திருமுறை 2 · 2.050 · 11

திருஆமாத்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
ஆமாத்தூர்
நாடு
நடுநாடு

1

குன்ற வார்சிலை நாண்அ ராவரி வாளி கூரெரி காற்றின் மும்மதில்வென்றவா றெங்ஙனே விடையேறும் வேதியனேதென்ற லார்மணி மாட மாளிகை சூளி கைக்கெதிர் நீண்ட பெண்ணைமேல்அன்றில்வந் தணையும் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
குன்ற வார்சிலை, நாண் அரா, அரி வாளி,கூர் எரி,காற்றின், மும்மதில்வென்றஆறு எங்கனே? விடை ஏறும் வேதியனே!தென்றல் ஆர் மணி மாட மாளிகை சூளிகைக்கு எதிர் நீண்ட பெண்ணைமேல்அன்றில் வந்து அணையும் ஆமாத்தூர் அம்மானே!
உரை

விடைஏறும் வேதியனாகிய சிவனே! தென்றல் காற்று மாடமாளிகைமீது வீச, அதன் எதிரே உள்ள பனைமரத்தில் வீற்றிருந்து அன்றில் பறவைகள் மகிழும் திருஆமாத்தூரில் கோயில் கொண்டவனே! மேருமலையே வில்; பாம்பே நாண்; நெருப்பும் காற்றும் அம்புகள்என்று கொண்டு முப்புரங்களை நீவீர் அழித்தது எவ்வாறு? வியப்பாக உள்ளதே!

2

பரவி வானவர் தான வர்பல ருங்க லங்கிட வந்த கார்விடம்வெருவஉண் டுகந்த அருளென்கொல் விண்ணவனேகரவின் மாமணி பொன்கொ ழித்திழி சந்து காரகில் தந்து *பம்பைநீர்அருவிவந் தலைக்கும் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
பரவி வானவர் தானவர் பலரும் கலங்கிட வந்த கார்விடம்,வெருவ, உண்டு உகந்த அருள் என்கொல்? - விண்ணவனே!கரவு இல் மா மணி பொன் கொழித்து, இழிசந்து கார் அகில் தந்து, பம்பை நீர்அருவி வந்து அலைக்கும் ஆமாத்தூர் அம்மானே!
உரை

சிறந்த மணிகளையும், தங்கத்தையும், சந்தனம் அகில் போன்ற மரங்களையும் கொண்டு வரும் பம்பை நதிக்கரையில் திருஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள சிவனே! வானவர்களும் தானவர்களும் அஞ்சி நடுங்கிட எழுந்த நஞ்சினை நீவீர் அமுதாக உண்டு அருளியது எவ்வாறு? வியப்பாக உள்ளதே!

3

நீண்ட வார்சடை தாழ நேரிழை பாட நீறுமெய் பூசி மாலயன்மாண்டவார் சுடலை நடமாடும் மாண்பதுவென்பூண்ட கேழல் மருப்ப ராவிரி கொன்றை வாளவரி யாமை பூணெனஆண்டநா யகனே ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
நீண்ட வார்சடை தாழ, நேரிழைபாட, நீறு மெய் பூசி மால் அயன்மாண்ட வார் சுடலை நடம் ஆடும் மாண்புஅது என்?பூண்ட கேழல் மருப்பு, அரா, விரி கொன்றை,வாள் வரிஆமை, பூண் எனஆண்ட நாயகனே! ஆமாத்தூர் அம்மானே!
உரை

பன்றியின் கொம்பு, பாம்பு, விரிந்த கொன்றைமலர், ஆமையின் ஓடு இவற்றை ஆபரணமாகக் கொண்ட சிவனே! நீவீர், சடாமுடி தாழவும், உமாதேவி பாடவும், நீறு பூசிய மேனியுடன் மாலும் அயனும் மாண்ட மயானத்தில் ஆடும் திறம்தான் என்னே! என்னே!

4

சேலின் நேரன கண்ணி வெண்ணகை மான்வி ழித்தி ருமாதைப் பாகம்வைத்தேலமா தவம்நீ முயல்கின்ற வேடமிதென்பாலின் நேர்மொழி மங்கை மார்நட மாடி யின்னிசை பாட நீள்பதிஆலைசூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
சேலின் நேரன கண்ணி வெண்நகை மான்விழித் திருமாதைப் பாகம் வைத்து,ஏல மா தவம் நீ முயல்கின்ற வேடம் இது என்?பாலின் நேர் மொழி மங்கைமார் நடம் ஆடி, இன்இசை பாட, நீள் பதிஆலை சூழ் கழனி ஆமாத்தூர் அம்மானே!
உரை

பால் போன்ற இனிய மொழி பேசும் பெண்கள் ஆடிப்பாடி மகிழும் ஆமாத்தூரில் கோயில் கொண்ட சிவனே! சேல்விழி, வெண்ணிற பற்கள், மானின் பார்வை கொண்ட உமையவளுடன் கூடிய நீவீர், தவக்கோலம் கொண்டு விளங்குவது எவ்வாறு? வியப்பாக உள்ளதே!

