திருமுறை 2 · 2.063 · 11

திருஅரிசிற்கரைப்புத்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
அரிசிற்கரைப்புத்தூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

மின்னுஞ் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவேதுன்னுங் கடல்நஞ் சிருள்தோய் கண்டர் தொன்மூதூர்அன்னம் படியும் புனலார் அரிசில் அலைகொண்டுபொன்னும் மணியும் பொருதென் கரைமேற் புத்தூரே.
சொற்பிரிப்பு
மின்னும் சடைமேல் இளவெண் திங்கள் விளங்கவே,துன்னும் கடல்நஞ்சுஇருள் தோய் கண்டர் தொல்-மூதூர்அன்னம் படியும் புனல் ஆர் அரிசில் அலை கொண்டு,பொன்னும் மணியும் பொரு தென்கரைமேல் புத்தூரே.
உரை

பொன்னிற சடைமேல் இளமையும் வெண்ணிறமும் உடைய திங்கள் விளங்க, கடலில் துள்ளிய நஞ்சு இருளாகத் தோய்ந்த கண்டத்தை உடையவரின் தொன்மையும் முதுமையும் உடைய ஊர் (எதுவென்னில்), அன்னம் தங்கும் புனல் நிறைந்த அரிசிலாறு தன் அலையால் பொன்னையும் மணியையும் வீசிப் பொரும் தென் கரைமேல் உள்ள புத்தூரே.

2

மேவா அசுரர் மேவெயில் வேவ மலைவில்லால்ஏவார் எரிவெங் கணையா லெய்தான் எய்துமூர்நாவால் நாதன் நாமம்ஓதி நாடோறும்பூவால் நீராற் பூசுரர் போற்றும் புத்தூரே.
சொற்பிரிப்பு
மேவா அசுரர் மேவு எயில் வேவ, மலைவில்லால்,ஏ ஆர் எரி வெங்கணையால் எய்தான் எய்தும் ஊர்நாவால் நாதன் நாமம் ஓதி,நாள்தோறும்,பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.
உரை

பகைமையுடைய அசுரர்கள் மேவிய திரிபுரம் எரியால் வேவ மேருமலையாகிய வில்லால் ஏவப்படுகின்ற எரியுடைய கொடிய கணையினால் எய்தான் அடையும் ஊர்எதுவென்னில், நாவால் நாதன் நாமம் ஓதி நாள்தோறும் பூவால் நீரால் பூசுரர் போற்றும் புத்தூரே.

3

பல்லார் தலைசேர் மாலை சூடிப் பாம்பும்பூண்டெல்லா விடமும் வெண்ணீ றணிந்தோ ரேறேறிக்கல்லார் மங்கை பங்க ரேனுங் காணுங்கால்பொல்லா ரல்லர் அழகியர் புத்தூர்ப் புனிதரே.
சொற்பிரிப்பு
பல்ஆர்தலை சேர் மாலை சூடி, பாம்பும் பூண்டுஎல்லா இடமும் வெண்நீறு அணிந்து, ஓர் ஏறு ஏறி,கல் ஆர் மங்கை பங்கரேனும், காணுங்கால்,பொல்லார் அல்லர்; அழகியர் - புத்தூர்ப் புனிதரே.
உரை

பல்வரிசை கெடாது இருக்கின்ற தலைசேர் மாலை அணிந்து, பாம்பினை அணியாகப் பூண்டு, மெய்யெல்லாம் வெண்ணீறு பூசி, ஒப்பற்ற காளை வாகனத்தின் மேல் ஏறி வரும் மலைமங்கை பாகரேனும் காணுங்கால் பொலிவில்லாதவரல்லர், புத்தூர் புனிதர்அழகியரே.

4

வரியேர் வளையாள் அரிவை யஞ்ச வருகின்றகரியேர் உரிவை போர்த்த கடவுள் கருதுமூர்அரியேர் கழனிப் பழனஞ் சூழ்ந்தங்கழகாயபொரியேர் புன்கு சொரிபூஞ் சோலைப் புத்தூரே.
சொற்பிரிப்பு
வரி ஏர் வளையாள் அரிவை அஞ்ச, வருகின்றகரி ஏர் உரிவை போர்த்த கடவுள் கருதும் ஊர் -அரி ஏர் கழனிப் பழனம் சூழ்ந்து, அங்குஅழகுஆயபொரி ஏர் புன்கு சொரி பூஞ்சோலைப் புத்தூரே.
உரை

அழகிய நிறமுடைய வளையல்களை அணிந்த பெண் அஞ்சும்படியாக வருகின்ற யானையின் தோலை உரித்துப் போர்த்த கடவுள் விரும்பும் ஊர் எதுவென்னில், நெல்லரி மிக்க பழனங்கள் சூழ்ந்து, பொரி போன்ற புங்கம் பூக்களைச் சொரிகின்ற அழகாய பூஞ்சோலைகளை உடைய புத்தூரே.

