திருமுறை 2 · 2.062 · 11

திருமீயச்சூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
மீயச்சூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

காயச் செவ்விக் காமற் காய்ந்து கங்கையைப்பாயப் படர்புன் சடையிற் பதித்த பரமேட்டிமாயச் சூர்அன் றறுத்த மைந்தன் தாதைதன்மீயச் சூரே தொழுது வினையை வீட்டுமே.
சொற்பிரிப்பு
காயச் செவ்விக் காமற் காய்ந்து, கங்கையைப்பாயப் படர்புன்சடையில் பதித்த பரமேட்டி;மாயச் சூர் அன்று அறுத்த மைந்தன் தாதை; தன்மீயச்சூரே தொழுது, வினையை வீட்டுமே!
உரை

உடலழகுடைய மன்மதனைச் சினந்து, பாயும் கங்கையைப் பொன்போலும் சடையிற் பதியச் செய்த பரமேட்டி, வஞ்சகமுடைய சூரனை அன்று அழித்த மைந்தனின் தந்தை தன்னுடைய திருமீயச்சூரைத் தொழுது பிறவிக்கு ஏதுவாகிய வினையைத் தீர்த்தொழிவீர்களாக.

2

பூவார் சடையின் முடிமேற் புனலர் அனல்கொள்வர்நாவார் மறையர் பிறையர் நறவெண் டலையேந்திஏவார் மலையே சிலையாக் கழியம் பெரிவாங்கிமேவார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
சொற்பிரிப்பு
பூ ஆர் சடையின்முடிமேல் புனலர்: அனல் கொள்வர்நா ஆர் மறையர்: பிறையர்; நற வெண்தலை ஏந்தி,ஏ ஆர் மலையே சிலையா, கழி அம்பு எரி வாங்கிமேவார் புரம்மூன்று எரித்தார் - மீயச்சூராரே.
உரை

கொன்றை மலர்கள் நிறைந்த சடையின் முடிமேல் கங்கையாறாகிய நீரை உடையவர்; அங்கையில் அனலைக் கொள்வர்; வேதங்களை அருளிய நாவினர்; பிறை சூடியவர்; நாற்றத்தை உடைய வெண்டலை ஏந்தியவர்; பெரிய மேருமலையையே வில்லாகக் கொண்டு கோலாகிய அம்பில் எரியை எய்து பகைவரது புரம் மூன்றையும் எரித்தார்; அவர் யாரெனில் மீயச்சூரரே.

3

பொன்னேர் கொன்றை மாலை புரளும் அகலத்தான்மின்னேர் சடைக ளுடையான் மீயச் சூரானைத்தன்னேர் பிறரில் லானைத் தலையால் வணங்குவார்அந் நே ரிமையோர் உலகம் எய்தல் அரிதன்றே.
சொற்பிரிப்பு
பொன் நேர் கொன்றைமாலை புரளும் அகலத்தான்மின் நேர் சடைகள் உடையான், மீயச்சூரானை,தன் நேர் பிறர் இல்லானை, தலையால் வணங்குவார்அந் நேர் இமையோர் உலகம் எய்தர் அரிது அன்றே.
உரை

பொன்னைப் போல ஒளியுடைய கொன்றை மாலை புரளும் மார்பினனும் மின்னல் போல் ஒளிர்கின்ற சடைகள் உடையானும் ஆகிய திருமீயச்சூரனை, தனக்கு நிகராகச் சொல்லப் பிறர் ஒருவர் இல்லாத பெரியோனைத் தலையால் வணங்குவார்க்கு அந்த நேர்மையுடைய தேவருலகத்தை அடைதல் அரிதன்று; எளிதே.

4

வேக மதநல் லியானை வெருவ வுரிபோர்த்துப்பாகம் உமையோ டாகப் படிதம் பலபாடநாகம் அரைமே லசைத்து நடமா டியநம்பன்மேகம் உரிஞ்சும் பொழில்சூழ் மீயச் சூரானே.
சொற்பிரிப்பு
வேக மத நல் யானை வெருவ உரி போர்த்து,பாகம் உமையோடு ஆக, படிதம்பல பாடநாகம் அரைமேல் அசைத்து நடம் ஆடிய நம்பன் -மேகம் உரிஞ்சும் பொழில் சூழ் மீயச்சூரானே.
உரை

மத வேகம் உடைய கொடிய யானையின் தோலை உரித்துப் போர்த்து இடப்பாகத்தில் உமை துதி பல பாட, பாம்பினை அரையில் கட்டி, நடனம் ஆடிய நம்பன் யாரெனில், மேகம் உராயும் பொழில்கள் சூழ்ந்த திருமீயச்சூரனே.