5

தொண்டர் வந்துவ ணங்கி மாமலர் தூவி நின்கழ லேத்து வாரவர்உண்டியால் வருந்த இரங்காத தென்னைகொலாம்வண்ட லார்கழ னிக்க லந்தும லர்ந்த தாமரை மாதர் வாண்முகம்அண்டவா ணர்தொழும் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
தொண்டர் வந்து வணங்கி, மா மலர் தூவி, நின் கழல் ஏத்துவார் அவர்உண்டியால், வருந்த, இரங்காதது என்னைகொல்ஆம்?வண்டல் ஆர் கழனிக் கலந்து மலர்ந்த தாமரை மாதர் வாள்முகம்அண்டவாணர் தொழும் ஆமாத்தூர் அம்மானே!
உரை

வண்டல் மண் நிறைந்த வயல்களில் தாமரை மலர்கள் நிறைந்திருக்கும் பதியே திருஆமாத்தூர் ஆகும். அங்கு தாமரை மலர் போன்ற முகமுடைய மகளிர் சிவனை வணங்கி மகிழ்வர். தொண்டர்களும் மாமலர் தூவி திருவடிகளை வணங்கி நிற்பர். அவர்கள் பசியுற்று வருந்திய நிலையிலும் நீவீர் அருளாது இருப்பது வியப்பாக உள்ளதே !

6

ஓதி யாரண மாய நுண்பொருள் அன்று நால்வர்முன் கேட்க நன்னெறிநீதியால நீழ லுரைக்கின்ற நீர்மையதென்சோதி யேசுட ரேசு ரும்பமர் கொன்றை யாய்திரு நின்றி யூருறைஆதியே அரனே ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
ஓதி,ஆரணம்ஆய நுண்பொருள், அன்று நால்வர் முன்கேட்க நன்னெறிநீதி ஆலநீழல் உரைக்கின்ற நீர்மையது என்?சோதியே! சுடரே! சுரும்பு அமர் கொன்றையாய்! திருநின்றியூர் உறைஆதியே! அரனே! ஆமாத்தூர் அம்மானே!
உரை

சோதியே! சுடரே! வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் மாலையாய்த் திருநின்றி ஊரில் உறைபவனே! அரனே! திருஆமாத்தூர் அம்மானே! வேதத்தின் நுண்பொருளை அன்று முனிவர் நால்வருக்கும் கல்லால மரத்தடியில் இருந்து உபதேசித்த உமது திறம் தான் என்னே!

7

மங்கை வாணுதன் மான்ம னத்திடை வாடி யூடம ணங்க மழ்சடைக்கங்கையா ளிருந்த கருத்தாவ தென்னைகொலாம்பங்க யமது வுண்டு வண்டிசை பாட மாமயி லாட விண்முழவங்கையா லதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
மங்கை வாள்நுதல் மான் மனத்து இடை வாடி ஊட, மணம் கமழ் சடைக்கங்கையாள் இருந்த கருத்துஆவது என்னைகொல்ஆம்?பங்கயமது உண்டு வண்டு இசை பாட, மா மயில் ஆட, விண் முழவுஅம் கையால் அதிர்க்கும் ஆமாத்தூர் அம்மானே!
உரை

தாமரை மலர்த்தேனை வண்டுகள் அருந்தி இசைபாடும்; மயில்கள் ஆடும்;மேகங்கள் முழவுபோல் முழங்கும். இத்தகைய அழகு நிறை ஆமாத்தூரில் கோயில் கொண்ட சிவனே! அழகிய நெற்றியினைக் கொண்ட உமையவள் ஊடல் கொள்ள, உமது நீண்ட சடையில் கங்கை நல்லாளை மறைத்திருந்த திறம்தான் என்னே! என்னே!

8

நின்ற டர்த்திடும் ஐம்பு லன் நிலை யாத வண்ணம்நி னைந்து ளத்திடைவென்றடர்த் தொருபால் மடமாதை விரும்புதலென்குன்றெ டுத்தநி சாசரன் திரள் தோளி ருபது தான் நெரிதரஅன்றடர்த் துகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
நின்று அடர்த்திடும் ஐம்புலன் நிலையாத வண்ணம் நினைந்து உளத்துஇடைவென்று அடர்த்து, ஒருபால் மடமாதை விரும்புதல் என்?குன்று எடுத்த நிசாசரன் திரள்தோள் இருபதுதான் நெரிதரஅன்று அடர்த்து உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!
உரை

ஆமாத்தூர் அம்மானே! அன்று கயிலாய மலையைத் தூக்க முயன்ற அரக்கனின் இருபது தோள்களின் வலிமையைக் குறைத்தவனே! ஐம்புலன்களையும் வென்று அடக்கிய நீவீர் உம்முடைய ஒரு பாகத்தில் மாதினை விரும்பி வைத்தல் என்சொல். வியப்பாக உள்ளது.

