திருமுறை 2 · 2.025 · 11

திருப்புகலி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
இந்தளம்
தலம்
சீர்காழி - 03-புகலி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

உகலி யாழ்கட லோங்கு பாருளீர்அகலி யாவினை யல்லல் போயறும்இகலி யார்புர மெய்த வன்னுறைபுகலி யாம்நகர் போற்றி வாழ்மினே.
சொற்பிரிப்பு
உகலி ஆழ்கடல் ஓங்கு பார் உளீர்!அகலியா வினை அல்லல் போய் அறும்இகலியார் புரம் எய்தவன்(ன்) உறைபுகலியா நகர் போற்றி வாழ்மினே!
உரை

பகைமை உணர்வு மிகக்கொண்டு திரிபுரங்களை ஆண்டு வந்த கொடிய அசுரர்களை அழித்த புண்ணியன் சிவபெருமான் ஆவர். அவர் புகலி என்று சொல்லப்படும் சீர்காழித் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். கடல் சூழ்ந்த உயர்ந்த உலகில் வாழும் அடியவர்களாகிய நீங்கள் ஈசனையே போற்றி வாழுங்கள், உங்கள் வினைகளும் துன்பங்களும் நீங்கிவிடும்.

2

பண்ணி யாள்வதோ ரேற்றர் பால்மதிக்கண்ணி யார்கமழ் கொன்றை சேர்முடிப்புண்ணி யன்னுறை யும்பு கலியைநண்ணு மின்னல மான வேண்டிலே.
சொற்பிரிப்பு
பண்ணி ஆள்வது ஓர் ஏற்றர், பால்மதிக்கண்ணியார், கமழ் கொன்றை சேர்முடிப்புண்ணியன்(ன்), உறையும் புகலியைநண்ணுமின்,நலம் ஆன வேண்டிலே!
உரை

இடப வாகனத்தில் அமர்ந்து அருள்பவரும், வெண்ணிற நிலவைத் தலையில் அணிந்தவரும், கொன்றை மாலையைத் தலையில் அணிந்தவரும் , புண்ணியம் பொருந்தியவருமாகிய சிவபெருமான் புகலித் தலத்தில் கோயில் கொண்டுள்ளார். அடியவர்களே! அவரை அன்புடன் வழிபட்டு உங்களுக்கு வேண்டியவற்றை அடைவீர்களாக.

3

வீசு மின்புரை காதன் மேதகுபாச வல்வினை தீர்த்த பண்பினன்பூசு நீற்றினன் பூம்பு கலியைப்பேசு மின்பெரி தின்ப மாகவே.
சொற்பிரிப்பு
வீசும் மின் புரை காதல் மேதகுபாச வல்வினை தீர்த்த பண்பினன்,பூசும் நீற்றினன், பூம் புகலியைப்பேசுமின், பெரிது இன்பம் ஆகவே!
உரை

அடியவர்களே! உங்களது தீர்க்க முடியாத வினைகளை எல்லாம், எம்பெருமான் மின்னல் வீசுவது போன்று கண நேரத்தில் நீக்கி அருளுவான். திருநீறு பூசியவனாகிய அவன் புகலியூரில் கோயில் கொண்டுள்ளான். நீங்கள் அந்தப் புகலியூர் எம் பெருமானையே போற்றி வழிபட்டு பேரின்பம் பெறுவீர்களாக.

4

கடிகொள் கூவிளம் மத்தம் வைத்தவன்படிகொள் பாரிடம் பேசும் பான்மையன்பொடிகொள் மேனியன் பூம்பு கலியுள்அடிக ளையடைந் தன்பு செய்யுமே.
சொற்பிரிப்பு
கடி கொள் கூவிளம் மத்தம் வைத்தவன்,படி கொள் பாரிடம் பேசும் பான்மையன்,பொடி கொள் மேனியன், பூம் புகலியுள்அடிகளை அடைந்துஅன்பு செய்யுமே!
உரை

எம்பெருமான், சிறப்புமிக்க வில்வ இலை, ஊமத்தமலர் இவற்றைத் தன் தலையில் கொண்டவன். அன்பு கொண்ட அடியவர்களிடம் பேசும் தன்மையன். திருநீற்றை மேனியில் பூசியவன். பூம்புகலியுள் கோயில் கொண்டவன். அடியவர்களே! அவன்மீது அன்பு கொண்டு அவனது திருவடிகளை வணங்குவீர்களாக.

