திருமுறை 2 · 2.038 · 11

திருச்சாய்க்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
சாய்க்காடு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

நித்தலுந் நியமஞ் செய்துநீர் மலர்தூவிச்சித்தமொன் றவல்லார்க் கருளுஞ் சிவன்கோயில்மத்தயா னையின்கோ டும்வண்பீ லியும்வாரிதத்துநீர்ப் பொன்னி சாகரமேவு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
நித்தலும் நியமம் செய்து, நீர்மலர் தூவி,சித்தம் ஒன்ற வல்லார்க்கு அருளும் சிவன் கோயில்மத்தயானையின் கோடும் வண்பீலியும் வாரி,தத்து நீர்ப் பொன்னி, சாகரம் மேவு சாய்க்காடே.
உரை

தினந்தோறும் முறைப்படி மனம் ஒன்றுபட்டு வழிபாடு செய்யும் அடியவர்களுக்கு அருள் செய்பவனே சிவபெருமான்! அவர் யானையின் வெண்ணிறத் தந்தங்களையும் மயிற்தோகைகளையும் உருட்டி வரும் பொன்னி நதிக் கரையில் பொருந்திய சாய்க்காடு தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

2

பண்டலைக் கொண்டு பூதங்கள் பாடநின்றாடும்வெண்டலைக் கருங்கா டுறைவே தியன்கோயில்கொண்டலைத் திகழ்பே ரிமுழங் கக்குலாவித்தண்டலைத் தடமா மயிலாடு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
பண் தலைக்கொண்டு பூதங்கள் பாட நின்று ஆடும்வெண்டலைக் கருங்காடு உறை, வேதியன் கோயில் -கொண்டலைத் திகழ் பேரி முழங்க, குலாவித்தண்டலைத்தடம் மா மயில் ஆடு சாய்க்காடே.
உரை

பண்ணோடு பொருந்த பூதகணங்கள் பாடல்களைப் பாடி ஆடி மகிழும். மண்டை ஓடுகள் நிறைந்த சுடுகாட்டில் எம்பெருமானும் பூதகணங்களுடன் ஆடுவார். அவர் கோயில் கொண்டுள்ள இடமே திருச்சாய்க்காடாம். அங்கு மழை மேகங்கள் நிறைந்து விளங்கும். பேரிகைகள் முழங்கும். மயில்கள் நின்று ஆடும்.

3

நாறுகூ விளநா கிளவெண் மதியத்தோ(டு)ஆறுசூ டும்அம ரர்பிரா னுறைகோயில்ஊறுதேங் கனிமாங் கனியோங் கியசோலைத்தாறுதண் கதலிப் புதல்மேவு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
நாறு கூவிளம், நாகு இளவெண்மதியத்தோடு,ஆறு, சூடும் அமரர்பிரான் உறை கோயில் -ஊறு தேங்கனி மாங்கனி ஓங்கிய சோலை,தாறு தண் கதலிப் புதல், மேவு சாய்க்காடே.
உரை

ஈசனார் மணங்கமழும் வில்வ இலைகளைத் தலையில் சூடியிருப்பார். இளம்பிறையையும் கங்கையையும் தலையில் அணிந்திருப்பார். அவர் கோயில் கொண்டுள்ள தலமே திருச்சாய்க்காடாம். அத்தலத்தில் தென்னை மரங்களும், மாமரங்களும், வாழை மரங்களும் நிறைந்திருக்கும். 

4

வரங்கள்வண் புகழ்மன் னியஎந்தை மருவார்புரங்கள்மூன் றும்பொடி படஎய் தவன்கோயில்இரங்கலோ சையுமீட் டியசரத் தொடுமீண்டித்தரங்கநீள் கழித்தண் கரைவைகு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
வரங்கள் வண்புகழ் மன்னிய எந்தை, மருவார்புரங்கள் மூன்றும் பொடிபட எய்தவன், கோயில் -இரங்கல் ஓசையும் ஈட்டிய சரத்தொடும் ஈண்டி,தரங்கம் நீள்கழித் தண் கரை வைகு சாய்க்காடே.
உரை

எம்பெருமான், பெரும்புகழுக்கு உரியவர். நம் தந்தையாகிய அவர் நமக்கு நல்வரங்களை அருளுவார். அவரே பொருந்தாதவர்களின் முப்புரங்களையும் எரித்தவர். அவர் கோயில் கொண்டுள்ள இடமே திருச்சாய்க்காடாம். அத்தலம் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. எனவே, அங்கு கலன்களில் பொருள்களைக் கொண்டு வந்து இறக்கி வைக்கும் ஓசையும் விளைந்த பொருள்களைக் கலன்களில் ஏற்றி வைக்கும் ஓசையும் எப்பொழுதும் (அடியவர்களின் வழிபாட்டு ஓசை எப்பொழுதும் ஒலிப்பது போல ) ஒலித்துக் கொண்டே இருக்கும்.

