திருமுறை 2 · 2.034 · 11

திருப்பழுவூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
பழுவூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருவிராகம்

1

முத்தன்மிகு மூவிலைநல் வேலன்விரி நூலன்அத்தன்எமை யாளுடைய அண்ணலிட மென்பர்மைத்தழை பெரும்பொழிலின் வாசமது வீசப்பத்தரொடு சித்தர்பயில் கின்றபழு வூரே.
சொற்பிரிப்பு
முத்தன், மிகு மூஇலை நல்வேலன், விரி நூலன்,அத்தன், எமை ஆள்உடைய அண்ணல், இடம் என்பர்மைத் தழை பெரும் பொழிலின் வாசம்அது வீச,பத்தரொடு சித்தர் பயில்கின்ற பழுவூரே.
உரை

ஈசன் மலமற்றவர். மூன்று பிரிவுகளைக் கொண்ட சூலப்படையை உடையவர். உயர்ந்த நூலாகிய வேதத்தை அருளியவர். அன்புடையவர். எம்மை ஆள்பவர். அப்பெருமான் பசுமை நிறைந்த பொழில்களால் சூழப்பெற்ற பழுவூரில் கோயில் கொண்டுள்ளார். அங்கு பக்தர்களும் சித்தர்களும் நிறைந்து விளங்குகின்றனர்.

2

கோடலொடு கோங்கவை குலாவுமுடி தன்மேல்ஆடரவம் வைத்தபெரு மானதிட மென்பர்மாடமலி சூளிகையி லேறிமட வார்கள்பாடலொலி செய்யமலி கின்றபழு வூரே.
சொற்பிரிப்பு
கோடலொடு கோங்கு அவை குலாவு முடி தன் மேல்ஆடு அரவம் வைத்த பெருமானது இடம் என்பர்மாடம் மலி சூளிகையில் ஏறி மடவார்கள்பாடல் ஒலி செய்ய, மலிகின்ற பழுவூரே.
உரை

வெண்காந்தள், கோங்கு ஆகிய மலர்களைத் தலையில் சூடியவரே எம்பெருமான். ஆடுகின்ற அரவத்தையும் சூடி நடனம் ஆடுபவரே எம்பெருமான். அவர் கோயில் கொண்டுள்ள பழுவூர்த் திருத்தலத்தில் மாடங்கள் மிகுந்துள்ளன. அம்மாடங்களின் மேல் ஏறி பெண்கள் ஈசனைப் புகழ்ந்து பாடி ஆடி மகிழ்வார்கள்.

3

வாலிய புரத்திலவர் வேவவிழி செய்தபோலிய வொருத்தர்புரி நூலரிட மென்பர்வேலியின் விரைக்கமல மன்னமுக மாதர்பாலென மிழற்றிநட மாடுபழு வூரே.
சொற்பிரிப்பு
வாலிய புரத்திலவர் வேவ விழி செய்தபோலிய ஒருத்தர்,புரிநூலர், இடம் என்பர் -வேலியின் விரைக்கமலம் அன்ன முக மாதர்,பால் என மிழற்றி நடம்ஆடு பழுவூரே.
உரை

வலிமை மிக்க முப்புரங்களை நெற்றிக் கண்ணால் சாம்பலாக்கியவர் சிவபெருமான். அவர் முப்புரி நூலை அணிந்திருப்பார். அவர் பழுவூர் திருத்தலத்தில் பொருந்தி உள்ளார். அத்தலத்தில் தாமரை மலர் போன்ற முகத்தையும் அன்னம் போன்ற நடையையும் பால்போன்ற இனிய சொல்லையும் உடைய மாதர்கள் ஈசனைப் புகழ்ந்து பாடி, ஆடிக் கொண்டிருப்பர்.

4

எண்ணுமொ ரெழுத்துமிசை யின்கிளவி தேர்வார்கண்ணுமுத லாயகட வுட்கிடம தென்பர்மண்ணின்மிசை யாடிமலை யாளர்தொழு தேத்திப்பண்ணினொலி கொண்டுபயில் கின்றபழு வூரே.
சொற்பிரிப்பு
எண்ணும்,ஒர் எழுத்தும், இசையின் கிளவி, தேர்வார்கண்ணும் முதல்ஆய கடவுட்கு இடம்அது என்பர்மண்ணின்மிசை ஆடி, மலையாளர் தொழுது ஏத்திபண்ணின்ஒலி கொண்டு பயில்கின்ற பழுவூரே.
உரை

எண்ணாகவும், எழுத்தாகவும் எழுத்தின் பொருளாகவும் விளங்குபவரே எம்பெருமான். உயிர்களின் கண்ணாகவும் விளங்குபவர் சிவபெருமான். அவர்பழுவூர் தலத்தினுள் கோயில் கொண்டுள்ளார். அவரை மலை நாட்டிலிருந்து வந்த அந்தணர்கள்பண்ணுடன் பொருந்திய பாடல்களைப் பாடி ஆடித் தொழுது ஏத்திப் பாடி வழிபடும் பழுவூர் என்க.

