திருமுறை 2 · 2.043 · 11

திருப்புள்ளிருக்குவேளூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
புள்ளிருக்குவேளூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

கள்ளார்ந்த பூங்கொன்றை மதமத்தங் கதிர்மதியம்உள்ளார்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையுமிடம்தள்ளாய சம்பாதி சடாயென்பார் தாமிருவர்புள்ளானார்க் கரையனிடம் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
கள் ஆர்ந்த பூங்கொன்றை, மதமத்தம், கதிர் மதியம்உள் ஆர்ந்த சடைமுடி எம் பெருமானார் உறையும் இடம் தள்ளாய சம்பாதி, சடாயு, என்பர்தாம் இருவர் - புள்ஆனார்க்கு அரையன் இடம் புள்ளிருக்குவேளூரே.
உரை

ஈசன், தேன் நிறைந்த கொன்றை மலர்களையும் ஊமத்தம் பூவினையும் சந்திரனையும் தன் தலையில் கொண்டவர். அவர் சம்பாதி சடாயு என்னும் பறவைப்பிறப்புடைய தேவர்கள் வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

2

தையலாள் ஒருபாகஞ் சடைமேலாள் அவளோடும்ஐயந்தேர்ந் துழல்வாரோர் அந்தணனார் உறையுமிடம்மெய்சொல்லா இராவணனை மேலோடி யீடழித்துப்பொய்சொல்லா துயிர்போனான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
தையலாள் ஒருபாகம், சடைமேலாள் அவளோடும் ஐயம் தேர்ந்து உழல்வார், ஓர் அந்தணனார், உறையும் இடம்மெய் சொல்லா இராவணனை மேல்ஓடி ஈடு அழித்து,பொய் சொல்லாது உயிர்போனான் புள்ளிருக்குவேளூரே.
உரை

தையல்நாயகி என்ற நாமத்தை உடைய உமாதேவியைத் தன் உடம்பின் பாகமாகக் கொண்டவரே ஈசர். அவர் கங்கையைத் தலையில் தரித்துள்ளார். பிரம கபாலத்தை ஏந்தியபடியே பலிதேர்வார். அவர், இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது எதிர்த்துப் போரிட்டு, கீழே விழுந்து, பின்பு இராமனிடம் உண்மையைக் கூறி உயிர் துறந்த, சடாயு வழிபட்ட புள்ளிருக்குவேளூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

3

வாசநலஞ் செய்திமையோர் நாடோறும் மலர்தூவஈசனெம் பெருமானார் இனிதாக உறையுமிடம்யோசனைபோய்ப் பூக்கொணர்ந்தங் கொருநாளும் ஒழியாமேபூசனைசெய் தினிதிருந்தான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
வாசநலம் செய்து இமையோர் நாள்தோறும் மலர் தூவ,ஈசன், எம்பெருமானார், இனிது ஆக உறையும் இடம் - யோசனை போய்ப் பூக் கொணர்ந்து, அங்கு ஒருநாளும் ஒழியாமே, பூசனை செய்து இனிது இருந்தான் புள்ளிருக்குவேளூரே.
உரை

நாள்தோறும் ஒரு யோசனை தூரம் உள்ள காவிரிப்பூம்பட்டினம் சென்று அங்குள்ள நல்ல மணமுள்ள பூக்களைப் பறித்து வந்து வழிபாடு செய்யும் பறவையேசடாயுவாம். அச்சடாயு இருக்கும் இடமே புள்ளிருக்கு வேளூர். அவ்வூரையே தம் கோயிலாகக் கொண்டவர் சிவபெருமான். அவரைத் தேவர்கள் நாடோறும் மலர்தூவி வணங்கி மகிழ்வர்.

4

மாகாயம் பெரியதொரு மானுரிதோ லுடையாடைஏகாய மிட்டுகந்த எரியாடி உறையுமிடம்ஆகாயந் தேரோடும் இராவணனை அமரின்கண்போகாமே பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
மா காயம் பெரியது ஒரு மான் உரி தோல் உடைஆடை ஏகாயம் இட்டு உகந்த எரிஆடி உறையும் இடம்ஆகாயம் தேர் ஓடும் இராவணனை அமரின்கண் போகாமே பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.
உரை

பேருடலைக் கொண்டவரே எம்பெருமான். சிறிய மான்தோலை உடையாகக் கொண்டவரும் அவரே. நெருப்பைக் கையில் ஏந்தி சுடுகாட்டில் ஆடுபவரும் அவரே. அவர்,ஆகாய வழியாக இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது எதிர்த்துப் போரிட்டு      மடிந்த கழுகாசனர் சடாயு வழிபாடு செய்த புள்ளிருக்கு வேளூரில் கோயில் கொண்டுள்ளார்.

