திருமுறை 2 · 2.054 · 11

திருப்புகலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
காந்தாரம்
தலம்
சீர்காழி - 03-புகலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உருவார்ந்த மெல்லியலோர் பாகமுடையீர் அடைவோர்க்குக்கருவார்ந்த வானுலகங் காட்டிக்கொடுத்தல் கருத்தானீர்பொருவார்ந்த தெண்கடலொண் சங்கந்திளைக்கும் பூம்புகலித்`திருவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
சொற்பிரிப்பு
உரு ஆர்ந்த மெல்லியல் ஓர் பாகம் உடையீர்! அடைவோர்க்குக்கரு ஆர்ந்த வான்உலகம் காட்டிக் கொடுத்தல் கருத்துஆனீர்!பொரு ஆர்ந்த தெண்கடல் ஒண்சங்கம் திளைக்கும் பூம் புகலி,திரு ஆர்ந்த கோயிலே கோயில்ஆகத் திகழ்ந்தீரே
உரை

திருமேனிப் பொலிவுடைய மெல்லியளை, உம் திருமேனியில் பாகமாக உடையவரே! உம்மை அடைந்தவருக்கு அருள் வாய்ந்த வானுலகத்தைக் காட்டிக் கொடுத்தலில் கருத்தாக உடையவரே! கரையில் மோதுகின்ற தெளிந்த கடலில் ஒளியுடைய சங்குகள் திளைக்கும் திருப்புகலியுள் செல்வமுடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

2

நீரார்ந்த செஞ்சடையீர் நிறையார் கழல்சேர் பாதத்தீர்ஊரார்ந்த சில்பலியீர் உழைமானுரிதோ லாடையீர்போரார்ந்த தெண்டிரைசென் றணையுங் கானற் பூம்புகலிச்சீரார்ந்த கோயிலே கோயிலாகச் சேர்ந்தீரே.
சொற்பிரிப்பு
நீர் ஆர்ந்த செஞ்சடையீர்! நிறை ஆர் கழல் சேர் பாதத்தீர்!ஊர் ஆர்ந்த சில்பலியீர்! உழைமான்உரி-தோல்ஆடையீர் போர் ஆர்ந்த தெண்திரை சென்று அணையும் கானல் பூம் புகலி,சீர் ஆர்ந்த கோயிலே கோயில்ஆகச் சேர்ந்தீரே
உரை

கங்கையாற்றைத் தாங்கிய சிவந்த சடையை உடையீர்! வரிசையான கழல்கள் சேர்ந்த திருவடியினீர்! ஊரில் சிறு பிச்சை கொள்வீர்! உழையாகிய மானின் தோலை ஆடையாக உடையீர்! மோதுகின்ற அலைகள் சென்று அணையும் கடற்காகங்கள் கொண்ட அழகிய திருப்புகலியில் அழகுடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

3

அழிமல்கு பூம்புனலும் அரவுஞ்சடைமே லடைவெய்தமொழிமல்கு மாமறையீர் கறையார் கண்டத் தெண்தோளீர்பொழின்மல்கு வண்டினங்கள் அறையுங்கானற் பூம்புகலிஎழில்மல்கு கோயிலே கோயிலாக இருந்தீரே.
சொற்பிரிப்பு
அழி மல்கு பூம் புனலும், அரவும், சடை மேல் அடைவு எய்த,மொழி மல்கு மா மறையீர்! கறை ஆர் கண்டத்து எண்தோளீர்!பொழில் மல்கு வண்டு இனங்கள் அறையும் கானல் பூம் புகலி,எழில் மல்கு கோயிலே கோயில்ஆக இருந்தீரே.
உரை

அழித்தல் வல்ல கங்கையின் அழகிய நீரும் பாம்பும் சடைமேல் தங்க, வாய்மொழியால் நிலைபெற்ற பெரிய வேதங்களை உடையீர்! நீலகண்டத்தையும் எட்டுத் தோள்களையும் உடையீர்! பூஞ்சோலைகளில் நிறைந்த வண்டினங்கள் ஒலிக்கும் கானங்களை உடைய அழகிய திருப்புகலியுள் எழில் நிறைந்த திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

4

கையிலார்ந்த வெண்மழுவொன் றுடையீர்க்கடிய கரியின்தோல்மயிலார்ந்த சாயல்மட மங்கைவெருவ மெய்போர்த்தீர்பயிலார்ந்த வேதியர்கள் மதியாய் விளங்கும் பைம்புகலிஎயிலார்ந்த கோயிலே கோயிலாக இருந்தீரே.
சொற்பிரிப்பு
கையில் ஆர்ந்த வெண்மழு ஒன்று உடையீர்! கடிய கரியின்தோல்மயில் ஆர்ந்த சாயல் மடமங்கை வெருவ, மெய் போர்த்தீர்!பயில் ஆர்ந்த வேதியர்கள் பதியாய் விளங்கும் பைம்புகலி,எயில் ஆர்ந்த கோயிலே கோயில்ஆக இசைந்தீரே.
உரை

