திருமுறை 2 · 2.049 · 11

சீகாழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

பண்ணின் நேர்மொழி மங்கை மார்பலர் பாடி யாடிய வோசை நாடொறுங்கண்ணின் நேரயலே பொலியும் கடற்காழிப்பெண்ணின் நேரொரு பங்கு டைப்பெரு மானையெம்பெரு மான்என் றென்றுன்னும்அண்ண லாரடியார் அருளாலுங் குறைவிலரே.
சொற்பிரிப்பு
பண்ணின் நேர் மொழி மங்கைமார்பலர்பாடி ஆடிய ஓசை நாள்தொறும்கண்ணின் நேர் அயலே பொலியும் கடல் காழி,பெண்ணின் நேர் ஒருபங்கு உடைப் பெருமானை "எம்பெருமான்!" என்று என்று உன்னும்அண்ணல் ஆர் அடியார் அருளாலும் குறைவு இலரே.
உரை

கடலால் சூழப்பெற்ற அழகிய நகரமே சீகாழிபதி. அங்கு பண்ணின் இசை போன்று இனிய மொழி பேசும் பெண்கள் பலரும் கூடி பாடியாடி சிவனைப் பரவுவர். உமாதேவியை உடம்பின் ஒருபாகமாகக் கொண்டு விளங்கும் சிவபெருமானை வணங்கி அடியவர் போற்றுவர். சிவனின் அருளால் அடியவர்கள் குறைவின்றி வாழ்ந்து வருவர்.

2

மொண்ட லம்பிய வார்தி ரைக்கடல் மோதி மீதெறி சங்கம் வங்கமுங்கண்டலம் புடைசூழ் வயல்சேர் கலிக்காழிவண்ட லம்பிய கொன்றை யானடி வாழ்த்தி யேத்திய மாந்தர் தம்வினைவிண்டல் அங்கெளிதாம் அதுநல் விதியாமே.
சொற்பிரிப்பு
மொண்டு அலம்பிய வார் திரைக்கடல் மோதி மீது ஏறி சங்கம் வங்கமும்கண்டல் அம் புடை சூழ் வயல் சேர் கலிக் காழிவண்டு அலம்பிய கொன்றையான் அடி வாழ்த்தி ஏத்திய மாந்தர்தம் வினைவிண்டல் அங்கு எளிதுஆம்; அது நல்விதி ஆமே.
உரை

கடலலைகள் மோதி எறியப்பட்ட சங்குகள் வயல்வெளிகளில் நிறைந்துகாணப்பெறும் பதியே சீகாழி. அங்கு கோயில் கொண்டுள்ளவனே சிவபெருமான். கொன்றை மலர்மாலை சூடிய சிவனது அடிகளை வாழ்த்திப்பாடும் அடியவர்களின் வினைகள் அனைத்தும் எளிதாக நீங்கப்பெறும் என்க.

3

நாடெ லாமொளி யெய்த நல்லவர் நன்று மேத்தி வணங்கு வார்பொழிற்காடெ லாமலர் தேன்துளிக்குங் கடற்காழித்தோடு லாவிய காது ளாய்சுரி சங்க வெண்குழை யாயென் றென்றுன்னும்வேடங் கொண்டவர்கள் வினைநீங்க லுற்றாரே.
சொற்பிரிப்பு
நாடுஎலாம் ஒளி எய்த நல்லவர் நன்றும் ஏத்தி வணங்கு - வார்பொழில்காடுஎலாம் மலர் தேன் துளிக்கும் - கடல் காழி,"தோடு உலாவிய காது உளாய்! சுரி சங்கவெண்குழையாய்!" என்றுஎன்று உன்னும்வேடம் கொண்டவர்கள் வினை நீங்கல் உற்றாரே.
உரை

சோலைகளால் சூழப்பெற்று மலர்மணம் நிறைந்து விளங்கும் தலமே சீகாழி. அங்கு தோடும் குழையும் அணிந்த சிவன் கோயில் கொண்டுள்ளான். அவனை நாடெலாம் புகழ்ஒளி பரவ நல்லடியார்கள் போற்றி வழிபடுவர். சிவவேடம் கொண்ட அடியார்கள் அனைவரும் வினைநீங்கப் பெற்றவரே ஆவர்.

