திருமுறை 2 · 2.052 · 11

திருக்கோட்டாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
கோட்டாறு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

கருந்த டங்கணின் மாத ராரிசை செய்யக் காரதிர் கின்ற பூம்பொழிற்குருந்த மாதவியின் விரைமல்கு கோட்டாற்றில்இருந்த எம்பெரு மானை யுள்கி இணையடி தொழு தேத்தும் மாந்தர்கள்வருந்து மாறறியார் நெறிசேர்வர் வானூடே.
சொற்பிரிப்பு
கருந்தடங்கணின் மாதரார் இசைசெய்ய, கார் அதிர்கின்ற பூம்பொழில்குருந்தம் மாதவியின் விரை மல்கு கோட்டாற்றில்இருந்த எம்பெருமானை உள்கி, இணைஅடி தொழுது ஏத்தும் மாந்தர்கள்வருந்தும் ஆறு அறியார்; நெறி சேர்வர், வான்ஊடே.
உரை

கரிய, பெரிய கண்ணை உடைய மகளிர் இசைபாடி ஆட, கார் மேகங்கள் முழக்கம் செய்கின்ற மலர் பொழில்களில் குருந்தமரத்திற்படர்ந்த மாதவிக் கொடிகளின் நறுமணம் நிறைந்த திருக்கோட்டாற்றில் இருக்கும் எம்பெருமானை நினைந்து அவருடைய திருவடிகளைத் தொழுது ஏத்தும் மாந்தர்கள் துன்பத்தை அறிய மாட்டார்கள். மாறாக விண் வழியாகச் செல்லும் வீட்டு நெறியை அடைவர்.

2

நின்று மேய்ந்து நினைந்து மாகரி நீரொ டும்மலர் வேண்டி வான்மழைகுன்றின் நேர்ந்துகுத்திப் பணிசெய்யுங் கோட்டாற்றுள்என்றும் மன்னிய எம்பி ரான்கழல் ஏத்தி வானர சாள வல்லவர்பொன்று மாறறியார் புகழார்ந்த புண்ணியரே.
சொற்பிரிப்பு
நின்று மேய்ந்து, நினைந்து, மா கரி, நீரொடும் மலர் வேண்டி, வான் மழைகுன்றில் நேர்ந்து குத்திப் பணிசெய்யும் கோட்டாற்றுள்என்றும் மன்னிய எம்பிரான் கழல் ஏத்தி, வான்அரசு ஆள வல்லவர்பொன்றும் ஆறு அறியார்; புகழ் ஆர்ந்த புண்ணியரே.
உரை

ஓரிடத்தில் நின்று மேய்ந்த பெரிய யானை இறைவனை வழிபட நினைந்து நீரோடு மலர் வேண்டி வானில் குன்று போலிருந்த கரிய மேகத்தை உகுத்து மழை பொழிவித்துத் திருமஞ்சனம் செய்விக்கும் கோட்டாற்றுள், என்றும் தங்கிடும் எம்பிரானின் திருவடிகளைஏத்தித் தேவருலகம் எய்தி அரசாள வல்லவர் மீண்டும் பிறப்பெடுத்து சாகார். வீட்டுலகத்தைஅடைந்து புகழுடைப் புண்ணியர் ஆவார்.

3

விரவி நாளும் விழாவி டைப்பொலி தொண்டர் வந்து வியந்து பண்செயக்குரவ மாரும்நீழற் பொழில்மல்கு கோட்டாற்றில்அரவ நீள்சடை யானை யுள்கிநின் றாத ரித்துமுன் அன்பு செய்தடிபரவுமாறு வல்லார் பழிபற் றறுப்பாரே.
சொற்பிரிப்பு
விரவி நாளும் விழாஇடைப் பொலி தொண்டர் வந்து வியந்து பண்செய,குரவம் ஆரும் நீழல் பொழில் மல்கு கோட்டாற்றில்,அரவம் நீள்சடையானை உள்கி நின்று, ஆதரித்து, முன் அன்பு செய்து, அடிபரவும்ஆறு வல்லார் பழி பற்றுஅறுப்பாரே.
உரை

குரவ மரங்கள் நிழல் தரும் பொழில்கள் நிறைந்த கோட்டாற்றில் நாள்தோறும் நிகழ்கின்ற விழாக்களில் பொலிவுடன் தொண்டர்கள் வந்து கலந்து பண்ணுடன் புகழ்ந்து பாட, பாம்பு ஆடுகின்ற சடையுடைய பிரானை நினைந்து விரும்பி அன்பு செய்து திருவடியை வாழ்த்தும் முறைமையை அறிந்தவர்கள் பழியும் பற்றும் அறுப்பார்கள்.