5

ஏழைமார் கடைதோ றுமிடு பலிக்கென்றுகூழைவா ளரவாட் டும்பிரா னுறைகோயில்மாழையொண் கண்வளைக் கைநுளைச் சியர்வண்பூந்தாழைவெண் மடற்கொய்து கொண்டாடு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
ஏழைமார் கடைதோறும், இடு பலிக்கு என்று,கூழைவாள் அரவு ஆட்டும் பிரான் உறை கோயில் -மாழைஒண்கண் வளைக்கை நுளைச்சியர், வண் பூந்தாழை வெண்மடல் கொய்து, கொண்டாடு சாய்க்காடே.
உரை

மகளிர் வாழும் இல்லங்கள் தோறும் பலிதேர்ந்து திரிபவரே சிவபெருமான். அவர்கள் இடும் பலிக்காக கூழைபண் ஒளி பொருந்திய பாம்பை ஆடச் செய்து மகிழ்விக்கும்பரமன் உறையும் கோயில் சாய்க்காடாம். அத்தலத்தில் மான்விழி கொண்ட வளைக்கை பொருந்திய செம்படவப் பெண்கள் தாழை மடலைக் கொய்து அணிந்து கொண்டு இறைவனை வணங்கி மகிழ்வர்.

6

துங்கவா னவர்சூழ் கடல்தாம் கடைபோதில்அங்கொர்நீ ழலளித் தஎம்மா னுறைகோயில்வங்கம்அங் கொளிர்இப் பியுமுத் துமணியுஞ்சங்கும்வா ரித்தடங் கடலுந்து சாய்க்காடே.
சொற்பிரிப்பு
துங்க வானவர் சூழ் கடல் தாம் கடைபோதில்,அங்கு ஒர் நீழல் அளித்த எம்மான் உறை கோயில் -வங்கம் அங்கு ஒளிர் இப்பியும் முத்தும் மணியும்சங்கும் வாரி, தடங்கடல் உந்து சாய்க்காடே.
உரை

வானவர்கள் கடலைக் கடைந்தபோது எழுந்த நஞ்சை உண்டு அவர்களுக்கு அபயம் கொடுத்த அண்ணலே சிவபெருமான்! அவர் திருச்சாய்க்காடு தலத்துள் கோயில் கொண்டுள்ளார். கடற்கரைப் பகுதியில் அமைந்த அத்தலத்தில் கடல் அலைகள் ஒளிமிக்க சிப்பி, முத்து, மணி,சங்கு இவைகளை வாரிவந்து கரையில் ஒதுக்கிக் கொண்டே இருக்கும் என்க.

7

வேதநா வினர்வெண் பளிங்கின் குழைக்காதர்ஓதநஞ் சணிகண் டருகந் துறைகோயில்மாதர்வண் டுதன்கா தல்வண்டா டியபுன்னைத்தாதுகண் டுபொழில் மறைந்தூடு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
வேத நாவினர், வெண்பளிங்கின் குழைக் காதர்,ஓதநஞ்சு அணி கண்டர், உகந்து உறை கோயில் -மாதர் வண்டு, தன் காதல்வண்டு ஆடிய புன்னைத்தாது கண்டு, பொழில் மறைந்து, ஊடு சாய்க்காடே.
உரை

ஈசன், வேதத்தை ஒலிக்கும் நாவினர்! வெண் பளிங்கு போன்ற குழையினைக் காதில் அணிந்துள்ளவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கண்டத்தவர். அவர் விரும்பி உறையும் திருத்தலமே திருச்சாய்க்காடாம். அத்தலத்துள் காதல் கொண்ட பெண் வண்டுகள் தம் காதல் வண்டுகள் வாய்வைத்து ஊதிய புன்னை மலர்களில் உள்ள தாதுக்களில் பொருந்தி இருந்து ஊடல் செய்யும்.