5

சாதல்புரி வார்சுடலை தன்னில்நட மாடும்நாதன்நமை யாளுடைய நம்பனிட மென்பர்வேதமொழி சொல்லிமறை யாளரிறை வன்றன்பாதமவை யேத்த நிகழ் கின்றபழு வூரே.
சொற்பிரிப்பு
சாதல்புரிவார் சுடலைதன்னில் நடம் ஆடும்நாதன், நமை ஆள்உடைய நம்பன், இடம் என்பர்வேதமொழி சொல்லி மறையாளர் இறைவன்தன்பாதம் அவை ஏத்த நிகழ்கின்ற பழுவூரே.
உரை

இறந்தவர்களின் உடல்களை எரிக்கும் சுடலையில் நடனமாடுபவரே எம்பெருமான். நம்மை ஆள்பவரும் அவரே ஆவார். அவரே பழுவூர் திருத்தலத்திலும் பொருந்தியுள்ளார். அவ்விறைவரை வேதமொழிகளைக் கூறி, மறையாளர், திருமுடிகளைப் போற்றி வணங்கிமகிழ்வர்.

6

மேவயரு மும்மதிலும் வெந்தழல் விளைத்துமாவயர அன்றுரிசெய் மைந்தனிட மென்பர்பூவையை மடந்தையர்கள் கொண்டுபுகழ் சொல்லிப்பாவையர்கள் கற்பொடு பொலிந்தபழு வூரே.
சொற்பிரிப்பு
மேவு அயரும் மும்மதிலும் வெந்தழல் விளைத்து,மா அயர அன்று உரிசெய் மைந்தன் இடம் என்பர்பூவையை மடந்தையர்கள் கொண்டு புகழ் சொல்லி,பாவையர்கள் கற்பொடு பொலிந்த பழுவூரே.
உரை

முப்புரங்கள் இடம் பெயர்ந்து சென்று அழிவைத் தரவல்லன. மாயையும் வஞ்சனையும் பொருந்திய அரக்கர்களின் முப்புரங்களை அழித்துச் சாம்பலாக்கியவர் எம்பெருமான். கோபம் கொண்டு வந்த யானையைக் கொன்று அதன் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் எம்பெருமான். அவர் உறையும் இடமே பழுவூர்த் தலமாம். அத்தலத்தில் வாழும் கற்புடைய பெண்கள் நாகணவாயப் பறவைகளை வளர்த்துப் பழக்கி இறைவனின் புகழைப் பேசச் செய்து கேட்டு மகிழ்வர்.

7

மந்தண மிருந்துபுரி மாமடிதன் வேள்விசிந்தவிளை யாடுசிவ லோகனிட மென்பர்அந்தணர்கள் ஆகுதியி லிட்டஅகில் மட்டார்பைந்தொடிநன் மாதர்சுவ டொற்றுபழு வூரே.
சொற்பிரிப்பு
மந்தணம் இருந்து புரி மா மடி தன் வேள்விசிந்த விளையாடு சிவலோகன் இடம் என்பர் -அந்தணர்கள் ஆகுதியில் இட்ட அகில், மட்டு ஆர்பைந்தொடி நல் மாதர் சுவடு ஒற்று பழுவூரே.
உரை

முறையாக அறிவிக்காமல், ஈசனை நிந்தனை செய்யும் வகையில் தக்கன் வேள்வி செய்தான். எம்பெருமான் வீரபத்திரரை ஏவிட, அவர் சென்று தக்கனின் வேள்வியைஅழித்தார். அச்சிவலோகர், பழுவூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அங்கு வேள்வி செய்யும் அந்தணர்கள் ஆகுதியாக அகில், தேன் முதலிய மணமிக்க பொருள்களை வேள்வியில் இட்டு வணங்குவர். நல்ல மாதர்கள் அங்குவந்து தொண்டுசெய்து வணங்கி மகிழ்ந்து செல்லும்போது உண்டாகும் காலடிச்சுவடுகள் உடையது பழுவூர் தலம்.