5

விடையார் கொடியார் சடைமேல் விளங்கும் பிறைவேடம்படையார் பூதஞ் சூழப் பாட லாடலார்பெடையார் வரிவண் டணையும் பிணைசேர் கொன்றையார்விடையார் நடையொன் றுடையார் மீயச் சூராரே
சொற்பிரிப்பு
விடை ஆர் கொடியார், சடைமேல்விளங்கும் பிறை வேடம்படை ஆர் பூதம் சூழப் பாடல்ஆடலார்,பெடை ஆர் வரிவண்டுஅணையும் பிணை சேர்கொன்றையார்,விடை ஆர் நடை ஒன்று உடையார் - மீயச்சூராரே.
உரை

இடபம் எழுதிய கொடியை உடையவர்; சடையின் மேல் விளங்கும் பிறையை உடைய திருவேடத்தார்; பூதப்படை சூழப் பாடுதலோடு ஆடுதலும் உடையார்; பெடையுடன் அழகிய வண்டுகள் அணையும் கொன்றை மாலை அணிந்தவர்; நடை வல்ல காளை வாகனம்ஒன்றுடையவர்; அவருடைய ஊர் திருமீயச்சூரே.

6

குளிருஞ் சடைகொள் முடிமேற் கோல மார்கொன்றைஒளிரும் பிறையொன் றுடையா னொருவன் கைகோடிநளிரும் மணிசூழ் மாலை நட்டம் நவில்நம்பன்மிளிரும் மரவம் உடையான் மீயச் சூரானே.
சொற்பிரிப்பு
குளிரும் சடை கொள் முடிமேல் கோலம் ஆர் கொன்றைஒளிரும் பிறை ஒன்று உடையான் ஒருவன், கை கோடிநளிரும் மணி சூழ் மாலை நட்டம் நவில் நம்பன்,மிளிரும் அரவம் உடையான் - மீயச்சூரானே.
உரை

குளிர்ச்சி கொண்ட திருச்சடைமேல் அழகாக நிறைந்த கொன்றை மலர்கள் விளங்கும்; அச்சடையில் பிறையொன்று உடையான்; ஒப்பற்றவன்; கையினை வளைத்துக் குளிரும் கருமையான இருள் சூழும் மாலைக் காலத்தில் திருக்கூத்து ஆடும் நம் பெருமான்; பிரளும் பாம்பினைக் கச்சாக உடையவன்; அவன் திருமீயச்சூரனே.

7

நீல வடிவர் மிடறு நெடியர் நிகரில்லார்கோல வடிவு தமதாங் கொள்கை யறிவொண்ணார்காலர் கழலர் கரியின் உரியர் மழுவாளர்மேலர் மதியர் விதியர் மீயச் சூராரே.
சொற்பிரிப்பு
நீலவடிவர் மிடறு, நெடியர், நிகர்இல்லார்கோல வடிவு தமது ஆம் கொள்கை அறிவு ஒண்ணார்,காலர், கழலர், கரியின் உரியர், மழுவாளர்மேலர், மதியர், விதியர் - மீயச்சூராரே.
உரை

கண்டம் கரியவர்; நீண்டவர்; தனக்கொப்பார் இல்லாதவர்; அவரது அழகிய வடிவு இதுதான் என வரையறுக்க முடியாதவர்; காலனைச் செற்ற காலர்; காலில் கழலை அணிந்தவர்; யானையின் தோலைத் தன் மேல் போர்த்தியவர்; மழுப்படை ஏந்தியவர்; மேலானவரும் ஞானசொரூபமும் ஆவர்; அவர் திருமீயச்சூரரே.

