திருமுறை 2 · 2.044 · 11

திருஆமாத்தூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
ஆமாத்தூர்
நாடு
நடுநாடு

1

துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடைபின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடிஅன்னஞ்சேர் தண்கானல் ஆமாத்தூர் அம்மான்றன்பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே.
சொற்பிரிப்பு
துன்னம் பெய் கோவணமும் தோலும் உடை ஆடை,பின் அம் சடை மேல் ஓர் பிள்ளைமதி சூடி,அன்னம் சேர் தண் கானல் ஆமாத்தூர் அம்மான்தன்பொன் அம் கழல் பரவாப் பொக்கமும் பொக்கமே.
உரை

சிவபெருமான் வேதங்களைக் கோவணமாகவும் புலித்தோலை ஆடையாகவும் கொண்டுள்ளார். தனது பின்னிய சடைமேல் பிறைநிலவைச் சூடி உள்ளார். அன்னப் பறவைகள் நிறைந்த ஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகளைத் தொழுதலே நம் கடனாகும். வணங்காதிருத்தல் பெருங்குற்றமாகும்.

2

கைம்மாவின் தோல்போர்த்த காபாலி வானுலகில்மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடிஅம்மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்எம்பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.
சொற்பிரிப்பு
கைம்மாவின் தோல் போர்த்த காபாலி, வான்உலகில்மும் மா மதில் எய்தான், முக்கணான், பேர் பாடிஅம் மா மலர்ச்சோலை ஆமாத்தூர் அம்மான்! எம்பெம்மான் என்று ஏத்தாதார் பேயரில் பேயரே.
உரை

யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவரே சிவபெருமான். அவர் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி பலிதேர்ந்து வருவார். மும்மதில்களை எரித்தவர்.,      மூன்று திருக்கண்களைக் கொண்ட அவரைத் தலைவர் என்று கருதி வணங்காதவர்கள் பேய்த்தன்மை உடைய கீழோர்கள் ஆவர்.

3

பாம்பரைச் சாத்தியோர் பண்டரங்கன் விண்டதோர்தேம்பல் இளமதியஞ் சூடிய சென்னியான்ஆம்பலம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்றன்சாம்பல் அகலத்தார் சார்பல்லாற் சார்பிலமே.
சொற்பிரிப்பு
பாம்பு அரைச் சாத்தி ஓர் பண்டரங்கன், விண்டது ஓர்தேம்பல் இளமதியம் சூடிய சென்னியான்,ஆம்பல் அம் பூம்பொய்கை ஆமாத்தூர் அம்மான்தன்சாம்பல் அகலத்தார் சார்பு அல்லால் சார்பு இலமே.
உரை

சிவபெருமான் பாம்பைத் தன் அரையில் அணிகலனாக அணிந்துள்ளார். பாண்டரங்கம் என்னும் திருக்கூத்தை ஆடியவரும் அவரே ஆவார். அவர் தன் தலையில் இளம்பிறையை அணிந்துள்ளார். அவர் ஆம்பல் மலர்கள் நிறைந்த பொய்கைகள் சூழப்பெற்ற திருஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ளார். அவர் தம் மார்பில் திருநீற்றைப் பூசியுள்ளார்.  அத்திருநீற்றின்மீது பற்றில்லாதவர்கள் மெய்ச்சார்பு இல்லாதவர்கள் ஆவார்கள்.

4

கோணாகப் பேரல்குற் கோல்வளைக்கை மாதராள்பூணாகம் பாகமாப் புல்கி யவளோடும்ஆணாகங் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்காணாத கண்ணெல்லாங் காணாத கண்களே.
சொற்பிரிப்பு
கோள் நாகப் பேர் அல்குல் கோல்வளைக்கை மாதராள்பூண் ஆகம் பாகமாப் புல்கி, அவளோடும்ஆண் ஆகம் காதல்செய் ஆமாத்தூர் அம்மானைக்காணாத கண் எல்லாம் காணாத கண்களே.
உரை

வளைந்த படம் கொண்ட நாகத்தைப் போன்ற அல்குலையும் கையில் வளையல்களையும் கொண்ட மாதரசியே உமாதேவி ஆவாள். உமாதேவியைத் தன் உடம்பில் ஒரு பாகமாகவும், பாம்பினை அணிகலன்களாகவும் கொண்டவரே சிவபெருமான். அவர் திருஆமாத்தூர் தலத்துள் அழகுறக் கோயில் கொண்டுள்ளார். அவரைக் காணாத கண்கள் பயனற்ற கண்களேயாம்.

