திருமுறை 2 · 2.033 · 11

திருநள்ளாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
நள்ளாறு
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை
குறிப்பு
திருவிராகம்

1

ஏடுமலி கொன்றையர விந்துஇள வன்னிமாடவல செஞ்சடையெம் மைந்தனிட மென்பர்கோடுமலி ஞாழல்குர வேறுசுர புன்னைநாடுமலி வாசமது வீசியநள் ளாறே.
சொற்பிரிப்பு
ஏடு மலி கொன்றை, அரவு, இந்து, இள வன்னி,மாடு அவல செஞ்சடை எம் மைந்தன் இடம் என்பர் -கோடு மலி ஞாழல், குரவு, ஏறு சுரபுன்னை,நாடு மலி வாசம் அது வீசிய நள்ளாறே.
உரை

இதழ்களால் சிவந்த கொன்றை மலர், அரவு, சந்திரன், வன்னி இலை ஆகியவற்றைத் தலையில் அணிந்தவர் சிவபெருமான். அவர் திருநள்ளாறு தலத்தில் பொருந்தியுள்ளார். அத்தலத்தில் கோங்கு,குரவம்,சுரபுன்னை ஆகிய மலர்களின் மணம் நிறைந்திருக்கும்.

2

விண்ணியல் பிறைப்பிள வறைப்புனல் முடித்தபுண்ணியன் இருக்குமிட மென்பர்புவி தன்மேல்பண்ணிய நடத்தொடிசை பாடும்அடி யார்கள்நண்ணிய மனத்தின்வழி பாடுசெய்நள் ளாறே.
சொற்பிரிப்பு
விண் இயல் பிறைப்பிளவு, அறைப்புனல், முடித்தபுண்ணியன் இருக்கும் இடம் என்பர்-புவிதன்மேல்பண்ணிய நடத்தொடு இசை பாடும் அடியார்கள்நண்ணிய மனத்தின் வழிபாடு செய் நள்ளாறே.
உரை

எம்பெருமான், பிறைநிலவையும், பாய்ந்து வரும் கங்கையையும் தலையில் சூடியவர். அவர், பண்ணுடன் பாடி ஆடி வழிபாடு செய்யும் அடியவர்கள் நிறைந்த திருநள்ளாறு திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ளார். நாமும் உளம் பொருந்த எம்பெருமானை வழிபாடு செய்வோமாக.

3

விளங்கிழை மடந்தைமலை மங்கையொரு பாகத்துளங்கொள இருத்திய வொருத்தனிட மென்பர்வளங்கெழுவு தீபமொடு தூபமலர் தூவிநளன்கெழுவி நாளும்வழி பாடுசெய்நள் ளாறே.
சொற்பிரிப்பு
விளங்கு இழை மடந்தை மலை மங்கை ஒருபாகத்துஉளம் கொள இருத்திய ஒருத்தன் இடம் என்பர் -வளம் கெழுவு தீபமொடு, தூபம், மலர் தூவி,நளன் கெழுவி நாளும் வழிபாடு செய் நள்ளாறே.
உரை

அன்பு கொண்டு குழைந்துவரும் இயல்பினளே மலைமகள் ஆவார். அவளைத் தன் உடம்பின் ஒருபாகத்தில் வைத்துக் கொண்டுள்ளவரே சிவபெருமான். அவர் விரும்பி கோயில் கொண்டுள்ள திருநள்ளாற்று தலத்தில், நளன் தீபமோடு தூபம் காட்டி, மலர் தூவி நாள்தோறும் வழிபாடு செய்து கலிநீங்கப் பெற்றான்.

4

கொக்கரவர் கூன்மதியர் கோபர்திரு மேனிச்செக்கரவர் சேருமிட மென்பர்தடம் மூழ்கிப்புக்கரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணிநக்கரவர் நாமநினை வெய்தியநள் ளாறே.
சொற்பிரிப்பு
கொக்கு, அரவர், கூன்மதியர், கோபர், திருமேனிச்செக்கர் அவர், சேரும் இடம் என்பர் - தடம் மூழ்கிப்புக்கு, அரவர் விஞ்சையரும் விண்ணவரும் நண்ணி,நக்கர் அவர் நாமம் நினைவு எய்திய நள்ளாறே.
உரை

ஈசனார், கொக்கின் நிறம் போன்ற வெண்ணிற பாம்பையும், வெண்ணிறப் பிறையையும், தலையில் சூடியவர். அவர் உயிர்களுக்கு அருள் செய்யவே நெற்றிக் கண்ணைக் கொண்டுள்ளார். அவர் சிவந்த மேனியை உடையவர். அவர் பொருந்தி வாழும் இடம் திருநள்ளாறு திருத்தலம் ஆகும். அவரைப் பாதாளத்தாரும் விண்ணவரும் வந்து துதிப்பர். நள்ளிரவில் அடியவர்களும் அவரை வழிபாடு செய்வர்.

