திருமுறை 2 · 2.037 · 11

திருமறைக்காடு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
மறைக்காடு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை
குறிப்பு
கதவடைக்கப்பாடியபதிகம்

1

சதுரம் மறைதான் துதிசெய் துவணங்கும்மதுரம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாஇதுநன் கிறைவைத் தருள்செய்க எனக்குன்கதவந் திருக்காப்புக் கொள்ளுங் கருத்தாலே.
சொற்பிரிப்பு
சதுரம்(ம்) மறைதான் துதிசெய்து வணங்கும் -மதுரம் பொழில்சூழ் - மறைக்காட்டு உறை மைந்தா!இது நன்கு இறை வைத்து அருள்செய்க, எனக்கு உன்கதவம் திருக்காப்புக் கொள்ளும் கருத்தாலே!
உரை

நான்கு மறைகளும் துதிசெய்து வணங்கிய இடமே திருமறைக்காடாம். அழகிய சோலைகள் சூழ்ந்த திருமறைக்காட்டில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! கோயில் திருக்கதவங்கள் காப்பிடுமாறு அருள்புரிவீராக! இதுவே எனது வேண்டுகோளாகும்.

2

சங்கந் தரளம் மவைதான் கரைக்கெற்றும்வங்கக் கடல்சூழ் மறைக்காட் டுறைமைந்தாமங்கை உமைபா கமுமா கவிதென்கொல்கங்கை சடைமே லடைவித் தகருத்தே.
சொற்பிரிப்பு
சங்கம், தரளம்(ம்)அவை, தான் கரைக்கு எற்றும்வங்கக் கடல் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!மங்கைஉமை பாகமும் ஆக, இது என்கொல்,கங்கை சடைமேல் அடைவித்த கருத்தே?
உரை

சங்கு, முத்து இவைகளைக் கரையில் உந்தித்தள்ளும் கடல்சூழ்ந்த மறைக்காட்டுத்திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள எம்பெருமானே! உமாதேவியை உடம்பின் ஒருபாகத்தில் கொண்டுள்ள நீவிர் கங்கைப் பெண்ணாளையும் தலையில் வைத்துக் கொண்டுள்ள கருத்து என்சொல்?

3

குரவங் குருக்கத் திகள்புன் னைகள்ஞாழல்மருவும் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாசிரமும் மலருந் திகழ்செஞ் சடைதன்மேல்அரவம் மதியோ டடைவித் தலழகே.
சொற்பிரிப்பு
குரவம், குருக்கத்திகள், புன்னைகள், ஞாழல்,மருவும் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!சிரமும் மலரும் திகழ் செஞ்சடைதன்மேல்அரவம் மதியோடுஅடைவித்தல் அழகே?
உரை

குராமரம், குருக்கத்தி, புன்னை, புலிநகக் கொன்றை ஆகியவை ஓங்கி வளர்ந்துள்ள மறைக்காட்டில் கோயில் கொண்டுள்ள ஈசனே! தலைமாலை அணிந்தும் மலர்சூடியும் திகழும் செஞ்சடைமீது அரவமும் சந்திரனும் பொருந்தி இருக்குமாறு செய்த கருத்தின் காரணம் யாதோ?

4

படர்செம் பவளத் தொடுபன் மலர்முத்தம்மடலம் பொழில்சூழ் மறைக்காட் டுறைமைந்தாஉடலம் முமைபங் கமதாகியு மென்கொல்கடல்நஞ் சமுதா அதுவுண் டகருத்தே.
சொற்பிரிப்பு
படர் செம்பவளத்தொடு, பல்மலர், முத்தம்,மடல் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!உடலம்(ம்) உமை பங்கம் அது ஆகியும், என்கொல்,கடல்நஞ்சு அமுதா அது உண்ட கருத்தே?
உரை

திருமறைக்காடு என்ற திருத்தலத்தில் செம்பவளங்களும், பல மலர்களும் முத்துக்களும் அகன்ற மடல்களைக் கொண்ட தாழை மலர்களும் நிறைந்து விளங்குகின்றன.அத்தலத்துள் கோயில் கொண்டுள்ள ஈசனே! நீ அமுதாகிய உமையவளை உடலின் ஓர்பாகமாகக் கொண்டுள்ளாய். (அது ஏற்புடைத்து) ஆனால் கடலில் தோன்றிய நஞ்சையும் அமுதாக உண்டாயே! அது ஏன்?

