திருமுறை 2 · 2.048 · 11

திருவெண்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
வெண்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கண்காட்டு நுதலானுங் கனல்காட்டுங் கையானும்பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டுஞ் சடையானும்பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டுங் கொடியானே.
சொற்பிரிப்பு
கண் காட்டும் நுதலானும், கனல் காட்டும் கையானும்,பெண் காட்டும் உருவானும், பிறை காட்டும் சடையானும்,பண் காட்டும் இசையானும், பயிர் காட்டும் புயலானும்,வெண் காட்டில் உறைவானும் - விடை காட்டும் கொடியானே
உரை

சிவபெருமான், நெற்றிக் கண்ணுடையவன்; கையில் நெருப்பை ஏந்தியவன்; உடம்பின் ஒருபாகத்தில் உமாதேவியைக் கொண்டு விளங்குபவன்; சடையில் பிறைநிலவைத் தாங்கியவன்; பண்ணோடு இசையாய் விளங்குபவன்; பயிருக்கு உதவும் மழையாக இருப்பவன்; திருவெண்காட்டில் கோயில் கொண்டவன்; இடப வாகனத்தான் என்க.

2

பேயடையா பிரிவெய்தும் பிள்ளையினோ டுள்ளநினைவாயினவே வரம்பெறுவர் ஐயுறவேண் டாவொன்றும்வேயனதோ ளுமைபங்கன் வெண்காட்டு முக்குளநீர்தோய்வினையா ரவர்தம்மைத் தோயாவாந் தீவினையே.
சொற்பிரிப்பு
பேய் அடையா, பிரிவு எய்தும்; பிள்ளையினோடு உள்ளம் நினைவுஆயினவே வரம் பெறுவர்; ஐயுற வேண்டா, ஒன்றும்;வேய் அன தோள் உமை பங்கன் வெண்காட்டு முக்குளநீர்தோய் வினையார் அவர் தம்மைத் தோயாஆம், தீவினையே.
உரை

மூங்கில் போன்ற தோள்களைக் கொண்ட உமாதேவியைப் பாகமாகக் கொண்டு திருவெண்காட்டில் விளங்குபவரே சிவபெருமான். வெண்காட்டில் உள்ள முக்குளநீரில் தோய்ந்து நீராடியவர்களைத் தீவினைகள் சாராது நல்வரம் பெறுவர். பேயும் நாடாது. அஞ்ஞானம் நீங்கும். புத்திரப்பேறு கிட்டும். இதில் ஐயமே வேண்டா.

3

மண்ணொடுநீ ரனல்காலோ டாகாயம் மதிஇரவிஎண்ணில்வரு மியமானன் இகபரமு மெண்டிசையும்பெண்ணினொடாண் பெருமையொடு சிறுமையுமாம் பேராளன்விண்ணவர்கோன் வழிபடவெண் காடிடமா விரும்பினனே.
சொற்பிரிப்பு
மண்ணொடு,நீர், அனல், காலோடு, ஆகாயம், மதி,இரவிஎண்ணில் வரும் இயமானன், இகபரமும், எண்திசையும்,பெண்ணினொடு,ஆண்,பெருமையொடு, சிறுமையும், ஆம் பேராளன்விண்ணவர்கோன் வழிபட - வெண்காடு இடமா விரும்பினனே.
உரை

நிலம், நீர், தீ, காற்று, ஆகாயம், சூரியன், சந்திரன், உயிர் ஆகிய அட்டமூர்த்தியாய் விளங்குபவனே இறைவன். அவனே, இம்மை, மறுமை, எண்திசை, பெண், ஆண், பேருரு, சிற்றுரு ஆகிய அனைத்துமாய் உள்ளான். அவனே இந்திரன் தன்னை வழிபாடு செய்ய வெண்காட்டில் கோயில் கொண்டுள்ளான்.

4

விடமுண்ட மிடற்றண்ணல் வெண்காட்டின் தண்புறவின்மடல்விண்ட முடத்தாழை மலர்நிழலைக் குருகென்றுதடமண்டு துறைக்கெண்டை தாமரையின் பூமறையக்கடல்விண்ட கதிர்முத்த நகைகாட்டுங் காட்சியதே.
சொற்பிரிப்பு
விடம் உண்ட மிடற்று அண்ணல் வெண்காட்டின் தண்புறவில்,மடல் விண்ட முடத்தாழைமலர் நிழலைக் குருகு என்று,தடம் மண்டு துறைக் கெண்டை, தாமரையின் பூ மறையக்கடல் விண்ட கதிர் முத்தம் நகை காட்டும் காட்சியதே.
உரை

விடத்தை அமுதாக உண்ட சிவன் கோயில் கொண்டுள்ள தலமே திருவெண்காடாம். அங்கு வளர்ந்த தாழைகளின் மடல் நடுவே தாழம்பூ மலர்ந்திருக்கும் .அதனை மீன்கள் தங்களைக் கொத்தவரும் கொக்கென்று கருதி நடுங்கி, தாமரை மலர்கள் நடுவே சென்று ஒளிந்து கொள்ளும். அதன் அறியாமையைக் கண்டு நகைப்பது போல் முத்துக்கள் சிதறிக் காட்சியளிக்கும் என்க.