8

புலியின் உரிதோ லாடை பூசும் பொடிநீற்றர்ஒலிகொள் புனலோர் சடைமேற் கரந்தார் உமையஞ்சவலிய திரள்தோள் வன்கண் அரக்கர் கோன்தன்னைமெலிய வரைக்கீழ் அடர்த்தார் மீயச் சூராரே.
சொற்பிரிப்பு
புலியின்உரி-தோல் ஆடை, பூசும் பொடி-நீற்றர்,ஒலி கொள் புனல் ஓர் சடைமேல் கரந்தார், உமை அஞ்சவலிய திரள்தோள் வன்கண் அரக்கர்கோன் தன்னைமெலிய வரைக்கீழ் அடர்த்தார் - மீயச்சூராரே.
உரை

உரித்த புலியின் தோல் ஆடை; அவர் பூசும்பொடி திருநீறு; முழங்கும் ஓசையுடைய கங்கையாற்றை ஒப்பற்ற சடையில் மறைத்தவர்; உமையம்மை அச்சம் கொள்ள வலிமையான திரண்ட தோள்களை உடைய வன்கண் அரக்கர் அரசனாகிய இராவணனை அவன் மெலிய கயிலை மலைக்கீழ் நசுக்கினார்; அவருடைய ஊர் திருமீயச்சூர்.

9

காதின் மிளிருங் குழையர் கரிய கண்டத்தார்போதி லவனும் மாலுந் தொழப் பொங் கெரியானார்கோதி வரிவண் டறைபூம் பொய்கைப் புனல்மூழ்கிமேதி படியும் வயல்சூழ் மீயச் சூராரே.
சொற்பிரிப்பு
காதில் மிளிரும் குழையர், கரிய கண்டத்தார்போதிலவனும்,மாலும் தொழப் பொங்கு எரி ஆனார் -கோதி வரிவண்டு அறை பூம் பொய்கைப் புனல் மூழ்கிமேதி படியும் வயல் சூழ் மீயச்சூராரே.
உரை

காதில் விளங்கும் குழையை உடையவர்; நீலகண்டர்; பிரமனும் திருமாலும் தன்னைத் தொழப் பொங்கி எழும் நெருப்பானார்; அவர் யாரெனில், வரிகளை உடைய வண்டுகள் மலர்களைக் கோதி முரலும் அழகிய மலர்களையுடைய பொய்கையில் எருமைகள் மூழ்கிப் படியும் வயல் சூழ்ந்த திருமீயச்சூரரே.

10

கண்டார் நாணும் படியார் கலிங்க முடைபட்டைக்கொண்டார்சொல்லைக் குறுகா ருயர்ந்த கொள்கையார்பெண்டான் பாக முடையார் பெரிய வரைவில்லால்விண்டார் புரமூன் றெரித்தார் மீயச் சூராரே.
சொற்பிரிப்பு
கண்டார் நாணும் படியார், கலிங்கம் முடை பட்டைகொண்டார் சொல்லைக்குறுகார், உயர்ந்த கொள்கையார்,பெண்தான் பாகம்உடையார், பெரிய வரை வில்லால்விண்டார்,புரம்மூன்று எரித்தார், மீயச்சூராரே.
உரை

காண்பவர்கள் நாணம், வெட்கம் கொள்ளும்படியாக ஆடையின்றித் திரியும் சமணர்கள்; கலிங்கம் எனும் பட்டைத்துவர் தோய்ந்த ஆடையை உடுத்த பவுத்தர்கள் ஆகியோர் கூறும் பொய்யான சொற்களை உயர்ந்த கொள்கையார் நெருங்கார்; பெண்ணைப் பாகமாக உடையவர்; பெரிய மேருமலையை வில்லாக வளைத்துப் பகைவரின் முப்புரங்களை எரித்தார்; அவருடைய ஊர் திருமீயச்சூரே.

11

வேட முடைய பெருமா னுறையும் மீயச்சூர்நாடும் புகழார் புகலி ஞான சம்பந்தன்பாட லாய தமிழீ ரைந்தும் மொழிந்துள்கிஆடும் அடியார் அகல்வா னுலகம் அடைவாரே.
சொற்பிரிப்பு
வேடம் உடைய பெருமான் உறையும் மீயச்சூர்நாடும் புகழ் ஆர் புகலி ஞானசம்பந்தன்பாடல் ஆய தமிழ்ஈர்-ஐந்தும் மொழிந்து, உள்கி,ஆடும் அடியார், அகல் வான்உலகம் அடைவாரே.
உரை

பலப்பல வேடம் உடைய பெருமான்; அவர் உறையும் திருமீயச்சூரை விரும்பி, புகழ் நிறைந்த சீகாழி ஞானசம்பந்தன் பாடிய பாடலாகிய இப்பத்தினையும் பாடி. உள்ளத்தில் நினைந்து மகிழ்ந்து ஆடும் அடியார்கள் விரிந்த தேவலோகத்தை அடைவார். இது திண்ணமே.