திருமுறை 2 · 2.029 · 11

திருப்புகலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
சீர்காழி - 03-புகலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை
குறிப்பு
திருவிராகம்

1

முன்னிய கலைப்பொருளும் மூவுலகில் வாழ்வும்பன்னிய வொருத்தர்பழ வூர்வினவின் ஞாலந்துன்னிஇமை யோர்கள்துதி செய்துமுன் வணங்குஞ்சென்னியர் விருப்புறு திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
முன்னிய கலைப்பொருளும், மூஉலகில் வாழ்வும்பன்னிய ஒருத்தர் பழ ஊர் வினவின் - ஞாலம்துன்னி இமையோர்கள் துதி செய்து முன் வணங்கும்சென்னியர் விருப்புஉறு திருப் புகலிஆமே.
உரை

ஆய கலைகள் அனைத்தையும் அவற்றோடு பொருந்தி வாழும் வாழ்வையும் நமக்குக் கொடுக்கும் தலைவர் சிவபெருமான் ஒருவரே ஆவார். அவர் தேவர்களால் வணங்கப் பெறும் சிறப்பினை உடையவர். அவர் விருப்பமுடன் வீற்றிருந்து அருளும் இடம் திருப்புகலி ஆகும்.

2

வண்டிரை மதிச்சடை மிலைத்தபுனல் சூடிப்பண்டெரிகை யாடுபர மன்பதிய தென்பர்புண்டரிக வாசமது வீசமலர்ச் சோலைத்தெண்டிரை கடற்பொலி திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
வண்டு இரை மதிச் சடை மிலைத்த புனல் சூடிப்பண்டு எரி கை ஆடு பரமன் பதிஅது என்பர்புண்டரிக வாசம்அது வீச, மலர்சோலைத்தெண்திரை கடல் பொலி திருப் புகலிஆமே.
உரை

கங்கை ஆற்றையும் பிறை நிலவையும் தலையில் அணிந்தவர் சிவபெருமான். நெருப்பைக் கையில் ஏந்திய பரமன் அவரே. அவர் தாமரை மலர் மணம் கமழும் சோலைகளும், அலைகள் பொருந்திய கடலும் சூழ்ந்த திருப்புகலித் தலத்தில் பொருந்தியுள்ளார்.

3

பாவணவு சிந்தையவர் பத்தரொடு கூடிநாவணவும் அந்தணன் விருப்பிடம தென்பர்பூவணவு சோலையிருள் மாலையெதிர் கூரத்தேவண விழா வளர் திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
பா அணவு சிந்தையவர் பத்தரொடு கூடிநா அணவும் அந்தணன் விருப்பு இடம் அது என்பர்பூ அணவு சோலை, இருள் மாலை எதிர் கூர,தேவண விழா வளர் திருப் புகலிஆமே.
உரை

ஈசன், பக்திப்பாடல்களைப் பாடும் பக்தர்களின் சிந்தையில் விளங்குவார். பக்தர்கள் பாடும் பாடல்களிலும் பொருந்தித் தோன்றுவார். பூக்கள் நிறைந்த சோலைகளிலும் விளங்குவார். பெரிய மாலைகளைச் சூடிக் கொண்டு தெய்வ வழிபாடு செய்யும் திருவிழாக்களிலும் விளங்குவார். அவரே திருப்புகலித் திருத்தலத்திலும் கோயில் கொண்டுள்ளார். எங்கும் எதிலும் பொருந்தியவரே ஈசன் என்க.

4

மைதவழும் மாமிடறன் மாநடம தாடிக்கைவளையி னாளொடு கலந்தபதி யென்பர்செய்பணி பெருத்தெழும் உருத்திரர்கள் கூடித்தெய்வம திணக்குறு திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
மை தவழும் மா மிடறன், மாநடம்அது ஆடிகை வளையினாளொடு கலந்த பதி என்பர்செய் பணி பெருத்து எழும் உருத்திரர்கள் கூடி,தெய்வம் அது இணக்கு உறு திருப் புகலிஆமே.
உரை

கருமை நிறம் பொருந்திய மை கொண்ட கண்டத்தை உடையவரே சிவபெருமான்.   (திருத்: கொண்ட/மை கொண்ட)எப்பொழுதும் திருநடனம் புரிபவரே சிவபெருமான். அவர் உமாதேவியுடன் உடனாகி உறையும் தலம் எது என்று கேட்பின், உருத்திரர்கள் (சிவகணத்தவர்) கூடி நின்று பணி செய்யும் திருப்புகலித் தலமே அது என்க.