5

பாடல் நெறிநின்றான் பைங்கொன்றைத் தண்டாரேசூடல் நெறிநின்றான் சூலஞ்சேர் கையினான்ஆடல் நெறிநின்றான் ஆமாத்தூர் அம்மான்றன்வேட நெறிநில்லா வேடமும் வேடமே.
சொற்பிரிப்பு
பாடல் நெறி நின்றான், பைங்கொன்றைத் தண் தாரேசூடல் நெறி நின்றான், சூலம் சேர் கையினான்,ஆடல் நெறி நின்றான், ஆமாத்தூர் அம்மான்தன்வேடநெறி நில்லா வேடமும் வேடமே?
உரை

சிவபெருமான், வேதம் போற்றி வழிபட நிற்பவன். கொன்றை மலர் மாலைகளை அணிந்தவன். சூலப்படையினைக் கையில் ஏந்தி நிற்பவன். திருநடனம் புரிபவன். ஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ளவன். திருநீறு அணிந்த அவனது வேடத்தைப் போற்றிப் புகழாமல் இருப்பதும் அடியவர்களுக்குப் பொருந்துமோ? பொருந்தாதாம்.

6

சாமவரை வில்லாகச் சந்தித்த வெங்கணையால்காவல் மதிலெய்தான் கண்ணுடை நெற்றியான்யாவருஞ் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானத்தேவர் தலைவணங்குந் தேவர்க்குந் தேவனே.
சொற்பிரிப்பு
சாமவரை வில் ஆகச் சந்தித்த வெங்கணையால்காவல் மதில் எய்தான், கண் உடை நெற்றியான்,யாவரும் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மான், அத்தேவர் தலைவணங்கும் தேவர்க்கும் தேவனே.
உரை

மேருமலையை வில்லாக வளைத்தவன் சிவன். கொடிய காளையைக் கொண்டு முப்புரங்களை எரித்து அழித்தவர் சிவபெருமான். அவர் நெற்றிக் கண்ணை உடையவர் ஆவார். யாவராலும் வணங்கப் பெறும் நிலையில் அவர் திருஆமாத்தூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். தேவாதி தேவனாக விளங்கும் அவரை நாளும் பிற தேவர்களும் வணங்கி மகிழ்வர்.

7

மாறாத வெங்கூற்றை மாற்றி மலைமகளைவேறாக நில்லாத வேடமே காட்டினான்ஆறாத தீயாடி ஆமாத்தூர் அம்மானைக்கூறாத நாவெல்லாங் கூறாத நாக்களே.
சொற்பிரிப்பு
மாறாத வெங் கூற்றை மாற்றி, மலைமகளைவேறாக நில்லாத வேடமே காட்டினான்ஆறாத தீ ஆடி, ஆமாத்தூர் அம்மானைக்கூறாத நா எல்லாம் கூறாத நாக்களே!
உரை

தன் கருத்தில் மாற்றமின்றி மார்க்கண்டேயனின் உயிரைக் கவர்ந்து செல்ல வந்தவனே எமன். அவனை வதைத்தவரே சிவபெருமான். அவர் தம் உடம்பின் ஒரு பாகத்தில் உமாதேவியைக் கொண்டுள்ளார். நெருப்பைக் கையில் ஏந்தி ஆடுபவரும் அவரே ஆவார். அவர் திருஆமாத்தூர் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரது பெருமைகளைப் புகழ்ந்து கூறாத நாக்கள் பயனற்ற நாக்குகளேயாம்.

8

தாளால் அரக்கன்தோள் சாய்த்த தலைமகன்றன்நாள்ஆ திரையென்றே நம்பன்றன் நாமத்தால்ஆளானார் சென்றேத்தும் ஆமாத்தூர் அம்மானைக்கேளாச் செவியெல்லாங் கேளாச் செவிகளே.
சொற்பிரிப்பு
தாளால் அரக்கன் தோள் சாய்த்த தலைமகன்தன்நாள் ஆதிரை என்றே, நம்பன் தன் நாமத்தால்,ஆள் ஆனார் சென்று ஏத்தும் ஆமாத்தூர் அம்மானைக்கேளாச் செவி எல்லாம் கேளாச் செவிகளே!
உரை

கயிலாய மலையை ஆணவத்தால் தூக்க முயன்ற இராவணனின் ஆற்றலைத் தன் காலால் அழித்தவரே சிவபெருமான். அவருக்கு உரிய நாள் ஆதிரைத் திருநாள். அடியவர்கள் ஆதிரையான் என்று அன்போடு கூறி அவரை வழிபடுவர். அவர் திருஆமாத்தூர் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரைப் பற்றிய புகழ்மொழிகளைக் கேளாத செவிகள் கேளாச் செவிகளே(செவிட்டுச் செவிகளேயாம்).