8

உரக்கடல் விடத்தினை மிடற்றிலுற வைத்தன்றரக்கனை யடர்த்தருளும் அப்பனிட மென்பர்குரக்கினம் விரைப்பொழிலின் மீதுகனி யுண்டுபரக்குறு புனற்செய்விளை யாடுபழு வூரே.
சொற்பிரிப்பு
உரக் கடல் விடத்தினை மிடற்றில் உற வைத்து, அன்றுஅரக்கனை அடர்த்து அருளும் அப்பன் இடம் என்பர் -குரக்கு இனம் விரைப் பொழிலின்மீது கனி உண்டு,பரக்குஉறு புனல் செய் விளையாடு பழுவூரே.
உரை

பாற்கடலில் தோன்றிய விடத்தினைத் தன் கண்டத்தில் அடக்கி அருள் செய்தவர் சிவபெருமான். அரக்கன் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்றபோது அவனை அடர்த்தவர் எம்பெருமான். அவர் பழுவூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அத்தலத்தைச் சுற்றிலும் சோலைகள் சூழ்ந்துள்ளன. அங்குள்ள கனிகளைக் குரங்குகள் உண்டு, நீர் நிறைந்த வயல்களில் விளையாடி மகிழும்.

9

நின்றநெடு மாலுமொரு நான்முகனும் நேடஅன்றுதழ லாய்நிமிரும் ஆதியிட மென்பர்ஒன்றுமிரு மூன்றுமொரு நாலுமுணர் வார்கள்மன்றினி லிருந்துடன் மகிழ்ந்தபழு வூரே.
சொற்பிரிப்பு
நின்ற நெடுமாலும் ஒரு நான்முகனும் நேட,அன்று தழல்ஆய் நிமிரும் ஆதி இடம் என்பர் -ஒன்றும் இரு-மூன்றும் ஒருநாலும் உணர்வார்கள்மன்றினில் இருந்து உடன்மகிழ்ந்த பழுவூரே.
உரை

அடிமுடி தேட முயன்ற மாலும் பிரமனும் காண முடியா நிலையில் ஒளி உருவாய் நின்றவர் எம்பெருமான். அவர் பழுவூர் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். ஏகப் பொருளாய் விளங்குபவர் ஈசனாரே. நான்கு வேதமாய் விளங்குபவர் அவர். வேதத்தின் ஆறு அங்கங்களாக விளங்குபவரும் அவரே. இவற்றை எல்லாம் உணர்ந்த அந்தணர்கள் பொது இடங்களில் பேசி மகிழ்ந்து உறையும் பழுவூர் என்க.

10

மொட்டையமண் ஆதர்துகில் மூடுவிரி தேரர்முட்டைகள் மொழிந்தமுனி வான்றனிட மென்பர்மட்டைமலி தாழைஇள நீரதிசை பூகம்பட்டையொடு தாறுவிரி கின்றபழு வூரே.
சொற்பிரிப்பு
மொட்டை அமண் ஆதர், துகில் மூடு விரி தேரர்,முட்டைகள் மொழிந்த முனிவான்தன் இடம் என்பர்மட்டை மலி தாழை இளநீர் அது இசை பூகம்,பட்டையொடு தாறு விரிகின்ற பழுவூரே.
உரை

தலைமயிரை நீக்கிய சமணர்களும், புத்தர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகள் பொருந்தா மொழிகளே. அம்மொழிகளை விரும்பாதவனே எம்பெருமான். அவர் விரும்பி உறையும் இடமே பழுவூர் தலமாம். அவ்வூரில் தாழை, தென்னை, பாக்கு ஆகியன செழித்து ஓங்கியிருக்கும்.

11

அந்தணர்க ளானமலை யாளரவ ரேத்தும்பந்தமலி கின்றபழு வூரரனை யாரச்சந்தமிகு ஞானமுணர் பந்தனுரை பேணிவந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
சொற்பிரிப்பு
அந்தணர்கள் ஆன மலையாளர் அவர் ஏத்தும்பந்தம் மலிகின்ற பழுவூர் அரனை, ஆரச்சந்தம் மிகு ஞானம் உணர் பந்தன் உரை பேணி,வந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.சுவாமி : வடவனநாதர்;அம்பாள் : அருந்தவநாயகியம்மை.
உரை

மலைநாட்டு அந்தணர்கள் போற்றிப் புகழ்ந்து பாடும் பழுவூர் நாதனை ஞானசம்பந்தப் பெருமான் புகழ்ந்து பத்து பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அத்தமிழ்ப் பாடல்களை அன்புடன் பாடிப் பரவும் அடியார்கள் சிவலோகம் பெறுவார்கள்.