திருமுறை 2 · 2.040 · 11

திருப்பிரமபுரம்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
சீகாமரம்
தலம்
சீர்காழி - 01-பிரமபுரம்
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

எம்பிரான் எனக்கமுத மாவானுந் தன்னடைந்தார்தம்பிரான் ஆவானுந் தழலேந்து கையானுங்கம்பமா கரியுரித்த காபாலி கறைக்கண்டன்வம்புலாம் பொழிற்பிரம புரத்துறையும் வானவனே.
சொற்பிரிப்பு
எம்பிரான், எனக்கு அமுதம் ஆவானும், தன் அடைந்தார் தம்பிரான் ஆவானும், தழல் ஏந்து கையானும்,கம்ப மா கரி உரித்த காபாலி, கறைக்கண்டன் - வம்பு உலாம் பொழில் பிரமபுரத்து உறையும் வானவனே.
உரை

எம்பிரான், எனக்கு அமுதமாக விளங்குபவர். தன்னை வணங்கி அடைந்தவர்களுக்குத் தலைவர் ஆவார். அவர் நெருப்பைக் கையில் ஏந்தியிருப்பார்.யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டிருப்பவர். கண்டம் கறுத்தவர். மணம் கமழும் பொழில் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரை வணங்குவோமாக.

2

தாமென்றும் மனந்தளராத் தகுதியராய் உலகத்துக்காமென்று சரண்புகுந்தார் தமைக்காக்குங் கருணையினான்ஓமென்று மறைபயில்வார் பிரமபுரத் துறைகின்றகாமன்றன் உடலெரியக் கனல்சேர்ந்த கண்ணானே.
சொற்பிரிப்பு
தாம் என்றும் மனம் தளராத் தகுதியராய், "உலகத்துக்கு ஆம்!" என்று சரண் புகுந்தார் தமைக் காக்கும் கருணையினான் "ஓம்!" என்று மறை பயில்வார்பிரமபுரத்து உறைகின்ற காமன் தன் உடல் எரியக் கனல் சேர்ந்த கண்ணானே.
உரை

அடியவர்கள் தமக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் தளர மாட்டார்கள். எல்லாம் இறைவன் அருளே என்று கொண்டு அவனையே சரணடைவார்கள். அவர்களைக் காக்கும் கருணை நிறைந்தவனே ஈசன். மறையவர்கள் ஈசனையே ஓம் என்று கூறி ஓதி மகிழ்வர். அவனே பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனே தேவர்கள் சொல்லக் கேட்டு நடந்து கொண்ட காமனை எரித்த கண்ணை உடையவனும் ஆவான்.

3

நன்னெஞ்சே யுனையிரந்தேன் நம்பெருமான் திருவடியேஉன்னஞ்செய் திருகண்டாய் உய்வதனை வேண்டுதியேல்அன்னஞ்சேர் பிரமபுரத் தாரமுதை எப்போதும்பன்னுஞ்சீர் வாயதுவே பார்கண்ணே பரிந்திடவே.
சொற்பிரிப்பு
நன்னெஞ்சே! உனை இரந்தேன்; நம்பெருமான் திருவடியேஉன்னம் செய்து இரு கண்டாய்! உய்வதனை வேண்டுதியேல்,அன்னம் சேர் பிரமபுரத்து ஆரமுதை, எப்போதும்பன், அம் சீர் வாய் அதுவே! பார், கண்ணே, பரிந்திடவே!
உரை

நன்னெஞ்சே! உன்னை வேண்டுகிறேன்! நீ எப்பொழுதும் நம்பெருமானின் திருவடிகளையே நினைத்துக் கொண்டிரு. நீ நற்கதி அடைய பிரமபுரத்துள் கோயில் கொண்டு விளங்கும் நம்பெருமானின் சிறப்புக்களையே பேசிக் கொண்டிரு. அவனது திருக்கோலத்தையே உன் கண்ணால் எப்பொழுதும் பார்த்துக் கொண்டே இருப்பாயாக.

4

சாநாளின் றிம்மனமே சங்கைதனைத் தவிர்ப்பிக்குங்கோனாளுந் திருவடிக்கே கொழுமலர்தூ வெத்தனையுந்தேனாளும் பொழிற்பிரம புரத்துறையுந் தீவணனைநாநாளும் நல்நியமஞ் செய்தவன்சீர் நவின்றேத்தே.
சொற்பிரிப்பு
சாம் நாள் இன்றி(ம்), மனமே! சங்கைதனைத் தவிர்ப்பிக்கும்கோன் ஆளும் திருவடிக்கே கொழு மலர் தூவு! எத்தனையும்தேன் ஆளும் பொழில் பிரமபுரத்து உறையும் தீவணனை,நா, நாளும் நன் நியமம் செய்தவன், சீர் நவின்று ஏத்தே!
உரை

மனமே! சாவைப்பற்றி நினையாதே! சாகும் நாள் வரை உன்னை ஈசன் காப்பான்! ஐயம் வேண்டாம். அவனது திருவடிகளில் மலர் தூவி வணங்கு. தேன்நிறைந்த பூக்கள் உள்ள சோலைகள் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ள ஈசனை நீ எந்நாளும் போற்று. அத்தீவண்ணனை நாளும் வழிபடு. அதுவே நீ செய்ய வேண்டுவனவாம்.

