திருமுறை 2 · 2.036 · 11

திருஇரும்பூளை

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
இரும்பூளை
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை
குறிப்பு
வினாவுரை

1

சீரார் கழலே தொழுவீ ரிதுசெப்பீர்வாரார் முலைமங் கையொடும் முடனாகிஏரா ரிரும்பூ ளையிடங் கொண்டஈசன்காரார் கடல்நஞ் சமுதுண் டகருத்தே.
சொற்பிரிப்பு
சீர் ஆர் கழலே தொழுவீர்! இது செப்பீர் -வார் ஆர் முலை மங்கையொடும்(ம்) உடன்ஆகி,ஏர் ஆர் இரும்பூளை இடம் கொண்ட ஈசன்கார் ஆர் கடல்நஞ்சு அமுது உண்ட கருத்தே?
உரை

உமையவளை உடம்பின் ஒருபாகமாகக் கொண்டவன் சிவபெருமான். அவன் இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனது திருவடிகளை அன்புடன்தொழும் அடியவர்களே, அவன் கரிய கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்பது ஏன்என்பதை அறிவீர்கள். அறிந்தால் சொல்லுங்கள்.

2

தொழலார் கழலே தொழுதொண் டர்கள்சொல்லீர்குழலார் மொழிக்கோல் வளையோ டுடனாகிஎழிலா ரிரும்பூ ளையிடங் கொண்டஈசன்கழல்தான் கரிகா னிடையா டுகருத்தே.
சொற்பிரிப்பு
தொழல் ஆர் கழலே தொழு தொண்டர்கள் சொல்லீர் -குழல் ஆர் மொழிக் கோல்வளையோடு உடன்ஆகி,எழில் ஆர் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்கழல்தான் கரிகான் இடை ஆடு கருத்தே?
உரை

தொழுவதற்குரிய சிவபெருமானின் திருவடிகளைத் தினமும் தொழுது போற்றும் திருத்தொண்டர்களே! ஈசன், இன்மொழியை உடைய, திரண்ட வளையலையும் அணிந்த உமாதேவியை உடனாகக் கொண்டு அழகிய இரும்பூளைப்பதியில் கோயில் கொண்டு உள்ளான். அவன் மயானத்திலும் நடனம் ஆடுகிறானே. யாதோ? சொல்லுவீராக.

3

அன்பா லடிகை தொழுவீ ரறியீரேமின்போல் மருங்குல் மடவா ளொடுமேவிஇன்பா யிரும்பூ ளை யிடங் கொண்டஈசன்பொன்போற் சடையிற் புனல்வைத் தபொருளே.
சொற்பிரிப்பு
அன்பால் அடி கைதொழுவீர்! அறியீரேமின் போல் மருங்குல் மடவாளொடு மேவி,இன்புஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்பொன் போல் சடையில் புனல் வைத்த பொருளே?
உரை

அன்புடன் ஈசனாரின் திருவடிகளைத் தொழுது வணங்கும் அடியவர்களே! அவன் மின்னல் போன்ற இடைகொண்ட உமையோடு திருஇரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவன் தன் தலையில் கங்கை நதி என்னும் பெண்ணைத் தூக்கி வைத்துள்ள காரணம் என்ன என்று அறிந்தால் கூறுவீர்கள்.

4

நச்சித் தொழுவீர் கள்நமக் கிதுசொல்லீர்கச்சிப் பொலிகா மக்கொடி யுடன்கூடிஇச்சித் திரும்பூ ளையிடங் கொண்ட ஈசன்உச்சித் தலையிற் பலிகொண் டுழலூணே.
சொற்பிரிப்பு
நச்சித் தொழுவீர்கள்! நமக்கு இது சொல்லீர் -கச்சிப் பொலி காமக்கொடிஉடன் கூடி,இச்சித்து இரும்பூளை இடம்கொண்ட ஈசன்உச்சித்தலையில் பலி கொண்டு உழல் ஊணே?
உரை

காஞ்சிப்பதியில் பொலிவுடன் அறங்களைச் செய்பவள் காமாட்சியான உமையாள். அவளை இச்சித்து இறைவன் தன்னுடன் கொண்டு இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவன் பிரமகபாலத்தைக் கையில் ஏந்தி ஊர்தோறும் பலிதேர்ந்து திரிகிறானே. ஏன்? அவனது திருவடிகளை விரும்பித் தொழும் அடியவர்களே! கூறுங்கள்.

5

சுற்றார்ந் தடியே தொழுவீ ரிதுசொல்லீர்நற்றாழ் குழல்நங் கையொடும் முடனாகிஎற்றே யிரும்பூ ளையிடங் கொண்டஈசன்புற்றா டரவோ டென்புபூண் டபொருளே.
சொற்பிரிப்பு
சுற்று ஆர்ந்து அடியே தொழுவீர்! இது சொல்லீர் -நல்-தாழ்குழல் நங்கையொடும்(ம்) உடன் ஆகி,எற்றே இரும்பூளை இடம்கொண்ட ஈசன்புற்று ஆடுஅரவோடு என்பு பூண்ட பொருளே?
உரை

நீண்ட கூந்தலைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகிய ஈசன் இரும்பூளைத் தலத்தில் கோயில் கொண்டுள்ளான். அவன் புற்றில் பொருந்தி வாழும் பாம்பினை ஆபரணமாக அணிந்து உள்ளானே. ஏன்? அடியார்களாகிய சுற்றத்தாருடன் கூடியிருந்து அவனையே போற்றும் அன்பர்களே! கூறுங்கள்.