5

வானோர் மறைமா தவத்தோர் வழிபட்டதேனார் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வாஏனோர் தொழுதேத்த இருந்தநீ யென்கொல்கானார் கடுவே டுவனா னகருத்தே.
சொற்பிரிப்பு
வானோர், மறை மா தவத்தோர், வழிபட்டதேன் ஆர் பொழில் சூழ் மறைக்காட்டு உறை மைந்தா!ஏனோர் தொழுது ஏத்த இருந்த நீ, என்கொல்,கான் ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?
உரை

தேவர்களும், நான்மறைகளும், மாதவத்தோர்களும் வழிபாடு செய்யும் தலமே திருமறைக்காடாம். தேன் நிறைந்த மலர்களால் நிறைந்த திருமறைக்காட்டில் கோயில்கொண்ட ஈசனே! எல்லோரும் வணங்க சிறப்புடன் காட்சியளிக்கும் நீ, காட்டில் வேடன் உருவத்தை ஏற்றுத் திரிந்தது ஏன்?

6

பலகா லங்கள்வே தங்கள்பா தங்கள் போற்றிமலரால் வழிபா டுசெய்மா மறைக்காடாஉலகே ழுடையாய் கடைதோ றும்முன்னென்கொல்தலைசேர் பலிகொண் டதிலுண் டதுதானே.
சொற்பிரிப்பு
பலகாலங்கள், வேதங்கள் பாதங்கள் போற்றி,மலரால் வழிபாடு செய் மா மறைக்காடா!உலகுஏழ் உடையாய்! கடைதோறும் முன், என்கொல்,தலை சேர் பலி கொண்டு அதில் உண்டதுதானே?
உரை

ஈசனே! உன்னை வேதங்கள் போற்றி உன் திருவடிகளை வணங்கி பல காலம் வழிபாடு செய்த தலமே திருமறைக்காடு. அத்தலத்தில் கோயில் கொண்டுள்ள சிவனே! எல்லா உலகங்களையும் உடையவனே! எல்லாவற்றையும் உடைமையாகக் கொண்ட நீ ஏன்பிரமகபாலத்தை ஏந்தியபடியே பலிதேர்ந்து அதை உண்டு களிப்பதற்குக் காரணம் யாதோ?சொல்வாயாக.

7

வேலா வலயத் தயலே மிளிர்வெய்தும்சேலார் திருமா மறைக்காட் டுறைசெல்வாமாலோ டயன்இந் திரன்அஞ் சமுன்என்கொல்காலார் சிலைக்கா மனைக்காய்ந் தகருத்தே.
சொற்பிரிப்பு
வேலாவலயத்து அயலே மிளிர்வு எய்தும் -சேல் ஆர் திரு மா-மறைக்காட்டு உறை செல்வா!மாலோடு அயன் இந்திரன் அஞ்ச முன், என்கொல்,கால் ஆர் சிலைக் காமனைக் காய்ந்த கருத்தே?
உரை

வேல் போன்ற வடிவத்தையும், ஒளிரும் தன்மையையும் கொண்ட சேல்கள் (மீன்கள்) நிறைந்து விளங்கும் திருமறைக்காடு என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே! நீ திருமாலும், பிரமனும், இந்திரனும் அஞ்ச, மன்மதனை எரித்துச் சாம்பலாக்கியது ஏன்?

8

கலங்கொள் கடலோ தம்உலா வுங்கரைமேல்வலங்கொள் பவர்வாழ்த் திசைக்கும் மறைக்காடாஇலங்கை யுடையான் அடர்ப்பட் டிடரெய்தஅலங்கல் விரலூன் றியருள் செய்தவாறே.
சொற்பிரிப்பு
கலம் கொள் கடல் ஓதம் உலாவும் கரைமேல் - வலம்கொள்பவர் வாழ்த்து இசைக்கும் - மறைக்காடா!இலங்கை உடையான் அடர்ப்பட்டு இடர் எய்தஅலங்கல் விரல் ஊன்றி அருள்செய்தஆறே?
உரை

மரக்கலங்கள் நிறைந்து விளங்கும் கடலின் கரையில் பொருந்திய தலமே திருமறைக்காடு ஆகும். அத்தலத்தில் கோயில் கொண்ட சிவனே! உன் திருக்கோயிலை அடியவர்கள் வலம் வந்து வழிபாடு செய்வார்கள். ஆனால் இலங்கை வேந்தன் இராவணன் உம்மை வணங்காமல் கயிலை மலையைத் தூக்க முயன்று முதலில் இடர்ப்பட்டான். பின்பு அவனுக்கும் நீரே அருள் செய்தீர். அது ஏன்?

