திருமுறை 2 · 2.031 · 11

திருக்கருப்பறியலூர்

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
கருப்பறியலூர்
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருவிராகம்

1

சுற்றமொடு பற்றவை துயக்கற அறுத்துக்குற்றமில் குணங்களொடு கூடும்அடி யார்கள்மற்றவரை வானவர்தம் வானுலக மேற்றக்கற்றவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
சுற்றமொடு பற்று அவை துயக்கு அற அறுத்து,குற்றம் இல் குணங்களொடு கூடும் அடியார்கள்மற்று அவரை வானவர் தம் வானுலகம் ஏற்றக்கற்றவன் இருப்பது - கருப்பறியலூரே
உரை

நம்முடைய அகப்பற்று புறப்பற்றுக்களை நீக்க உதவுபவன் சிவபெருமான்! தூய அடியவர்களுக்கு வானுலக வாழ்வை அருள்பவன் சிவபெருமான். கருணை உடைய அவனே கருப்பறியலூர் என்னும் திருத்தலத்தில் கோயில் கொண்டுள்ளான்.

2

வண்டணைசெய் கொன்றையது வார்சடை கள்மேலேகொண்டணைசெய் கோலமது கோளரவி னோடும்விண்டணைசெய் மும்மதிலும் வீழ்தரவொ ரம்பால்கண்டவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலேகொண்டு; அணைசெய் கோலம்அது, கோள் அரவினோடும்;விண்டு அணைசெய் மும்மதிலும் வீழ்தர,ஒர் அம்பால்;கண்டவன் இருப்பது - கருப்பறியலூரே.
உரை

வண்டுகள் மொய்க்கும் கொன்றை மலர் மாலையைத் தன் தலையில் சூடிக்கொள்பவன் சிவபெருமான்! வலிமைமிக்க பாம்பினை அணிந்து கொள்பவன் சிவபெருமான்! முப்புரங்களை அழிக்க ஓரம்பினைத் தொடுத்தவன் சிவபெருமான்! அவன் கோயில் கொண்டிருப்பது திருக்கருப்பறியலூர் திருத்தலமே என்க.

3

வேதமொடு வேதியர்கள் வேள்விமுத லாகப்போதினொடு போதுமலர் கொண்டுபுனை கின்றநாதனென நள்ளிருண்முன் ஆடுகுழை தாழும்காதவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
"வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல்ஆகப்போதினொடு போது, மலர், கொண்டு புனைகின்றநாதன்' என, நள்இருள் முன்ஆடு,குழை தாழும்காதவன் இருப்பது கருப்பறியலூரே.
உரை

மறையவர்கள் ஓதும் மறைகளில் பொருந்தியவர் சிவபெருமான்! அவர்கள் செய்யும் வேதச் சடங்குகளிலும் உறைபவன் சிவபெருமான்! அவர்கள் மலர் தூவிச் செய்யும் வழிப்பாட்டில் நிறைந்திருப்பவன் சிவபெருமான்! அடியவர்களால் நாதன் என்று போற்றப் பெறுபவன் சிவபெருமான்! நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் சிவபெருமான், அசையும் காதணியை குழைக்காதில் அணிந்தவன் சிவபெருமான். கருப்பறியலூரிலும் கோயில் கொண்டிருப்பவன் அவனே என்க.

4

மடம்படு மலைக்கிறைவன் மங்கையொரு பங்கன்உடம்பினை விடக்கருதி நின்றமறை யோனைத்தொடர்ந்தணவு காலனுயிர் காலவொரு காலால்கடந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
மடம் படு மலைக்கு இறைவன் மங்கை ஒரு பங்கன்,உடம்பினை விடக் கருதி நின்ற மறையோனைத்தொடர்ந்து அணவு காலன் உயிர் கால ஒரு காலால்கடந்தவன், இருப்பது - கருப்பறியலூரே
உரை

முனிவர்கள் உறையும் மடங்கள் நிறைந்த மலை அரசனின் மகளாகிய அழகியஉமையவளை இடபாகத்தில் கொண்டவன் எம்பெருமான்! மார்க்கண்டேயனைக் காக்க எமனைக் காலில் உதைத்தவன் எம்பெருமான்! அப்பெருமான் பொருந்தி இருக்கும் இடம் கருப்பறியலூர் ஆகும்.