5

முன்னமிரு மூன்றுசம யங்களவை யாகிப்பின்னையருள் செய்தபிறை யாளனுறை கோயில்புன்னைய மலர்ப்பொழில் களக்கினொளி காட்டச்செந்நெல்வய லார்தரு திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
முன்னம் இரு-மூன்று சமயங்கள் அவை ஆகி,பின்னை அருள்செய்த பிறையாளன் உறைகோயில் புன்னைய மலர்ப்பொழில்கள் அக்கின் ஒளி காட்ட,செந்நெல் வயல் ஆர் தரு திருப் புகலி ஆமே.
உரை

ஆறு சமயங்களாக பிரிந்து நிற்பவன் சிவபெருமான். பின்னர் அவை அனைத்தையும் ஏற்று அருள்பவனும் அவனே ஆவான். பிறைநிலவைத் தலையில் தாங்கிய அச்சிவபிரான் புன்னை மலர்கள் சங்கினைப் போல் ஒளியுடன் விளங்கித் தோன்றும் வயல் நிறைந்த திருப்புகலித் தலத்துள் கோயில் கொண்டுள்ளார்.

6

வங்கமலி யுங்கடல் விடத்தினை நுகர்ந்தஅங்கணன் அருத்திசெய் திருக்குமிட மென்பர்கொங்கண வியன்பொழிலின் மாசுபணி மூசத்தெங்கணவு தேன்மலி திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
வங்கம் மலியும் கடல் விடத்தினை நுகர்ந்தஅங்கணன் அருத்தி செய்து இருக்கும் இடம் என்பர் -கொங்கு அண வியன்பொழிலின் மாசு பனி மூச,தெங்கு அணவு தேன் மலி திருப் புகலிஆமே.
உரை

பாற்கடலில் தோன்றிய விடத்தினை அமுதமாக உண்டு அருள் செய்த எம்பெருமான், விருப்பமுடன் பொருந்தியிருக்கும் திருத்தலம் திருப்புகலியே ஆகும். அங்கு தேன் நிறைந்த சோலைகளில் எப்பொழுதும் பனி நிறைந்திருக்கும். தென்னை மரங்களிலிருந்து தேன் பெருகிக் கொண்டே இருக்கும். அத்தகைய வளம் நிறைந்த பதியில்தான் எம்பெருமான் கோயில் கொண்டுள்ளார்.

7

நல்குரவும் இன்பமும் நலங்களவை யாகிவல்வினைகள் தீர்த்தருளும் மைந்தனிட மென்பர்பல்குமடி யார்கள்படி யாரஇசை பாடிச்செல்வமறை யோருறை திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
நல்குரவும் இன்பமும் நலங்கள் அவை ஆகிவல்வினைகள் தீர்த்து அருளும் மைந்தன் இடம் என்பர்மல்கும் அடியார்கள் படி ஆர இசை பாடி,செல்வ மறையோர் உறை திருப் புகலிஆமே.
உரை

அடியவர்களுக்கு வறுமையையும் இன்ப நலன்களையும் கொடுப்பவன் சிவபெருமானே. அவனே நம் வினைகளையும் நீக்கி அருளுவான். அவனே அடியார்கள் விருப்புடன் பாடி ஆடல் புரிகின்றதும் செல்வ மறையோர்கள் உறைகின்றதுமாகிய திருப்புகலித் தலத்தில் கோயில் கொண்டுள்ளான்.