4

அம்பின் நேர்விழி மங்கை மார்பலர் ஆட கம்பெறு மாட மாளிகைக்கொம்பி னேர்துகி லின்கொடியாடு கோட்டாற்றில்நம்ப னேநட னேந லந்திகழ் நாதனே யென்று காதல் செய்தவர்தம்பின் நேர்ந்தறியார் தடுமாற்ற வல்வினையே.
சொற்பிரிப்பு
அம்பின் நேர் விழி மங்கைமார்பலர் ஆடகம் பெறு மாடமாளிகைக்கொம்பின் நேர் துகிலின் கொடி ஆடு கோட்டாற்றில்,"நம்பனே! நடனே! நலந்திகழ் நாதனே!'' என்று காதல் செய்தவர்தம் பின் நேர்ந்து அறியார், தடுமாற்ற வல்வினையே.
உரை

கொம்பின்மேல் துகிற்கொடிகள் ஆடும் காட்சியுடைய திருக்கோட்டாற்றில் பொன் போல் ஒளிர்கின்ற மாளிகைகளில் அம்பினைப் போன்ற கூர்மையான விழிகளை உடைய மங்கையர்கள் பலர், 'நம்பனே, கூத்தனே, பேரின்பமளிக்கும் தலைவனே' என்று பத்தி செய்யவே, தமக்கு தடுமாற்றத்தைச் செய்யும் வலிய வினை நேர்ந்தறியார்.

5

பழைய தம்மடி யார்து திசெயப் பாரு ளோர்களும் விண்ணு ளோர்தொழக்குழலும் மொந்தை விழாவொலி செய்யுங் கோட்டாற்றில்கழலும் வண்சிலம் பும்மொ லிசெயக் கானி டைக்கண மேத்த ஆடியஅழக னென்றெழுவா ரணியாவர் வானவர்க்கே.
சொற்பிரிப்பு
“பழைய தம் அடியார் துதிசெய, பார்உளோர்களும் விண்உளோர் தொழ,குழலும் மொந்தை விழா ஒலி செய்யும் கோட்டாற்றில்,கழலும் வண் சிலம்பும்(ம்) ஒலி செய, கான்இடைக் கணம் ஏத்த ஆடியஅழகன்” என்று எழுவார், அணி ஆவர், வானவர்க்கே.
உரை

பழைய அடியவர்கள் தம்மை துதி செய்ய, மண்ணுலகத்து மக்களும்விண்ணுலகத்து தேவர்களும் தொழுமாறு, குழல், மொந்தை முதலிய கருவிகள் இசையொலிசெய்ய, திருக்கோட்டாற்றில் கழல்களும் வளமையான சிலம்பும் ஒலி செய, காட்டினில்பேய்க்கணம் துதிக்க, கூத்தாடிய அழகன் என்று வணங்குவார், தேவர்களுக்கு அணியாவர்.

6

பஞ்சின் மெல்லடி மாத ராடவர் பத்தர் சித்தர்கள் பண்பு வைகலும்கொஞ்சி இன்மொழியாற் தொழில்மல்கு கோட்டாற்றில்மஞ்ச னேமணி யேம ணிமிடற் றண்ண லேயென வுள்நெ கிழ்ந்தவர்துஞ்சு மாறறியார் பிறவார்இத் தொல்நிலத்தே.
சொற்பிரிப்பு
"பஞ்சின் மெல்அடி மாதர், ஆடவர், பத்தர், சித்தர்கள், பண்பு வைகலும்கொஞ்சி இன்மொழியால் - தொழில் மல்கு கோட்டாற்றில்,மஞ்சனே! மணியே! மணிமிடற்று அண்ணலே!" என உள்-நெகிழ்ந்தவர்,துஞ்சும் ஆறு அறியார்; பிறவார், இத்தொல்-நிலத்தே.
உரை

