திருமுறை 2 · 2.069 · 11

திருப்பாண்டிக்கொடுமுடி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
பாண்டிக்கொடுமுடி
நாடு
கொங்குநாடு

1

பெண்ணமர் மேனியி னாரும் பிறைபுல்கு செஞ்சடை யாருங்கண்ணமர் நெற்றியி னாருங் காதம ருங்குழை யாரும்எண்ணம ருங்குணத் தாரும் இமையவ ரேத்த நின்றாரும்பண்ணமர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
பெண் அமர் மேனியினாரும், பிறை புல்கு செஞ்சடையாரும்கண் அமர் நெற்றியினாரும், காது அமரும் குழையாரும்,எண் அமரும் குணத்தாரும், இமையவர் ஏத்த நின்றாரும்,பண் அமர் பாடலினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

மாதினை ஒருபாகம் கொண்ட திருமேனியாரும், பிறை பொருந்திய சிவந்த சடையுடையவரும், கண் பொருந்திய நெற்றியை உடையவரும், காதில் பொருந்திய குழை உடையவரும், எட்டு என்னும் குணத்தை உடையவரும் தேவர்களும் வணங்கிப் பணிந்து துதிக்க நின்றவரும், பண் பொருந்திய திருப்பாடல்களாகி நின்றாரும் (யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

2

தனைக்கணி மாமலர் கொண்டு தாள்தொழு வாரவர் தங்கள்வினைப்பகை யாயின தீர்க்கும் விண்ணவர் விஞ்சையர் நெஞ்சில்நினைத்தெழு வார்துயர் தீர்ப்பார் நிரைவளை மங்கை நடுங்கப்பனைக்கைப் பகட்டுரி போர்த்தார் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
தனைக் கணி மா மலர் கொண்டு தாள் தொழுவார் அவர் தங்கள்வினைப்பகை ஆயின தீர்க்கும் விண்ணவர்; விஞ்சையர்; நெஞ்சில்நினைத்து எழுவார் துயர் தீர்ப்பார்; நிரை வளை மங்கை நடுங்கப்பனைக்கைப் பகட்டு உரி போர்த்தார் - பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

கொன்றையின் அழகிய மலர் கொண்டு தன் தாள் தொழுவார்களின் தீவினைகளாகிய பகையினை முழுதும் தீர்க்கும் மேலானவன்; தேவர்கள், வித்தியாதரர்கள் மற்றும் நெஞ்சில் நினைப்பவர்கள் மனத்துயர் தீர்ப்பவர்; வரிசையாக வளையல்கள் அணிந்த உமையம்மை அஞ்சப் பனை மரம் போன்ற நீண்ட கரத்தையுடைய யானையின் தோலினை உரித்துத் திருமேனியின் மேற்போர்த்தார். அவர் யாரெனில் திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

3

சடையமர் கொன்றையி னாருஞ் சாந்தவெண் ணீறணிந் தாரும்புடையமர் பூதத்தி னாரும் பொறிகிளர் பாம்பசைத் தாரும்விடையம ருங்கொடி யாரும் வெண்மழு மூவிலைச் சூலப்படையமர் கொள்கையி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
சடை அமர் கொன்றையினாரும் சாந்த வெண்நீறு அணிந்தாரும்,புடை அமர் பூதத்தினாரும், பொறி கிளர் பாம்பு அசைத்தாரும்விடை அமரும் கொடியாரும், வெண்மழு மூஇலைச்சூலப்படை அமர் கொள்கையினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

சடையில் கொன்றையைச் சூடியவரும், மணமுள்ள வெண்ணீற்றினை அணிந்தவரும் பக்கத்தில் பூத கணங்களை உடையவரும், புள்ளிகள் விளங்குகின்ற பாம்பினை அரையிற் கட்டியவரும், எருது எழுதிய கொடியுடையவரும், வெண்ணிற மழுவினையும் மூவிலைச் சூலத்தினையும் படையாகக் கொள்வதில் விருப்பம் உடையவரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

4

நறைவளர் கொன்றையி னாரும் ஞாலமெல் லாந்தொழு தேத்தக்கறைவளர் மாமிடற் றாருங் காடரங் காக்கன லேந்திமறைவளர் பாடலி னோடு மண்முழ வங்குழல் மொந்தைபறைவளர் பாடலி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
நறை வளர் கொன்றையினாரும்; ஞாலம்எல்லாம் தொழுது ஏத்தகறை வளர் மா மிடற்றாரும்; காடு அரங்கா, கனல் ஏந்தி,மறை வளர் பாடலினோடு, மண்முழவம், குழல், மொந்தைபறை வளர் பாடலினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