5

கீதத்தை மிகப்பாடும் அடியார்கள் குடியாகப்பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
கீதத்தை மிகப் பாடும் அடியார்கள் குடிஆகப் பாதத்தைத் தொழ நின்ற பரஞ்சோதி பயிலும் இடம் வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவம்ஆகபோதத்தால் வழிபட்டான் புள்ளிருக்குவேளூரே.
உரை

வேத மந்திரமொழிகளைக் கூறி, மணலையே சிவலிங்கமாகப் பாவித்து சம்பாதி ஈசனை வழிபட்டான். அவ்விடமே புள்ளிருக்கு வேளூர் ஆகும். அவ்வூரில் பக்திப் பாடல்களைப் பண்ணோடு பாடி அடியவர்கள் ஈசனின் திருவடிகளை வணங்கி மகிழ்வர். ஒளிமயமான ஈசனார் கோயில் கொண்டுள்ள இடமே புள்ளிருக்கு வேளூராம்.

6

திறங்கொண்ட அடியார்மேல் தீவினைநோய் வாராமேஅறங்கொண்டு சிவதன்மம் உரைத்தபிரான் அமருமிடம்மறங்கொண்டங் கிராவணன்றன் வலிகருதி வந்தானைப்புறங்கண்ட சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
திறம் கொண்ட அடியார் மேல் தீவினை நோய் வாராமேஅறம் கொண்டு சிவதன்மம் உரைத்த பிரான் அமரும் இடம் மறம் கொண்டு அங்கு இராவணன் தன் வலி கருதி வந்தானைப்புறம் கண்ட சடாய் என்பான் புள்ளிருக்குவேளூரே.
உரை

பக்தியுடன் வணங்கும் அடியவர்களுக்குத் தீவினை நோய் வராமல் காப்பவரே எம்பெருமான். சனகாதி முனிவர்களுக்கு அறத்தை உபதேசித்தவரும் அவரே ஆவார். வலிமைமிக்க இராவணன் சீதையைத் தூக்கிச் செல்லும்போது எதிர்த்துப் போரிட்ட சடாயு வழிபாடு செய்த தவமே புள்ளிருக்கு வேளூராம். அவ்விடத்தில் கோயில் கொண்டவரே எம்பெருமான் ஆவார்.

7

அத்தியின்ஈ ருரிமூடி அழகாக அனலேந்திப்பித்தரைப்போற் பலிதிரியும் பெருமானார் பேணுமிடம்பத்தியினால் வழிபட்டுப் பலகாலந் தவஞ்செய்துபுத்தியொன்ற வைத்துகந்தான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
அத்தியின்ஈர்உரிமூடி, அழகுஆக அனல் ஏந்தி, பித்தரைப் போல் பலி திரியும் பெருமானார் பேணும் இடம் - பத்தியினால் வழிபட்டு, பலகாலம் தவம் செய்து,புத்தி ஒன்ற வைத்து உகந்தான் புள்ளிருக்குவேளூரே.
உரை

ஈசன், யானையின் தோலை உரித்துப் போர்வையாகச் சூடியுள்ளான். அவன் அனலை ஏந்தி ஆடுவான். பித்தரைப்போல் விரும்பி, கோயில் கொண்டுள்ள இடமேபுள்ளிருக்கு வேளூராம். அவ்விடத்தில்தான் சடாயு பக்தியோடு பலகாலம் ஈசனை நோக்கித்தவம் செய்து சிறப்புற்ற இடம் புள்ளிருக்கு வேளூர். இது சிவபெருமான் விரும்பி உறையும்இடமாகும்.

8

பண்ணொன்ற இசைபாடும் அடியார்கள் குடியாகமண்ணின்றி விண்கொடுக்கும் மணிகண்டன் மருவுமிடம்எண்ணின்றி முக்கோடி வாணாள துடையானைப்புண்ணொன்றப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
பண் ஒன்ற இசை பாடும் அடியார்கள் குடிஆகமண் இன்றி விண் கொடுக்கும் மணிகண்டன் மருவும் இடம் - எண் இன்றி முக்கோடி வாழ்நாள் அது உடையானைப் புண் ஒன்றப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.
உரை

எண்ணிக்கையில் மிகுந்த முக்கோடி வாழ்நாளைத் தவத்தால் பெற்றவன் இராவணன். அவனது மார்பில் புண் உண்டாகும்படி போரிட்டு மடிந்தான் சடாயு. அச்சடாயு என்ற பறவை வழிபட்ட இடமே புள்ளிருக்கு வேளூர் ஆகும். அத்தலத்தில் அடியவர்கள் பண்ணோடு பாடி இறைவனை வணங்குவர். அவர்களுக்கு விண்ணுலக வாழ்வைக் கொடுப்பவன் ஈசன். அம்மணிகண்டன் விரும்பி உறைவது புள்ளிருக்கு வேளூர் தலமே ஆகும்.