5

என்போ டரவம் ஏனத்தெயிறோ டெழிலாமைமின்போற்புரிநூல் விரவிப்பூண்ட மணிமார்பர்அன்போ டுருகும் அடியார்க் கன்பர் அமருமூர்பொன்போ தலர்கோங் கோங்கு சோலைப் புத்தூரே
சொற்பிரிப்பு
என்போடு,அரவம், ஏனத்துஎயிறோடு, எழில் ஆமை,மின் போல் புரிநூல், விரவிப் பூண்ட மணிமார்பர்:அன்போடு உருகும் அடியார்க்கு அன்பர்; அமரும் ஊர்பொன்போது அலர் கோங்கு ஓங்கு சோலைப் புத்தூரே.
உரை

எலும்புடன் பாம்பு, பன்றியின் பல்லுடன் அழகிய ஆமையின் ஓடு, மின்னலைப் போல் புரிநூல், கலந்து பூண்ட அழகிய மார்பினை உடையவர்; அன்புடன் உள்ளம் உருகும் அடியவர்களுக்கு அன்பர்; இவர் விரும்பித் தங்கும் ஊர் எதுவெனில், பொன்னைப் போலப் பூக்கும் கோங்க மரச்சோலைகள் ஓங்கும் புத்தூரே.

6

வள்ளி முலைதோய் குமரன் தாதை வான்தோயும்வெள்ளி மலைபோல் விடையொன் றுடையான் மேவுமூர்தெள்ளி வருநீர் அரிசில் தென்பாற் சிறைவண்டும்புள்ளும் மலிபூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
சொற்பிரிப்பு
வள்ளி முலை தோய் குமரன் தாதை, வான் தோயும்வெள்ளிமலை போல் விடை ஒன்று உடையான், மேவும் ஊர் தெள்ளி வருநீர் அரிசில்- தென்பால், சிறைவண்டும்புள்ளும் மலி பூம் பொய்கை சூழ்ந்த புத்தூரே.
உரை

வள்ளியைத் தழுவும் குமரனின் தந்தை, வானளாவும் மலை போன்ற பெரிய விடையை வாகனமாக உடையவன் மேவும் ஊர் எதுவென்னில், தெளிந்து வரும் நீரையுடைய அரிசிலாற்றின் தென்பால் சிறகுகளையுடைய வண்டும் புள்ளும் மலிந்த அழகிய பொய்கை சூழ்ந்த புத்தூரே.

7

நிலந்த ணீரோ டனல்கால் விசும்பின் நீர்மையான்சிலந்தி செங்கட் சோழ னாகச் செய்தானூர்அலந்த அடியான் அற்றைக் கன்றோர் காசெய்திப்புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
சொற்பிரிப்பு
நிலம் தண்ணீரோடு அனல் கால் விசும்பின் நீர்மையான்,சிலந்தி செங்கண்சோழன்ஆகச் செய்தான், ஊர்அலந்த அடியான் அற்றைக்கு அன்று ஓர் காசு எய்தி,புலர்ந்த காலை மாலை போற்றும் புத்தூரே.
உரை

நிலம், தண்ணீர், அனல், காற்று, ஆகாயம் ஆகிய ஐம்பெரும் காரண பூதங்களின் இயல்புடையான்; சிலந்தியைச் சோழன் கோச்செங்கணானாகப் பிறக்கச் செய்தவனின் ஊர் எதுவெனில், சிவபூசைக்குப் பொருள் தட்டுப்பாடு வரத் துயரெய்திய அடியார் நாள்தோறும் ஒரு காசு பெற்றுப் பொழுது புலர்ந்த காலையிலும் மாலையிலும் வழிபாடு செய்யும் புத்தூரே.