பஞ்சு போன்ற மென்மையான பாதத்தையுடைய மகளிர்களும் ஆடவர்களும், அன்பர்களும் சித்தர்களும் தன்னுடைய பண்புகளை, நாள்தோறும் கொஞ்சும் இனிய மொழியால் போற்றித் தொழும் தொழில் மல்கிய திருக்கோட்டாற்றில், 'மைந்தனே, மணியே, நீலகண்டனே' என உள்ளம் நெகிழ்ந்து துதிப்பவர் இத்தொல் உலகில் இறத்தலும் இலர், பிறத்தலும் இலர்.

7

கலவ மாமயி லாளொர் பங்கனைக் கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசைகுலவு மாறுவல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்நிலவு மாமதி சேர்ச டையுடை நின்ம லாவென வுன்னு வாரவர்உலவு வானவரின் உயர்வாகுவ துண்மையதே.
சொற்பிரிப்பு
“கலவமாமயிலாள் ஒர் பங்கனைக் கண்டு, கண்மிசை நீர் நெகிழ்த்து, இசைகுலவும்ஆறு வல்லார் குடிகொண்ட கோட்டாற்றில்,நிலவ மா மதி சேர் சடை உடை நின்மலா!" என உன்னுவார் அவர்உலவு வானவரின் உயர்வு ஆகுவது உண்மையதே.
உரை

தோகை மயில் போன்ற சாயல் உடையளாகிய உமையாளைத் தன் இடப்பாகத்தில் உடையவனைக் கண்டு, கண்களில் நீர் பெருக்கி, அவன் புகழைப் போற்றி இசைக்க வல்லவர் வாழும்திருக்கோட்டாற்றில், பிறையணிப் பெருமானே! மலமற்ற தூயோனே! எனத் தியானிப்பவர்கள் விண்ணில் உலவும் தேவர்களுக்கு மேலானவராகுவர். இது உண்மை.

8

வண்ட லார்வயற் சாலி யாலைவ ளம்பொ லிந்திட வார்பு னல்திரைகொண்ட லார்கொணர்ந் தங்குலவுந்திகழ் கோட்டாற்றில்தொண்டெ லாந்துதி செய்ய நின்ற தொழில னேகழ லால ரக்கனைமிண்டெ லாந்தவிர்த் தென்னுகந்திட்ட வெற்றிமையே.
சொற்பிரிப்பு
வண்டல் ஆர் வயல் சாலி ஆலை வளம் பொலிந்திட, வார் புனல்-திரைகொண்டலார் கொணர்ந்து அங்கு உலவும் திகழ் கோட்டாற்றில்,தொண்டுஎலாம் துதி செய்ய நின்ற தொழிலனே! கழலால் அரக்கனைமிண்டு எலாம் தவிர்த்து, என் உகந்திட்ட வெற்றிமையே?
உரை

மிக்க வண்டலினைச் சாலி, கரும்பு முதலியன வளமாக விளையுமாறு வயலில் கார்காலத்துப் பெருகிய ஆறு கொண்டு வந்து கொட்டி உலவும் திருக்கோட்டாற்றில், தொண்டர்கள் துதி செய்ய அருள் செய்து நின்றவனே' கழலணிந்த திருவடியால், இராவணனை, அவனுடைய செருக்கெல்லாம் ஒழியச் செய்து, பின் அவனுக்கு உகந்து அருள்செய்திட்ட வெற்றி என் கருதி?

