
வில் ஆர் வரை ஆக, மா நாகம் நாண் ஆக, வேடம் கொண்டுபுல்லார் புரம்மூன்று எரித்தார்க்கு இடம்போலும் - புலியும் மானும்அல்லாத சாதிகளும் அம் கழல்மேல் கைகூப்ப, அடியார் கூடி,செல்லா அருநெறிக்கே வல்ல அருள்புரியும் திரு நணாவே.
உரை

மேருமலை வில்லாகப் பொருந்த, பெரிய பாம்பு வில்லின் நாணாக, தன்னைக் கூடாத பகைவர்களின் மும்மதில்களையும் எரித்தவருக்கு இடம் (யாதெனில்), புலியும் மானும் (இவையிரண்டும் பகை நீங்கி நட்புற்று வழிபடுதல் போல) அவை அல்லாத சாதி விலங்குகளும் அழகிய கழலணிந்த திருவடிகளைக் கைகுவித்து வழிபட, அடியார்கள் அனைவரும் 'செல்லாத செந்நெறிக்கே செல்ல' அருள்புரியும் திருநணாவே.

7

கானார் களிற்றுரிவை மேல்மூடி ஆடரவொன் றரைமேற்சாத்திஊனார் தலையோட்டி லூணுகந்தான் தானுகந்த கோயிலெங்கும்நானா விதத்தால் விரதிகள் நல்நாமமே யேத்தி வாழ்த்தத்தேனார் மலர்கொண் டடியார் அடிவணங்குந் திருநணாவே.
சொற்பிரிப்பு
கான் ஆர் களிற்று உரிவை மேல் மூடி, ஆடுஅரவு ஒன்று அரைமேல் சாத்தி,ஊன் ஆர் தலைஓட்டில் ஊண் உகந்தான் தான் உகந்த கோயில் - எங்கும்நானாவிதத்தால் விரதிகள் நன்நாமமே ஏத்தி வாழ்த்ததேன் ஆர் மலர் கொண்டு அடியார் அடி வணங்கும் திரு நணாவே.
உரை

காட்டில் வாழும் யானையினின்றும் உரித்த தோலை உடம்பின் மேல் போர்த்து, ஆடுகின்ற பாம்பினை இடையில் கச்சாகக் கட்டி, ஊன் பொருந்திய மண்டையோட்டில் பிச்சை ஏற்று மகிழ்ந்தவன் வாழும் திருக்கோவில் (யாதெனில்) எல்லா இடங்களிலும், பலவிதங்களிலும் தவத்தவர்கள், யோகிகள், பத்தர், சித்தர் முதலியோர் பிறவிப் பிணிக்கு மருந்தாகிய தன்னுடைய திருநாமங்களைக் கூறி வாழ்த்த, தேனார் மலர் கொண்டு அடியவர்கள் தம்முடைய திருவடிகளை வணங்கும் திருநணாவே.

8

மன்னீ ரிலங்கையர்தங் கோமான் வலிதொலைய விரலாலூன்றிமுந்நீர்க் கடல்நஞ்சை யுண்டார்க் கிடம்போலும் முனைசேர்சீயம்அன்னீர் மைகுன்றி அழலால் விழிகுறைய வழியுமுன்றிற்செந்நீர் பரப்பச் சிறந்து கரியொளிக்குந் திருநணாவே.
சொற்பிரிப்பு
மன்நீர் இலங்கையர் தம்கோமான் வலி தொலைய விரலால் ஊன்றி,முந்நீர்க் - கடல்நஞ்சை உண்டார்க்கு இடம்போலும் - முழை சேர் சீயம்,அல்-நீர்மை குன்றி அழலால் விழி குறைய அழியும் முன்றில்,செந்நீர் பரப்பச் சிறந்து கரி ஒளிக்கும் திரு நணாவே.
உரை

கடலிலே உள்ள இலங்கைக்கு அரசன், இராவணனின் ஆற்றலைக் கால் பெருவிரலை ஊன்றி அழித்தவரும் கடலிற் பிறந்த நஞ்சை உண்டவரும் ஆகிய பெருமானுக்கு இடம் (யாதெனில்) பகை கொண்ட சிங்கம் தன் பகை குன்றி, போரிடில் வலிமை தோற்கும் முன்றிலில் இரத்தம் பரந்து கிடக்க சண்டையில் வென்ற யானை சிறந்து ஒளிரும் திருநணாவே.