தேன் மிகுந்த கொன்றை மலரை அணிந்தவரும், உலகமெல்லாம் தொழுது வழிபடும் கறையுடைய கரிய மிடற்றினை உடையவரும், இடுகாடே ஆடும் அரங்காக, அனலினை ஏந்திக் கொண்டு வேதப் பாடலினொடு மார்ச்சனையுடைய முழவம் குழல் மொந்தை பறை ஒலிக்கப் பாடலினாரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

5

போகமு மின்பமு மாகிப் போற்றியென் பாரவர் தங்கள்ஆகமு றைவிட மாக அமர்ந்தவர் கொன்றையி னோடும்நாகமுந் திங்களுஞ் சூடி நன்னுதல் மங்கைதன் மேனிப்பாகம் உகந்தவர் தாமும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
போகமும் இன்பமும் ஆகி, " போற்றி!" என்பார் அவர்தங்கள்ஆகம் உறைவுஇடம் ஆக அமர்ந்தவர் - கொன்றையினோடும்நாகமும் திங்களும் சூடி, நன்நுதல் மங்கைதன் மேனிப்பாகம் உகந்தவர்தாமும் பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

(கட்டுண்ட) உயிருக்குச் சிற்றின்பமும், (முத்தியில்) வீட்டின்பமாகிய சிவபோகமுமாகி, 'போற்றி' என வணங்குவோரின் உடல் இடமாகக் கொண்டு அமர்ந்தவர், கொன்றையினுடன் பாம்பையும் பிறையையும் சூடி அழகிய நெற்றியுடைய உமை நங்கையைப் பாகமாக விரும்பியவர்தாம், ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

6

கடிபடு கூவிளம் மத்தங் கமழ்சடை மேலுடை யாரும்பொடிபட முப்புரஞ் செற்ற பொருசிலை யொன்றுடை யாரும்வடிவுடை மங்கைதன் னோடு மணம்படு கொள்கையி னாரும்படிபடு கோலத்தி னாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
கடி படு கூவிளம் மத்தம் கமழ் சடைமேல் உடையாரும்பொடிபட முப்புரம் செற்ற பொருசிலை ஒன்று உடையாரும்வடிவு உடை மங்கைதன்னோடு மணம் படுகொள்கையினாரும்,படிபடு கோலத்தினாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

மணமுள்ள வில்வம் ஊமத்தை ஆகிய பூக்களின் மணம் கமழுகின்ற சடையைச் சிரசின்மேல் உடையவரும், திரிபுரம் மூன்றும் சாம்பலாக எரித்து அழித்த போர்வில்லொன்று உடையாரும், அழகிய மங்கை தன்னோடு கூடிய கொள்கையினை உடையவரும் எல்லா உருவங்களுக்கும் காரணமான வடிவத்தை உடையவரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

7

ஊனமர் வெண்டலை யேந்தி உண்பலிக் கென்றுழல் வாருந்தேனம ரும்மொழி மாது சேர்திரு மேனியி னாரும்கானமர் மஞ்ஞைக ளாலுங் காவிரிக் கோலக் கரைமேல்பானல நீறணி வாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
ஊன் அமர் வெண்தலை ஏந்தி உண் பலிக்கு என்றுஉழல்வாரும்தேன் அமரும்மொழிமாது சேர் திருமேனியினாரும்கான் அமர் மஞ்ஞைகள் ஆலும் காவிரிக் கோலக் கரைமேல்பால்நலநீறு அணிவாரும் - பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

மாமிசம் பொருந்திய வெள்ளை மண்டையோட்டை ஏந்தி உண்ணுகின்ற பிச்சைக்கென்று திரிவாரும், தேன்போல இனிமை பயக்கும் மொழிபேசும் பண்ணார் மொழியம்மை கலந்த திருமேனியுடையாரும் முல்லை நிலத்தில் பொருந்திய மயில்கள் ஆடும் காவிரியின் அழகிய கரைமேல் பால் போன்ற வெண்ணீறு அணிவாரும் ஆகிய (அவர் யாரெனில்) திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

8

புரந்தரன் தன்னொடு வானோர் போற்றியென் றேத்தநின் றாரும்பெருந்திறல் வாளரக் கன்னைப் பேரிடர் செய்துகந் தாருங்கருந்திரை மாமிடற் றாருங் காரகில் பன்மணி யுந்திப்பரந்திழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
புரந்தரன்தன்னொடு வானோர் போற்றி!” என்று ஏத்த நின்றாரும்,பெருந்திறல் வாள் அரக்க(ன்)னைப் பேர் இடர் செய்து உகந்தாரும், கருந்திரை மா மிடற்றாரும் - கார் அகில் பல்மணி உந்திப் பரந்து இழி காவிரிப் பாங்கர்ப் பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