5

நெஞ்சமிது கண்டுகொ ளுனக்கென நினைந்தார்வஞ்சம தறுத்தருளும் மற்றவனை வானோர்அஞ்சமுது காகியவர் கைதொழ எழுந்தநஞ்சமுது செய்தவன் இருப்பிடம்நள் ளாறே.
சொற்பிரிப்பு
நெஞ்சம் இது கண்டுகொள், உனக்கு! என நினைந்தார்வஞ்சம்அது அறுத்து அருளும் மற்றவனை; வானோர்அஞ்ச, முதுகு ஆகியவர் கைதொழ,எழுந்தநஞ்சு அமுது செய்தவன்; இருப்பு இடம் - நள்ளாறே.
உரை

நெஞ்சே! கண்டு கொள்வாயாக! உனக்கென எதையும் கருதாதே! நம்முடைய கண்ணுக்குத் தெரியாத கொடிய வினைகளை நீக்கி நம்மை ஆள்பவன் சிவனே ஆவான். அவன்தான் வானோர்கள் விடத்தைக் கண்டு அஞ்சி ஓடிய போது, அவ்விடத்தை அமுதாக்கி அருந்தி அவர்களைக் காத்தவன் ஆவான். அவன் கோயில் கொண்டுள்ள இடமே திருநள்ளாறு திருத்தலமாகும் என்க.

6

பாலனடி பேணவவ னாருயிர் குறைக்குங்காலனுடன் மாளமு னுதைத்தஅர னூராம்கோலமலர் நீர்க்குட மெடுத்துமறை யாளர்நாலின்வழி நின்றுதொழில் பேணியநள் ளாறே.
சொற்பிரிப்பு
பாலன் அடி பேண, அவன் ஆர்உயிர் குறைக்கும்காலன் உடன்மாள முன் உதைத்த அரன் ஊர்ஆம் -கோல மலர், நீர்க்குடம்,எடுத்து மறையாளர்நாலின்வழி நின்று, தொழில் பேணிய நள்ளாறே.
உரை

பாலனாகிய மார்க்கண்டேயனின் உடலிலிருந்து உயிரைக் கவர வந்த காலனைத் தன் காலால் உதைத்து, மார்க்கண்டனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான். அவர் உறையும் தலமே திருநள்ளாறு. அத்தலத்தில் மறையவர்கள், பூவும் நீரும் எடுத்து வந்து நான்மறை முறைப்படி வழிபாடு செய்வார்கள்.

7

நீதியர் நெடுந்தகையர் நீள்மலையர் பாவைபாதியர் பராபரர் பரம்பர ரிருக்கைவேதியர்கள் வேள்வியொழி யாதுமறை நாளும்ஓதியரன் நாமமும் உணர்த்திடும்நள் ளாறே.
சொற்பிரிப்பு
நீதியர், நெடுந்தகையர், நீள்மலையர், பாவைபாதியர், பராபரர், பரம்பரர், இருக்கை -வேதியர்கள், வேள்வி ஒழியாது, மறை நாளும்ஓதி, அரன் நாமமும் உணர்த்திடும் நள்ளாறே.
உரை

இறைவன் நீதியாய் விளங்குபவர். உயர் பண்புகள் நிறைந்தவர். நீண்ட கயிலாயத்தைப் பொருந்தியவர். உமையவளை ஒரு பாகத்தில் கொண்டவர். பரஞானமும் அபரஞானமுமாகத் திகழ்பவர். மகாதேவர். எங்கும் நிறைந்தவர். திருநள்ளாறு தலத்துள் உறைபவர். அவரை மறைப்படி வேள்விகள் செய்தும், சிவநாமத்தை ஓதியும் அந்தணர் வழிபடுவர்.