5

வேலைமலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்மாலைமலி வண்சாந்தால் வழிபடுநன் மறையவன்றன்மேலடர்வெங் காலனுயிர் விண்டபினை நமன்தூதர்ஆலமிடற் றான்அடியார் என்றடர அஞ்சுவரே.
சொற்பிரிப்பு
வேலை மலி தண்கானல் வெண்காட்டான் திருவடிக்கீழ்மாலை மலி வண் சாந்தால் வழிபடு நல் மறையவன் தன்மேல் அடர் வெங்காலன் உயிர் விண்ட பினை, நமன் தூதர்,ஆலமிடற்றான் அடியார் என்று, அடர அஞ்சுவரே.
உரை

சோலைகள் நிறைந்த கடற்கரைப் பகுதியே திருவெண்காட்டுத் தலமாகும். அங்கு கோயில் கொண்டுள்ள சிவனை மலர்களாலும், மணமிக்க சந்தனத்தாலும், அலங்கரித்து வழிபாடு செய்தவனே அந்தணச் சிறுவனாகிய மார்க்கண்டேயன் ஆவான். அவனது உயிரைக் கவர வந்தவனே இயமன் ஆவான். இயமனைச் சிவன் தன் காலால் உதைத்து அருளினான். அதிலிருந்து எமதூதர்கள் சிவனடியார்களின் உயிரைக் கவர பெரிதும் அஞ்சி நிற்பர் என்க.

6

தண்மதியும் வெய்யரவுந் தாங்கினான் சடையினுடன்ஒண்மதிய நுதலுமையோர் கூறுகந்தான் உறைகோயில்பண்மொழியால் அவன்நாமம் பலவோதப் பசுங்கிள்ளைவெண்முகில்சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
சொற்பிரிப்பு
தண்மதியும் வெய்ய(அ)ரவும் தாங்கினான், சடையின்உடன்;ஒண்மதியநுதல் உமை ஓர்கூறு உகந்தான்; உறை கோயில்பண் மொழியால் அவன் நாமம்பல ஓத, பசுங்கிள்ளைவெண் முகில் சேர் கரும்பெணைமேல் வீற்றிருக்கும் வெண்காடே.
உரை

குளிர்ந்த நிலவையும், கொடிய பாம்பையும் தன் தலையில் கொண்டசிவபெருமான், மதிபோலும் நுதலுடைய உமையவளைத் தன் உடம்பின் பாகமாகக்கொண்டுள்ளான். அவன் கோயில் கொண்டுள்ள தலமே திருவெண்காடாம். அங்குள்ளகிளிகள் உயர்ந்த பனைமரம் மீதிருந்து சிவனின் நாமத்தைக் கூறிக்கொண்டே இருக்கும்.

7

சக்கரமாற் கீந்தானுஞ் சலந்தரனைப் பிளந்தானும்அக்கரைமே லசைத்தானும் அடைந்தயிரா வதம்பணியமிக்கதனுக் கருள்சுரக்கும் வெண்காடும் வினைதுரக்கும்முக்குளம்நன் குடையானும் முக்கணுடை இறையவனே.
சொற்பிரிப்பு
சக்கரம் மாற்கு ஈந்தானும்; சலந்தரனைப் பிளந்தானும்;அக்கு அரைமேல் அசைத்தானும்; அடைந்த அயிராவதம் பணிய,மிக்கு அதனுக்கு அருள் சுரக்கும் வெண்காடும், வினை துரக்கும்முக்குளம், நன்கு உடையானும் - முக்கண் உடை இறையவனே.
உரை

சிவன் சக்கரப் படையைத் திருமாலுக்கு அருளியவன். சலந்தராசுரனை வதம் செய்தவன். எலும்பு மாலையை அணிந்தவன். தன்னை வணங்கிய ஐராவதம் என்ற யானைக்கு அருள் செய்தவன். வெண்காட்டில் கோயில் கொண்டவன். வழிபடும் அடியவர்களின் வினைகளை நீக்கும் முக்குள நீருக்கும் உரியவன். முக்கண்ணனும் அவனே ஆவான்.