கையில் ஏந்திய மழுவாயுதத்தை உடையீர்! மயில் போன்ற சாயலினை உடைய உமையம்மை அஞ்சத் திருமேனியின்மேல் சினமிக்க யானையின் தோலினைப் போர்த்தீர் ! மறை பயிலும் வேதியர்களின் பதியாக விளங்கும் திருப்புகலியுள் மதிலை உடைய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

5

நாவார்ந்த பாடலீர் ஆடலரவம் அரைக்கார்த்தீர்பாவார்ந்த பல்பொருளின் பயன்களானீர் அயன்பேணும்பூவார்ந்த பொய்கைகளும் வயலுஞ்சூழ்ந்த பொழிற்புகலித்தேவார்ந்த கோயிலே கோயிலாகத் திகழ்ந்தீரே.
சொற்பிரிப்பு
நா ஆர்ந்த பாடலீர்! ஆடல் அரவம் அரைக்கு ஆர்த்தீர்!பா ஆர்ந்த பல்பொருளின் பயன்கள் ஆனீர்! அயன் பேணும்பூஆர்ந்த பொய்கைகளும் வயலும் சூழ்ந்த பொழில் புகலி,தே ஆர்ந்த கோயிலே கோயில்ஆகத் திகழ்ந்தீரே.
உரை

நாவில் நிறைந்த வேதப் பாடல் உடையீர். படமெடுத்து ஆடுகின்ற பாம்பினை இடுப்பில் கச்சாகக் கட்டினீர். பாட்டும் அதன் பொருளும் பயனும் ஆனீர். பிரமன் விரும்பும், பூவார்ந்த பொய்கைகளும் வயலும் பொழில்களும் சூழ்ந்த திருப்புகலியுள் தெய்வீகம் வாய்ந்த திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு விளங்கினீரே!

6

மண்ணார்ந்த மண்முழவந் ததும்பமலையான் மகளென்னும்பெண்ணார்ந்த மெய்மகிழப் பேணியெரிகொண் டாடினீர்விண்ணார்ந்த மதியமிடை மாடத்தாரும் வியன்புகலிக்கண்ணார்ந்த கோயிலே கோயிலாகக் கலந்தீரே.
சொற்பிரிப்பு
மண் ஆர்ந்த மண்முழவம் ததும்ப, மலையான்மகள் என்னும்பெண் ஆர்ந்த மெய் மகிழப் பேணி, எரி கொண்டு ஆடினீர்!விண் ஆர்ந்த மதியம் இடை மாடத்து ஆரும் வியன்புகலி,கண் ஆர்ந்த கோயிலே கோயில்ஆகக் கலந்தீரே.
உரை

மண் பொருந்திய மத்தளம் ஒலிக்க, மலையான் மகளாகிய பார்வதி எனும் பெண் பொருந்திய பாகம் மகிழ, விரும்பி எரி ஏந்திக் கூத்தாடினீர். ஆகாயத்தில் பொருந்திய மதியம் தன் ஊடு செல்ல உயர்ந்த மாடங்களை உடைய அகன்ற திருப்புகலியின்கண் பொருந்திய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு தங்கினீர்.

7

களிபுல்கு வல்லவுணர் ஊர்மூன் றெரியக் கணைதொட்டீர்அளிபுல்கு பூமுடியீர் அமரரேத்த அருள்செய்தீர்தெளிபுல்கு தேன்இனமும் மலருள் விரைசேர் திண்புகலிஒளிபுல்கு கோயிலே கோயிலாக உகந்தீரே.
சொற்பிரிப்பு
களி புல்கு வல் அவுணர் ஊர்மூன்று எரியக் கணை தொட்டீர்!அளி புல்கு பூ முடியீர்! அமரர் ஏத்த அருள்செய்தீர்!தெளி புல்கு தேன் இனமும் அலருள் விரை சேர் திண் புகலி,ஒளி புல்கு கோயிலே கோயில்ஆக உகந்தீரே.
உரை

மதம் கொண்ட வலிய அவுணர்களுடைய கோட்டைகள் மூன்றும் எரிந்து விழக் கணை எய்தீர். வண்டுகள் தங்கும் பூக்களை முடியில் அணிந்தீர். தேவர்கள் ஏத்த அருள் புரிந்தீர். தெளிவு கொண்ட தேனும் தேன் வண்டுகளின் கூட்டமும் மலரின் மணமும் சேரும் திருப்புகலியுள் ஒளி பொருந்திய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே.

