திருமுறை 2 · 2.041 · 11

திருச்சாய்க்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
சாய்க்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

மண்புகார் வான்புகுவர் மனமிளையார் பசியாலுங்கண்புகார் பிணியறியார் கற்றாருங் கேட்டாரும்விண்புகா ரெனவேண்டா வெண்மாட நெடுவீதித்தண்புகார்ச் சாய்க்காட்டெந் தலைவன்தாள் சார்ந்தாரே.
சொற்பிரிப்பு
மண் புகார், வான் புகுவர், மனம் இளையார்; பசியாலும் கண் புகார்; பிணி அறியார்; கற்றாரும் கேட்டாரும்விண் புகார் என வேண்டா - வெண் மாட நெடுவீதித் தண் புகார்ச் சாய்க்காட்டு எம் தலைவன் தாள் சார்ந்தாரே.
உரை

மாடங்கள் பொருந்திய பெரிய வீதிகளைக் கொண்டது சாய்க்காடு என்னும் தலம். அத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனைச் சார்ந்த அன்பர்கள் மண்ணில் பிறந்து உளைந்து வருந்தார். விண்ணுலக இன்பத்தை இங்கேயே உறுவர். மனம் வருந்தார். பசித்துன்பம் அடையார். பிணி அடையார். இறைவனை எப்போதும் வழிபட்டு இன்புறுவர்.

2

போய்க்காடே மறைந்துறைதல் புரிந்தானும் பூம்புகார்ச்சாய்க்காடே பதியாக உடையானும் விடையானும்வாய்க்காடு முதுமரமே இடமாக வந்தடைந்தபேய்க்காடல் புரிந்தானும் பெரியோர்கள் பெருமானே.
சொற்பிரிப்பு
போய்க் காடே மறைந்து உறைதல் புரிந்தானும், பூம் புகார்ச் சாய்க்காடே பதிஆக உடையானும், விடையானும், வாய்க் காடு முதுமரமே இடம்ஆக வந்து அடைந்த பேய்க்கு ஆடல் புரிந்தானும், பெரியோர்கள் பெருமானே.
உரை

ஈசனே! காட்டில் மறைந்து உறைதலை விரும்புபவன். திருச்சாய்க்காட்டைத் தலமாகக் கொண்டு உறைபவன். இடப வாகனத்தைக் கொண்டவன். பேய்கள் விரும்பிஆடும் ஆலமரங்கள் நிறைந்த சுடுகாட்டில் ஆடல் புரிபவன். பெரியோர்களால் பெரிதும்போற்றப்படும் பெருமான் அவனே ஆவான்.

3

நீநாளும் நன்னெஞ்சே நினைகண்டாய் யாரறிவார்சாநாளும் வாழ்நாளுஞ் சாய்க்காட்டெம் பெருமாற்கேபூநாளுந் தலைசுமப்பப் புகழ்நாமஞ் செவிகேட்பநாநாளும் நவின்றேத்தப் பெறலாமே நல்வினையே.
சொற்பிரிப்பு
நீ நாளும், நன்நெஞ்சே, நினைகண்டாய்! ஆர் அறிவார், சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே பூ நாளும் தலை சுமப்ப, புகழ் நாமம் செவி கேட்ப, நா நாளும் நவின்று ஏத்த, பெறல் ஆமே, நல்வினையே.
உரை

நல்நெஞ்சமே! சாநாளும், வாழ்நாளும் யாருக்கும் தெரியாது. எனவே நீ தினந்தோறும் திருச்சாய்க்காடு ஈசன்மீது அன்பு கொண்டு, நல்ல மலர்களைப் பறித்து வந்து இறைவனின் நாமங்களைச் சொல்லியும் கேட்டும் வழிபாடு செய்வாயாக. அவ்வாறு செய்தால் நீ நல்வினைப் பயன்களைப் பெறலாம்.

4

கட்டலர்த்த மலர்தூவிக் கைதொழுமின் பொன்னியன்றதட்டலர்த்த பூஞ்செருத்தி கோங்கமருந் தாழ்பொழில்வாய்மொட்டலர்த்த தடந்தாழை முருகுயிர்க்குங் காவிரிப்பூம்பட்டினத்துச் சாய்க்காட்டெம் பரமேட்டி பாதமே.
சொற்பிரிப்பு
கட்டு அலர்த்த மலர் தூவிக் கைதொழுமின் - பொன் இயன்றதட்டு அலர்த்த பூஞ்செருந்தி கோங்கு அமரும் தாழ்பொழில்வாய்,மொட்டு அலர்த்த தடந்தாழை முருகு உயிர்க்கும்காவிரிப்பூம் பட்டினத்துச் சாய்க்காட்டு எம் பரமேட்டி பாதமே!
உரை

நல்ல மணமிக்க மலர்களைக் கொண்டு ஈசனை வழிபடுங்கள். நல்ல பொன்னிறமிக்க செருந்தி, கோங்கு முதலிய அழகிய மலர்களைத் தூவியும் வழிபடுங்கள். மொட்டவிழ்க்கும் தாழைமலர் போன்ற மணமிக்க சாய்க்காடு இறைவனின் திருவடிகளை வழிபடுங்கள்.