9

செய்ய தாமரை மேலி ருந்தவ னோடு மாலடி தேட நீண்முடிவெய்யஆ ரழலாய் நிமிர்கின்ற வெற்றிமையென்தைய லாளொடு பிச்சைக் கிச்சை தயங்கு தோலரை யார்த்த வேடங்கொண்டைய மேற்றுகந்தாய் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
செய்யதாமரைமேல் இருந்தவனோடுமால் அடி,-தேட,நீள் முடி;வெய்ய ஆர் அழல்ஆய் நிமிர்கின்ற வெற்றிமை என்தையலாளொடு பிச்சைக்கு இச்சை, தயங்கு தோல் அரை ஆர்த்த வேடம் கொண்டு,ஐயம் ஏற்று உகந்தாய்! ஆமாத்தூர் அம்மானே!
உரை

உமாதேவியுடன், தோலை ஆடையாக உடுத்திக்கொண்டு பலிதேர்வதற்காக ஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள சிவனே! தாமரை மலரில் உறையும் பிரமனும் திருமாலும் அடிமுடி தேடியும் காண முடியாதபடி பேரழலாய் ஓங்கிய வெற்றித் தன்மைதான் என்னே! என்னே!

10

புத்தர் புன்சமண் ஆதர் பொய்ம்மொழி நூல்பிடித்தலர் தூற்ற நின்னடிபத்தர் பேணநின்ற பரமாய பான்மையதென்முத்தை வென்ற முறுவ லாளுமை பங்க னென்றிமை யோர்ப ரவிடும்அத்தனே அரியாய் ஆமாத்தூர் அம்மானே.
சொற்பிரிப்பு
புத்தர் புன் சமண்ஆதர் பொய்ம்மொழிநூல் பிடித்து அலர் தூற்ற, நின் அடிபத்தர் பேண நின்ற பரம்ஆய பான்மைஅது என்?"முத்தை வென்ற முறுவலாள் உமைபங்கன்!" என்று இமையோர் பரவிடும்அத்தனே! அரியாய்! ஆமாத்தூர் அம்மானே!
உரை

முத்தினும் சிறந்த பற்களைக் கொண்ட உமாதேவியை உடம்பின் பாகமாகக் கொண்ட சிவனே! இமையோர் பரவும் அத்தனே! அரியே! ஆமாத்தூரில் உறைபவனே! புத்தர், சமணர் போன்ற பொய் நூலறிந்தவர் உம்மைத் தூற்றவும், பக்தர்கள் உன்னடியைப் போற்றவும் வேண்டுதல் வேண்டாமை அற்று நீ விளங்கும் திறம்தான் என்னே! என்னே!

11

வாடல் வெண்டலை மாலை யார்த்தும யங்கி ருள்ளெரி யேந்தி மாநடம்ஆடல்மே யதென்னென் றாமாத்தூர் அம்மானைக்கோடல் நாகம் அரும்பு பைம்பொழிற் கொச்சை யாரிறை ஞான சம்பந்தன்பாடல்பத் தும்வல்லார் பரலோகஞ் சேர்வாரே.
சொற்பிரிப்பு
"வாடல் வெண்தலைமாலை ஆர்த்து, மயங்கு இருள்(ள்), எரி ஏந்தி, மா நடம்ஆடல் மேயது என்?” என்று ஆமாத்தூர் அம்மானை,கோடல் நாகம் அரும்பு பைம்பொழில் கொச்சையார் இறை ஞானசம்பந்தன்பாடல்பத்தும் வல்லார் பரலோகம் சேர்வாரேசுவாமி : அழகியநாதர்;அம்பாள் : முத்தாம்பிகை.
உரை

தலைமாலை கொண்டு சுடுகாட்டில் நெருப்பை ஏந்தி நடனமாடுபவன் சிவபிரான்!திருஆமாத்தூரில் கோயில் கொண்ட அவனைப் புகழ்ந்து காந்தள், நாகம் போன்ற மலர்கள் நிறைந்து விளங்கும் சீகாழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தர் பத்துப்பாடல்களைப் பாடி அருளியுள்ளார்.அப்பாடல்களைப் பாட வல்லவர்கள் மேலுலகத்தை அடைந்து இன்புறுவர் என்க.