1
சொற்பிரிப்பு
உரை
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர்- சிவலோகத்திலுள்ளவர், சிவமானவர். மேலது- திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம்-அழகு ,சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம்- ஆகமம். சிவாகமத்தில், சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவ சமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது -சிவம். 'ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்' - (திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன்- பாகன். திருஆலவாயான்- மதுரைத்தலத்தில் திருவாலவாய்க் கோவிலினுள் எழுந்தருளி இருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். 'கங்காளன் பூசும் கவசத்திருநீற்றை... பூசி மகிழ்வாரே யாமாகில்... சாரும் சிவகதி..' (திருமந்திரம்).