8

பண்மொய்த்த இன்மொழியாள் பயமெய்த மலையெடுத்தஉன்மத்தன் உரம்நெரித்தன் றருள்செய்தான் உறைகோயில்கண்மொய்த்த கருமஞ்ஞை நடமாடக் கடல்முழங்கவிண்மொய்த்த பொழில்வரிவண் டிசைமுரலும் வெண்காடே.
சொற்பிரிப்பு
பண் மொய்த்த இன்மொழியாள் பயம் எய்த மலை எடுத்தஉன்மத்தன் உரம் நெரித்து, அன்று அருள் செய்தான் உறை கோயில்கண் மொய்த்த கரு மஞ்ஞை நடம்ஆட, கடல் முழங்கவிண்மொய்த்த பொழில் வரிவண்டு இசை முரலும் வெண்காடே.
உரை

பண் நிறைந்த பாடல்போலும் இனியமொழி பேசும் உமாதேவி அஞ்ச கயிலாய மலையைப் பெயர்த்து எடுத்தவன் இராவணன். அந்த ஆணவம் மிக்க அரக்கனின் வலிமையைக் கெடுத்துப்பின் அருளியவன் சிவனே! அவன் திருவெண்காட்டில் கோயில் கொண்டுள்ளான். அங்கு தோகையுடைய மயில்கள் நடனமாடும். கடல்கள் முழங்கும்.வண்டுகள் இசைபாடிக் கொண்டிருக்கும்.

9

கள்ளார்செங் கமலத்தான் கடல்கிடந்தான் எனஇவர்கள்ஒள்ளாண்மை கொளற்கோடி உயர்ந்தாழ்ந்தும் உணர்வரியான்வெள்ளானை தவஞ்செய்யும் மேதகுவெண் காட்டானென்(று)உள்ளாடி உருகாதார் உணர்வுடைமை உணரோமே.
சொற்பிரிப்பு
"கள் ஆர் செங்கமலத்தான், கடல் கிடந்தான், என இவர்கள்ஒள் ஆண்மை கொளற்கு ஓடி, உயர்ந்து ஆழ்ந்தும் உணர்வு அரியான்வெள்ஆனை தவம் செய்யும் மேதகு வெண்காட்டான்'' என்றுஉள் ஆடி உருகாதார் உணர்வு, உடைமை, உணரோமே.
உரை

தேன் நிறைந்த செந்தாமரைமலர் மேல் உள்ள பிரமனும் பாற்கடலில் கிடந்த திருமாலும் சிவனின் அடிமுடி தேட முயன்று தோற்றார்கள். உணர்வதற்கு அரியவனாகியசிவனை வெள்ளையானை அன்பால் வழிபட்டுச் சிறந்தது. அச்சிவன் கோயில் கொண்ட தலமே திருவெண்காடாம். அச்சிவனை உள்ளம் உருகி வழிபாடு செய்தவர்கள் நல் உணர்வு உடையவர் ஆவர்.

10

போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருளென்னும்பேதையர்கள் அவர்பிறிமின் அறிவுடையீர் இதுகேண்மின்வேதியர்கள் விரும்பியசீர் வியன்திருவெண் காட்டானென்றோதியவர் யாதுமொரு தீதிலரென் றுணருமினே.
சொற்பிரிப்பு
போதியர்கள் பிண்டியர்கள் மிண்டுமொழி பொருள் என்னும்பேதையர்கள் அவர்; பிறிமின்! அறிவு உடையீர்! இது கேண்மின்;"வேதியர்கள் விரும்பிய சீர் வியன்திரு வெண்காட்டான்" என்றுஓதியவர் யாதும் ஒரு தீது இலர் என்று உணருமினே!
உரை

பௌத்தர்களும் சமணர்களும் குதர்க்கமாகப் பொருள் கொண்டு பேசுபவர்கள். எனவே, அவர்களின் உரைகளை ஏற்க வேண்டாம். மெய்ஞ்ஞானத்தை உடையவர்களே! நீங்கள் நான் கூறுவதைக் கேளுங்கள். வேதியர் விரும்பும் சிவன் திருவெண்காட்டில் கோயில் கொண்டுள்ளான். அவனையே போற்றி வழிபாடு செய்து தீதற்ற நிலையை அடைவீர்களாக.

11

தண்பொழில்சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன்விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப்பண்பொலிசெந் தமிழ்மாலை பாடியபத் திவைவல்லார்மண்பொலிய வாழ்ந்தவர்போய் வான்பொலியப் புகுவாரே.
சொற்பிரிப்பு
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ் ஞானசம்பந்தன்விண் பொலி வெண்பிறைச் சென்னி விகிர்தன் உறை வெண்காட்டைப்பண் பொலி செந்தமிழ்மாலை பாடிய பத்துஇவை வல்லார்,மண் பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.சுவாமி : திருவெண்காட்டீசர்;அம்பாள் : பிரமவித்யாநாயகி.
உரை

குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த சீர்காழிப் பதியில் அவதரித்தவரே திருஞானசம்பந்தர் ஆவார். அவர் விண்ணில் தவழும் பிறைநிலவைத் தன்தலையில் சூடிக் கொண்ட திருவெண்காட்டுத் தலைவனை - சிவனைப் -புகழ்ந்து பத்துப்பாடல்கள் பாடியருளி உள்ளார். அப்பத்துப் பாடல்களையும் அன்புடன் பாடிட வல்லவர்கள் மண்ணிலும் விண்ணிலும் சிறப்புறுவர் என்க.