9

மையார் மணிமிடறன் மங்கையோர் பங்குடையான் மனைகடோறும்கையார் பலியேற்ற கள்வன் இடம்போலுங் கழல்கள் நேடிப்பொய்யா மறையானும் பூமியளந்தானும் போற்ற மன்னிச்செய்யார் எரியாம் உருவமுற வணங்குந் திருநணாவே.
சொற்பிரிப்பு
மை ஆர் மணிமிடறன், மங்கை ஓர் பங்கு உடையான், மனைகள்தோறும்கை ஆர் பலி ஏற்ற கள்வன், இடம்போலும் - கழல்கள் நேடிப்பொய்யா மறையானும், பூமி அளந்தானும் போற்ற, மன்னிச்செய் ஆர் எரிஆம் உருவம் உற, வணங்கும் திரு நணாவே.
உரை

கருமணி போலும் கண்டத்தை உடையவன்; உமையைத் தன் மேனியில் ஒரு பாகமாக உடையவன்; இல்லங்கள் தோறும் கையில் பிச்சை ஏற்கும் கள்வன்; அவனுடைய இடம் (யாதெனில்) அவனுடைய திருவடிகளைத் தேடி பிரமனும் மூவடியால் உலகை அளந்தவனும் வழிபட அவர்களின் முன்னிலையில் செந்நிற நெருப்புப் பிழம்பாக உருவமுற வணங்கும் திருநணாவே.

10

ஆடை யொழித்தங் கமணே திரிந்துண்பார் அல்லல்பேசிமூடு ருவம்உகந் தார்உரை யகற்றும் மூர்த்திகோயில்ஓடு நதிசேரும் நித்திலமும் மொய்த்தகிலுங் கரையிற்சாரச்சேடர் சிறந்தேத்தத் தோன்றியொளி பெருகுந் திருநணாவே.
சொற்பிரிப்பு
ஆடை ஒழித்து அங்கு அமணே திரிந்து உண்பார், அல்லல் பேசிமூடு உருவம் உகந்தார், உரை அகற்றும் மூர்த்தி கோயில்ஓடும் நதி சேரும் நித்திலமும் மொய்த்த அகிலும் கரையில் சார,சேடர் சிறந்து ஏத்த, தோன்றி ஒளி பெருகும் திரு நணாவே.
உரை

ஆடையுடுத்தலை நீத்து அமணமாகத் திரிபவரும் முரட்டுத் தனமாகப் பேசிக்கொண்டு துணியால் உடலை மூடிக் கொள்வதை உகந்தவர்களும் கூறும் உரைகளை  விலக்கும் மூர்த்தி இருக்கும் திருக்கோயில் (யாதெனில்), ஓடுகின்ற சேருகின்ற முத்தும் அகிலும் கரையில் அடைய, பெரியோர்கள் சிறப்பாக வழிபட, செங்காந்தள் மலர்ந்து ஒளிரும் திருநணாவே.

11

கல்வித் தகத்தால் திரைசூழ் கடற்காழிக் கவுணிசீரார்நல்வித் தகத்தால் இனிதுணரும் ஞானசம் பந்தன் எண்ணும்சொல்வித் தகத்தால் இறைவன் திருநணா ஏத்து பாடல்வல்வித் தகத்தான் மொழிவார் பழியிலரிம் மண்ணின் மேலே.
சொற்பிரிப்பு
கல் வித்தகத்தால்-திரை சூழ் கடல் காழிக் கவுணி - சீர் ஆர்நல் வித்தகத்தால் இனிது உணரும் ஞானசம்பந்தன் - எண்ணும்சொல் வித்தகத்தால் இறைவன் திரு நணா ஏத்து பாடல்,வல் வித்தகத்தால் மொழிவார் பழி இலர், இம் மண்ணின்மேலே.
உரை

(சகரர்கள் தம்முடைய) திறமையால் தோண்டிய கடல் சூழ்ந்த சீகாழியில் கவுணியர்கள் குலத்தில் தோன்றிய நல்ல ஞானம் உடைய ஞானசம்பந்தன் கருத்தில் எண்ணிப் பெருமையுடைய திருநணாவை ஏத்திப்பாடிய பாடல்களைக் கற்ற வல்லமையால் மொழிபவர்கள் இம்மண்ணுலகில் பழியிலாதவர்களாவர்.