6

தோடார் மலர்தூய்த் தொழுதொண்டர் கள்சொல்லீர்சேடார் குழற்சே யிழையோ டுடனாகிஈடா யிரும்பூ ளையிடங் கொண்டஈசன்காடார் கடுவே டுவனா னகருத்தே.
சொற்பிரிப்பு
தோடு ஆர் மலர் தூய்த் தொழு தொண்டர்கள்! சொல்லீர் -சேடு ஆர் குழல் சேயிழையோடு உடன் ஆகி,ஈடுஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்காடு ஆர் கடு வேடுவன் ஆன கருத்தே?
உரை

அடர்ந்த கூந்தலைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகிய ஈசன் இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனே காட்டில் வேட்டுவன் உருவில் வந்தான். ஏன் என்பது பற்றி ஈசனை மலர்தூவி வணங்கிடும் பக்தர்களே கூறுங்கள்.

7 Unavailable

இந்தப் பாடல் மூலத்தில் கிடைக்கப்பெறவில்லை. பாடல் வரிகள் இங்கே சேர்க்கப்படவில்லை.

7- ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
உரை

7ஆம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.

8

ஒருக்கும் மனத்தன் பருள்ளீ ரிதுசொல்லீர்பருக்கைம் மதவே ழமுரித் துமையோடும்இருக்கை யிரும்பூ ளையிடங் கொண்டஈசன்அரக்கன் உரந்தீர்த் தருளாக் கியவாறே.
சொற்பிரிப்பு
ஒருக்கும் மனத்து அன்பர்உள்ளீர்! இது சொல்லீர் -பருக் கை மதவேழம் உரித்து, உமையோடும்இருக்கை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்அரக்கன்(ன்) உரம் தீர்த்து அருள் ஆக்கிய ஆறே?
உரை

வலிமைமிக்க யானையின் தோலை உரித்து அதனைப் போர்வையாக அணிந்தவன் சிவபெருமான். அவனே உமையாளுடன் உடனாகி இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். மனத்தைப் புலன்வழிச் செல்லாமல் காத்து, அன்பர்களுடன் கூடி வாழும் பக்தர்களே! ஈசன் அரக்கனாகிய இராவணனின் வலிமையைக் கெடுத்துப் பிறகு ஆட்கொண்டது ஏன்? என்பது பற்றித் தெரிந்தால் கூறுங்கள்.

9

துயரா யினநீங் கித்தொழுந் தொண்டர்சொல்லீர்கயலார் கருங்கண் ணியொடும் முடனாகிஇயல்பா யிரும்பூ ளையிடங் கொண்டஈசன்முயல்வா ரிருவர்க் கெரியா கியமொய்ம்பே.
சொற்பிரிப்பு
துயர் ஆயின நீங்கித் தொழும் தொண்டர்! சொல்லீர் -கயல் ஆர் கருங்கண்ணியொடும்(ம்) உடன்ஆகி,இயல்பு ஆய் இரும்பூளை இடம்கொண்ட ஈசன்முயல்வார் இருவர்க்கு எரிஆகிய மொய்ம்பே?
உரை

கயல் போன்ற அழகிய கண்களைக் கொண்ட உமாதேவியுடன் உடனாகியவன் ஈசன். அவனே இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். எளிமையாகக் காட்சியருளும் அவன் திருமாலும் நான்முகனும் காண முடியாப் பேருருவை எடுத்த காரணம் பற்றித் தொண்டர்களே! கூறுங்கள்.

10

துணைநன் மலர்தூய்த் தொழுந்தொண் டர்கள்சொல்லீர்பணைமென் முலைப்பார்ப் பதியோ டுடனாகிஇணையில் லிரும்பூ ளையிடங் கொண்டஈசன்அணைவில் சமண்சாக் கியமாக் கியவாறே.
சொற்பிரிப்பு
துணை நல்மலர் தூய்த் தொழும் தொண்டர்கள்! சொல்லீர்பணைமென்முலைப் பார்ப்பதியோடு உடன்ஆகி,இணை இல்(ல்) இரும்பூளை இடம்கொண்ட ஈசன்அணைவு இல் சமண் சாக்கியம் ஆக்கியஆறே?
உரை

பார்வதி தேவியை உடனாகக் கொண்டவன் சிவபெருமான். அவன் இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அவனது இணையான திருவடிகளைத் தொழுது போற்றும் தொண்டர்களே! சமணர், சாக்கியர், என்றும் முரண்பட்டவர்களையும் அவன் படைத்தது ஏன் என்பது பற்றித் தெரிந்தால் சொல்லுங்கள்.

11

எந்தை யிரும்பூ ளையிடங் கொண்ட ஈசன்சந்தம் பயில்சண் பையுண்ஞான சம்பந்தன்செந்தண் தமிழ்செப் பியபத் திவைவல்லார்பந்தம் மறுத்தோங் குவர்பான் மையினாலே.
சொற்பிரிப்பு
எந்தை இரும்பூளை இடம்கொண்ட ஈசன்,சந்தம் பயில் சண்பையுள் ஞானசம்பந்தன்செந்தண்தமிழ் செப்பிய பத்து இவை வல்லார்பந்தம்(ம்) அறுத்து ஓங்குவர், பான்மையினாலே.சுவாமி : காசியாரண்யேஸ்வரர்; அம்பாள் : ஏலவார் குழலி.
உரை

எந்தையும், இரும்பூளைத் தலத்துள் கோயில் கொண்ட இறைவனுமாகிய ஈசனைப் போற்றி சீர்காழியில் பிறந்த ஞானசம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்களைப் பாடியருளியுள்ளார். செந்தமிழில் பாடப் பெற்ற அப்பாடல்களைப் பக்தியுடன் பாட வல்லவர்கள் பந்தம் அறுக்கப் பெறுவர். உயர் சிறப்பை உறுவர் என்க.