5

ஒருத்தியுமை யோடுமொரு பாகமது வாயநிருத்தனவன் நீதியவன் நித்தன்நெறி யாயவிருத்தனவன் வேதமென அங்கமவை யோதும்கருத்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
ஒருத்தி உமையோடும் ஒரு பாகம்அதுஆயநிருத்தன் அவன், நீதி அவன், நித்தன், நெறிஆயவிருத்தன் அவன், வேதம் என அங்கம் அவை ஒதும்கருத்தவன், இருப்பது - கருப்பறியலூரே.
உரை

உமையவளை உடம்பின் ஒரு பாகமாகக் கொண்டு திருநடனம் புரிபவன் எம்பெருமான்! நீதியாக விளங்குபவன் எம்பெருமான்! நித்தியமானவன் எம்பெருமான்! பழம்பொருளாக விளங்குபவன் எம்பெருமான்! வேதமாகவும் அதன் அங்கங்களாகவும் விளங்குபவன் எம்பெருமான்! அவனே,கருப்பறியலூரில் கோயில் கொண்டுள்ளான்.

6

விண்ணவர்கள் வெற்பரசு பெற்றமகள் மெய்த்தேன்பண்ணமரும் மென்மொழியி னாளையணை விப்பான்எண்ணிவரு காமனுடல் வேவஎரி காலும்கண்ணவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
விண்ணவர்கள் வெற்பு அரசு பெற்ற மகள், மெய்த் தேன்பண் அமரும் மென்மொழியினாளை, அணைவிப்பான்எண்ணி வரு காமன் உடல் வேவ, எரி காலும்கண்ணவன் இருப்பது - கருப்பறியலூரே.
உரை

மலையரசன் பெற்ற மகளே உமையவள் அவள் பண் போலும் இன்மொழி பேசுபவள். அவளை இறைவனுக்கு மணம் செய்து கொடுக்க தேவர்கள் விரும்பினார்கள். தேவர்கள் பொருட்டு எம்பெருமானின் யோகநிலையைக் கலைக்க முயன்றான் மன்மதன். அவன் ஆணவம் கொண்டு செயல்பட்டதால், அவனை எம்பெருமான் நெற்றிக்கண்ணால் எரித்து அருளினான். அவர் கோயில் கொண்டிருப்பது திருக்கருப்பறியலூரில் என்க.

7

ஆதியடி யைப்பணிய அப்பொடு மலர்ச்சேர்சோதியொளி நற்புகை வளர்க்குவடு புக்குத்தீதுசெய வந்தணையும் அந்தகன் அரங்கக்காதினன் இருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச் சேர்சோதிஒளி, நல் புகை, வளர்க் குவடு புக்குத்தீது செய வந்து அணையும் அந்தகன் அரங்கக்காதினன் இருப்பது - கருப்பறியலூரே.
உரை

  இறைவனே ஆதி நாயகன் ஆவான். அவனது திருவடியைப் புனித நீரால் அபிடேகம் செய்து, மலர் தூவி தூப தீபம் காட்டி வணங்கினான் மார்க்கண்டேயன்! அவனைக் கொல்ல வந்தான் காலன். அக்காலனைக் காலால் உதைத்தவர் எம்பெருமான். அவர் கோயில் கொண்டிருப்பது திருக்கருப்பறியலூரே ஆகும்.