5

கண்ணுதலான் வெண்ணீற்றான் கமழ்சடையான் விடையேறிபெண்ணிதமாம் உருவத்தான் பிஞ்ஞகன்பேர் பலவுடையான்விண்ணுதலாத் தோன்றியசீர்ப் பிரமபுரந் தொழவிரும்பிஎண்ணுதலாஞ் செல்வத்தை இயல்பாக அறிந்தோமே.
சொற்பிரிப்பு
கண் நுதலான், வெண்ணீற்றான், கமழ் சடையான், விடைஏறி,பெண் இதம் ஆம் உருவத்தான், பிஞ்ஞகன், பேர் பல உடையான்,விண் நுதலாத் தோன்றிய சீர்ப் பிரமபுரம் தொழ விரும்பிஎண்ணுதல் ஆம் செல்வத்தை இயல்பு ஆக அறிந்தோமே.
உரை

ஈசன், நெற்றிக் கண்ணை உடையவன். திருநீற்றை அணிந்தவன். நீண்டசடையினை உடையவன். இடப வாகனத்தில் ஏறி அமர்ந்தவன். அர்த்தநாரீஸ்வரன், உயர் புகழ் கொண்ட பிரமபுரத்துள் கோயில் கொண்டவன். உயர் செல்வமாக விளங்கும் அவனைத் தொழும் புண்ணியத்தை இயல்பாகவே நாம் பெற்றுள்ளோம்.

6

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினுந் தன்னடியார்க்கிங்கேயென் றருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையுஞ்சங்கேயொத் தொளிர்மேனிச் சங்கரன்றன் தன்மைகளே.
சொற்பிரிப்பு
எங்கேனும் யாது ஆகிப் பிறந்திடினும்; தன் அடியார்க்கு"இங்கே” என்று அருள்புரியும் - எம்பெருமான், எருது ஏறி,கொங்கு ஏயும் மலர்ச்சோலைக் குளிர் பிரமபுரத்து உறையும்சங்கே ஒத்து ஒளிர் மேனிச் சங்கரன், தன் தன்மைகளே!
உரை

எந்த இடத்திலும் மற்றும் எவ்வகையிலும் பிறந்த அடியவர்களுக்கும் அருள்பவனே ஈசன் ஆவான். அவன் அடியவர்களுக்கு எளிதில் அருள்புரியவே, சோலைகள் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ளான். சங்கு போன்ற வெண்ணிறமுடைய அச்சங்கரனை அத்தலத்துள் கண்டு இன்புறுவோமாக.

7

சிலையதுவெஞ் சிலையாகத் திரிபுரமூன் றெரிசெய்தஇலைநுனைவேற் தடக்கையன் ஏந்திழையா ளொருகூறன்அலைபுனல்சூழ் பிரமபுரத் தருமணியை அடிபணிந்தால்நிலையுடைய பெருஞ்செல்வம் நீடுலகிற் பெறலாமே.
சொற்பிரிப்பு
சிலை அதுவே சிலைஆகத் திரிபுரம் மூன்று எரிசெய்தஇலை நுனை வேல் தடக்கையன், ஏந்திழையாள் ஒருகூறன்,அலை புனல் சூழ் பிரமபுரத்து அருமணியை அடி பணிந்தால்,நிலை உடைய பெருஞ்செல்வம் நீடு உலகில் பெறல் ஆமே.
உரை

ஈசன், மேரு மலையை வில்லாகக் கொண்டு முப்புரங்களை எரித்தான். அவனே சூலப்படையினைக் கையில் கொண்டுள்ளான். உமையவளைத் தன் உடம்பின் இடபாகத்தில் கொண்டுள்ளான். கடல் சூழ்ந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ள அருமணியாகிய அவனைத் தொழுது நிலையான செல்வத்தை நாம் பெறுவோமாக.