4

மையி னார்பொழில் சூழ நீழலில் வாச மார்மது மல்க நாடொறுங்கையி னார்மலர் கொண்டெழுவார் கலிக்காழிஐய னேயர னேயென் றாதரித் தோதி நீதியு ளேநி னைப்பவர்உய்யு மாறுலகில் உயர்ந்தாரி னுள்ளாரே.
சொற்பிரிப்பு
மையின் ஆர் பொழில் சூழ,நீழலில் வாசம் ஆர் மது மல்க, நாள் தொறும்கையின் ஆர் மலர் கொண்டு எழுவார் கலிக் காழி"ஐயனே! அரனே!" என்று ஆதரித்து ஓதி, நீதி உளே நினைப்பவர்,உய்யும் ஆறு உலகில் உயர்ந்தாரின் உள்ளாரே.
உரை

பசுமை நிறைந்த சோலைகளால் சூழப்பெற்ற பதியே சீகாழி. அங்கு நறுமணம் நிறைந்து விளங்கும் அடியவர்கள் மலர்கொண்டு சிவனை, ஐயனே! அரனே! என்று அர்ச்சனை செய்து மகிழ்வர். பிறவிப் பயனைப் பெறும் நிலையில் உயர்ந்தோருடன் கூடி அடியவர்கள் இன்புற்று இருப்பர்.

5

மலிக டுந்திரை மேல்நி மிர்ந்தெதிர் வந்து வந்தொளிர் நித்தி லம்விழக்கலிக டிந்தகையார் மருவுங் கலிக்காழிவலிய காலனை வீட்டி மாணிதன் இன்னு யிரளித் தானை வாழ்த்திடமெலியுந் தீவினைநோ யவைமே வுவர்வீடே.
சொற்பிரிப்பு
மலி கடுந்திரை மேல் நிமிர்ந்து எதிர் வந்துவந்து ஒளிர் நித்திலம் விழ,கலி கடிந்த கையார் மருவும் கலிக் காழி,வலிய காலனை வீட்டி மாணி தன் இன்உயிர் அளித்தானை வாழ்த்திடமெலியும் தீவினை நோய் அவை; மேவுவர், வீடே.
உரை

வேகத்திரைகள் கரையில் வந்து மோதிக் கொண்டிருக்கும் பதியே சீகாழி. அங்கு முத்துக்கள் எங்கும் நிறைந்திருக்கும். காலனைக் காலால் காய்ந்தழித்து மார்க்கண்டேயனுக்கு அருளிய சிவன் அங்கு கோயில் கொண்டுள்ளார். அச்சிவனை வழிபாடு செய்வோரின் தீவினைகள், நோய்கள் நீங்கப்பெறும். அவர்கள் வீடு பேற்றையும் பெறுவர்.

6

மற்றும் இவ்வுல கத்து ளோர்களும் வானு ளோர்களும் வந்து வைகலுங்கற்ற சிந்தையராய்க் கருதுங் கலிக்காழிநெற்றி மேலமர் கண்ணி னானை நினைந்தி ருந்திசை பாடுவார் வினைசெற்ற மாந்தரெனத் தெளிமின்கள் சிந்தையுளே.
சொற்பிரிப்பு
மற்றும் இவ் உலகத்துஉளோர்களும் வான்உளோர்களும் வந்து, வைகலும்,கற்ற சிந்தையராய்க் கருதும் கலிக் காழிநெற்றிமேல் அமர் கண்ணினானை நினைந்து இருந்து இசை பாடுவார், “வினைசெற்ற மாந்தர்" எனத் தெளிமின்கள், சிந்தையுளே!
உரை

இவ்வுலகில் உள்ளோர்களும், வானில் உள்ளோர்களும் நாள்தோறும் வந்து நற்சிந்தை கொண்டு சிவனை வணங்கும் பதியே சீகாழி. நெற்றிக்கண்ணுடைய சிவனை நினைந்து இன்னிசைபாடும் அடியவர்கள் வினைகள் நீங்கப்பெறும். இதனைக் கண்டு தேர்ந்து மனத்தால் கொள்ளுமின்.

