திருமுறை 2 · 2.032 · 11

திருவையாறு

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருவிராகம்

1

திருத்திகழ் மலைச்சிறுமி யோடுமிகு தேசர்உருத்திகழ் எழிற்கயிலை வெற்பிலுறை தற்கேவிருப்புடைய அற்புத ரிருக்குமிடம் ஏரார்மருத்திகழ் பொழிற்குலவு வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
திருத் திகழ் மலைச்சிறுமியோடு மிகு தேசர்,உருத் திகழ் எழில் கயிலைவெற்பில் உறைதற்கேவிருப்பு உடைய அற்புதர், இருக்கும் இடம் - ஏர்ஆர்மருத் திகழ் பொழில் குலவு வண் திரு ஐயாறே.
உரை

செல்வம் பொருந்திய மலையரசனின் மகளே பார்வதி தேவியார். அவளை விரும்பி மணம் கொண்டவரே சிவபெருமான். அவர் கயிலாய மலையில் ஒளியுடன் வீற்றிருப்பார். அற்புதராகிய அவர் மணமிக்க சோலைகள் நிறைந்த திருவையாறு தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

2

கந்தமர வுந்துபுகை யுந்தலில் விளக்கேர்இந்திர னுணர்ந்துபணி யெந்தையிட மெங்கும்சந்தமலி யுந்தரு மிடைந்தபொழில் சாரவந்தவளி நந்தணவு வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
கந்து அமர உந்து புகை உந்தல் இல் விளக்கு ஏர்இந்திரன் உணர்ந்து பணி எந்தை இடம் - எங்கும்சந்தம் மலியும் தரு மிடைந்தபொழில் சார,வந்த வளி நந்து அணவு வண் திரு ஐயாறே.
உரை

நறுமணமும் நறும்புகையும் சூழ்ந்த இடத்தில் ஒளிமயமாய் விளங்குபவர் சிவபெருமான். இந்திரன் அவரை உணர்ந்து பணி செய்த இடமே திருவையாறு திருத்தலம் ஆகும். அத்தலத்தில் சந்தன மரங்கள் நிறைந்த சோலைகள் நிறைந்துள்ளன. அவற்றில் பொருந்தி வந்த காற்றும் நன்மணத்தோடு வீசும் என்க.

3

கட்டுவட மெட்டுமுறு வட்டமுழ வத்தில்கொட்டுகர மிட்டவொலி தட்டும்வகை நந்திக்கிட்டமிக நட்டமவை யிட்டவ ரிடஞ்சீர்வட்டமதி லுள்திகழும் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
கட்டு வடம்எட்டும் உறு வட்டமுழவத்தில்கொட்டு கரம் இட்ட ஒலி தட்டும் வகை நந்திக்குஇட்டம் மிக, நட்டம் அவை இட்டவர் இடம் - சீர்வட்டமதிலுள்-திகழும் வண் திரு ஐயாறே.
உரை

வட்டமான முழவினை எட்டு வார்களால் கட்டியிருப்பர். அதனைத் தன் கரம் கொண்டு தட்டி இனிய ஓசையை எழுப்பி இசைப்பவர் நந்திதேவர் ஆவார். அம்முழவொலியின் தாளசதிக்கு ஏற்ப அவருக்கு பெருவிருப்பம் உண்டாகி நடனமாடுபவர் சிவபெருமான். அவர் விரும்பி உறையும் இடமே வட்டமான மதில்களால் சூழப்பெற்றதும் ,வன்றண்மையோர் வாழும் அழகிய திருவையாறு திருத்தலம் ஆகும்.

4

நண்ணியொர் வடத்தின்நிழல் நால்வர்முனி வர்க்கன்றெண்ணிலி மறைப்பொருள் விரித்தவ ரிடஞ்சீர்த்தண்ணின்மலி சந்தகிலொ டுந்திவரு பொன்னிமண்ணின்மிசை வந்தணவு வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
நண்ணி ஒர் வடத்தின் நிழல் நால்வர்முனிவர்க்கு, அன்றுஎண்இலி மறைப்பொருள் விரித்தவர் இடம்-சீர்த்தண்ணின் மலி சந்து அகிலொடு உந்தி வரு பொன்னிமண்ணின் மிசை வந்து அணவு வண் திரு ஐயாறே.
உரை

கல்லால மரத்து அடியில் வீற்றிருந்து, சனகாதியர் முனிவர்கள் நால்வர்க்கும் நான்மறைப் பொருளைச் சொல்லாமல் விரித்து தெளிவுபடுத்தியவர் சிவபெருமான்.அப்பெருமானே குளிர்ச்சி நிறைந்த சந்தனம், அகில் போன்ற மரங்களை அடித்து வருகின்ற பொன்னி நதிக்கரையில் உள்ள அழகிய திருவையாறு திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார் என்க.