இந்திரன் தன்னோடு வானவர்கள் 'போற்றி' என்று வழிபட நின்றவரும், பேராற்றல் வாய்ந்த வாளை ஏந்திய அரக்கனைப் பெருந்துன்பப்படச் செய்து பின் விரும்பி அருளியவரும், கருங்கடல் நஞ்சினை உண்ட கரிய மிடற்றை உடையவரும், (யாரெனில்) கரிய அகில், பன்மணிகள்முதலியவற்றை அடித்துக் கொண்டு பரந்து பாயும் காவிரியின் பாங்கரில் திருப்பாண்டிக் கொடுமுடியாரே.

9

திருமகள் காதலி னானுந் திகழ்தரு மாமலர் மேலைப்பெருமக னும்மவர் காணாப் பேரழ லாகிய பெம்மான்மருமலி மென்மலர்ச் சந்து வந்திழி காவிரி மாடேபருமணி நீர்த்துறை யாரும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
திருமகள்காதலினானும், திகழ்தரு மா மலர்மேலைப்பெருமகனும்(ம்), அவர் காணாப் பேர்அழல் ஆகிய பெம்மான்மரு மலி மென்மலர்ச் சந்து வந்து இழி காவிரிமாடேபரு மணி நீர்த்துறை ஆரும் பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

திருமகளின் காதலரான திருமாலும் தாமரை மலர் மேல் இருக்கும் பிதாமகனான பிரமனும் காண இயலாதவாறு பேரழலாக நின்ற பெருமான் (யாரெனில்) மணம் மலிந்த மென் மலர்களும் சந்தனமும் கொண்டு வந்து பாய்கின்ற காவிரியின் பக்கத்தில் பெரிய நீர்த்துறை பொருந்திய பாண்டிக் கொடுமுடியாரே.

10

புத்தரும் புந்தியி லாத சமணரும் பொய்ம்மொழி யல்லால்மெய்த்தவம் பேசிட மாட்டார் வேடம் பலபல வற்றால்சித்தருந் தேவருங் கூடிச் செழுமலர் நல்லன கொண்டுபத்தர்கள் தாம்பணிந் தேத்தும் பாண்டிக் கொடுமுடி யாரே.
சொற்பிரிப்பு
புத்தரும், புந்தி இலாத சமணரும், பொய்ம்மொழிஅல்லால்மெய்த்தவம் பேசிடமாட்டார்; வேடம்பலபலவற்றால்சித்தரும் தேவரும் கூடி, செழு மலர் நல்லன கொண்டு,பத்தர்கள் தாம் பணிந்து ஏத்தும் பாண்டிக்கொடுமுடியாரே.
உரை

புத்தர்களும் அறிவிலாத சமணரும் பொய்ம்மொழியல்லால் மெய்ம்மைத் தவம் பற்றி எதுவும் பேசமாட்டார்கள். திருவேடம் பலபலவற்றால் சித்தர்களும் தேவர்களும் கூடிச் செழுமையான மலர்களில் நல்லன கொண்டு பத்தர்களாகப் பணிந்தேத்தும் பாண்டிக் கொடுமுடியாரே.

11

கலமல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம் பந்தன்பலமல்கு வெண்டலை யேந்திப் பாண்டிக் கொடுமுடி தன்னைச்சொலமல்கு பாடல்கள் பத்துஞ் சொல்ல வல்லார் துயர்தீர்ந்துநலமல்கு சிந்தைய ராகி நன்னெறி யெய்துவர் தாமே.
சொற்பிரிப்பு
கலம் மல்கு தண்கடல் சூழ்ந்த காழியுள் ஞானசம்பந்தன்,பலம் மல்கு வெண்தலைஏந்தி பாண்டிக்கொடுமுடி தன்னைச்சொல மல்கு பாடல்கள் பத்தும் சொல்ல வல்லார் துயர் தீர்ந்து,நலம் மல்கு சிந்தையர் ஆகி, நன்னெறி எய்துவர் தாமே.
உரை

மரக்கலங்கள் மிகுந்த கடலால் சூழப்பெற்ற காழிநகருள் திருஞானசம்பந்தன் பயன் நிறைந்த வெண்டலை ஏந்தியும் பாண்டிக் கொடுமுடியாகிய தன்னைப் பாடிய சொல்லச் சொல்ல இன்பம் மல்கும் திருப்பாடல்கள் பத்தினையும் சொல்ல வல்லார் துயர்கள் நீங்கிப் பேரின்பம் நிறைந்த சிந்தையராகி நன்னெறியாகிய ஞானமார்க்கத்தை எய்துவர்.