8

இத்தேர் ஏக இம்மலை பேர்ப்பன் என்றேந்தும்பத்தோர் வாயான் வரைக்கீழ் அலறப் பாதந்தான்வைத்தா ரருள்செய் வரதன் மருவும் ஊரானபுத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
சொற்பிரிப்பு
இத்தேர் ஏக இம் மலை பேர்ப்பன்" என்று ஏந்தும்பத்துஓர்வாயான் வரைக்கீழ் அலற, பாதம்தான்வைத்து ஆர் அருள் செய் வரதன் மருவும்(ம்) ஊர்ஆனபுத்தூர் காணப் புகுவார் வினைகள் போகுமே.
உரை

என்னுடைய தேர் செல்ல இடையூறாக உள்ள இந்த மலையைப் பெயர்ப்பன்      என்று அதனை ஏந்தும் இராவணன் தன் பத்து வாயாலும் அலறப் பாதத்தை அழுத்தி வைத்தான்; பின் ஆரருள் செய்தான். அவ்வரதன் எழுந்தருளியுள்ள ஊரான அரிசிற்கரைப் புத்தூரைக் காண, தரிசனம் செய்ய நுழையும் அடியார்களுடைய வினைகள் நீங்கிப் போகும்.

9

முள்ளார் கமலத் தயன்மால் முடியோ டடிதேடஒள்ளா ரெரியா யுணர்தற் கரியான் ஊர்போலும்கள்ளார் நெய்தல் கழுநீ ராம்பல் கமலங்கள்புள்ளார் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
சொற்பிரிப்பு
முள் ஆர் கமலத்து அயன், மால், முடியோடு அடி தேட,ஒள்ஆர்எரிஆய் உணர்தற்கு அரியான் ஊர்போலும் -கள் ஆர் நெய்தல், கழுநீர்,ஆம்பல்,கமலங்கள்,புள் ஆர் பொய்கைப் பூப்பல தோன்றும் புத்தூரே.
உரை

முட்கள் நிறைந்த தண்டில் பூத்த தாமரை மலரில் வாழும் அயன், திருமால்      இருவரும் முடியுடன் அடி தேட, ஒளியுடைய தீப்பிழம்பாய் எழுந்து, அவர்கள் உணர்தற்கு அரியனாக நின்றவன் ஊர் எதுவெனில், தேன் நிறைந்த நெய்தல் பூ, கழுநீர்ப்பூ,ஆம்பல்பூ, தாமரைப்பூ ஆகிய நீர்ப்பூக்களும் நீர்ப்பறவைகளும் நிறைந்த பொய்கைகள் பல தோன்றும் புத்தூரே.

10

கையார்சோறு கவர்குண் டர்களுந் துவருண்டமெய்யார் போர்வை மண்டையர் சொல்லும்மெய்யல்லபொய்யா மொழியா லந்தணர்போற்றும் புத்தூரில்ஐயா என்பார்க் கையுற வின்றி யழகாமே.
சொற்பிரிப்பு
கை ஆர் சோறு கவர் குண்டர்களும், துவருண்டமெய் ஆர் போர்வை மண்டையர், சொல்லு மெய் அல்ல; "பொய்யா மொழியால் அந்தணர் போற்றும் புத்தூரில்ஐயா!" என்பார்க்கு, ஐயுறவு இன்றி அழகு ஆமே.
உரை

கையில் நிறைந்த சோற்றினைக் கவர்ந்து உண்ணும் அமண் குண்டர்கள் துவருண்ட ஆடையால் உடலைப் போர்த்த மண்டையர் (தேரர்) ஆகியோர் கூறுவன மெய்யல; பொய். பொய்யா மொழியாகிய வேதத்தினால் அந்தணர் போற்றும் புத்தூரில் ஐயா என்பாருக்குச் சந்தேகமின்றிச் சிவப்பொலிவு உண்டாகும்.

11

நறவங் கமழ்பூங் காழி ஞான சம்பந்தன்பொறிகொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்செறிவண் தமிழ்செய் மாலை செப்ப வல்லார்கள்அறவன் கழல்சேர்ந் தன்போ டின்பம் அடைவாரே.
சொற்பிரிப்பு
நறவம் கமழ் பூங் காழி ஞானசம்பந்தன்,பொறி கொள் அரவம் பூண்டான் ஆண்ட புத்தூர்மேல்,செறி வண்தமிழ் செய் மாலை செப்ப வல்லார்கள்,அறவன்கழல் சேர்ந்து, அன்போடு இன்பம் அடைவாரே.
உரை

தேன்மணம் கமழும் சீகாழி ஞானசம்பந்தன் பாம்பினைப் பூண்ட சிவபிரான் ஆண்ட புத்தூரின் மேல் சொல்லும் பொருளும் செறிந்த வளமான தமிழாற்செய்த மாலையைச்      சொல்ல வல்லார்கள், அறவனாகிய சிவனின் திருவடி சேர்ந்து அன்புடன் இன்பம் அடைவார்கள்.