8

எரித்தமயிர் வாளரக்கன் வெற்பெடுக்கத் தோளொடுதாள்நெரித்தருளுஞ் சிவமூர்த்தி நீறணிந்த மேனியினான்உரித்தவரித் தோலுடையான் உறைபிரம புரந்தன்னைத்தரித்தமனம் எப்போதும் பெறுவார்தாம் தக்காரே.
சொற்பிரிப்பு
எரித்த மயிர் வாள் அரக்கன் வெற்பு எடுக்க, தோளொடு தாள்நெரித்து அருளும் சிவமூர்த்தி, நீறு அணிந்த மேனியினான்,உரித்த வரித்தோல் உடையான், உறை பிரமபுரம் தன்னைத்தரித்த மனம் எப்போதும் பெறுவார் தாம் தக்காரே.
உரை

ஈசன், கயிலை மலையைத் தூக்க முயன்ற இராவணனின் தோளையும் தாளையும் நெரித்தார். அவரே பின்பு அவனுக்கு அருளினார். நீறணிந்த மேனியராகிய அவரே, யானையைக் கொன்று அதன் தோலை உரித்து ஆடையாகப் போர்த்தி உள்ளார். அவரே பிரமபுரத் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரை மனமார வணங்கியவர்கள் எப்போதும் பெருந்தகை உடையாராக வாழ்வார்கள்.

9

கரியானும் நான்முகனுங் காணாமைக் கனலுருவாய்அரியானாம் பரமேட்டி அரவஞ்சே ரகலத்தான்தெரியாதான் இருந்துறையுந் திகழ்பிரம புரஞ்சேரஉரியார்தாம் ஏழுலகும் உடனாள உரியாரே.
சொற்பிரிப்பு
கரியானும் நான்முகனும் காணாமைக் கனல் உருஆய்அரியான்ஆம் பரமேட்டி, அரவம் சேர் அகலத்தான்,தெரியாதான், இருந்து உறையும் திகழ் பிரமபுரம் சேரஉரியார் தாம் ஏழ்உலகும் உடன் ஆள உரியாரே.
உரை

கரிய நிறமுடைய திருமாலும் பிரமனும் ஈசனைக் காண முயன்றனர். அவர்கள் அடிமுடி தேடிக் காணமுடியா நிலையில் நெருப்பு வடிவில் விளங்கியவரே ஈசன். அவனே பாம்பினை அணிந்துள்ளான். யார்க்கும் எளிதில் அறிய முடியாத தத்துவனும் அவனே. பிரமபுரத்துள் கோயில் கொண்டுள்ள அவனை வணங்குபவர்களே, ஏழுலகத்தையும் ஆளும் உரிமை உடையவர்கள் ஆவார்கள்.

10

உடையிலார் சீவரத்தார் தன்பெருமை உணர்வரியான்முடையிலார் வெண்டலைக்கை மூர்த்தியாந் திருவுருவன்பெடையிலார் வண்டாடும் பொழிற்பிரம புரத்துறையுஞ்சடையிலார் வெண்பிறையான் தாள்பணிவார் தக்காரே.
சொற்பிரிப்பு
உடைஇலார், சீவரத்தார், தன் பெருமை உணர்வு அரியான்;முடையில் ஆர் வெண் தலைக் கை மூர்த்திஆம் திருஉருவன்;பெடையில் ஆர் வண்டு ஆடும் பொழில் பிரமபுரத்து உறையும்சடையில் ஆர் வெண்பிறையான்; தாள் பணிவார் தக்காரே.
உரை

ஈசன் பிரம கபாலத்தை ஏந்திய மூர்த்தி ஆவான். அழகிய உருவினன் ஆவான்.வண்டுகள் மொய்க்கும் சோலைகள் நிறைந்த பிரமபுரத்துள் கோயில் கொண்டவன் ஆவான்.பிறை நிலவைத் தன் தலையில் கொண்டவன் ஆவான். அவனது பெருமைகளைச் சமணர்களும் சாக்கியர்களும் உணரமாட்டார்கள். இறைவனின் திருவடிகளைப் பணிபவர்களே உணரும் தகுதியுடைய சிறந்தோர் ஆவர்.

11

தன்னடைந்தார்க் கின்பங்கள் தருவானைத் தத்துவனைக்கன்னடைந்த மதிற்பிரம புரத்துறையுங் காவலனைமுன்னடைந்தான் சம்பந்தன் மொழிபத்து மிவைவல்லார்பொன்னடைந்தார் போகங்கள் பலவடைந்தார் புண்ணியரே.
சொற்பிரிப்பு
தன் அடைந்தார்க்கு இன்பங்கள் தருவானை, தத்துவனை,கன் அடைந்த மதில் பிரம புரத்து உறையும் காவலனை,முன் அடைந்தான் சம்பந்தன் மொழி பத்தும் இவை வல்லார்பொன் அடைந்தார்; போகங்கள் பல அடைந்தார்; புண்ணியரே.சுவாமி : பிரமபுரீஸ்வரர்;அம்பாள் : திருநிலைநாயகி.
உரை

ஈசன், தன்னை அடைந்த பக்தர்களுக்கு இன்பம் தருபவன் ஆவான். அவன் மதில் சூழ்ந்த பிரமபுரத்துள் மேவிய காவலன் ஆவான். அவனைப் புகழ்ந்து அன்புடன் அடைந்த ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களைப் பாடிட வல்லவர்கள் இவ்வுலகில் இன்பங்களை அடைவர். மறுமைக்குரிய நற்பேற்றையும் பெறுவர்.