5

கோங்கன்ன குவிமுலையாள் கொழும்பணைத்தோட் கொடியிடையைப்பாங்கென்ன வைத்துகந்தான் படர்சடைமேற் பால்மதியந்தாங்கினான் பூம்புகார்ச் சாய்க்காட்டான் தாள்நிழற்கீழ்ஓங்கினார் ஓங்கினா ரெனவுரைக்கும் உலகமே.
சொற்பிரிப்பு
"கோங்கு அன்ன குவிமுலையாள், கொழும் பணைத்தோள் கொடியிடையைப்பாங்கு என்ன வைத்து உகந்தான், படர்சடைமேல் பால்மதியம் தாங்கினான் - பூம் புகார்ச் சாய்க்காட்டான்; தாள்நிழல்கீழ் ஓங்கினார், ஓங்கினார்" என உரைக்கும், உலகமே.
உரை

கோங்கு போன்றும், மூங்கில் போன்றும் பூங்கொடி போன்றும் விளங்குபவளாம் உமாதேவியைத் தன் இடபாகமாகக் கொண்டவரே ஈசன் ஆவார். அவர் தனது தலையில் சந்திரனைத் தாங்கியுள்ளார். அவர் பூம்புகாருக்கு அருகில் அமைந்த திருச்சாய்க்காட்டில் கோயில் கொண்டுள்ளார். அவ்விறைவனை வணங்குபவர்களையே இவ்வுலகம் பெரிதும் போற்றிக் கொண்டாடும்.

6

சாந்தாக நீறணிந்தான் சாய்க்காட்டான் காமனைமுன்தீந்தாகம் எரிகொளுவச் செற்றுகந்தான் திருமுடிமேல்ஓய்ந்தார மதிசூடி யொளிதிகழும் மலைமகள்தோள்தோய்ந்தாகம் பாகமா வுடையானும் விடையானே.
சொற்பிரிப்பு
சாந்து ஆக நீறு அணிந்தான், சாய்க்காட்டான், காமனை முன்தீந்து ஆக எரி கொளுவச் செற்று உகந்தான், திருமுடி மேல் ஓய்ந்து ஆர மதி சூடி ஒளி திகழும் மலைமகள் தோள்தோய்ந்து ஆகம் பாகமா உடையானும், விடையோனே.
உரை

ஈசன், திருநீற்றை அணிந்தவன். சாய்க்காட்டில் கோயில் கொண்டுள்ளவன். காமனை நெற்றிக்கண்ணால் எரித்துச் சாம்பலாக்கியவன். தனது தலையில் மதியைச் சூடியவன். மலைமகளைத் தன் உடம்பில் ஒருபாகமாகக் கொண்டவன். இடப வாகனத்தைக் கொண்டவனும் அவனே.

7

மல்குல்தோய் மணிமாடம் மதிதவழும் நெடுவீதிசங்கெலாங் கரைபொருதுதிரைபுலம்புஞ் சாய்க்காட்டான்கொங்குலா வரிவண்டின் இசைபாடு மலர்க்கொன்றைத்தொங்கலான் அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருளலவே.
சொற்பிரிப்பு
மங்குல் தோய் மணிமாடம் மதி தவழும் நெடுவீதி,சங்கு எலாம் கரை பொருது திரை புலம்பும் சாய்க்காட்டான்கொங்கு உலா வரிவண்டு இன் இசை பாடும் அலர்க்கொன்றைத் தொங்கலான்-அடியார்க்குச் சுவர்க்கங்கள் பொருள் அலவே.
உரை

மேகங்கள் தோய்கின்ற உயர்ந்த மாடங்கள் நிறைந்த வீதிகளில் சங்குகள் அலைகளால் கொண்டு வந்து ஒதுக்கப்பட்டு நிறைந்து விளங்கும். அத்தகைய வளம் நிறைந்த திருச்சாய்க்காட்டுத் தலத்தில் வண்டுகள் கொன்றை மலர்களில் நிறைந்து விளங்கும். வண்டுகள் மொய்க்காத கொன்றை மலர் மாலைகளை அணிந்த சிவபெருமானின் அடியவர்கள் சொர்க்கப் பதியையும் ஒரு பொருட்டாக மதிக்க மாட்டார்கள்.

8

தொடலரிய தொருகணையாற் புரமூன்றும் எரியுண்ணப்படஅரவத் தெழிலாரம் பூண்டான்பண் டரக்கனையுந்தடவரையால் தடவரைத்தோ ளுன்றினான் சாய்க்காட்டைஇடவகையால் அடைவோமென் றெண்ணுவார்க் கிடரிலையே.
சொற்பிரிப்பு
"தொடல் அரியது ஒரு கணையால் புரம்மூன்றும் எரியுண்ணபடஅரவத்து எழில் ஆரம் பூண்டான், பண்டு அரக்கனையும்தடவரையால்-தடவரைத்தோள் ஊன்றினான், சாய்க்காட்டை இட வகையால் அடைவோம்” என்று எண்ணுவார்க்கு இடர் இலையே.
உரை

ஒப்பற்ற கணையைக் கொண்டு மூன்று புரங்களையும் நெருப்புப் பற்றச் செய்தவரே ஈசன். படம் கொண்ட அரவத்தை அணிகலனாகக் கொண்டவரே ஈசன். கயிலாயத்தைத் தூக்க முயன்ற இராவணன் என்ற அரக்கனின் தோளை நெரித்தவரே ஈசன். அவர் கோயில் கொண்டுள்ள திருச்சாய்க்காடு தலத்தை அடைய நினைப்பவர்களுக்குத் துன்பம் இல்லை.