5

பாதத் தாரொலி பல்சி லம்பினன்ஓதத் தார்விட முண்ட வன்படைப்பூதத் தான்புக லிந்ந கர்தொழஏதத் தார்க்கிட மில்லை யென்பரே.
சொற்பிரிப்பு
பாதத்து ஆர் ஒலி பல்சிலம்பினன்,ஓதத்து ஆர் விடம் உண்டவன், படைப்பூதத்தான், புகலி(ந்) நகர் தொழஏதத்தார்க்கு இடம் இல்லை என்பரே.
உரை

எம்பெருமான், தன் திருவடிகளில் சிலம்புகளைப் பொருத்தமுற அணிந்தவன். பாற்கடலில் தோன்றிய விடத்தினை அருந்தி அருளியவன். பூத கணங்களைப் படையாகக் கொண்டவன். புகலியூரில் பொருந்தி இருப்பவன். அவனை அன்போடு தொழுவார்க்கு துன்பமே இல்லை.

6

மறையி னான்ஒலி மல்கு வீணையன்நிறையி னார்நிமிர் புன்ச டையனெம்பொறையி னானுறை யும்பு கலியைநிறையி னால்தொழ நேச மாகுமே.
சொற்பிரிப்பு
மறையினான் ஒலி மல்கு வீணையன்,நிறையின் ஆர் நிமிர் புன்சடையன், எம்பொறையினான், உறையும் புகலியைநிறையினால் - தொழ, நேசம் ஆகுமே.
உரை

ஈசன், நான்மறைகளை அருளியவன்! இனிய ஒலி எழும் வீணையைத் தடவிப் பாடுபவன். நிமிர்ந்த சடையினைக் கொண்டவன்! எம் பூஜைக்கு என்றும் உரியவன். திருப்புகலியூரில் கோயில் கொண்டவன்! சிவனையன்றி வேறு ஒருவரையும் வழிபாட்டிற்குக் கொள்ளாத அன்பினால் மனநிறைவுடன் தொழும் அடியவர்களுக்கு நேசன் ஆவான்.

7

கரவி டைமனத் தாரைக் காண்கிலான்இரவி டைப்பலி கொள்ளும் எம்மிறைபொருவி டைஉயர்த் தான்பு கலியைப்பரவி டப்பயில் பாவம் பாறுமே.
சொற்பிரிப்பு
கரவுஇடை மனத்தாரைக் காண்கிலான்இரவுஇடைப் பலி கொள்ளும் எம் இறை,பொரு விடை உயர்த்தான், புகலியைப்பரவிட, பயில் பாவம் பாறுமே.
உரை

சிவபெருமான், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்களை விரும்பான். அன்புடையவர்களை நாடிச் சென்று இரவிலும் பலி தேர்வான். இடப வாகனத்தில் அமர்ந்திருப்பான். திருப்புகலியிலும் கோயில் கொண்டு உள்ளான். அவனைப் புகழ்ந்து போற்றிட நம் பாவங்கள் நீங்கும்.