8

கடுத்துவல் அரக்கன்முன் நெருக்கிவரை தன்னைஎடுத்தவன் முடித்தலைகள் பத்தும்மிகு தோளும்அடர்த்தவர் தமக்கிடம தென்பரளி பாடநடத்தகல வைத்திரள்கள் வைகியநள் ளாறே.
சொற்பிரிப்பு
கடுத்து, வல்அரக்கன், முன் நெருக்கி வரைதன்னைஎடுத்தவன், முடித் தலைகள்பத்தும் மிகு தோளும்அடர்த்தவர்தமக்கு இடம்அது என்பர் - அளி பாட,நடத்த கலவைத்திரள்கள் வைகிய நள்ளாறே.
உரை

அரக்கனாகிய இராவணன் சினம் கொண்டு கயிலாய மலையைத் தூக்கிட முயன்றான். அவனது முடியினையும் தோள்களையும் இறுத்தவர் சிவபெருமான். அவர் திருநள்ளாறு தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அங்குள்ள சோலைகளில் வண்டுகள் ஒலித்துக் கொண்டேயிருக்க, மக்கள் நடைமுறையில் பயன்படுத்தும் மணப்பொருள்களின் நறுமணம் எங்கும் நிறைந்திருக்கும் தலம் திருநள்ளாறு ஆகும்.

9

உயர்ந்தவ னுருக்கொடு திரிந்துலக மெல்லாம்பயந்தவன் நினைப்பரிய பண்பனிட மென்பர்வியந்தமரர் மெச்சமலர் மல்குபொழி லெங்கும்நயந்தரும வேதவொலி யார்திருநள் ளாறே.
சொற்பிரிப்பு
உயர்ந்தவன்,-உருக்கொடு திரிந்து, - உலகம் எல்லாம்பயந்தவன்,நினைப்ப(அ)ரிய பண்பன் இடம் என்பர் -வியந்து அமரர் மெச்ச மலர் மல்கு பொழில் எங்கும்நயம் தரும் அ(வ்) வேதஒலி ஆர் திரு நள்ளாறே.
உரை

உலகத்தை அளக்க உரு எடுத்தவர் திருமால். உலகத்தைப் படைத்தவர் பிரமன். இருவராலும் அடிமுடி தேடிக் காண முடியாத நிலையில் உள்ளவரே சிவபெருமான். அவர் கோயில் கொண்டுள்ள இடமே திருநள்ளாறு திருத்தலம் ஆகும். அங்கு மலர்களின் மணமும், வேத ஒலியின் ஓசையும் எப்போதும் நிறைந்திருக்கும்.

10

சிந்தைதிரு கற்சமணர் தேரர்தவ மென்னும்பந்தனை யறுத்தருளு கின்றபர மன்னூர்மந்தமுழ வந்தரு விழாவொலியும் வேதச்சந்தம்விர விப்பொழில் முழங்கியநள் ளாறே.
சொற்பிரிப்பு
சிந்தை திருகல் சமணர், தேரர், தவம் என்னும்பந்தனை அறுத்து அருளுகின்ற பரமன்(ன்) ஊர் -மந்த முழவம் தரு விழா ஒலியும், வேதச்சந்தம் விரவி, பொழில் முழங்கிய நள்ளாறே.
உரை

மாறுபட்ட சிந்தையுடையவராய் சமணர்களும் புத்தர்களும் திரிவர். அவர்களுடைய தொடர்பினைச் சிவனடியார்கள் அறுத்துக் கொள்ளும் வண்ணம் சிவபெருமான் திருநள்ளாற்றுத் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அங்கு இன்னிசைக் கருவிகளின் ஒலியும், விழா ஒலியும் வேத ஒலியும் எப்பொழுதும் நிறைந்திருக்கும்.

11

ஆடலரவார் சடையன் ஆயிழைதன் னோடும்நாடுமலி வெய்திட இருந்தவன்நள் ளாற்றைமாடமலி காழிவளர் பந்தனது செஞ்சொல்பாடலுடை யாரையடை யாபழிகள் நோயே.
சொற்பிரிப்பு
ஆடல் அரவு ஆர் சடையன் ஆயிழைதன்னோடும்நாடு மலிவு எய்திட இருந்தவன் நள்ளாற்றைமாடம் மலி காழி வளர் பந்தனது செஞ்சொல்பாடல் உடையாரை அடையா, பழிகள் நோயே.சுவாமி : தர்ப்பாரண்யேஸ்வரர்; அம்பாள் : போகமார்த்த பூண்முலையாள்.
உரை

ஆடுகின்ற பாம்பைத் தன் தலையில் சூடியவன் சிவபெருமான், அவன் நாடு செழிக்க திருநள்ளாறு திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ளான். அப்பெருமானைப் புகழ்ந்து சீர்காழித் தலத்துள் அவதரித்த ஞானசம்பந்தர் தமிழ்ப்பாடல்கள் பாடியுள்ளார். அப்பாடல்களைப் பாடுபவர்களைப் பழிசெயல் பொருந்தாது; பிறவிப் பிணியும் நீங்கப் பெறும்.