திருமுறை 2 · 2.059 · 11

சீகாழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நலங்கொள் முத்தும் மணியும் அணியுந் திரளோதங்கலங்கள் தன்னிற் கொண்டு கரைசேர் கலிக்காழிவலங்கொள் மழுவொன் றுடையாய் விடையா யெனஏத்திஅலங்கல் சூட்ட வல்லார்க் கடையா அருநோயே
சொற்பிரிப்பு
நலம் கொள் முத்தும் மணியும் அணியும் திரள் ஓதம்கலங்கள் தன்னில் கொண்டு கரை சேர் கலிக் காழி"வலம் கொள் மழு ஒன்று உடையாய்! விடையாய்!" என ஏத்தி,அலங்கல் சூட்ட வல்லார்க்கு அடையா அருநோயே.
உரை

அழகிய முத்தையும் மணியையும் அணியுடை கடலலைகள் மரக்கலன்களில் கொண்டு வந்து சேர்க்கும் செழிப்புள்ள காழி நகரில் வெற்றிக்குரிய வலிமை கொண்ட ஒப்பற்ற மழுவினை உடையாய்! விடை ஊர்தியாய்! எனத் துதித்து மாலை சூட்ட வல்லவர்களை, நீக்குதற்கு அரிய பிறவி முதலிய நோய்கள் வந்து அடையா.

2

ஊரார் உவரிச் சங்கம் வங்கங் கொடுவந்துகாரார் ஓதங் கரைமேல் உயர்த்துங் கலிக்காழிநீரார் சடையாய் நெற்றிக் கண்ணா என்றென்றுபேரா யிரமும் பிதற்றத் தீரும் பிணிதானே
சொற்பிரிப்பு
ஊர் ஆர் உவரிச் சங்கம் வங்கம் கொடுவந்துகார் ஆர் ஓதம் கரைமேல் உயர்த்தும் கலிக் காழி,“நீர் ஆர் சடையாய்! நெற்றிக்கண்ணா!" என்று என்றுபேர்ஆயிரமும் பிதற்ற, தீரும், பிணிதானே.
உரை

உப்புடைய கடலில் வாழும் ஊர்தலை உடைய சங்குகளை அலைகள் அடித்துக் கொண்டு வந்து கரைமேல் உயர்த்தும்; வளமுள்ள காழியில் கங்கையாறு நிறைந்த சடையினை உடையவனே! நெற்றிக் கண்ணனே! என்றென்று பேராயிரமும் பலமுறை சொல்லப் பிணி தீரும்.

3

வடிகொள் பொழிலில் மழலை வரிவண் டிசைசெய்யக்கடிகொள் போதில் தென்றல் அணையுங் கலிக்காழிமுடிகொள் சடையாய் முதல்வா என்று முயன்றேத்திஅடிகை தொழுவார்க் கில்லை அல்லல் அவலமே
சொற்பிரிப்பு
வடிகொள் பொழிவில் மழலை வரிவண்டு இசைசெய்ய,கடி கொள் போதில்-தென்றல் அணையும் கலிக் காழி,"முடி கொள் சடையாய்: முதல்வா!" என்று முயன்று ஏத்தி,அடி கைதொழுவார்க்கு இல்லை, அல்லல் அவலமே.
உரை

திருத்தமாக அமைந்த பூம்பொழிலில் மழலை போல் இனிமையாக வரி வண்டுகள் இசைக்க, மணமுடைய மலர்களில் தென்றல் அணையும் கலிக்காழியில் சடை முடியாய்! முதல்வா! என்று தவம் முயன்று ஏத்தி, திருவடியை அடிதொழுவார்க்கு, அவலமாகிய அல்லல் இல்லையாம்.

4

மனைக்கே யேற வளஞ்செய் பவளம் வளர்முத்தங்கனைக்குங் கடலுள் ஓதம் ஏறுங் கலிக்காழிப்பனைக்கைப் பகட்டீர் உரியாய் பெரியா யெனப்பேணிநினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே
சொற்பிரிப்பு
மனைக்கே ஏற வளம் செய் பவளம் வளர் முத்தம்கனைக்கும் கடலுள் ஓதம் ஏறும் கலிக் காழி,"பனைக்கைப் பகட்டு ஈர்உரியாய்! பெரியாய்!" எனப் பேணி,நினைக்க வல்ல அடியார் நெஞ்சில் நல்லாரே
உரை

செழிப்பான பவளம், வளர்ந்த முத்துக்கள் ஆகியன மனைக்கு ஏற, ஒலிக்கும் கடலுள் அலை ஏறும் காழியில், யானையின் ஈரமான தோலைப் போர்த்தீர்! பெரியாய்! என விரும்பி நினைக்க வல்ல அடியார் நல்ல நெஞ்சத்தவர் ஆவர்.