7

தான லம்புரை வேதி யரொடு தக்க மாதவர் தாந்தொ ழப்பயில்கானலின் விரைசேர விம்முங் கலிக்காழிஊனு ளாருயிர் வாழ்க்கை யாயுற வாகி நின்றவொ ருவனே யென்றென்றானலங் கொடுப்பார் அருள்வேந்த ராவாரே.
சொற்பிரிப்பு
தான் நலம் புரை வேதியரொடு தக்க மா தவர் தாம் தொழ,பயில்கானலின் விரை சேர விம்மும் கலிக் காழி,"ஊனுள் ஆர்உயிர் வாழ்க்கையாய்! உறவுஆகி நின்ற ஒருவனே!" என்றுஎன்றுஆனலம் கொடுப்பார், அருள் வேந்தர் ஆவாரே.
உரை

சோலைகளால் மணம் நிறைந்து விளங்கும் சீகாழித் தலத்தில் கோயில் கொண்டுள்ளவன் சிவபெருமான். அவனை நலமும் பெருமையும் உடைய அந்தணர்களும் மாதவம் உடையவர்களும் நாளும் தொழுது கொண்டிருப்பர். ஊனாகவும் உயிராகவும் எங்கும் நிறைந்த ஈசனை உணர்ந்து அவனைப் பஞ்சகவ்யங்களால் வழிபடுவோர், அருள்வேந்தராய் விளங்குவார்கள்.

8

மைத்த வண்டெழு சோலை யாலைகள் சாலி சேர்வய லார வைகலுங்கத்து வார்கடல் சென்றுலவுங் கலிக்காழிஅத்த னேயர னேய ரக்கனை யன்ற டர்த்துகந் தாயு னகழல்பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே.
சொற்பிரிப்பு
மைத்த வண்டு எழு சோலை ஆலைகள், சாலி சேர் வயல், ஆர, வைகலும்கத்து வார்கடல் சென்று உலவும் கலிக் காழிஅத்தனே! அரனே! அரக்கனை அன்று அடர்த்து உகந்தாய்! உன கழல்பத்தராய்ப் பரவும் பயன் ஈங்கு நல்காயே!
உரை

சீகாழிப்பதியில் வண்டுகளின் ஒலி சோலைகளிலும் கரும்பாலைகளிலும் நெல்வயல்களிலும் நிறைந்திருக்கும். அதற்கு ஈடாக கடல் ஒலியும் முழங்கும். அங்கு பக்தர்கள், அத்தனே! அரனே! அரக்கனாகிய இராவணனை அடர்த்தவனே! என்றெல்லாம் கூறி சிவனடியினை வணங்குவர். இறைவனே! உமது திருவடிகளை வணங்கும் நிலையை எனக்கும் இப்பிறவியில் அருள்வீராக.

9

பரும ராமொடு தெங்கு பைங்கத லிப்ப ருங்கனி யுண்ண மந்திகள்கருவரா லுகளும் வயல்சூழ் கலிக்காழித்திருவின் நாயக னாய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வ னாகியஇருவர் காண்பரியா னென ஏத்துத லின்பமே.
சொற்பிரிப்பு
பரு மராமொடு, தெங்கு, பைங்கதலிப் பருங்கனி உண்ண, மந்திகள்கருவரால் உகளும் வயல், சூழ் கலிக் காழி,"திருவின் நாயகன் ஆய மாலொடு செய்ய மாமலர்ச் செல்வன் ஆகியஇருவர் காண்பு அரியான்” என ஏத்துதல் இன்பமே.
உரை