9

வேதித்தார் புரமூன்றும் வெங்கணையால் வெந்தவியச்சாதித்த வில்லாளி கண்ணாளன் சாருமிடம்ஆதித்தன் மகனென்ன அகன்ஞாலத் தவரோடும்போதித்த சடாயென்பான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
வேதித்தார் புரம் மூன்றும் வெங்கணையால் வெந்து அவியச்சாதித்த வில்லாளி, கண்ணாளன், சாரும் இடம் - ஆதித்தன்மகன் என்ன, அகன் ஞாலத்தவரோடும்போதித்த சடாயு என்பான் புள்ளிருக்குவேளூரே.
உரை

பகை கொண்ட முப்புர அசுரர்களின் கோட்டைகளை வலிமையான கணைதொடுத்து அழித்தவர் சிவபெருமான். மேரு மலையை வில்லாக வளைத்தவன் சிவபெருமான். நெற்றிக்கண் கொண்டவர் சிவபெருமான். அவர், ஆதித்தனின் மக்களாகத் தோன்றிய சம்பாதி, சடாயு என்ற இரு பறவைகளும் வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார் சிவபிரான்.

10

கடுத்துவருங் கங்கைதனைக் கமழ்சடையொன் றாடாமேதடுத்தவரெம் பெருமானார் தாமினிதா யுறையுமிடம்விடைத்துவரும் இலங்கைக்கோன் மலங்கச்சென் றிராமற்காய்ப்புடைத்தவனைப் பொருதழித்தான் புள்ளிருக்கு வேளூரே.
சொற்பிரிப்பு
கடுத்து வரும் கங்கைதனைக் கமழ் சடை ஒன்று ஆடாமே தடுத்தவர் எம்பெருமானார், தாம்இனிதுஆய் உறையும் இடம்விடைத்து வரும் இலங்கைக் கோன் மலங்கச் சென்று, இராமற்காய்ப்புடைத்து அவனைப் பொருது அழித்தான் புள்ளிருக்குவேளூரே.
உரை

சீறிப்பாய்ந்து வந்த கங்கையை மணமிக்க தன் தலையில் தழும்பிச் செல்லாதவாறு தாங்கியவரே சிவபெருமான். இராவணனை இராமனுக்காக எதிர்த்துப் போரிட்டு இறந்த சடாயு வழிபட்ட புள்ளிருக்கு வேளூர் தலத்தில் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

11

செடியாய வுடல்தீர்ப்பான் தீவினைக்கோர் மருந்தாவான்பொடியாடிக் கடிமைசெய்த புள்ளிருக்கு வேளூரைக்கடியார்ந்த பொழில்காழிக் கவுணியன்சம் பந்தன்சொல்மடியாது சொல்லவல்லார்க் கில்லையாம் மறுபிறப்பே.
சொற்பிரிப்பு
செடிஆய உடல் தீர்ப்பான், தீவினைக்கு ஓர் மருந்து ஆவான்பொடிஆடிக்கு அடிமை செய்த புள்ளிருக்குவேளூரை,கடி ஆர்ந்த பொழில் காழிக் கவுணியன்-சம்பந்தன்-சொல் மடியாது சொல்ல வல்லார்க்கு இல்லைஆம், மறுபிறப்பே.சுவாமி : வைத்தியநாதர்;அம்பாள் : தையல்நாயகி.
உரை

மணமிக்க சோலைகள் சூழ்ந்த சீர்காழிப்பதியில் அவதரித்தவர் ஞானசம்பந்தப் பெருமான். சிவன், செடிபோல் உயிரைப்பற்றி வரும் உடலை அழிப்பவர். தீவினைகளுக்கு மருந்தாக விளங்குபவரும் அவரே ஆவார். அப்புள்ளிருக்கு வேளூர் இறைவனைப் புகழ்ந்து பத்துப் பாடல்கள் பாடி அருளியுள்ளார் ஞானசம்பந்தர், அதனைக் குறைவின்றி சொல்ல வல்லவர்களுக்கு மறுபிறப்பே இல்லையாம் என்க.