8

இருக்குநீள் வரைபற் றியடர்த் தன்றெடுத்தஅரக்கன் ஆகம்நெரித் தருள்செய் தவன்கோயில்மருக்குலா வியமல் லிகைசண் பகம்வண்பூந்தருக்குலா வியதண் பொழில்நீடு சாய்க்காடே.
சொற்பிரிப்பு
இருக்கும் நீள்வரை பற்றி அடர்த்து அன்று எடுத்தஅரக்கன் ஆகம் நெரித்து அருள்செய்தவன் கோயில் -மருக் குலாவிய மல்லிகை, சண்பகம், வண் பூந்தரு, குலாவிய தண்பொழில் நீடு சாய்க்காடே.
உரை

எம்பெருமான் ஆட்சி செய்யும் கயிலாய மலையைப்பற்றி எடுக்க முயன்றான் அரக்கன் இராவணன். அவனை நெரித்து பின்பு அருள் செய்தவரே சிவபெருமான். அவர் கோயில் கொண்டிருக்கும் இடமே திருச்சாய்க்காடாம். அங்குள்ள சோலைகளில் மணமிக்க மல்லிகை மலர்களும் சண்பக மலர்களும் நிறைந்திருக்கும்.

9

மாலினோ டயன்காண் டற்கரி யவர்வாய்ந்தவேலையார் விடமுண் டவர்மே வியகோயில்சேலின்நேர் விழியார் மயிலா லச்செருந்திகாலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே.
சொற்பிரிப்பு
மாலினோடு அயன் காண்டற்கு அரியவர்,வாய்ந்த வேலை ஆர் விடம் உண்டவர்மேவிய கோயில் -சேலின் நேர் விழியார் மயில்ஆல, செருந்திகாலையே கனகம் மலர்கின்ற சாய்க்காடே.
உரை

ஈசன், திருமால், பிரமன் முதலானோர்க்குக் காண்பதற்கு அரியவர். கடலில் தோன்றிய நஞ்சை உண்டருளியவர். அவர் கோயில் கொண்டுள்ள தலமே திருச்சாய்க்காடாம். அத்தலத்தில் சேல்விழி கொண்ட மாதர்கள் மயில் போல ஆடித் திரிவர். செருந்தி மலர்களும் பொன்னிறம் கொண்ட பிற மலர்களும் எப்பொழுதும் பொருந்தி இருக்கும் இடமே திருச்சாய்க்காடாம் என்க.

10

ஊத்தைவாய்ச் சமண்கை யர்கள்சாக் கியர்க்கென்றும்ஆத்தமா கஅறி வரிதா யவன்கோயில்வாய்த்தமா ளிகைசூழ் தருவண் புகார்மாடேபூத்த வாவிகள் சூழ்ந் துபொலிந்த சாய்க்காடே.
சொற்பிரிப்பு
ஊத்தைவாய்ச் சமண்கையர்கள் சாக்கியர்க்கு என்றும்ஆத்தம்ஆக அறிவு அரிதுஆயவன் கோயில்வாய்த்த மாளிகை சூழ்தரு வண் புகார் மாடே,பூத்த வாவிகள் சூழ்ந்து, பொலிந்த சாய்க்காடே.
உரை

பொய்யுரை புகலும் சமணர்களும் சாக்கியர்களும் என்றும் அறிய அரியவனே சிவன். அவனே திருச்சாய்க்காடு தலத்தில் கோயில் கொண்டுள்ளான். அத்தலத்தில் மாட மாளிகைகள் நிறைந்திருக்கும். வாவிகளில் மலர்கள் பூத்துப் பொலிந்திருக்கும்.

11

ஏனையோர் புகழ்ந்தேத் தியஎந்தை சாய்க்காட்டைஞானசம் பந்தன்கா ழியர்கோன் நவில்பத்தும்ஊனமின் றியுரை செயவல் லவர்தாம்போய்வானநா டினிதாள் வர்இம்மா நிலத்தோரே.
சொற்பிரிப்பு
ஏனையோர் புகழ்ந்து ஏத்திய எந்தை சாய்க்காட்டைஞானசம்பந்தன் - காழியர்கோன்- நவில் பத்தும்ஊனம் இன்றி உரைசெய வல்லவர்தாம், போய்வானநாடு இனிது ஆள்வர், இம் மாநிலத்தோரே.சுவாமி : இரத்தின சாயாவனேஸ்வரர்; அம்பாள் : குயிலினும் நன்மொழியம்மை.
உரை

ஏனையோர் பலராலும் போற்றப்படுபவரே எந்தை ஈசன் ஆவார். அவர் திருச்சாய்க்காடு தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரைப் புகழ்ந்து சீர்காழித் தலத்துள் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்கள் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களைப் பாட வல்லவர்கள் இப்பூவுலகில் புகழுடன் விளங்குவர்.