9

கோனென் றுபல்கோ டியுருத் திரர்போற்றும்தேனம் பொழில்சூழ் மறைக்காட் டுறைசெல்வாஏனங் கழுகா னவருன்னை முன்என்கொல்வானந் தலமண் டியுங்கண் டிலாவாறே.
சொற்பிரிப்பு
கோன் என்று பல்கோடி உருத்திரர் போற்றும் -தேன் அம் பொழில் சூழ் மறைக்காட்டு உறை செல்வா!ஏனம் கழுகு ஆனவர் உன்னை முன், என்கொல்,வானம் தலம் மண்டியும் கண்டிலாஆறே?
உரை

பலகோடி உருத்திரர்களால் தலைவன் என்று போற்றப்படும் ஈசனே! தேன் நிறைந்த மலர்கள் நிறைந்து விளங்கும் திருமறைக்காடு என்ற திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனே! பலருக்கும் காட்சி அளிக்கும் உன்னை பன்றி உருவாகி திருமாலும் பறவைமீது பிரமனும் தேடினர். அவர்கள் அடிமுடி அறியமுடியாதவாறு உன்னை நீ மறைத்துக் கொண்டது ஏன்?

10

வேதம் பலவோ மம்வியந் தடிபோற்றஓதம் முலவும் மறைக்காட்டி லுறைவாய்ஏதில் சமண்சாக் கியர்வாக் கிவையென்கொல்ஆத ரொடுதா மலர்தூற்றி யவாறே.
சொற்பிரிப்பு
வேதம்பல ஓமம் வியந்து அடி போற்ற,ஓதம்(ம்) உலவும் மறைக்காட்டில் உறைவாய்!ஏதில் சமண்சாக்கியர் வாக்கு இவை, என்கொல்,ஆதரொடு தாம் அலர் தூற்றிய ஆறே?
உரை

ஈசனே! வேதமுறைப்படி வேள்விகள் புரிந்து அந்தணர் உன்னை வணங்குவர்.கடல் அலைகள் மோதும் கரையில் அமைந்த திருமறைக்காடு தலத்தில் பொருந்தியவனே ! பக்தர்கள் எல்லோரும் உன் திருவடிகளில் மலர்தூவி வணங்குவர். ஆனால் சமணரும் சாக்கியரும்பழிச்சொற்களைக் கூறி உன்னை வணங்காமல் தூற்றுவது ஏன்? 

11

காழிந் நகரான் கலைஞான சம்பந்தன்வாழிம் மறைக்கா டனைவாய்ந் தறிவித்தஏழின் னிசைமா லையீரைந் திவைவல்லார்வாழி யுலகோர் தொழவான் அடைவாரே.
சொற்பிரிப்பு
காழி(ந்) நகரான் கலை ஞானசம்பந்தன்வாழி(ம்) மறைக்காடனை வாய்ந்து அறிவித்தஏழ்இன் இசைமாலை ஈர்- ஐந்துஇவை வல்லார்,வாழி உலகோர் தொழ, வான் அடைவாரே.சுவாமி : மறைக்காட்டு மணாளர்; அம்பாள் : யாழைப்பழித்த மொழியாள்.
உரை

சீர்காழிப் பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான், திருமறைக்காடு என்ற திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ள ஈசனைப் போற்றி, பத்துப்பாடல்களைப் பண்ணோடு பாடி அருளியுள்ளார். அப்பத்துப் பாடல்களையும் அன்புடன் பாட வல்லவர்கள் உலகோரால் தொழப்படுவார்கள். வானுலகப் பேற்றையும் பெறுவார்கள்.