9

கருதி வந்தடி யார்தொ ழுதெழக் கண்ண னோடயன் தேட ஆனையின்குருதி மெய்கலப்ப உரிகொண்டு கோட்டாற்றில்விருதி னான்மட மாதும் நீயும்வி யப்பொ டும்முயர் கோயில் மேவிவெள்எருதுகந் தவனே இரங்காயுன தின்னருளே.
சொற்பிரிப்பு
கருதி வந்து அடியார் தொழுது எழ, கண்ணனோடு அயன் தேட, ஆனையின்குருதி மெய் கலப்ப உரி கொண்டு, கோட்டாற்றில்,விருதினால் மடமாதும் நீயும் வியப்பொடும் உயர் கோயில் மேவி, வெள்எருது உகந்தவனே! இரங்காய், உனது இன்அருளே!
உரை

அடியார் கருதி வந்து அடி தொழத், திருமாலோடு பிரமனும் தேட, ஆனையின் தோலை இரத்தம் திருமேனியில் பட உரித்துப் போர்த்துக் கொண்டு, திருக்கோட்டாற்றில் அந்த வெற்றியால் வந்த விருதுடன் உமையம்மையும் நீயும் பாராட்டொடும் திருக்கோயிலில் இருப்பவனே! வெண்ணிறக் காளையினை விரும்பியவனே! உனது இனிய அருளை என் மாட்டு இரங்கி அருள்வாயாக.

10

உடையி லாதுழல் கின்ற குண்டரும் ஊண ருந்தவத் தாய சாக்கியர்கொடையி லாமனத்தார் குறையாருங் கோட்டாற்றில்படையி லார்மழு வேந்தி யாடிய பண்ப னேயிவ ரென்கொ லோநுனைஅடைகி லாதவண்ணம் அருளாயுன் னடியவர்க்கே.
சொற்பிரிப்பு
உடை இலாது உழல்கின்ற குண்டரும், ஊண் அருந்தவத்து ஆய சாக்கியர்,கொடைஇலா மனத்தார்; குறை ஆரும் கோட்டாற்றில்,படை இலார் மழு ஏந்தி ஆடிய பண்பனே! இவர் என்கொலோ, நுனைஅடைகிலாத வண்ணம் அருளாய், உன் அடியவர்க்கே!
உரை

உடை அணியாது அலைந்து திரியும் சமணர்களும், பிச்சை வாங்கி உண்ணுவதையே தவமாகக் கொண்ட சாக்கியர்களும் பிறருக்குக் கொடுத்து அறியாத மனத்தவர்கள். பிச்சை கேட்டு அலையும் திருக்கோட்டாற்றில், பிறர் மேல் செலுத்தாத மழுவினை ஏந்திக் கூத்தாடிய இயல்பினை உடையவனே! இவர்கள் (சமணரும் பவுத்தரும்) உன் துணையைப் பெறாத காரணம் என்ன என்று உன் அடியவர்களாகிய (எமக்குத்) தெரிவித்து அருள்வாயாக.

11

கால னைக்கழ லாலுதைத்தொரு காம னைக்கன லாகச் சீறிமெய்கோல வார்குழலாள் குடிகொண்ட கோட்டாற்றில்மூல னைம்முடி வொன்றி லாதஎம் முத்த னைப்பயில் பந்தன் சொல்லியமாலை பத்தும்வல்லார்க் கெளிதாகும் வானகமே.
சொற்பிரிப்பு
காலனைக் கழலால் உதைத்து, ஒரு காமனைக் கனல்ஆகச் சீறி, மெய்கோல வார்குழலாள் குடிகொண்ட, கோட்டாற்றில்மூலனை(ம்), முடிவு ஒன்று இலாத எம் முத்தனை, பயில் பந்தன் சொல்லியமாலைபத்தும் வல்லார்க்கு எளிதுஆகும், வானகமே.சுவாமி : ஐராவதீஸ்வரர்; அம்பாள் : வண்டமர் பூங்குழலி.
உரை

எமனைக் கழலணிந்த திருவடியால் உதைத்து, மன்மதனைக் கண்ணில் தோன்றிய நெருப்பால் எரித்து, உடலில் உமையம்மையினைப் பாகமாகக் கொண்டு வாழும் திருக்கோட்டாற்றில், அநாதிகாரனை அந்தம் ஒன்றிலாத எம்முடைய முத்தனைப் போற்றி ஞானசம்பந்தன் சொல்லிய இத்தமிழ்மாலையில் உள்ள பாடல்கள் பத்தினையும் வல்லவர்களுக்கு வானுலகம் எளிதாக அடையத் தக்கதாகும்.