திருமுறை 2 · 2.060 · 11

திருப்பாசூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
பாசூர்
நாடு
தொண்டைநாடு

1

சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்மைந்தர் மணாள ரென்ன மகிழ்வா ரூர்போலும்பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
சொற்பிரிப்பு
"சிந்தைஇடையார், தலையின்மிசையார், செஞ்சொல்லார்,வந்து மாலை வைகும்போழ்து என்மனத்து உள்ளார்,மைந்தர், மணாளர்” என்ன, மகிழ்வார் ஊர் போலும்பைந் தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
உரை

என் மனத்தில் உள்ளார்; தலையின் மேல் இருக்கிறார்; செம்மையான சொல்லில் நிறைந்துள்ளார்; மாலைக்காலம் வந்து தங்கும்போது 'என் மனத்துள் நிறைந்துள்ளமைந்தனே, மணாளா' என்று துதிக்க மகிழ்வாரின் ஊர் (எதுவெனில்), பசிய குளிர்ந்த மாதவிக் கொடிகளைக் கொண்ட சோலைகள் சூழ்ந்த பாசூரே.

2

பேரும் பொழுதும் பெயரும் பொழுதும் பெம்மானென்றாருந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர்போலும்.பாரின் மிசையார் பாட லோவாப் பாசூரே.
சொற்பிரிப்பு
பேரும்பொழுதும் பெயரும்பொழுதும் “பெம்மான்” என்றுஆரும்தனையும் அடியார் ஏத்த அருள் செய்வார்ஊரும் அரவம் உடையார் வாழும் ஊர் போலும்பாரின்மிசையார் பாடல் ஓவாப் பாசூரே.
உரை

இடம் விட்டுப் பெயரும் போதும் மீண்டும் வரும்போதும் இவ்விரண்டு பொழுதும் இறைவனை மனத்தில் நினைந்து அனுபவிக்கும் அடியார் 'பெம்மான்' என்று ஏத்த அருள் செய்வார்; ஊர்ந்து செல்கின்ற அரவத்தைப் பூணாக உடையவர் அவருடைய ஊர்(எதுவெனில்), மண்ணுலகத்தவரின் தோத்திரப்பாடல்களின் ஒலி ஒழியாத பாசூரே.

3

கையால் தொழுது தலைசாய்த் துள்ளங் கசிவார்கள்மெய்யார் குறையுந் துயருந் தீர்க்கும் விமலனார்நெய்யா டுதலஞ் சுடையார் நிலாவும் ஊர்போலும்பைவாய் நாகங் கோட லீனும் பாசூரே.
சொற்பிரிப்பு
கையால் தொழுது தலை சாய்த்து உள்ளம் கசிவார்கண்மெய் ஆர் குறையும் துயரும் தீர்க்கும் விமலனார்,நெய் ஆடுதல் அஞ்சு உடையார், நிலாவும் ஊர் போலும்பைவாய் நாகம் கோடல் ஈனும் பாசூரே.
உரை

கைகளைப் பெற்றதன் பயனாகத் தொழுது, தலை பெற்றதன் பயனாக வணங்கிஉள்ளம் வாய்ந்ததன் பயனாகக் கசிந்துருகி வழிபடுவோரின் உடலிற் பொருந்திய குறைகளையும் துயர்களையும் தீர்க்கும் விகிர்தனார், நெய் முதலிய ஆனஞ்சும் விரும்பி ஆடுதல் உடையார்         தங்குகின்ற ஊர் (எதுவெனில்), படம் வாய்ந்த நாகத்தின் தோற்றம் போலக் காந்தள் மலரும் பாசூரே.

4

பொங்கா டரவும் புனலுஞ் சடைமேல் பொலிவெய்தக்கொங்கார் கொன்றை சூடியென் னுள்ளங் குளிர்வித்தார்தங்கா தலியுந் தாமும் வாழும் ஊர்போலும்பைங்கான் முல்லை பல்லரும் பீனும் பாசூரே.
சொற்பிரிப்பு
பொங்கு ஆடுஅரவும் புனலும் சடைமேல் பொலிவு எய்த,கொங்கு ஆர் கொன்றை சூடி, என் உள்ளம் குளிர்வித்தார்தம் காதலியும் தாமும் வாழும் ஊர் போலும்பைங்கால் முல்லை பல் அரும்பு ஈனும் பாசூரே.
உரை

சீறி ஆடும் பாம்பும் புனலும் தம் சடைமீது பொலிவாக விளங்க, மணமுள்ள கொன்றை சூடி என்னுடைய உள்ளத்தைக் குளிர்வித்தவர், தம்முடைய காதலியாகிய உமையம்மையும் தாமும் வாழும் ஊர் (எதுவென்னில்), பசிய காம்புகளை உடையமுல்லைக்கொடி பற்களைப் போல அரும்புகளை ஈனும் பாசூரே.