8

பரப்புறு புகழ்ப்பெருமை யாளன்வரை தன்னால்அரக்கனை யடர்த்தருளும் அண்ணலிட மென்பர்நெருக்குறு கடல்திரைகண் முத்தமணி சிந்தச்செருக்குறு பொழிற்பொலி திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
பரப்புஉறு புகழ்ப் பெருமையாளன், வரை தன்னால்அரக்கனை அடர்த்து அருளும் அண்ணல், இடம் என்பர் -நெருக்குஉறு கடல்-திரைகள் முத்தம்மணி சிந்த,செருக்கு உறு பொழில் பொலி திருப் புகலிஆமே.
உரை

விரிந்த புகழுக்கு உரியவன் சிவபெருமான். கயிலாய மலையைத் தூக்கிட முயன்ற இராவணனின் செருக்கை அடக்கி அருளியவர் அவரே. அவர், கடல் அலைகள், முத்துக்களையும் மணிகளையும் அள்ளிக் கொண்டு வந்து ஒதுக்கும் சோலைகள் நிறைந்த திருப்புகலித் திருத்தலத்துள் கோயில் கொண்டுள்ளார்.

9

கோடலொடு கூன்மதி குலாயசடை தன்மேல்ஆடரவம் வைத்தருளும் அப்பன்இரு வர்க்கும்நேடஎரி யாகிஇரு பாலுமடி பேணித்தேடவுறை யுந்நகர் திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
கோடலொடு கூன்மதி குலாய சடைதன்மேல்ஆடுஅரவம் வைத்து அருளும் அப்பன், இருவர்க்கும்நேட எரி ஆகி, இருபாலும் அடி பேணித்தேட,உறையும் நகர் - திருப் புகலிஆமே.
உரை

கோட்டுப் பூவாகிய காந்தள் மலரையும், வளைந்த பிறைநிலவையும் தலையில்அணிந்தவரே சிவபெருமான். பாம்பைத் தன் தலையில் வைத்திருக்கும் அப்பனும் அவரே ஆவார். பிரமன், திருமால் ஆகிய இருவராலும் கண்டறியப்பட முடியாத அவரே திருப்புகலித் தலத்துள் கோயில் கொண்டுள்ளார். அவரது திருவடிகளை வணங்கி அடியார்கள் உய்வு பெறுவார்கள் என்க.

10

கற்றமண ருற்றுலவு தேரருரை செய்தகுற்றமொழி கொள்கைய திலாதபெரு மானூர்பொற்றொடி மடந்தையரும் மைந்தர்புல னைந்துஞ்செற்றவர் விருப்புறு திருப்புகலி யாமே.
சொற்பிரிப்பு
கற்ற(அ)மணர்,உற்று உலவு தேரர், உரை செய்தகுற்றம் மொழி கொள்கைஅது இலாத பெருமான் ஊர் -பொன்-தொடி மடந்தையரும், மைந்தர், புலன்ஐந்தும்செற்றவர், விருப்புஉறு திருப் புகலிஆமே.
உரை

மெய்நூற்களைக் கற்று உணராத சமணர்களும் சாக்கியர்களும் கூறும் மொழிகள் குற்றமுடைய மொழிகளேயாகும். அவர் மொழிகளை எம்பெருமான் ஏற்றருளார். அவர் ஆடவரும் மகளிரும் ஐம்புலன் அடக்கி வாழும் திருப்புகலித் தலத்திலேயே கோயில் கொண்டுள்ளார் என்க.

11

செந்தமிழ் பரப்புறு திருப்புகலி தன்மேல்அந்தமுத லாகிநடு வாயபெரு மானைப்பந்தனுரை செந்தமிழ்கள் பத்துமிசை கூரவந்தவண மேத்துமவர் வானமுடை யாரே.
சொற்பிரிப்பு
செந்தமிழ் பரப்புஉறு திருப் புகலி தன்மேல்அந்தம் முதல் ஆகி நடுவு ஆய பெருமானைப்பந்தன் உரை செந்தமிழ்கள் பத்தும் இசை கூரவந்த வணம் ஏத்துமவர் வானம் உடையாரே.சுவாமி : பிரமபுரீஸ்வரர்;அம்பாள் : திருநிலைநாயகி.
உரை

மூலத்தில் தமிழ் உரை இல்லை.