9

வையநீ ரேற்றானும் மலருறையும் நான்முகனும்ஐயன்மார் இருவர்க்கும் அளப்பரிதால் அவன்பெருமைதையலார் பாட்டோவாச் சாய்க்காட்டெம் பெருமானைத்தெய்வமாப் பேணாதார் தெளிவுடைமை தேறோமே.
சொற்பிரிப்பு
வையம் நீர் ஏற்றானும், மலர் உறையும் நான்முகனும், ஐயன்மார்இருவர்க்கும் அளப்பு அரிதால் அவன் பெருமை;தையலார் பாட்டு ஓவாச் சாய்க்காட்டு எம்பெருமானைத்தெய்வமாப் பேணாதார் தெளிவுஉடைமை தேறோமே.
உரை

கடலில் படுத்திருக்கும் திருமால், மலரில் உறையும் பிரமன் ஆகிய இருவராலும் அளப்பதற்கு அரியவனே சிவபெருமான். அவரது பெருமைகளைத் திருச்சாய்க்காட்டில் வாழும் பெண்டிர் பாடல்களாகப் பாடி மகிழ்வர். அவரை வழிபடாதவர்கள் தெளிவுடைமை இல்லாதவர்களே ஆவார்கள்.

10

குறங்காட்டு நால்விரலிற் கோவணத்துக் கோலோவிப்போய்அறங்காட்டுஞ் சமணருஞ் சாக்கியரும் அலர்தூற்றுந்திறங்காட்டல் கேளாதே தெளிவுடையீர் சென்றடைமின்புறங்காட்டில் ஆடலான் பூம்புகார்ச் சாய்க்காடே.
சொற்பிரிப்பு
குறங்கு ஆட்டும் நால்விரலில் கோவணத்துக்கு உலோவிப் போய்அறம் காட்டும் சமணரும், சாக்கியரும், அலர் தூற்றும் திறம் காட்டல் கேளாதே, தெளிவு உடையீர்! சென்று அடைமின்,புறங்காட்டில் ஆடலான் பூம் புகார்ச் சாய்க்காடே!
உரை

சமணரும், சாக்கியரும் குறைந்த ஆடையினை அணிந்து எங்கும் உலவித் திரிவர். அடியவர்களே, நீவிர் அவர்கள் கூறும் பொய்யுரைகளைக் கேளாது தெளிவுடைய மதியினராய் திருச்சாய்க்காட்டைச் சென்றடைமின். சிவஞானத் தெளிவுடைய நீவிர் புறங்காட்டில் ஆடும்   இறைவனே சாய்க்காட்டிலும் கோயில் கொண்டுள்ளான் என்பதை உணர்ந்து வழிபாடு செய்யுங்கள். எல்லாப் பேறுகளையும் பெற்றுச் சிறப்படையுங்கள்.

11

நொம்பைந்து புடைத்தொல்கு நூபுரஞ்சேர் மெல்லடியார்அம்பந்தும் வரிக்கழலும் அரவஞ்செய் பூங்காழிச்சம்பந்தன் தமிழ்பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்எம்பந்த மெனக்கருதி ஏத்துவார்க் கிடர்கெடுமே.
சொற்பிரிப்பு
நொய்ம் பந்து புடைத்து ஒல்கு நூபுரம் சேர் மெல்அடியார்அம் பந்தும் வரிக்கழலும் அரவம் செய் பூங் காழிச் சம்பந்தன் தமிழ் பகர்ந்த சாய்க்காட்டுப் பத்தினையும்,“எம்பந்தம்” எனக் கருதி, ஏத்துவார்க்கு இடர் கெடுமே.சுவாமி : இரத்தின சாயாவனேஸ்வரர்; அம்பாள் : குயிலினும் நன்மொழியம்மை.
உரை

சிலம்பணிந்த மகளிர் பந்தடித்து ஆடுவர். அவர்களின் மென்மையான பாதங்கள் குதித்து ஆடும் ஒலியும், பந்துகள் அடிக்கப்படும் ஒலியும் நிறைந்து காணப்படும் தலமே சீர்காழித் தலமாம். அத்தலத்தில் அவதரித்த சம்பந்தப் பெருமான், சாய்க்காட்டுஇறைவனைப் புகழ்ந்து, பத்துப்பாடல்கள் பாடி அருளியுள்ளார். அப்பத்துப் பாடல்களையும் விரும்பி ஏத்துவார்க்கு இடர் இல்லை என்க.