5

வென்றிமிகு தாருகன தாருயிர் மடங்கக்கன்றிவரு கோபமிகு காளிகதம் ஓவநின்றுநட மாடியிட நீடுமலர் மேலால்மன்றல்மலி யும்பொழில்கொள் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
வென்றி மிகு தாருகனது ஆர்உயிர் மடங்க,கன்றி வரு கோபம் மிகு காளி கதம் ஓவ,நின்று நடம் ஆடி இடம் - நீடு மலர் மேலால்மன்றல் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாறே.
உரை

வரபலம் கொண்ட தாரகாசுரன் உலகத்தைத் துன்புறுத்தி வந்தான். அவனது வெற்றியை அடக்க காளி விரும்பினாள். சினங்கொண்டு போரிட்டு அசுரனை அழித்தாள். அப்போது நடனம் புரிந்து அவளது சினத்தைத் தணித்தவரே சிவபெருமான். அவர் மலர் மணம் நிறைந்து விளங்கும் திருவையாறு தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

6

பூதமொடு பேய்கள்பல பாடநட மாடிப்பாதமுதல் பையரவு கொண்டணி பெறுத்திக்கோதைய ரிடும்பலி கொளும்பர னிடம்பூமாதவி மணங்கமழும் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
பூதமொடு பேய்கள்பல பாட நடம் ஆடி,பாத முதல் பை அரவு கொண்டு அணி பெறுத்தி,கோதையர் இடும் பலி கொளும் பரன் இடம் - பூமாதவி மணம் கமழும் வண் திரு ஐயாறே.
உரை

பூதகணங்களுடன் பேய்க்கணங்களும் பாடிட அதற்கு ஏற்ற வகையில் நடனம் ஆடுபவரே சிவபெருமான். அவர் தமது அடிமுதல் முடிவரை பாம்புகளையே அணிகலன்களாகக் கொண்டவர். தாருகா வனத்து முனிதேவியர்கள் இடும் பிச்சைப் பொருளை ஏற்க வந்தவரும் அவரே. அவரே மாதவிப் பூக்களின் மணம் நிறைந்து விளங்கும் திருவையாறு திருத்தலத்திலும் பொருந்தியுள்ளார்.

7

துன்னுகுழல் மங்கையுமை நங்கைசுளி வெய்தப்பின்னொரு தவஞ்செய்துழல் பிஞ்ஞகனு மங்கேஎன்னசதி என்றுரைசெ யங்கண னிடஞ்சீர்மன்னுகொடை யாளர்பயில் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
துன்னு குழல் மங்கை உமைநங்கை சுளிவு எய்த,பின் ஒரு தவம் செய்து உழல் பிஞ்ஞகனும், அங்கே,"என்ன சதி?" என்று உரைசெய் அங்கணன் இடம்-சீர்மன்னு கொடையாளர் பயில் வண் திரு ஐயாறே.
உரை

நீண்டு அடர்ந்த கூந்தலை உடைய உமாதேவி மகிழுமாறு அவளுடன் பொருந்தி இருப்பவர் சிவபெருமான். உமாதேவியின் தவத்தைச் சிறப்புறச் செய்து, அவளை எல்லோரும் காண மணம் புரிந்தவரே சிவபெருமான். அந்த அங்கணராகிய சிவபெருமான் ,கொடையாளர் நிறைந்த திருவையாறு தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

8

இரக்கமில் குணத்தொடுல கெங்கும்நலி வெம்போர்அரக்கன்முடி யத்தலை புயத்தொடு மடங்கத்துரக்கவிர லிற்சிறிது வைத்தவ ரிடஞ்சீர்வரக்கருணை யாளர்பயில் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
இரக்கம் இல் குணத்தொடு உலகு எங்கும் நலி வெம்போர்அரக்கன் முடிபத்து அலை புயத்தொடும் அடங்கத்துரக்க, விரலின் சிறிது வைத்தவர் இடம்-சீர்வரக் கருணையாளர் பயில் வண் திரு ஐயாறே.
உரை