9

புள்ளுங் கமலமுங் கைக்கொண்டார் தாமிருவர்உள்ளும் அவன்பெருமை ஒப்பளக்குந் தன்மையதேஅள்ளல் விளைகழனி ஆமாத்தூர் அம்மான்எம்வள்ளல் கழல்பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
சொற்பிரிப்பு
புள்ளும் கமலமும் கைக்கொண்டார் தாம் இருவர் உள்ளும் அவன் பெருமை ஒப்பு அளக்கும் தன்மையதே?அள்ளல் விளை கழனி ஆமாத்தூர் அம்மான், எம்வள்ளல், கழல் பரவா வாழ்க்கையும் வாழ்க்கையே.
உரை

கருட வாகனத்தைக் கொண்ட திருமாலும், தாமரை மலர்மீது வீற்றிருக்கும் பிரமனும் போற்றும் சிவனின் பெருமை நம்மால் அளந்தறியக் கூடியதோ? வளமான வயல்கள் நிறைந்த திருஆமாத்தூரில் கோயில் கொண்டுள்ள இறைவனின் திருவடிகளைப் பரவாத வாழ்க்கையும் நல்வாழ்க்கை ஆகுமோ? ஆகாதாம் என்க.

10

பிச்சை பிறர்பெய்யப் பின்சாரக் கோசாரக்கொச்சை புலால்நாற ஈருரிவை போர்த்துகந்தான்அச்சந்தன் மாதேவிக் கீந்தான்றன் ஆமாத்தூர்நிச்சல் நினையாதார் நெஞ்சமும் நெஞ்சமே.
சொற்பிரிப்பு
பிச்சை பிறர் பெய்ய, பின் சார, கோசாரக்கொச்சை புலால் நாற, ஈர் உரிவை போர்த்து உகந்தான்அச்சம் தன் மா தேவிக்கு ஈந்தான் தன் - ஆமாத்தூர்நிச்சல் நினையாதார் நெஞ்சமே நெஞ்சமே?
உரை

சிவபெருமான் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி பிறர் இடும் பிச்சையை விரும்பி வருவார். புலால் நாறும் யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவரும் அவரே ஆவார். அவரது செயல் கண்டு அச்சமுற்று நின்றாள் உமாதேவி. அவளைத் தன் உடம்பின்ஒரு பாகமாகக் கொண்டு அருளியவரும் அவரே. அவர் ஆமாத்தூர் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரைத் தினமும் நினைந்து போற்றாதார் நெஞ்சம், நெஞ்சாகுமோ?ஆகாதாம் என்க.

11

ஆட லரவசைத்த ஆமாத்தூர் அம்மானைக்கோட லிரும்புறவிற் கொச்சை வயத்தலைவன்நாட லரியசீர் ஞானசம் பந்தன்றன்பாட லிவைவல்லார்க் கில்லையாம் பாவமே.
சொற்பிரிப்பு
ஆடல் அரவு அசைத்த ஆமாத்தூர் அம்மானை,கோடல் இரும் புறவின் கொச்சைவயத் தலைவன் -நாடல் அரிய சீர் ஞானசம்பந்தன் தன்பாடல் இவை வல்லார்க்கு இல்லை ஆம், பாவமே.சுவாமி : அழகியநாதர்;அம்பாள் : முத்தாம்பிகை.
உரை

ஆடும் அரவத்தை அரையில் அணிந்த ஆமாத்தூர் அண்ணலே சிவபெருமான் ஆவார். அவரைப் புகழ்ந்து கொச்சை வயம் என்றழைக்கப் பெறும் சீர்காழிப்பதியில் அவதரித்த      ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்கள் பாடியருளியுள்ளார். அப்பாடல்களைப் பாட வல்லவர்க்கு பாவம் இல்லையாம்.