8

பரந்தோங்கு பல்புகழ்சேர் அரக்கர்கோனை வரைக்கீழிட்டுரந்தோன்றும் பாடல்கேட் டுகவையளித்தீர் உகவாதார்புரந்தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர் பூம்புகலிவரந்தோன்று கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
சொற்பிரிப்பு
பரந்து ஓங்கு பல்புகழ் சேர் அரக்கர்கோனை வரைக்கீழ் இட்டு.உரம் தோன்றும் பாடல் கேட்டு, உகவை அளித்தீர்! உகவாதார்புரம் தோன்று மும்மதிலும் எரியச் செற்றீர்! பூம் புகலி,வரம் தோன்று கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.
உரை

உலகெங்கும் பரவி ஓங்கிய புகழ் சேர்ந்த அரக்கர் கோன் இராவணனைக் கயிலை மலையின் கீழ் நசுக்கி, அவன் அறிவு சார்ந்த பாடல்களைப் பாடக் கேட்டு அவன் விரும்பியவற்றை அளித்தீர். உம்மை விரும்பாத அரக்கரின் நகரம் தோன்றும் மூன்று கோட்டைகளையும் எரித்து ஒழித்தீர். அழகிய திருப்புகலியில் வரந்தரும் திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே.

9

சலந்தாங்கு தாமரைமேல் அயனுந்தரணி யளந்தானுங்கலந்தோங்கி வந்திழிந்துங் காணாவண்ணங் கனலானீர்புலந்தாங்கி ஐம்புலனுஞ் செற்றார்வாழும் பூம்புகலிநலந்தாங்கு கோயிலே கோயிலாக நயந்தீரே.
சொற்பிரிப்பு
சலம் தாங்கு தாமரைமேல் அயனும் தரணி அளந்தானும்,கலந்தோங்கி வந்து இழிந்தும், காணா வண்ணம் கனல் ஆனீர்!புலம் தாங்கி ஐம்புலனும் செற்றார் வாழும் பூம் புகலி,நலம் தாங்கு கோயிலே கோயில்ஆக நயந்தீரே.
உரை

நீர் தாங்குகின்ற தாமரை மலர் மேல் இருக்கும் பிரமனும் உலகை மூவடியால் அளந்த திருமாலும் தம்மில்கூடி ஒருவன் அன்னமாக ஆகாயத்தில் பறந்து ஓங்கியும், மற்றவன் ஏனமாய்ப் பூமியைக் குடைந்து இழிந்தும் காணமுடியாதவாறு நெருப்பாக நின்றீர். ஐம்புலனையும் வென்று மெய்யுணர்வு கொண்டவர்கள் வாழும் பொலிவுடைய திருப்புகலியில் அழகிய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாக விரும்பினீரே.

10

நெடிதாய வன்சமணும் நிறைவொன்றில்லாச் சாக்கியருங்கடிதாய கட்டுரையாற் கழறமேலோர் பொருளானீர்பொடியாரும் மேனியினீர் புகலிமறையோர் புரிந்தேத்தவடிவாருங் கோயிலே கோயிலாக மகிழ்ந்தீரே.
சொற்பிரிப்பு
நெடிது ஆய வன்சமணும், நிறைவு ஒன்று இல்லாச் சாக்கியரும்,கடிதுஆய கட்டுரையால் கழற, மேல் ஓர் பொருள்ஆனீர்!பொடி ஆரும் மேனியினீர்! புகலி மறையோர் புரிந்து ஏத்த,வடிவு ஆரும் கோயிலே கோயில்ஆக மகிழ்ந்தீரே.
உரை

மிக வலிய சமணரும் சமயக் கொள்கையில் நிறைவில்லாத பவுத்தரும் நீண்ட மொழிகளால் உம்மைப் பழித்துப் பேச, அவர்களால் எய்த முடியாத மேலான மெய்ப்பொருளானீர். திருநீறு பூசிய மேனியினீர். திருப்புகலியில் வாழும் மறையோர்கள் போற்ற அழகிய திருக்கோயிலையே உம்முடைய கோயிலாகக் கொண்டு மகிழ்ந்தீரே.

11

ஒப்பரிய பூம்புகலி ஓங்குகோயில் மேயானைஅப்பரிசிற் பதியான அணிகொள்ஞான சம்பந்தன்செப்பரியதண் தமிழால் தெரிந்தபாட லிவைவல்லார்எப்பரிசில் இடர்நீங்கி இமையோருலகத் திருப்பாரே.
சொற்பிரிப்பு
ஒப்பு அரிய பூம் புகலி ஓங்கு கோயில் மேயானை,அப் பரிசில் பதிஆன அணி கொள் ஞானசம்பந்தன்,செப்ப(அ)ரிய தண்தமிழால் - தெரிந்த பாடல்இவை வல்லார்,எப்பரிசில் இடர் நீங்கி, இமையோர் உலகத்து இருப்பாரே.
உரை

தனக்கு ஒப்பில்லாத பொலிவுடைய திருப்புகலியுள் ஓங்கி உயர்ந்த கோயிலில் இருப்பவனை, அத்தகைய இயல்புடைய தலைவன் ஞானசம்பந்தன் அருள் பெறாதவர்கள் சொல்லுதற்கு அரிய குளிர்ந்த தமிழால் ஆராய்ந்து பாடிய பாடல்களாகிய இவற்றைப் பாட வல்லவர்கள் எல்லா வகையான இடர்களினின்றும் நீங்கி வானவருலகத்தில் இருப்பார்கள்.