இராவணன் இரக்கமற்றவன். உலகத்தை எல்லாம் துன்புறுத்தியவன். கொடிய போரினை விரும்பிச் செய்தான். அவனது முடிகளும் தோள்களும் நலிவடையத் தன் திருப்பாத விரல்களை ஊன்றி அடர்த்துப் பின்னர் அருளியவரே சிவபெருமான். அவர் சிறப்புமிக்க கருணைக் குணம் நிறைந்தவர்கள் வாழ்கின்ற திருவையாறு திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

9

பருத்துருவ தாகிவிண் அடைந்தவனொர் பன்றிப்பெருத்துருவ தாயுல கிடந்தவனு மென்றுங்கருத்துரு வொணாவகை நிமிர்ந்தவ னிடங்கார்வருத்துவகை தீர்கொள்பொழில் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
பருத்து உரு அதுஆகி விண் அடைந்தவன், ஒர் பன்றிப்பெருத்து உருஅதுஆய் உலகு இடந்தவனும், என்றும்கருத்து உரு ஒணா வகை நிமிர்ந்தவன் இடம் - கார்வருத்து வகை நீர் கொள் பொழில் வண் திரு ஐயாறே.
உரை

பறவை உருக்கொண்டு விண்ணில் ஏறி பிரமன் இறைவனின் திருமுடியைக் காணமுயன்றான். பன்றி உருக்கொண்டு உலகைத் தோண்டிச் சென்று இறைவனின் திருவடியைக் காண முயன்றான் திருமால். இருவரும் காணும் வகையில் ஒளி உருவாய் விளங்கிய தேவரே சிவபெருமான். அவர் மழை மேகம் பொருந்தும் உயர்ந்த மரங்கள் சூழ்ந்த திருவையாறு திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளார்.

10

பாக்கியம தொன்றுமில் சமண்பதகர் புத்தர்சாக்கியர்க ளென்றுடல் பொதிந்துதிரி வார்தம்நோக்கரிய தத்துவ னிடம்படியின் மேலால்மாக்கமுற நீடுபொழில் வண்திருவை யாறே.
சொற்பிரிப்பு
பாக்கியம் அது ஒன்றும் இல் சமண்பதகர், புத்தர்சாக்கியர்கள் என்று உடல் பொதிந்து திரிவார்தாம்நோக்க(அ)ரிய தத்துவன் இடம் - படியின்மேலால்மா(க்)கம் உற நீடு பொழில் வண் திரு ஐயாறே.
உரை

சிவபெருமானை வணங்கும் புண்ணியம் பொருந்தாதவர்களே சமணர்கள், புத்தர்கள், சாக்கியர்கள், பயனற்ற நிலையில் பிறவி கொண்டு திரியும் அவர்களால் உணரப்பட முடியாதவனே சிவபெருமான். அவர் உயர்ந்த சோலைகள் நிறைந்த திருவையாற்றில் கோயில் கொண்டுள்ளார்.

11

வாசமலி யும்பொழில்கொள் வண்திருவை யாற்றுள்ஈசனை யெழிற்புகலி மன்னவன்மெய்ஞ் ஞானப்பூசுர னுரைத்ததமிழ் பத்துமிவை வல்லார்நேசமலி பத்தரவர் நின்மல னடிக்கே.
சொற்பிரிப்பு
வாசம் மலியும் பொழில் கொள் வண் திரு ஐயாற்றுள்ஈசனை, எழில் புகலி மன்னவன் - மெய்ஞ்ஞானப்பூசுரன்-உரைத்த தமிழ் பத்தும் இவை வல்லார்,நேசம் மலி பத்தர் அவர், நின்மலன் அடிக்கே.சுவாமி : ஐயாற்றப்பர்;அம்பாள் : அறம்வளர்த்த நாயகி.
உரை

மணமிக்க சோலைகளால் சூழப்பெற்ற திருத்தலமே திருவையாறு ஆகும். அத்தலத்தினைப் பொருந்தி வாழும் சிவபெருமானைப் புகழ்ந்து போற்றியுள்ளார் சீர்காழிப்பதியில் அவதரித்த ஞானசம்பந்தப் பெருமான். திருநீறு பூசிய ஞானசம்பந்தர் உரைத்த தமிழ்ப்பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்களே சிவனடியார்கள் ஆவார்கள்.