5

பரிதி யியங்கும் பாரிற் சீரார் பணியாலேகருதி விண்ணோர் மண்ணோர் விரும்புங் கலிக்காழிச்சுருதி மறைநான் கான செம்மை தருவானைக்கருதி யெழுமின் வழுவா வண்ணந் துயர்போமே
சொற்பிரிப்பு
பரிதி இயங்கும் பாரில் சீர் ஆர் பணியாலேகருதி விண்ணோர் மண்ணோர் விரும்பும் கலிக் காழி,சுருதி மறைநான்கு ஆன செம்மை தருவானைக்கருதி எழுமின், வழுவா வண்ணம்! துயர் போமே.
உரை

ஞாயிறு இயங்குகின்ற உலகினில் பெருமை உடைய திருத்தொண்டுகள் செய்யும் விருப்பத்துடன் விண்ணுலகத்தவரும் மண்ணுலகத்தவரும் விரும்பி வரும் காழியில் கேள்வியால் பயிலப்படும் நான்மறைகளான செம்மையைத் தருவானை நினைந்து எழுமின்! உங்கள் துயர் போகும்.

6

மந்த மருவும் பொழிலில் எழிலார் மதுவுண்டுகந்த மருவ வரிவண் டிசைசெய் கலிக்காழிப்பந்த நீங்க அருளும் பரனே யெனஏத்திச்சிந்தை செய்வார் செம்மை நீங்கா திருப்பாரே
சொற்பிரிப்பு
மந்தம் மருவும் பொழிலில் எழில் ஆர் மது உண்டு,கந்தம் மருவ, வரிவண்டு இசைசெய் கலிக் காழி"பந்தம் நீங்க அருளும் பரனே!" என ஏத்திச்சிந்தை செய்வார் செம்மை நீங்காது இருப்பாரே.
உரை

தென்றல் பொருந்தும் சோலையில் எழும் தேனை இனிது உண்டு மணம் பொருந்த அழகிய வண்டுகள் இசை முரலும் காழியில் பாசபந்தங்கள் நீங்க அருளுகின்ற தலைவனே! எனத் துதித்துத் தியானம் செய்வார் திருநின்ற செம்மை நீங்காதிருப்பார்.

7

புயலார் பூமி நாமம் ஓதிப் புகழ்மல்கக்கயலார் கண்ணார் பண்ணார் ஒலிசெய கலிக்காழிப்பயில்வான் தன்னைப் பத்தி யாரத் தொழுதேத்தமுயல்வார் தம்மேல் வெம்மைக் கூற்ற முடுகாதே
சொற்பிரிப்பு
புயல் ஆர் பூமி நாமம் ஓதி, புகழ் மல்க,கயல் ஆர் கண்ணார் பண் ஆர் ஒலிசெய் கலிக் காழிப்பயில்வான் தன்னைப் பத்தி ஆரத் தொழுது ஏத்தமுயல்வார் தம்மேல், வெம்மைக் கூற்றம் முடுகாதே.
உரை

நீர் நிறைந்த பூமியிலுள்ளோர் திருநாமங்களைப் பலகாலும் ஓதிப் புகழ் பெருக, கயல்மீன் போன்ற கண்களை உடைய மகளிர் பண் நிறைந்த இசை இசைக்கும் காழியுள் என்றும் உள்ளவன்தன்னைப் பத்தி நிறையத் தொழுது ஏத்த முயற்சி செய்வார்மீது கொடுங்கூற்றனின் கொடமை செல்லாது.