8

வாய்ந்தபுகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்பாய்ந்தமர்செ யுந்தொழிலி லங்கைநகர் வேந்தற்கேய்ந்தபுயம் அத்தனையும் இற்றுவிழ மேனாள்காய்ந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்பாய்ந்து அமர் செயும் தொழில் இலங்கை நகர் வேந்தற்குஏய்ந்த புயம் அத்தனையும் இற்று விழ, மேல்நாள்காய்ந்தவன் இருப்பது - கருப்பறியலூரே.
உரை

புகழ்மிக்க விண்ணவர்களும் மண்ணவர்களும் அஞ்சுமாறு போர் புரிந்தவன் இராவணன். இலங்கை அரசனாகிய அவன் கயிலாய மலையை எடுக்க முயன்றான்.அப்போது அரக்கனது தோள் ஆற்றல் அழிய இறுத்தவரே எம்பெருமான். அவர் கோயில்கொண்டிருப்பது திருக்கருப்பறியலூரில் என்க.

9

பரந்தது நிரந்துவரு பாய்திரைய கங்கைகரந்தொர்சடை மேன்மிசை யுகந்தவளை வைத்துநிரந்தரம் நிரந்திருவர் நேடியறி யாமல்கரந்தவ னிருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
பரந்தது நிரந்து வரு பாய் திரைய கங்கைகரந்து, ஒர் சடைமேல்-மிசை உகந்து அவளை வைத்துநிரந்தரம் நிரந்து இருவர் நேடி அறியாமல்கரந்தவன் இருப்பது - கருப்பறியலூரே.
உரை

விரிந்து பரந்து பெருகிவரும் கங்கையைத் தலையில் தாங்கி நிற்பவர் எம்பெருமான். பிரமனும் திருமாலும் மாறுகொண்டு நின்றபோது ஒளி உருவில் அடிமுடி அறிய முடியா நிலையில் நின்றவரே எம் பெருமான்! அவர் கோயில் கொண்டிருக்கும் தலமே கருப்பறியலூர் என்க.

10

அற்றமறை யாவமண ராதமிலி புத்தர்சொற்றமறி யாதவர்கள் சொன்னசொலை விட்டுக்குற்றமறி யாதபெரு மான்கொகுடிக் கோயில்கற்றென இருப்பது கருப்பறிய லூரே.
சொற்பிரிப்பு
அற்றம் மறையா அமணர், ஆதம்இலி புத்தர்,சொற்றம் அறியாதவர்கள் - சொன்ன சொலை விட்டு,குற்றம் அறியாத பெருமான் கொகுடிக் கோயில்கற்றென விருப்பது - கருப்பறியலூரே.
உரை

உடையால், உடலை மறைக்காமல் உலவுபவர்களே சமணர்கள், புத்தர்கள். அவர்கள் கூறும் குற்றம் நிறைந்த சொற்களைக் கேட்டு நடக்காதீர். குற்றமற்ற எம்பெருமான் திருக்கருப்பறியலூரில் கோயில் கொண்டுள்ளார். அவனது திருவடிகளை வணங்கி உய்வு பெறுங்கள்.

11

நலந்தரு புனற்புகலி ஞானசம் பந்தன்கலந்தவர் கருப்பறியல் மேயகட வுள்ளைப்பலந்தரு தமிழ்க்கிளவி பத்துமிவை கற்றுவலந்தரு மவர்க்குவினை வாடலெளி தாமே.
சொற்பிரிப்பு
நலம் தரு புனல் புகலி ஞானசம்பந்தன்,கலந்தவர் கருப்பறியல் மேய கடவு(ள்)ளைப்பலம் தரு தமிழ்க்கிளவி பத்தும்இவை கற்று,வலம் தருமவர்க்கு வினை வாடல் எளிதுஆமே.சுவாமி : குற்றம்பொறுத்தநாதர்; அம்பாள் : கோல்வளையம்மை.
உரை

நலன் தரும் நீர்வளம் மிக்க சீர்காழிப் பதியில் அவதரித்தவரே ஞானசம்பந்தப் பெருமான் ஆவார். அவர் கருப்பறியலூரில் கோயில் கொண்டுள்ள எம்பெருமான்மீது பத்து தமிழ்ப்பாடல்களைப் பாடி அருளியுள்ளார். அப்பாடல்களை அன்புடன் பாடிடும் அடியவர்களின்   வினைகள் எளிதாக நீங்கும் என்க.