5

ஆடற் புரியும் ஐவா யரவொன் றரைச்சாத்தும்சேடச் செல்வர் சிந்தையு ளென்றும் பிரியாதார்வாடற் றலையிற் பலிதேர் கையார் ஊர்போலும்பாடற் குயில்கள் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
சொற்பிரிப்பு
ஆடல் புரியும் ஐவாய் அரவு ஒன்று அரைச் சாத்தும்சேடச் செல்வர், சிந்தையுள் என்றும் பிரியாதார்,வாடல்-தலையில் பலி தேர் கையார் ஊர்போலும்பாடல் குயில்கள் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
உரை

படமெடுத்து ஆடுதலைச் செய்யும் ஐந்தலைப் பாம்பொன்றை அரையில் கட்டும் சேடராகிய செல்வர், என் சிந்தையை விட்டு என்றும் அகலாதவர்; ஈரம் இல்லாத மண்டையோட்டில் பிச்சை ஏற்கும் கையுடையார் வாழும் ஊர் (எதுவென்னில்), பாடுகின்ற குயில்கள் தங்கும் பூஞ்சோலைகளை உடைய பாசூரே.

6

கானின் றதிரக் கனல்வாய் நாகம் கச்சாகத்தோலொன் றுடையார் விடையார் தம்மைத் தொழுவார்கள்மால்கொண் டோட மையல் தீர்ப்பார் ஊர்போலும்பால்வெண் மதிதோய் மாடஞ்சூழ்ந்த பாசூரே.
சொற்பிரிப்பு
கால் நின்று அதிர, கனல் வாய் நாகம் கச்சுஆக,தோல் ஒன்று உடையார்; விடையார்; தம்மைத் தொழுவார்கள்மால் கொண்டுஓட மையல் தீர்ப்பார்; ஊர் போலும்பால்வெண்மதி தோய் மாடம் சூழ்ந்த பாசூரே.
உரை

கால் ஊன்றி நிலம் அதிர நடஞ்செய்ய, கொடிய நஞ்சினை உமிழும் வாய் உடைய நாகத்தைத் தம் கச்சாகவும், தோலை ஆடையாகவும் கொண்டவர்; இடப வாகனத்தார், அன்புடனே தம்மைத் தொழுவார்களின் அறிவு மயக்கம் ஓடத் தீர்ப்பார் ஊர் (எதுவெனில் ), பால் போல் வெண்மையான ஒளி வீசும் மதி அளாவும் உயரிய மாடங்களை உடைய பாசூரே.

7

கண்ணின் அயலே கண்ணொன் றுடையார் கழலுன்னிஎண்ணுந் தனையும் அடியா ரேத்த அருள்செய்வார்உண்ணின் றுருக உவகை தருவார் ஊர்போலும்பண்ணின் மொழியார் பாட லோவாப் பாசூரே.
சொற்பிரிப்பு
கண்ணின் அயலே கண் ஒன்று உடையார், கழல் உன்னிஎண்ணும் தனையும் அடியார் ஏத்த அருள்செய்வார்,உள்-நின்று உருக உவகை தருவார், ஊர்போலும்பண்ணின் மொழியார் பாடல் ஓவாப் பாசூரே.
உரை

வலக்கண்ணும் இடக்கண்ணும் அயலாகும் மேற்பக்கத்திலே நெற்றிக் கண் ஒன்றை உடையவர்; அவருடைய கழலணிந்த திருவடியை நினைந்து, அத்திருவடிச் சிறப்பினைக் கருதும் அடியவர்களுக்கு அருள் செய்வார்; உள்ளத்தில் நினைக்க உவகை தருவார்.அவருடைய ஊர் (எதுவெனில்), பண்ணைப் போல இனிமையாகப் பேசும் மகளிரின் பாடல் ஒழியாத பாசூரே.