8

அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான் அடியார்க்குக்கரக்க கில்லா தருள்செய் பெருமான் கலிக்காழிப்பரக்கும் புகழான் தன்னை யேத்திப் பணிவார்மேல்பெருக்கும் இன்பந் துன்ப மான பிணிபோமே
சொற்பிரிப்பு
அரக்கன் முடிதோள் நெரிய அடர்த்தான், அடியார்க்குக்கரக்ககில்லாது அருள்செய் பெருமான், கலிக் காழிப்பரக்கும் புகழான் தன்னை ஏத்திப் பணிவார்மேல்,பெருக்கும், இன்பம் துன்பம்ஆன பிணி போமே.
உரை

அரக்கன் இராவணனின் முடிகளும் தோள்களும் நசுங்க அடர்த்தவனும், அடியவர்களுக்குத் தன் அருளை மறைக்காமல் அருள்பவனுமாகிய பெருமான், விழாக்கள்மலிந்த காழிப்பதியில் விரிந்த புகழை உடையவன், தன்னை ஏத்தி வழிபடுவார்மேல் இன்பத்தைப் பெருக்கும்; அவர்கள்மேல் வருந்துன்பமாகிய பிணி தாமே நீங்கும்.

9

மாணா யுலகங் கொண்ட மாலும் மலரோனுங்காணா வண்ணம் எரியாய் நிமிர்ந்தான் கலிக்காழிப்பூணார் முலையாள் பங்கத் தானைப் புகழ்ந்தேத்திக்கோணா நெஞ்சம் உடையார்க் கில்லைக் குற்றமே
சொற்பிரிப்பு
மாண்ஆய் உலகம் கொண்ட மாலும் மலரோனும்காணா வண்ணம் எரிஆய் நிமிர்ந்தான், கலிக் காழிப்பூண் ஆர் முலையாள் பங்கத்தானை, புகழ்ந்து ஏத்தி,கோணா நெஞ்சம் உடையார்க்கு இல்லை, குற்றமே.
உரை

பிரமச்சாரியாய் உலகத்தை அளந்த மாலும் பிரமனும் காண முடியாதபடி நெருப்பாக நிமிர்ந்தானின் காழியில் பூணார் முலை உமையாள்பங்கனைப் புகழ்ந்து ஏத்திக் கொண்டாடும் சிந்தைத் திருகல் இல்லாதவர்களுக்குப் பிறவிக்குக் காரணமான குற்றமில்லை.

10

அஞ்சி யல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்கஞ்சி காலை யுண்பார்க் கரியான் கலிக்காழித்தஞ்ச மாய தலைவன் தன்னை நினைவார்கள்துஞ்ச லில்லா நல்ல வுலகம் பெறுவாரே
சொற்பிரிப்பு
அஞ்சி அல்லல் மொழிந்து திரிவார் அமண்ஆதர்,கஞ்சி காலை உண்பார்க்கு, அரியான்; கலிக் காழித்தஞ்சம்ஆய தலைவன்; தன்னை நினைவார்கள்,துஞ்சல் இல்லா நல்ல உலகம் பெறுவாரே.
உரை

வினைக்கு அஞ்சி அல்லல் தரும் மொழிகளைப் பேசித்திரியும் சமணர்களாகிய அறிவில்லார்; கஞ்சியினைக் காலையில் உண்ணும் தேரர்கள் ஆகியவர் அறிவதற்கு அரியவன். விழவு மலிந்த காழியில் தன்னைத் தஞ்சம் அடைந்த அன்பர்களுக்குத் தஞ்சமாகிய தலைவன். அவனை நினைபவர்கள் சாதல் பிறப்பில்லாத நல்ல வீட்டுலகத்தைப் பெறுவரே.

11

ஊழி யாய பாரில் ஓங்கும் உயர்செல்வக்காழி யீசன் கழலே பேணுஞ் சம்பந்தன்தாழும் மனத்தால் உரைத்த தமிழ்கள் இவைவல்லார்வாழி நீங்கா வானோ ருலகில் மகிழ்வாரே.
சொற்பிரிப்பு
ஊழிஆய பாரில் ஓங்கும் உயர் செல்வக்காழி ஈசன் கழலே பேணும் சம்பந்தன்,தாழும் மனத்தால், உரைத்த தமிழ்கள் இவை வல்லார்,வாழி நீங்கா வானோர் உலகில் மகிழ்வாரே.
உரை

பிரளய காலத்திலும் அழியாத செல்வத்தை உடைய காழியீசன் திருவடிகளையே விரும்பும் சம்பந்தன் பணிந்தேத்தும் மனத்தால் உரைத்த தமிழ்ப்பாடல்கள் இவற்றைப் பாட வல்லவர்கள் வானோர் உலகில் நீங்காமல் மகிழ்வார்.