சீகாழிப்பதியில் பருத்த பெரிய மரங்களும், உயர்ந்த தென்னைகளும், வாழைமரங்களும் நிறைந்து விளங்கும். அங்கு, குரங்குகள் மரங்களில் வீற்றிருந்து கனிகளை உண்ணும். வயல்வெளிகளில் விரால் மீன்கள் நிறைந்து விளங்கும். அங்கு கோயில் கொண்டுள்ள சிவனை அடியவர்கள், 'திருமகளின் நாயகனான திருமாலாலும் செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனாலும் அடிமுடி தேடி அறிய முடியாதவனே' என்று கூறி வழிபடுவர். இன்புறுவர்.

10

பிண்ட முண்டுழல் வார்க ளும்பிரி யாது வண்துகி லாடை போர்த்தவர்கண்டு சேரகிலார ழகார் கலிக்காழித்தொண்டை வாயுமை யோடு கூடிய வேட னேசுட லைப்பொ டியணிஅண்டவாண னென்பார்க் கடையா அல்லல்தானே.
சொற்பிரிப்பு
பிண்டம் உண்டு உழல்வார்களும், பிரியாது வண் துகில் ஆடை போர்த்தவர்,கண்டு சேரகிலார்; அழகுஆர் கலிக் காழி,"தொண்டைவாய் உமையோடு கூடிய வேடனே! சுடலைப் பொடி அணிஅண்டவாணன்!" என்பார்க்கு அடையா, அல்லல் தானே.
உரை

அழகுமிக்க சீகாழிப்பதியில் சிவன் உமையாருடன் கூடிக் கோயில் கொண்டுள்ளான். அவனை, பிண்ட உணவை உண்டு வாழும் சமணர்களும், நீண்ட துவராடை அணிந்த சாக்கியர்களும் கண்டு வணங்கார். ஆனால் அடியவர்கள், 'உமையுடன் கூடியவனே, சுடலைப்பொடி பூசியவனே, அண்டவாணனே' என்றெல்லாம் போற்றிப் பரவுவர். அத்தகைய அடியவர்களை அல்லல் சேராதாம் என்க.

11

பெயரெ னும்மிவை பன்னி ரண்டினும் உண்டெ னப்பெயர் பெற்ற வூர்திகழ்கயலுலாம் வயல்சூழ்ந் தழகார் கலிக்காழிநயன டன்கழ லேத்தி வாழ்த்திய ஞான சம்பந்தன் செந்த மிழுரைஉயருமா மொழிவா ருலகத் துயர்ந்தாரே.
சொற்பிரிப்பு
பெயர் எனும்(ம்) இவை பன்னிரண்டினும் உண்டு எனப் பெயர் பெற்ற ஊர், திகழ்கயல் உலாம் வயல் சூழ்ந்து அழகு ஆர் கலிக் காழி, நயன் நடன் கழல் ஏத்தி வாழ்த்திய ஞானசம்பந்தன் செந்தமிழ்உரைஉயருமா மொழிவார் உலகத்து உயர்ந்தாரே.சுவாமி : பிரமபுரீஸ்வரர்;அம்பாள் : திருநிலைநாயகி.
உரை

பன்னிரண்டு பெயர்களைப் பெற்ற ஊரே சீகாழிப்பதி. கயல்கள்நிறைந்த வயல்களால் சூழப்பெற்ற அழகிய பதியே சீகாழி. அங்கு கோயில் கொண்டுள்ள நடனம் புரியும் சிவபெருமானைப் புகழ்ந்து ஞானசம்பந்தப் பெருமான் பத்துப்பாடல்களை அருளிச் செய்துள்ளார். அச்செந்தமிழ்ப் பாடல்களை உணர்ந்து பாடவல்லவர்கள், உயர்ந்த பெருமக்களாகத் திகழ்வார்கள் என்க.