8

தேசு குன்றாத் தெண்ணீ ரிலங்கைக் கோமானைக்கூச அடர்த்துக் கூர்வாள் கொடுப்பார் தம்மையேபேசிப் பிதற்றப் பெருமை தருவார் ஊர்போலும்பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
சொற்பிரிப்பு
தேசு குன்றாத் தெண்நீர் இலங்கைக் கோமானைக்கூசஅடர்த்துக் கூர்வாள் கொடுப்பார், தம்மையேபேசிப் பிதற்றப் பெருமை தருவார், ஊர்போலும்பாசித் தடமும் வயலும் சூழ்ந்த பாசூரே.
உரை

ஒளி குன்றாத, கடல் நடுவிலே உள்ள, இலங்கைக்கு அரசனாகிய இராவணன் நாணிக் கூசும்படி அடர்த்துப் பின் அவன் வணங்கக் கூர்வாள் கொடுத்தருளியவர்; தம்முடைய பெருமையைப் பேசிப் பிதற்றுவோருக்கு இம்மை நலங்களும் வீட்டின்பமும் தருபவரின் ஊர் (எதுவெனில்), நீர்ப்பாசியுடைய தடாகங்களும் வயலும் சூழ்ந்த பாசூரே'

9

நகுவாய் மலர்மேல் அயனும் நாகத் தணையானும்புகுவா யறியார் புறம்நின் றோரார் போற்றோவார்செகுவாய் உகுபற் றலைசேர் கையார் ஊர்போலும்பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.
சொற்பிரிப்பு
நகு வாய் மலர்மேல் அயனும், நாகத்துஅணையானும்,புகு வாய் அறியார், புறம் நின்று ஓரார், போற்று ஓவார்;செகு வாய் உகு பல்-தலை சேர் கையார் ஊர்போலும்பகுவாய் நாரை ஆரல் வாரும் பாசூரே.
உரை

விரிந்த தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும், பாம்பணைமேல் உறங்கும் திருமாலும் இறைவனைக் காணப் புகும் இடம் அறியாராகிப் புறத்தே நின்று துதித்தலை ஒழியார்; அழிந்த வாயிலிருந்து பற்கள் உதிர்ந்த பிரம கபாலம் சேரும் கை உடையவரின் ஊர் (எதுவெனில்), பிளந்த வாயை உடைய நாரை ஆரல் மீன்களை வாரிக் கொண்டு விழுங்கும் பாசூரே.

10

தூய வெயில்நின் றுழல்வார் துவர்தோய் ஆடையர்நாவில் வெய்ய சொல்லித் திரிவார் நயமில்லார்காவல் வேவக் கணையொன் றெய்தார் ஊர்போலும்பாவைக் குரவம் பயில்பூஞ் சோலைப் பாசூரே.
சொற்பிரிப்பு
தூய வெயில் நின்று உழல்வார், துவர் தோய் ஆடையார்,நாவில் வெய்ய சொல்லித் திரிவார் - நயம் இல்லார்;காவல் வேவக் கணைஒன்று எய்தார் ஊர்போலும்பாவைக் குரவம் பயில் பூஞ்சோலைப் பாசூரே.
உரை

கடுமையான வெயிலில் நின்று துன்பப்படுவோராகிய சமணர், துவராடை உடுத்த பவுத்தர் ஆகிய இவர்கள் நாவினில் கொடுமையான சொற்களைச் சொல்லித் திரிவர்.பேச்சில் நயம் இல்லாதவர்கள்; காவலைக் கொண்ட முப்புரம் எரியில் மூழ்க அம்பொன்றுஎய்தவருடைய ஊர் (எதுவெனில்), பாவை போல மலர்களை ஈனும் குரவமரங்கள் நிறைந்த பூஞ்சோலைகளை உடைய பாசூரே.

11

ஞானம் உணர்வான் காழி ஞான சம்பந்தன்தேனும் வண்டும் இன்னிசை பாடுந் திருப்பாசூர்க்கானம் முறைவார் கழல்சேர் பாடல் இவைவல்லார்ஊனம் இலராய் உம்பர் வானத் துறைவாரே.
சொற்பிரிப்பு
ஞானம் உணர்வான் காழி ஞானசம்பந்தன்,தேனும் வண்டும் இன்னிசை பாடும் திருப் பாசூர்க்கானம் உறைவார் கழல் சேர் பாடல்இவை வல்லார்,ஊனம் இலராய், உம்பர் வானத்து உறைவாரே.
உரை

உவமையிலாக் கலை ஞானமும் பவமதனை அறமாற்றும் உணர்வரிய மெய்ஞ்ஞானமும் உணர்ந்த காழி ஞானசம்பந்தன், தேனியும் வண்டும் இன்னிசை பாடும்திருப்பாசூர் கானம் உறைவார் திருவடிகளைப் பாடிய இப்பாடல்களை வல்லவர்கள் பிறப்பிறப்பாகிய குறைகள் இலராகி வானோர்க்கு உயர்ந்த உலகத்தில் வாழ்வார்கள்.