8

அருப்பி னார்முலை மங்கை பங்கினன்விருப்பி னான்அரக் கன்னு ரஞ்செகும்பொருப்பி னான்பொழி லார்பு கலியூர்இருப்பி னானடி யேத்தி வாழ்த்துமே.
சொற்பிரிப்பு
அருப்பின் ஆர் முலை மங்கை பங்கினன்,விருப்பினான் அரக்கன்(ன்) உரம் செகும்பொருப்பினான்,பொழில் ஆர் புகலிஊர்இருப்பினான், அடி ஏத்தி வாழ்த்துமே!
உரை

அன்புடைய உமையவளைத் தன் இடபாகத்தில் கொண்டவனே எம்பெருமான்.மலையை எடுத்த அரக்கன் இராவணனின் செருக்கை அடக்கியவன் எம்பெருமான். சோலைகள் நிறைந்த புகலியூரில் கோயில் கொண்டவன் சிவபெருமான். அவனது திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக!

9

மாலும் நான்முகன் தானும் வார்கழற்சீல மும்முடி தேட நீண்டெரிபோலும் மேனியன் பூம்பு கலியுள்பால தாடிய பண்பன் நல்லனே.
சொற்பிரிப்பு
மாலும், நான்முகன்தானும், வார் கழல்சீலமும் முடி தேட,நீண்டு எரிபோலும் மேனியன் - பூம் புகலியுள்பால்அதுஆடிய பண்பன் - அல்லனே?
உரை

திருமாலும் நான்முகனும் அறியாமையால் செருக்குடன் அடிமுடி தேடிய பொழுது நீண்ட நெருப்பாய்த் தோன்றி அருளியவன் சிவபெருமான். நெருப்பு போன்ற சிவந்த மேனியன் சிவபெருமான். திருப்புகலியூரில் பொருந்தியவன் சிவபெருமான். பால் அபிடேகத்தை விரும்பி ஏற்கும் புண்ணியன் (பண்பு நிறைந்தவனே)சிவபெருமான். அவனைப் போற்றி வணங்குவோமாக.

10

நின்று துய்ப்பவர் நீசர் தேரர்சொல்ஒன்ற தாகவை யாவு ணர்வினுள்நின்ற வன்நிக ழும்பு கலியைச்சென்று கைதொழச் செல்வ மாகுமே.
சொற்பிரிப்பு
நின்று துய்ப்பவர், நீசர் தேரர், சொல்ஒன்றுஅதுஆக வையா உணர்வினுள்நின்றவன் நிகழும் புகலியைச்சென்று கைதொழ, செல்வம் ஆகுமே.
உரை

சமணர்களும், சாக்கியர்களும் தவறான நெறியில் நின்று சிவனைப் பழித்துக் கொண்டிருப்பர். அவர்களது சொற்கள் தவறானவை. அதனைச் சிவனடியார்கள் ஏற்க மாட்டார்கள். அடியவர்கள் தம் உணர்வினுள் பொருந்தி நிற்கும் பூம்புகலியூர் உறையும் சிவனையே ஏத்தி வழிபடுவார்கள். அதுவே நற்செல்வமாம் என்க.

11

புல்லம் ஏறிதன் பூம்பு கலியைநல்ல ஞானசம் பந்தன் நாவினாற்சொல்லும் மாலைஈ ரைந்தும் வல்லவர்க்கில்லை யாம்வினை இருநி லத்துளே.
சொற்பிரிப்பு
புல்லம்ஏறிதன் பூம் புகலியை,நல்ல ஞானசம்பந்தன் நாவினால்சொல்லும் மாலை ஈர்ஐந்தும் வல்லவர்க்குஇல்லைஆம் வினை, இரு நிலத்துளே.சுவாமி : பிரமபுரீஸ்வரர்;அம்பாள் : திருநிலைநாயகி.
உரை

சிவபெருமான் இடப வாகனத்தில் ஏறியிருந்து அருள்புரிபவன் ஆவான். பூம்புகலித் தலத்துள் கோயில் கொண்டுள்ள அச்சிவனைப் புகழ்ந்து ஞான சம்பந்தப் பெருமான் பத்துப் பாடல்கள் பாடி அருளியுள்ளார். அதனை ஓத வல்லவர்க்கு வினைகள் இல்லையாம் என்க.